வடலூரில் வள்ளலார் கட்ட விரும்பாத ‘சாலைகள்’! திமுக அரசின் திட்டத்தை தவெக அரசும் தொடருவதா?
வடலூர் பெருவெளியில் வள்ளலார் ‘7 சாலைகள்’ அமைக்க விரும்பியதற்கான ஆவணம் உள்ளதா? ₹100 கோடி சர்வதேச மையத் திட்டம் கைவிடப்பட்ட பிறகும் புதிய கட்டுமானங்கள் ஏன்? திமுக ஆட்சியின் திட்டத்தை தவெக அரசும் தொடருகிறதா என்ற கேள்விகளை எழுப்பும் ஆய்வுக் கட்டுரை.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
வடலூர் பார்வதிபுரத்தில் கடந்த 1860 ம் ஆண்டுகளில் இராமலிங்க வள்ளற் பெருமானார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக் கிராம மக்கள் 80 காணி நிலங்கள் அதாவது 106 ஏக்கர் ஒரே பரப்பு கொண்ட நிலங்களைத் தானமாக வழங்கினார்கள்.
அந்த நிலத்தில், முதலில் "தருமச் சாலை" ஒன்றை அமைத்தார் வள்ளலார். அந்தத் தருமச்சாலையின் முதன்மைச் சேவை, "தங்களின் தேவைக்கு மேல் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி ஆகியவற்றை உள்ளவர்கள் கொண்டு வந்து தானமாகக் கொடுக்க, அதனை சமைத்து உணவு கிடைக்காத இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு எப்போதும் உணவு அளிக்க வேண்டும்" என்பதே.
"பசி" குறித்து மட்டும் வள்ளலார் சுமார் 50 க்கும் மேற்பட்ட விளைவுகளைப் பட்டியலிட்டு விளக்குகிறார். பசியோடு ஒருவரைத் தவிக்க விடுவது கொலைக்கு ஈடானது என்கிறார்.
அவற்றில் நமது அறிவைத் தூண்டும் ஒரு விளக்கம் உள்ளது. அது, "கொலைக்குற்றமே செய்த ஒருவரை சிறையில் அடைத்து மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும்கூட அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் வரையில் மூன்றுவேளை உணவு கொடுக்கிறோமே ...எது ஏன் ? எனும் கேள்வியை எழுப்பிவிட்டு....ஒருவன் என்ன குற்றம் செய்தாலும்கூட அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும்கூட உணவு தராமல் அவரை உயிர் துறக்க விடுவது அவர் செய்ததை விடப் பெரிய கொலைக் குற்றம் என்கிறார். மேலும், இறைவர் எல்லா உயிர்களுக்கும் இந்த மண்ணில் உணவை கொடுத்தே வைத்திருக்கிறார்...." என்கிறார் வள்ளற் பெருமானார்.
தருமச்சாலையால் இரண்டு பலன்கள்.
ஒன்று. உணவுப்பொருட்கள் தானமாகத் தருவோரின் முந்தைய பாவக் கணக்குகள் சமன் செய்யப்படுகின்றன.
இரண்டு. பசியால் பறிபோகும் உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இத்தகைய மகத்தான பலன்களைத் தரும் "தருமச் சாலையே" ஓர் பெரிய வழிபாட்டுக் கூடம் என்கிறார் வள்ளற் பெருமானார்.
இதனால்தான் வள்ளற் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்துள்ள, வள்ளலாரால் மிகவும் அன்பு செலுத்தப்பட்ட காரணப்பட்டு கந்தசாமி அவர்கள், நாளொன்றுக்கு மூன்று வேளையும் தருமச்சாலையை சுற்றி வந்து வள்ளலாரின் பாடல்கள் பாடி வழிபட்டு வந்துள்ளார்.
அத்தகைய தருமச்சாலை ஒன்றையும், 1870 ம் ஆண்டுகளில் ஞான விளக்கம் தரும் ஞான சபை ஒன்றை மட்டுமே நிறுவிய வள்ளற் பெருமானார், தான் தங்குவதற்கு என்று ஒரு குடிசை கூட அந்த 106 ஏக்கர் பெருவெளியில கட்டிக்கொள்ளவில்லை.
மேலும், 1860 களில் சைவ நெறி சார்ந்திருந்த வள்ளற் பெருமானாரிடம், பெருவெளியில் "ஒரு சித்தி விநாயகர் கோயில், வேத பாடசாலை, மருத்துவ சாலை" அமைக்க அவரது அன்பர்கள் கேட்டுக்கொண்ட போது முதலில் "வேதபாடசாலை" மட்டும் அமைக்க அனுமதி தந்து அதற்கு ஆசிரியர் ஒருவரையும் அமர்த்தி இருக்கிறார் வள்ளலார்.
அந்தப் பாடசாலையில் திருக்குறள் வகுப்பு எடுக்க உத்தரவிட்டிருந்தார் வள்ளலார்.
ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் ஒழுங்காகப் படம் எடுக்காத காரணத்தால் அந்தப் பாடசாலையை இழுத்து மூடச் சொல்லிவிட்டார் வள்ளற் பெருமான். அத்தோடு அந்த "ஒரு சித்தி விநாயகர் கோயில், வேத பாடசாலை, மருத்துவ சாலை" என்கிற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்ததுடன், பிறகு "வேத" என்கிற சொல்லையே, "சங்கம், சாலை, சபை" ஆகிய மூன்று அமைப்புகளிலிருந்தும் எடுத்துவிட்டு, "சத்திய சுத்த சன்மார்க்க" எனும் சொற்களை இணைத்துப் பெயர் மாற்றினார். (ஆதாரம் : காரணப்பட்டு கந்தசாமி பிள்ளை இயற்றிய பிரபந்தத் திரட்டு நூல்)
மேலும், "சில காலம் முன்புவரை சைவ நெறியை தாம் மிகவும் உயர்த்திப்பிடித்ததாகவும், அப்போது தமக்கு அறிவுகுறைச்சல்" இருந்ததாகவும் கூறிய வள்ளற் பெருமானார் இறுதியில் "சத்திய சுத்த சன்மார்க்கம்" எனும் புதிய சன்மார்க்கத்தை கொடி, கொள்கை, ஒழுக்க விதிகள், வழிபாடு விதிகள், ஞானசபை விதிகள் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தார். மேலும்,
"சாதியும், மதமும், சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி" என்று பெருமுழக்கம் செய்தார்.
ஆக, 1867 ம் ஆண்டில் தருமச்சாலை கட்டிய பிறகு 1872 ம் ஆண்டு ஞானசபை கட்டியவரை அவர் வேறு எந்தக் கட்டுமானமும் காட்டவில்லை. ஞானசபை கட்ட முடிந்த வள்ளலாருக்கு இந்த சிறிய சாலைகள் கட்டுவது கடினமான செயலா என்ன ?
ஆக, 7 சாலைகள்,14 சாலைகள் என்றெல்லாம் வள்ளற் பெருமானார் எங்குமே கட்டச்சொல்லி உத்தரவு இடவில்லை, எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இல்லை.
இவர்கள் கூறும் ஒரு விளம்பரக் காகிதத்தின் பின்புறத்தில் ஏழு சாலைகள் குறித்து வள்ளலாரோ, வள்ளலார் நியமித்த நிர்வாகிகளோ எதையும் எழுதி வைக்கவில்லை. வள்ளற் பெருமானாரின் பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணபிள்ளை அதில் பின்புறம் யாரோ எழுதி வைத்த சாலை எனும் சொல் இருப்பதால் எதற்கும் இருக்கட்டுமே என்று பாதுகாத்தேன் என்றுதான் சொல்லியிருக்கிறார்.
01. வடலூர் 106 ஏக்கர் பெருவெளி இராமலிங்க வள்ளலார் பெயரில் உள்ள பட்டா நிலம்.
02. அதில் வள்ளலார் வகுத்த நெறிமுறைகளுக்கு எதிராக எந்தச் செயலும் செய்தல் கூடாது.
03. 106 ஏக்கரும், "உத்தர ஞான சிதம்பர, உத்தர ஞான சித்திபுரம்" என்று இறைவரால் அருளப்பட்ட பெயர்களை சூடிய வள்ளற் பெருமானார் அது ஒரு வெட்டவெளிப் பெருவெளித் தலம் என்கிறார்.
"சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
திருவருட் பெருவெளித் தலம் "
என்று தமது பாடல் ஒன்றில் போற்றுகிறார் வள்ளற்பெருமான்.
இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த, தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்ட பெருவெளித் தலத்தினுள் 100 கோடி ரூபாய் செலவில் "வள்ளலார் சர்வதேச மையம்" காட்டுகிறோம் என்று கடந்த 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்து நிதி ஒதுக்கித் திட்டத்தைத் தொடங்கியது.
ஒரு தனியார் பட்டா நிலம், அதிலும் ஏழை, எளிய மக்கள் வந்து செல்ல எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வள்ளற் பெருமானாரின் உத்தரவுப்படி 150 ஆண்டுகளாகக் காலியாக வைக்கப்பட்டுள்ள பெருவெளித்தலம் அதுவும் பேரண்டத் தலம் (Universal Centre) அதை சர்வதேச மையம் (International centre) என்று சுருக்கி, ஆடம்பரத் தங்கும் விடுதி, உணவு விடுதி அகியவை அடங்கிய வணிக வளாகம் கட்டி அதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைத் சேர்ந்த ஒருவரைத் தலைவராக அமர்த்த பித்தலாட்டத் திட்டம் தீட்டப்பட்டது.
மக்களிடம் கருத்துக் கேட்கிறேன் எனும் பெயரில் திமுகவினருக்கு சன்மார்க்க சங்கத்தவர்கள் என்று வேடமணிந்து அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்து கட்டுமானம் கட்டத் தொடங்கியது.
இதனை எதிர்த்து 106 ஏக்கர் நிலம் கொடுத்த பார்வதிபுரம் மக்கள், பொது நலன் அமைப்புகள், அரசியல் கட்சிகள், உத்தரஞான சிதம்பர சேவை இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், தெய்வத்தமிழ் பேரவை, பாமக, பாஜக, அதிமுக, அமமுக, இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் போராடின. வினோத் ராகவேந்திரா எனும் பாஜகவின் கோயில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் வினோத் ராகவேந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞர் சுரேஷ் இன்றுவரை வாதாடிக்கொண்டிருக்கிறார்.
எதிர்ப்பு வலுத்தவுடன், "இல்லையில்லை நாங்கள் வள்ளலார் சொல்லிய 7 சாலைகளைக் காட்டுகிறோம்" என்று மாற்றி உருட்டினார்கள் இந்து சமய அறநிலையத்துறையும், அதன் பின்னணியில் உள்ள திமுகவின் பினாமி "வடலூர் தலைமைச் சங்கம்" எனும் லெட்டர் பேட் சங்கத்தினரும்.
இப்படிப்பட்ட நிலையில் ஆட்சி மாறி தவெக அரசு வந்தவுடன், பெருவெளியில் அத்திட்டம் கைவிடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே வேளை, இன்னமும் அதே "வள்ளலார் சொன்ன 7 சாலைகள்" என்று இந்து சமைய அறநிலையத்துறை இப்போதும் "திமுக பினாமி வடலூர் தலைமைசங்கம் எனும் லெட்டர் பேட் சங்கம் உருவாக்கிய பொய்யை நீதிமன்றத்திலும் கூறி வருகிறது.
மேலும், எப்போது 100 கோடி திட்டம் பெருவெளியில் கைவிடப்பட்டதோ அப்போதே அதற்காக பெருவெளியின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளங்களையும் மூட வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அதனை மறைத்து வைத்த தகரத் தகடுகளை யாரோ சிதைத்து விட்டார்கள் என்று ஒரு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை.
இதிலிருந்து நமக்கு ஒரு கேள்வி எழுகிறது....ஆட்சி ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவிடம் என்றால் அதிகாரம் இன்னமும் திமுகவிடமா இருக்கிறது என்று !
வடலூர் பெருவெளி காக்கப் போராடிய அனைவரையும் அமைச்சர் ரமேஷ் அவர்கள் நேரடியாக அழைத்து கருத்துக்களைக் கேட்டு அறிதல் வேண்டும். அதுவரை வடலூரில் வள்ளலாரின் பெயரில் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். இதுவே தவெக அரசு வள்ளலாருக்கு செய்யவேண்டிய பெரும் சேவை !
கட்டுரையாளர் : வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் ,
ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்,
நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை
நிறுவனர் : தமிழில் நடுவம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)