சன்மார்க்க சங்கத்திற்கு வள்ளலார் ஏன் ‘அலுவலகம்’ கட்டவில்லை? சங்கம்–சாலை–சபை மட்டுமே ஏன்?
வடலூர் பெருவெளியில் புதிய சங்கக் கட்டடம் தேவையா? வள்ளலார் உருவாக்கிய சங்கம்–சாலை–சபையின் வரலாறு என்ன? Article 25 மற்றும் 2022 சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறுகின்றன? அக்டோபர் 1 பெருவெளி வழக்கு விசாரணையை முன்னிட்டு சிறப்புப் பார்வை.
சன்மார்க்க சங்கத்திற்கு ஏன் வள்ளலார் "அலுவலகம்" கட்டவில்லை ?!
சங்கம் - சாலை - சபை தவிர வேறு எந்தக் கட்டடமும் ஏன் வள்ளலார் கட்டவில்லை !?
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
வடலூரில் கடந்த 1865 ம் ஆண்டு இராமலிங்க வள்ளற் பெருமானார் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கத்தைத் தொடங்கினார். இது இன்று பதிவு செய்யப்படும் சங்கப்பதிவு சங்கம் அல்ல. இது "சன்மார்க்கர்களின்" சங்கம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 25 வது பிரிவு,
"வழிபாட்டை (மதத்தை) நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் Article 25 அடிப்படை உரிமையை வழங்குகிறது. அதற்காக அரசுப் பதிவு அல்லது அனுமதி தேவையில்லை. ஆனால் அந்த மத நம்பிக்கையின் பெயரில் ஓர் அமைப்பு நிறுவப்பட்டு, சொத்து, நிதி, வங்கிக் கணக்கு, நன்கொடை அல்லது பிற சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அந்த அமைப்பின் பதிவு தொடர்பான சட்டங்கள் தனியாகப் பொருந்தலாம்" என்கிறது.
இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் வள்ளலார் சத்திய ஞானசபை தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 2022 ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,
"சத்திய ஞானசபையில் வள்ளலார் நிறுவிய தனித்துவமான வழிபாட்டு (மத) நடைமுறையை Article 25 அடிப்படையில் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை" வலியுறுத்தியது.
எனவே...வள்ளலாரின் "சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம்" என்பதும் "சமரச சுத்த சத்திய சன்மார்க்கம்" என்பதும் வேறு வேறல்ல. ஆகவே இதனைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 உறுதிப்படுத்துகிறது.
அதே சமயம், சத்திய ஞான சபை, சாலை ஆகியவற்றின் வரவு செலவுகளை நிர்வகிக்கத் தேவையான சட்டபூர்வ தனி அமைப்பையும், சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டியதில்லை.
எனவே, "வடலூர் தலைமைச் சங்கம்" என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டு முந்தைய திமுக அரசின் பினாமிக்களாகச் செயல்பட்டு வரும் அந்த சங்கம் என்பது வள்ளலார் உருவாக்கிய "சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம்" அல்ல.
வடலூர் தலைமைச் சங்கம் எனும் ஒரு திமுக பினாமி சங்கத்திற்கும் வள்ளலாரின் "சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கத்திற்கும்" எந்தவித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை, தார்மீக அல்லது நிர்வாக ரீதியிலான தொடர்பும் இல்லை.
இத்தகைய நிலையில், வடலூர் பெருவெளியில் "சங்கத்திற்கு" ஒரு கட்டடம் என்பது வள்ளலாரையே ஏமாற்றும் வேலை.
அடுத்து, வள்ளாளரின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக பதிவு செய்து வைத்துள்ள காரணப்பட்டு கந்தசாமி பிள்ளை அவர்கள் தாம் இயற்றிய பிரபந்தத் திரட்டு எனும் நூலில், "ஒரு சித்தி விநாயகர் கோயில் மற்றும் வேத பாடசாலை, வைத்திய சாலை" ஆகியவை அமைக்கலாம் என்று ஒரு திட்டம் இருந்ததாகவும், ஆனால் வள்ளலார் பாடசாலை ஒன்றை மட்டும் முதலில் நடத்த வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பாட சாலையையும் ஆசிரியரால் சரிவரக் கற்றுக் கொடுக்கப்படாத காரணத்தால் மூன்றே மாதத்தில் நிறுத்திவிடச் சொன்னார் வள்ளலார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த "வேத" எனும் முன்னொட்டுச் சொல் கூட, வள்ளலார் "சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம், சாலை, சபை" ஆகியவற்றுக்குப் பெயர் மாற்றம் செய்வதற்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டு பிறகு "சைவ சமயத்தை எவ்வளவு உயர்த்திப் பிடித்துவிட்டேன்...அப்போது எனக்கு அறிவுகுறைச்சலாக இருந்தது" என்று குறிப்பிட்ட காலத்திற்கு முந்தைய சிந்தனை.
உருவ வழிபாடு இல்லாது ஒளிவழிபாடு என்று முடிவு செய்து ஞானசபை கட்டிய வள்ளலார் எப்படி சித்திவிநாயகர் கோயில் கட்டுவார் ?
வேத பாடசாலை, வைத்திய சாலைகளையும் ஏன் அதற்குப் பிறகு அவர் தொடரவில்லை ? தொடங்கவில்லை ? தொடங்கவும் எங்குமே கூறவில்லை ?
எனவே, திமுக பினாமி வடலூர் தலமைச் சங்க ஆசாமிகள் குறிப்பிடும் சாலைகள் முழுக்க முழுக்க பொய் மட்டுமல்லாது சுயநல அடிப்படையிலானது.
இந்தத் திமுக பினாமி கூட்டத்தின் கைப்பாவையாக சத்திய ஞான சபையின் அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் செயல்படுகிறார். உதவி ஆணையர் தகுதிக்குத் தரம் உயர்த்தப்பட்ட சத்திய ஞானசபையில் செயல் அலுவலராக இன்னமும் அவர் நீடிப்பது திமுக பினாமி தலைமைச்சங்க நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தானா ? என்கிற கேள்வி அவரது இந்த கூடுதல் சாலை, சங்கத்திற்கான கட்டடம் ஆகிய கோரிக்கைகள் மூலம் எழுகிறது.
ஆக, வடலூர் பெருவெளி நிலத்தின் 106 ஏக்கரில் எங்குமே இதுபோன்ற சங்கம், கூடுதல் கற்பனை சாலைகள் தேவையற்றவை, வீண் செலவு.
மாறாக, சுற்றுச்சுவர், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெருவெளியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளத் தேவையான செலவுகள், திருவருட்பா மலிவு விலை நூல்களை வெளியிடுதல், சாதுக்கள் பயிற்சி, 24 மணி நேரமும் உணவு தரும் தருமச்சாலை உள்ளிட்ட ஆக்கப்பூர்வ செலவுகளுக்கு 100 கோடி ரூபாயைத் தாராளமாக செலவு செய்யலாம் என்பதே அறிவுடைமை, வள்ளலாரின் உள்ளார்ந்த திட்டமும்கூட.
மேலும், வள்ளற் பெருமானார் மதம், சமயம் என்ற சொற்களைப் பயன்படுத்தவேயில்லை. மாறாக, சன்மார்க்கம், சங்கம் எனும் சொற்களையே தாம் நிறுவிய அமைப்புகளுக்குப் பெயரிட்டார்.
சாதியும், மதமும், சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்கிறார் வள்ளற் பெருமானார்.
அடுத்து பார்வதிபுரத்தில் 1867 ம் ஆண்டு மே மாதம் 23 ம் நாள் சத்திய தருமச் சாலை கட்டினார்
அதற்கடுத்து 1972 ம் ஆண்டு சனவரி 25 ம் நாள் சத்திய ஞான சபை திறந்து வைக்கப்பட்டது.
ஆக, இந்த சங்கம் - சாலை - சபை மட்டுமே வள்ளலாரின் "சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தின்" பெருவெளி அங்கங்கள்.
பார்வதிபுரம் மக்களிடம் 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலத்தைத் தனமாக வாங்கிய வள்ளற் பெருமானார் இந்த மூன்று அமைப்புகளை மட்டுமே அங்கே நிறுவினார். தனக்கென ஒரு குடியிருப்பைக் கூட அவ்வளவு ஏன் ஒரு குடிசையைக்கூட பெருவெளியில் கட்டிக்கொள்ளவில்லை. பெருவெளியில் தங்கியிருத்தபோது அவர் தருமச்சாலையில்தான் தங்கி இருந்திருக்கிறார்.
அவர் எண்ணியிருந்தால் சங்கத்திற்கு என்று ஒரு அலுவலகக் கட்டடம், தான் தங்குவதற்கு ஒரு வசதியான குடியிருப்பு ஆகியவற்றைக் கட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பிறகு மேட்டுக்குப்பத்திற்கு சென்று கிராம மக்கள் கொடுத்த சிறு வீட்டில்தான் தங்கியிருந்தார்.
எனவே...வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் குறித்து எந்த அடிப்படை அறிவும் இல்லாது மனம்போன போக்கில் சுயநல, சுரண்டல் எண்ணம் கொண்டவர்களின் போலிச் சங்கங்களின் பெயரில் பெருவெளியை சிதைத்து, சன்மார்க்கத்தையும் சிதைத்து விடாதீர்கள் இந்து சமய அறநிலையத்துறையினரே !
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)