திலீபன் சிலை அகற்றம்: தமிழர்களின் நினைவுகூரும் உரிமையும் அகற்றப்படுகிறதா?

யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் சிலையை இலங்கை காவல்துறை அகற்றியது ஏன்? ஆயுதமற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் நினைவுச் சின்னத்தை அகற்றுவது தமிழர்களின் நினைவுகூரும் உரிமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

Sep 27, 2026 - 15:11
Updated: 1 month ago
0 27
திலீபன் சிலை அகற்றம்: தமிழர்களின் நினைவுகூரும் உரிமையும் அகற்றப்படுகிறதா?

-தமிழன் கரிகாலன்

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த திலீபனின் சிலை இன்று அதிகாலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. திலீபனின் 39-வது ஆண்டு நினைவேந்தல் நிறைவடைந்த மறுநாளே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலை அகற்றப்பட்டதற்கான சட்ட அடிப்படையையும் அதிகாரப்பூர்வ காரணத்தையும் காவல்துறை இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் "விபு" போராளி இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பது வரலாறு. அதேவேளை அவர் இறுதியாக உலகத்தின் கவனத்தை ஈர்த்தது துப்பாக்கியால் அல்ல; உண்ணாவிரதம் என்ற ஆயுதமற்ற போராட்டத்தின் மூலம்தான்.

1987 செப்டம்பர் 15 அன்று நல்லூரில் இந்திய அரசை நோக்கி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். உணவும் நீரும் அருந்தாமல் தொடர்ந்த அந்தப் போராட்டத்தின் முடிவில் செப்டம்பர் 26 அன்று உயிரிழந்தார்.

அப்படியானால் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது.

ஆயுதப் போராட்டத்தின் சுவடுகளை அழிப்பதில்கூட அரசுக்கு ஒரு நியாயம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அறப்போராட்டத்தின் அடையாளத்தை அகற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு சிலை என்பது வெறும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட உருவம் மட்டுமல்ல. ஒரு சமூகத்தைப் பொறுத்தவரை அது கடந்தகாலத்தின் நினைவு; அரசியல் வரலாற்றின் பதிவு; அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப்படும் ஒரு காலத்தின் சாட்சி.

அந்த வகையில் நல்லூரில் இருந்த திலீபனின் சிலையை அகற்றிய நிகழ்வை ஒரு சிலை அகற்றப்பட்ட சம்பவமாக மட்டும் கடந்துவிட முடியவில்லை.

ஏனெனில் அந்த இடத்திற்கும் நீண்ட வரலாறு இருக்கிறது. திலீபனுக்கான முதல் நினைவிடம் அவரது மரணத்திற்குப் பின்னர் அமைக்கப்பட்டதாகவும், பின்னர் அது அழிக்கப்பட்டு மீண்டும் அமைக்கப்பட்டு, மீண்டும் அழிக்கப்பட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. இப்போது நிறுவப்பட்டிருந்த வெண்கலச் சிலையும் அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பே நல்லூரில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தலில் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி உபகரணங்களையும் காவல்துறையினர் அகற்றியிருந்தனர்.

ஆயுதப் போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்னும் தமிழர்கள் யாரை நினைவுகூர வேண்டும், எங்கே நினைவுகூர வேண்டும், எந்த வடிவத்தில் நினைவுகூர வேண்டும் என்பதுகூட சர்ச்சைக்குரியதாகத் தொடருமானால், இலங்கையின் போருக்குப் பிந்தைய நல்லிணக்கம் எங்கே நிற்கிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

திலீபனின் சிலையை அகற்றிவிடலாம். ஆனால் திலீபன் என்ற வரலாற்றையும், அந்த உண்ணாவிரதத்தையும், அதற்குப் பின்னால் இருந்த தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளையும் ஒரு காவல்துறை வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட முடியுமா?

அதுதான் இந்தச் சிலை அகற்றம் விட்டுச் சென்றிருக்கும் மிகப்பெரிய கேள்வி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User