பேராசிரியர் கலையரசன் விவகாரம்: எம்.எல்.ஏ. பின்னணி? RMR ரமேஷின் Journalists Welfare Union பதிவு எங்கே? தீபாவளி வசூல் சர்ச்சை!
பேராசிரியர் கலையரசன் காவல்துறை விவகாரத்தில் எம்.எல்.ஏ. தலையீடா? RMR ரமேஷ் குறிப்பிடும் Journalists Welfare Union பதிவு விவரம் என்ன? உணவுப் பாதுகாப்புத் துறையில் தீபாவளி இனிப்பு வசூல் குற்றச்சாட்டு!
+ பேராசிரியர் கலையரசன் கைது ; முதலமைச்சருக்கும், காவல்துறையினருக்கும் தரும சங்கடம் ஏற்படுத்தினாரா எம்.எல்.ஏ?!
+ தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் கூறும் “Journalists Welfare Union” எனும் அமைப்பு எப்போது ? எங்கே ? யாரால் பதிவு செய்யப்பட்டது?! --குழப்பத்தில் பத்திரிகை ஊடகர்கள் !
+ ஆயிரக்கணக்கான கிலோ ஸ்வீட் பாக்ஸ்: ஆனந்த தீபாவளி 'வேட்டையாடுகிறார்களா?' சில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்?!
-தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
இரண்டு கைகளிலும் இனிப்புப் பெட்டிகளுடன் அலுவலகம் வந்த பருந்தார் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்னார்.
நாமும் அவருக்கு தமிழ் ஊடகம் சார்பில் இனிப்புப் பெட்டி கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.
கடந்த ஆட்சிகளிலெல்லாம் அமைச்சர்கள் உள்ளிட்ட VIP க்களுக்கு தீபாவளிக்கு இனிப்புப் பெட்டிகள் வாங்கித் தருவது மாவட்ட அளவிலான உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தானாம் என்று எடுத்தவுடனே இனிப்பிலிருந்தே தொடங்கினார் பருந்தார்.
எப்படித் தங்கள் துறையிலிருந்து பணம் போட்டா என்று அப்பிராணி போல கேட்டோம்
அவர்கள் எதற்குப் பணம் போடப்போகிறார்கள். இருக்கும் துறைகளிலேயே மிகுந்த 'செல்வம்' கொழிக்கும் துறைகளில் இந்த உணவுப் பாதுகாப்புத் துறையும் ஒன்று.
புரியும்படியாகச் சொல்லுங்க பருந்தாரே என்றோம்.
சாதாரண சின்ன ஓட்டலிலிருந்தது பெரிய நட்சத்திர ஓட்டல்கள் வரை இவர்கள்தான் உணவு பாதுகாப்புச் சோதனை செய்யவேண்டியவர்கள், உரிமம் தரவேண்டியவர்கள் என்ற பருந்தாரைக் குறுக்கிட்டு...
புரிஞ்சுபோச்சுங்க பருந்தாரே...ஆக அத்தனை கடைகள், ஓட்டல்களும் இவர்கள் சொன்னால் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆமாம்...அதுவும் சும்மா ஏதோ 10 கிலோ 20 கிலோ இல்லை. ஆயிரக்கணக்கான கிலோ இனிப்பு, காரம் என்று வகைவகையாக வசூல் நடக்குமாம். அதனைத்தான் அமைச்சர்கள் எல்லோருக்கும் கொடுப்பார்களாம்.
அதானே கேட்டேன்...எந்த அமைச்சர் சொந்தக் காசு போட்டு இதெல்லாம் பரிசு தருவார் என்று சொன்னோம்.
சரிதான்...கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுதானே சில அரசியல்வாதிகளின் விவசாயம் என்ற பருந்தார், அதெல்லாம் போன ஆட்சிகளில் சரி. ஆனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியிலும் எதற்காக வசூல்?! என்று கேட்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்...
ம்...சரியான கேள்விதான் என்றோம்.
ஆமாம், இந்த ஆட்சியிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசூல் கொடி கட்டிப் பறக்கிறதாம். டன் கணக்கில் இனிப்புப் பெட்டிகள் வசூல் என்கிறார்கள்.
முதலமைச்சர் கடைக்கண் பார்வை விழட்டும்...இனிப்புக் கடைக்காரர்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும் என்றோம்.
MIDS எனும் வளர்ச்சி அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். அதன் பேராசிரியர் கலையரசன் என்பவரை அவரது இரவு உடையுடன் அதிகாலையில் சீருடை அணியாத காவல்துறையினர் 3 பேர் தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்று அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மீண்டும் அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றதாகப் பரபரப்பு ஆனது நினைவிருக்கா என்றார் பருந்தார்.
அது எப்படி மறக்கமுடியும், தமிழ் ஊடகம் ஒரு தனிக் கட்டுரையே வெளியிட்டிருக்கிறதே என்றோம்.
ம்...அத்தனை குழப்பத்துக்கும் காரணம் அந்த எம்.எல்.ஏ.தானாம். காஞ்சிபுரம் தொடர்புடைய பெயர் கொண்ட அந்த எம்.எல்.ஏ.குறித்து ஏற்கனவே பருந்தார் தகவல்களில் சொல்லியிருந்தோம்.
நினைவிருக்கிறது பருந்தாரே, சென்னையில் இருந்து வந்து புறநகரில் 'ஆட்சி' புரியும் அந்த அம்மணி வந்த வேகத்தில் அந்த மாவட்டச் செயலாளரை ஒதுக்கி மாவட்டப் பொறுப்பு வாங்கி அடுத்து விரைவில் அமைச்சர் எனும் இலக்கோடு மிக வேகத்தில் செல்கிறார் என்று சொல்லி இருந்தீர்கள் என்று நினைவூட்டினோம்.
ஆமாம், அவர் இரசிகர் மன்ற ஆரம்பத்திலிருந்து பாடுபட்டுவரும் தவெகவினரையும் ஓரம்கட்டி திமுக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளையும் தனது அரசியல் வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டாராம். கட்சிக்காரர்கள் முதல் காவல்துறை வரை அவர் இடும் கட்டளைகளைப் பார்த்து கலங்கி நிற்கிறார்களாம் என்றார் பருந்தார்.
ஓஹ்...பெரிய இடம் போல.
ஆமாம், பணபலத்திலும் பெரிய இடமாம்...அது தவிர ஒரு பெரிய கல்லூரியின் அறக்கட்டளை ஒன்றிலும் நிர்வாக ரீதியாகத் தொடர்பு இருக்கும்போல.
ம்....
பொதுச்செயலாளரையே ஓரம்கட்டி தவெகவின் அந்த அரசியல் ஆலோசகருடன் நேரடியாகப் பேசும் அளவுக்கு செல்வாக்காம்.
புரிகிறது.
அந்த அதிரடி எம்.எல்.ஏ.தான் அந்தக் காணொலி ஒன்றை இன்ஸ்டாவில் பார்த்துவிட்டு உடனே அந்த ஆளைத் தூக்குங்கள் என்று காவல்துறையினருக்குக் கட்டளையிட்டாராம் என்ற பருந்தாரிடம்...
சரி...அவர்தான் கோபத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம்...காவல்துறையினருமா அது யாருடைய ID, உண்மையா இல்லை Fake IDயா என்ன ஏதுவென்று ஆராயாமல் தூக்குவார்கள்...அது சரி அவர்தான் எம்.எல்.ஏ.ஆச்சே முறையாகப் புகார் கொடுத்திருக்கலாமே என்று கேட்டோம்.
ஒரு உறுதிப் படுத்தப்படாத தகவல்...ஆனால் கசிந்த தகவல், FIR ஏ போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அடக் கொடுமையே...!
அவரிடம் இன்ஸ்டா அக்கவுன்டே இல்லை. மேலும், அவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். அவர் எதற்கு அந்த எம்.எல்.ஏ குறித்து அவதூறு பரப்பவேண்டும் என்று கூடவா சிந்திக்கவில்லை எனும் கேள்விதான் பலருக்கும் எழுந்தது என்ற பருந்தாரிடம்...
சரி அப்படியே இருதாலும் சைபர் கிரைம் போலீசிடம் முதலில் அது யாருடைய ID என்று உறுதிப் படுத்தி...அல்லது கலையரசனிடமே அலைபேசியில் மதியவாக்கில் அழைத்து, "சர் இது உங்க ID யான்னு கேட்டிருக்கலாமே?" என்று கேட்டோம்
அநேகமாக அவர்களுக்கு MIDS என்றால் என்ன? அதன் பேராசிரியர் பொறுப்பு எப்படிப்பட்ட ஒரு மதிப்புமிக்க கல்விப் பொறுப்பு என்று எதுவுமே தெரியவில்லை போல. நேரில் சென்ற காவல்துறையினருக்கு ஓரளவுக்கு நிலைமையினை உணர்ந்திருந்தும்கூட அழுத்தம் காரணமாக அவர்களும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இது என்ன...அடிடா தூக்குடா என்பதுபோல அடியாள் வேலையா என்ன? பொறுப்பு மிக்க காவல்துறைப் பணியல்லவா? என்று கேட்டோம்.
அதுதான் என்ன நடந்ததோ சரியாகத் தெரிவில்லை..ஆனால் ஒரு உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்ற பருந்தாரிடம்,
புரிகிறது பருந்தாரே...தொடர்புடைய எம்.எல்.ஏ. சற்று சகிப்புத் தன்மையோடு முதலில் சைபர் கிரைம் துறைக்கு அந்தக் காணொலியை அனுப்பி அதன் உண்மையான ID யார் என்று கண்டுபிடித்திருக்கலாம், Block செய்திருக்கலாம்...ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஏடாகூடம் செய்து.....இன்று முதலமைச்சருக்கும், காவல்துறையினருக்குமே தரும சங்கடம்தானே என்றோம்.
திருபுவனம் கோயிலில் ஒரு எளிய பணியாளர் அஜித் குமாரைக் காவல்துறையின் சீருடை அணியாத ஒரு சிறப்புப் படைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்திக் கொன்றார்கள் நினைவிருக்கிறதா? என்று கேட்ட பருந்தார், முக்கிய அதிகார மையத்தில் இருப்பவர்கள் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு என்றார்.
உண்மைதான் பருந்தாரே கொண்டு வா என்பதற்கும் கொன்றுவா என்பதற்கும் இடையே உள்ள மிகச் சிறிய வேறுபாடு போல ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள் என்று சொன்னோம்.
ம்..சரிதான் என்ற பருந்தார், தினகரன் மேலாண்மை இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் Youtube ஊடகருக்கு அனுப்பியதாகக் கூறியுள்ள ஒரு வழக்கறிஞர் நோட்டீஸில், "ஆர்.எம்.ஆர்.ரமேஷ் தினகரன் நாளிதழில் 2005 ம் ஆண்டு முதல் MD ஆகவும், Journalists Welfare Union ல் முக்கிய நபராகவும் செயலாற்றிவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."
அது என்ன Journalists Welfare Union ? அப்படி ஒரு அமைப்பைக் கேள்விப்பட்டதே இல்லையே என்றோம்.
இதே கேள்விதான் பலருக்கும் வந்தது. அவர் ஒரு Journalist அதாவது பத்திரிகையாளர் அல்ல. ஒரு நிர்வாக மேலாண்மை இயக்குநர். அவர் எப்படி Journalists Welfare Union ல் முக்கிய நபராக இருக்க முடியும் என்று சொல்லி அந்த அமைப்பு ஏதும் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆழமாகத் தேடியபோதும் அப்படி எந்த ஒரு அமைப்பும் Association அல்லது Trsut சட்டப்படியோ வேறு எந்த அளவிலும் பதிவு செய்ததாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
ஓ...அப்புறம் எப்படி வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிடுகிறார்கள் என்று கேட்டோம்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 2021-26 திமுக ஆட்சியில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை தினகரன் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் தலையிலான திமுக ஆதரவாளர்கள் கைப்பற்றிய கையோடு "பத்திரிகையாளர் அரசு அங்கீகாரக் குழு, பத்திரிகையாளர் அரசு நல வாரியம்" ஆகியற்றில் திமுக ஆதரவு ஆட்களை பொறுப்பில் அமர்த்தினர்.
ஆமாம்...சென்னை பத்திர்கையாளர் மன்றத்தில் அதன் துணை விதிகளுக்கு (Bye Law) விரோதமாக, 22 ஆண்டுகளாக முறையாக சந்தா செலுத்திவரும் 161 மூத்த உறுப்பினர்களை நீக்கிவிட்டு, விதிகளுக்குப் பொருந்தாத சுமார் 800 பேரை சேர்த்த ஹிந்து நாளிதழின் டி.சுரேஷ் குமாருக்கு செய்தியாளர் அங்கீகாரக் குழுவில் பொறுப்பு கொடுத்தார்கள்.
கரெக்ட்...அந்தக் கலகட்டத்தில்தான் தினகரன் MD ஆர்.எம்.ஆர்.ரமேஷை 'பத்திரிகையாளர் அரசு நல வாரியத்தில்' உறுப்பினர் ஆக்கினார்கள், 2022 ம் ஆண்டு.
அது, 'Journalist Welfare போர்டு' அதாவது 'பத்திரிகையாளர் நல வாரியம்' ஆச்சே, அது Union அல்லவே. அந்தக் குழுவும் கலைக்கப்பட்டு புதிய குழு போட்டுவிட்டார்களே..அப்புறம் அது ஒரு வாரிய உறுப்பினர் பொறுப்புதானே என்று கேட்டோம்.
அதைத்தான் அந்த லட்சணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் போல என்ற பருந்தார், அவர் ஒரு மேலாண்மை இயக்குநர் என்று குறிப்பிட்டாலே போதுமானது, எதுக்கு இந்த 'எஸ்ட்ரா பிட்' என்று கேட்கிறார்கள் பத்திரிகை ஊடகவியலாளர்கள் என்ற பருந்தாரிடம்,
போன ஆட்சியில் Youtuber ஒருத்தர் தலைமையில் டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் என்று ஒரு பெயரில் அமைப்பைத் தொடங்கி தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு என்ன நடந்தாலும் கம்னு இருந்துட்டு பாலஸ்தீனத்துல பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் எழும்பூர்ல போராட்டம் நடத்தினாங்களே...அது போலதானே என்னவோ என்றோம்.
பத்திரிகை ஊடக உலகத்துல ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடித்தானே அம்மிக்கல்லும் தேர்தல் காற்றில் பறந்துபோய் வங்காள விரிகுடா கடலில் விழுந்துச்சு என்ற பருந்தார் சரி மீண்டும் சந்திப்போம்...பை பை என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)