வள்ளலார் பெருவெளி வழக்கு: 269 பேருக்கு நோட்டீஸ்! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
வடலூர் வள்ளலார் பெருவெளி வழக்கில் 269 பேருக்கு நோட்டீஸ். சுற்றுச்சுவர் தொடர்பான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் வழங்கியது.
வள்ளலார் பெருவெளியில் 30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும்
269 பேருக்கு நோட்டீஸ் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
வடலூர் சத்தியஞான சபை நிலத்தைப் பாதுகாக்கச் சுற்றுச்சுவர் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை, அக்டோபர் 13, 2026
கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்தியஞான சபைக்குச் சொந்தமான பெருவெளி நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் (12/10/26 அன்று) புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பெருவெளி நிலங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
269 பேருக்கு நோட்டீஸ்!
வள்ளலார் சத்தியஞான சபைக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 269 பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று ஆதாரங்கள், சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டிவரும். உரிய சான்றுகள் இல்லையெனில் அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேற வேண்டியிருக்கும்.
சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை!
வள்ளலார் சத்தியஞான சபைக்குச் சொந்தமான நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்றம் மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது.
பெருவெளி பாதுகாப்பில் அடுத்த கட்டம்!
வடலூர் வள்ளலார் பெருவெளியில் நில ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் மற்றும் நிலப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கைகளுக்கும், சத்தியஞான சபையின் தனித்துவமான வழிபாட்டு மரபுகளுக்கும் ஏற்றவாறு பெருவெளி பாதுகாக்கப்பட வேண்டும் என்று சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில், நில உரிமை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பெருவெளி பாதுகாப்புப் பணிகளுக்குக் காலக்கெடு நிர்ணயிப்பதற்கும் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
நீதிமன்றம் வழங்கியுள்ள அவகாசத்திற்குள் 269 பேருக்கான நோட்டீஸ் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நிறைவடைகின்றன, நில உரிமை ஆவணங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படுகின்றன, சுற்றுச்சுவர் கட்டுமானம் எப்போது செயல்பாட்டுக்கு வருகின்றன என்பவை அடுத்த கட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
வடலூர் பார்வதிபுரம் கிராம மக்கள் வள்ளலாருக்கு 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலம் தானமாக வழங்கி இருந்தார்கள். அதில் கடந்த 1975 ம் ஆண்டு 25 ஏக்கர் நிலத்தை அப்போதைய திமுக அரசு தனியாருக்குப் பட்டா போட்டு கொடுத்துவிட்டது. சுமார் 6 ஏக்கர் நிலத்தை சிவாச்சாரியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அறநிலையத்துறை வசம் இப்போது வெறும் 72 ஏக்கர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளலார் பெருவெளியின் நிலங்களையும் அதன் ஆன்மிக, வரலாற்று அடையாளங்களையும் பாதுகாப்பதில் நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதை வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)