உளவுத்துறையில் அரசியல்!? அஸ்ரா கார்க் IPS-ஐ சுற்றி என்ன நடக்கிறது? | TN Police

தமிழ்நாடு உளவுத்துறையில் என்ன நடக்கிறது? அஸ்ரா கார்க் ஐபிஎஸ் குறித்த ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகள், அதிகாரிகளின் அதிருப்தி பின்னணி குறித்து பருந்தார் தகவல்கள்.

Oct 17, 2026 - 21:10
Updated: 16 days ago
0 517
உளவுத்துறையில் அரசியல்!? அஸ்ரா கார்க் IPS-ஐ சுற்றி என்ன நடக்கிறது? | TN Police

அஸ்ரா கார்க் ஐபிஎஸ்!

உளவுத்துறை அதிகாரிகளைச் சுற்றிச் சுழலும் 'அரசியல்'

என்ன நடக்கிறது தமிழ்நாடு காவல்துறையில் ?!

--தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் | 17/10/2026

பருவமழை தொடங்கிவிட்டிருந்தது. சுற்றிலும் பச்சைப் பசேல் என வயல்வெளி. காலி இடங்களிலெல்லாம் புற்கள் வளர்ந்து எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளித்தது. மழை சரேலென்று துளித் துளியாக மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. மேல்மாடியில் நான்குபுறமும் திறந்த நிலையில் உள்ள மேற்கூரையின்கீழ் அமர்ந்திருந்தோம்.

எலான் மஸ்க்கின் புதிய டெஸ்லா கார் போல வானத்தில் ஒரு வட்டமடித்து நாம் அமர்ந்திருந்த மேல்மாடித் தளத்தில் வந்தமர்ந்தார் பருந்தார்.

பக்குவமாக வேகவைக்கப்பட் வெண்சுண்டல், சூடான சுக்குத் தண்ணீர் கொடுத்துப் பருந்தாரை வரவேற்றோம்.

"மீடியா ட்ரையல்" குறித்த உங்களின் தகவல்களுக்கு நல்ல வரவேற்பு. நன்றிங்க பருந்தாரே என்று ஆரம்பித்தோம்.

ம்ம்ம்...ஏற்கனவே நல்ல மழைக்குளிர் இதில் 'ஐஸ்' வேறா என்று கண்ணடித்த பருந்தார் சுறுசுறுப்பானார். "உளவுத்துறை என்று பொதுவாகச் சொன்னலும் காவல்துறையின் அந்தப்பிரிவுக்குப் பெயர் நுண்ணறிவுப் பிரிவு ஆங்கிலத்தில் Intelligence Section என்று பெயர்.

ம்....

அதன் தலைப்பொறுப்பில் உள்ள IG அஸ்ரா கார்க் ஐபிஎஸ் குறித்துதான் நேர்மறை - எதிர்மறை என இருதரப்புப் புகைச்சல்கள் கிளம்புகின்றன என்ற பருந்தாரிடம்,

இப்போது அவருக்கு கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளதே என்றோம்.

ஆமாம்...அதுவும் சேர்ந்துதான் புகைகிறது என்றார் பருந்தார்.

அப்படி என்னதான் பிரச்னை என்று கேள்வி எழுப்பினோம்.

ம்ம்ம்...சொல்கிறேன் கேளும். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் அஸ்ரா கார்க். தமிழ்நாடு கேடர் 2004 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. 2004 ல் வேலூர் மாவட்டத்தில் உதவிக் காவல் கண்காணிப்பாளராகத் தனது பணியைத் தொடங்கியவர்.

ம்....

2008 ல் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

2010 ல் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

பின்னர் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதற்கு அடுத்து சிபிஐ பணி.

ம்....

2022 முதல் 2024 வரை தமிழ்நாட்டின் தென்மண்டல ஐஜி அடுத்து சென்னை வடக்கு சட்டம்–ஒழுங்குக் கூடுதல் காவல் ஆணையர்

ம்...

2024 முதல் 2026 வரை வடக்கு மண்டல ஐஜி

ம்..

2026 மே 13 ம் தேதி முதல் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி.... செப்டம்பர் 29 ம் தேதி முதல் அதே உளவுத்துறையின் ADGP கூடுதல் பொறுப்பு என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்த பருந்தார்... கடந்த மே மாதத்திற்கு முன்புவரை IS எனும் நுண்ணறிவுப்பிரிவில் பணியாற்றிய அனுபவம் இல்லாதவர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் என்கிறார்கள்.

ம்...

அதேவேளை சட்டம் ஒழுங்குப் பிரிவுகளில், மாவட்ட மற்றும் மண்டல அதிகாரியாக இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் பெரிய அளவில் பாராட்டுக்கள் பெற்றவை.

ம்....

திருநெல்வேலியில் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள், உத்தபுரம் சாதியப் பிரச்சினை, தருமபுரியில் சட்டவிரோத உறுப்பு விற்பனை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் என எல்லாம் பெரிய பெரிய பிரச்சனைகள். அஸ்ரா கார்க் திறமையாகக் கையாண்ட வழக்குகள் இவை.

ஓஹ்...

எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுக்கும் அஸ்ரா கார்க் துறையில் பணிபுரியும் சில உயர், சக மற்றும் கீழ்நிலை அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதித்து வைத்துள்ளார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

மஹூம்...ஓ !

ஆனால், அவரது ஆதரவாளர்கள், "ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை நேரம் காலம் பார்க்காமல் சரியாகப் பணியாற்றும் அதிகாரிகள் என்றால் அவருக்குப் பிரச்சனையில்லை மாறாக அலுவலக நேரம் பார்த்து, அப்படி இப்படி என்று கொஞ்சம் ரிலாக்ஸ்டாக வேலை பார்ப்பவர்கள் என்றால் ஆகாது, அவர்களின் 'விருப்பத்திற்கு' ஏற்பப் பணி இடமாற்றம் செய்துவிடுவார்" என்கிறார்கள்.

ஓ...

இதுதான் அவருடன் பணிபுரியும் சக, மேல்நிலை, கீழ்நிலை அதிகாரிகளுக்குப் பிரச்சினையே என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.

அடடே...

இப்படி அவரால் தூக்கி அடிக்கப்பட்ட, தூக்கி அடிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியல் பெரியது என்று கூறும் அந்தத் தரப்பினர், இதுவரை அஸ்ரா கார்க் பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரிவுகளின் கதை வேறு...ஆனால் நுண்ணறிவுப் பிரிவு என்பது முற்றிலும் வேறு என்கிறார்கள் அவர்கள்.

ம்ஹூம்...

நுண்ணறிவுப் பிரிவின் தலைவர் என்பவர் தமிழ்நாட்டைத் தனது விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியவர். பொதுவாக அலுவலகத்திலேயே அதிக நேரம் அமர்ந்து வேலை பார்க்கவேண்டியவர்.

ம்....

நாளை பிற்பகல் தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன நடக்க வாய்ப்பு, என்ன பிரச்னை ஏற்பட வாய்ப்பு என்று Forecast அதாவது முன்கூட்டியே துல்லியமாக 'மோப்பம்' பிடித்து வைத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு நுண்ணறிவுப் பிரிவின் பொறுப்பு.

ம்...

அதற்கேற்பத் தேவைப்படும் Police force ஐ அங்கே அனுப்பவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் இந்தத் தகவல்கள்தான் காவல்துறைக்கும், அரசுக்கும் அடிப்படை.

ம்.....

இந்த நுண்ணறிவுத் தகவல்களை Report செய்ய ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு IS அதிகாரி, கட்சிக்கு ஒரு அதிகாரி, அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், போராட்டக்காரர்கள், ரவுடிகள், மோதல் குழுக்கள் என்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து தகவல்களைச் சேகரிக்க அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் மூலமாக சேகரிக்கப்படும் நுண்ணறிவுத் தகவல்கள் IS துறை மூலமாகத்தான் காவல்துறை தலைமைக்கும், முதலமைச்சருக்கும் சில மணிக்கொரு முறை அனுப்பப்படும்.

ம்ம்ம்....

இப்படிப்பட்ட பெரும் பணியில் 'கஞ்சிபோட்ட சட்டைபோல' எல்லாம் வேலை வாங்க முடியாது. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்' என்பதைப் போல சக, மேல், கீழ்நிலை அதிகாரிகளை அனுசரித்து, தட்டிக்கொடுத்துதான் வேலை வாங்க வேண்டும் என்கிறார்கள்.

புரிகிறது....

ஆனால் இவர் தனக்கு Result வேண்டும் என்கிற ஒரே காரணத்தில் சக, கீழ் பணியாற்றும் பணியாளர்களைச் சில நேரங்களில் போட்டு வறுத்தெடுத்து, பொசுக் பொசுக்கென்று பணி இட மாறுதல்கள் எல்லாம் செய்துவிடுவாரோ என்கிற அச்சம் துறையில் பெரும்பாலானவர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ளதாம். சில வேளைகளில் காவல்துறை தலைவரையே ஓவர் டேக் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டு. 

ஓஹோ...

எப்போ என்ன சொல்வாரோ என்று தெரியாமல் பல தகவல்களைச் சொல்லத் தயங்கி விடுகிறார்களாம் சில சக, கீழ் அதிகாரிகள்.

அடடே...அதாவது ஒரு சுமூகமான உறவு இல்லாமல் உள்ளது அப்படித்தானே என்று கேட்டோம்.

அப்படித்தான் சொல்கிறார்கள், அது மட்டுமல்ல தனது பெயர் எங்குமே கெட்டுவிடக்கூடாது, நற்பெயர் மட்டுமே இருக்கவேண்டும் என்று அதிகம் எண்ணுவதால் அதனால் பிறருக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான் அடிப்படைப் பிரச்சனை என்கிறார்கள்.

புரிகிறது...ஒரு நல்ல அதிகாரி, ஆனால் அவரது வித்தியாசமான கண்டிப்பு காரணமாக அச்சத்திலேயே சக அதிகாரிகள், பணியாளர்கள் பணிபுரியும் நிலை...சரிதானே என்றோம்.

இதெல்லாம் நம் காதில் வந்து விழுந்த தகவல்கள் மட்டுமே, இதையெல்லாம் உறுதி செய்யும் அளவுக்கு நாம் உயர் அதிகாரியோ, தீர்ப்பு சொல்லக்கூடியவர்களோ அல்ல...ஆனால் ஒரு அரசாங்கத்தின், காவல்துறையின் நரம்புகள் போல மிக முக்கியமான துறையான நுண்ணறிவுப் பிரிவு சிறப்பாகச் செயல்படுவது ஒரு அரசுக்கு அவசியம் என்பதாலேயே இதனைச் சொல்கிறோம்.

ம்.....

கடந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஸ்டாலின் தோற்றுபோனதற்கும், திமுக தோற்றுபோனதற்கும் மிக முக்கிமாக இருந்த காரணங்களில் முதன்மை இடம் நுண்ணறிவுப் பிரிவுக்குதான்.

புரிகிறது.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய அரசியல் ஜாம்பவான்களிடம் மோதி நின்று நீடிக்க வேண்டிய நிலையில் தவெக அரசு உள்ளது.

ம்...

அதிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசின் ஆறுமாத கால 'தேனிலவுக்' காலம் முடியவிருக்கிறது.

ம்...

அசுரபலத்தோடு அதிமுக - திமுக தவெக அரசின் மீது பாயவிருக்கிறார்கள் என்ற பருந்தாரிடம்,

உண்மை...உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் வேறு வரிசை கட்டி நிற்கின்றன என்று நினைவூட்டினோம்.

கரெக்ட்...தவெக நிர்வாகி ஒருவர் வீட்டில் மத்திய வருவாய்ப் புலனாய்வு DRI அதிகாரிகள் நேரடியாக  வந்து நூற்றுக்கணக்கான அளவு 'மெத்' போதை மருந்து கைப்பற்றிய சம்பவத்தில் கூட சமூக ஊடகங்களில் "உளவுத்துறை என்ன செய்கிறது?" என்று சாமானியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ம்....

இப்படிப்பட்ட நேரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்குக் கண்களும், காதுகளும், கைகளுமாக இருக்கவேண்டிய நுண்ணறிவுப்பிரிவு இப்படி சமூக ஊடகங்களில் கூட சாமானியர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகும்படி இருப்பது அழகல்ல என்கிறார்கள்.

புரிகிறது...

உள்ளே சக, கீழ், மேல் அதிகாரிகளை மட்டுமே உற்றுநோக்கிக் கொண்டிராமல் தமிழ்நாடு முழுவதுமான நுண்ணறிவுப் பிரிவின் கழுகுப் பார்வையை கூர்மைப்படுத்த வேண்டியதும் சக அதிகாரிகளை, கீழ்நிலை அதிகாரிகளை அச்சமின்றி, தயக்கமின்றிப் பணியாற்ற வைக்க வேண்டியதும் அவசியம் என்கிறார்கள்.

ம்ம்ம்...

நுண்ணறிவுப்பிரிவு தொடர்பான சில நிர்வாக ரீதியான தகவல்கள் மு.க.ஸ்டாலின் காலத்திய நுண்ணறிவுப் பிரிவின் தன்னிச்சையான செயல்பாடுகளை நினைவு படுத்துவதாகக் கவலையுடன் கூறுகின்றனர் நமது தகவலாளர்கள் என்று கூறிக் கொண்டிருந்த பருந்தாரின் அலைபேசி சிணுங்கியது. ....ஹல்லோ என்று எடுத்துப் பேசிக்கொண்டே மழை மேகங்களைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறந்தார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User