மன்னராட்சியிலிருந்து மக்களாட்சி வரை! | அதனால் அரசியல் பேசுகிறேன் – தொடர் 1
மன்னராட்சி உருவானது எப்படி? மக்களாட்சி ஏன் தேவைப்பட்டது? வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியாளர்களாக மாறியது எப்படி? ஜோதி நரசிம்மன் எழுதும் அரசியல் தொடர்.
அதனால் அரசியல் பேசுகிறேன்... | தொடர் 1
- ஜோதி நரசிம்மன், பத்திரிகை ஊடகவியலாளர்
பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்த இன மக்கள் தங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தங்கள் குழுக்களுக்கு சில தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர் வழிகாட்டுதலின் பேரில் வாழத் தொடங்கினர். கொஞ்சம், கொஞ்சமாக நாகரிகம் உருவெடுத்து தங்களின் நாகரீகத் தலைவனாக மன்னரைத் தேர்ந்தெடுத்து, மன்னரின் கீழ் மந்திரிகள் என ஆட்சி புரிந்தனர். மக்களும் சிறப்பாக வாழ்ந்தனர். இதில் நல்லாட்சிகளும் உண்டு, கொடுங்கோல் ஆட்சிகளும் உண்டு.
மனித சமுதாயம் கூடி வாழப் பழகிய பிறகு நாகரீகமாக வாழ ஒரு வரையறை தேவை இல்லையா. அந்த வரையறைகளைத்தான் "சட்டம்" என இயற்றி தங்களுக்குத் தாங்களே சில கட்டுப்பாடுகளை இயற்றியும், சில கோட்பாடுகளை வகுத்தும் வாழத் தொடங்கினர் மக்கள்.
அப்படி வாழத் தொடங்கிய மக்கள் பின்னர் மன்னர் ஆட்சியில் மக்களின் பல கோரிக்கைகள் இடம்பெறாமலும், மன்னர்கள் தொடர்ந்து போருக்கு முக்கியத்துவம் அளித்தும் வந்தது மக்களிடையே மன்னராட்சி மீது மாபெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் மன்னராட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அப்போதுதான் நம்மை நாமே ஆள வேண்டும், நமக்கான பிரதிகளை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும் என வெகுண்டெழுந்தனர் மக்கள். அதற்கும் சில ஆட்சியாளர்கள் எதிராக நின்றனர். உலகம் முழுவதும் இப்படித்தான். அப்படியேதான் இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் நடந்தேறியது சில சம்பவங்கள்.
கிபி 1615 ஆம் ஆண்டு "சர் தாமஸ் ரோ" என்கிற ஆங்கிலத் தூதுவர் ஜஹாங்கீர் அரசவையுடன் இணைந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்யும் அனுமதியையும் பெற்றார். குஜராத்தின் முகலாய ஆளுநரான "குர்ரம்" ஆங்கிலேயர்களுக்கு வணிக உரிமைகளை வழங்கினார். இப்படியாக பல வணிக மையங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் நிறுவியது.
கிபி 1639 ஆம் ஆண்டு "பிரான்சிஸ் டே" என்கிற ஆங்கிலேய அதிகாரி "சந்திரகிரி" அரசிடம் இருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி நிர்வகிக்க தொடங்கினார். அந்த நிலப் பகுதி வேறு எங்குமில்லை, அதுதான் இப்போதைய சென்னை,
அப்படி வாங்கப்பட்ட நிலப்பரப்பில் ஒரு கோட்டை அமைத்துக் கொள்ள விரும்பியது பிரிட்டிஷ் அரசு. அப்படியே 1640 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதுதான் சென்னை கடற்கரை ஓரத்தில் தற்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை'. இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழு முதலில் பெற்ற நிலப்பரப்பும் சென்னை பகுதியே ஆகும்.
இப்படி நிலப்பரப்பைப் பெற்ற பிரிட்டிஷார் கொஞ்சம், கொஞ்சமாக பல்வேறு நிலப்பரப்புகளையும் பெற்றனர். வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நினைத்து அதையும் சாதித்தனர். கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் விழிப்படைய தொடங்கினர். அதைப் புரிந்து கொண்ட பிரிட்டிஷார் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் மக்களுக்குத் பிரதிநிதித்துவம் கொடுப்பது போல காட்டிக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி, ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்தனர், பல கட்டுப்பாடுகளுடன்.
வாக்கெடுப்பு மூலமாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது. அப்படி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அரசுடன் அவர்கள் பேசி மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது என்று இருந்தது.
-தொடரும்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)