செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி! பின்னணி என்ன?

செங்கோட்டையனின் திடீர் மௌனத்தின் பின்னணி என்ன? சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணியை நோக்கித் திரும்புகிறதா எடப்பாடி பழனிசாமியின் பார்வை?

Oct 20, 2026 - 19:01
Updated: 14 days ago
0 1.8k
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி! பின்னணி என்ன?

--நாச்சி செல்வராஜ், பத்திரிகையாளர் 

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவுக்குள் நடைபெற்று வரும் அதிகாரப் போட்டிகளும், தலைவர்களுக்கு இடையிலான மோதல்களும் புதிய திருப்பத்தை எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், திடீரென அமைதியாகிவிட்டதன் பின்னணியில் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

செங்கோட்டையனுக்கு எடப்பாடி கொடுத்த அதிர்ச்சி!

சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குப் பதிலளிக்க அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் எழுந்ததாகவும், அப்போது, 'யோவ்... உனக்கெல்லாம் பேசுவதற்குத் தகுதி இல்லை!' என்று கூறி அவரை எடப்பாடி மிரட்டி அமர வைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட சம்பவம் ஒன்று உண்டு.

அதோடு நிற்கவில்லை இந்த மோதல்!

பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'யோவ் செங்கோட்டையா... நீ என்னென்ன செய்தாய்? எதையெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்? என்ற முழு விவரமும் எனக்குத் தெரியும்!' என்று மிரட்டல் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இத்தகைய பேச்சுகளையெல்லாம் பொருட்படுத்தாத செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை நேரடியாகத் தாக்கிப் பேசுவதைத் தவிர்த்தாலும், அதிமுகவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

மேலும் 15 எம்எல்ஏக்கள் தவெகவுக்குச் செல்வார்களா?

கோவை விமான நிலையத்திலும் சென்னையிலும் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று நக்கலாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், 'என்னை அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தெய்வீகச் செயலால் நான் காப்பாற்றப்பட்டேன்!' என்றும் அவர் நையாண்டி செய்தார்.

இத்தகைய கருத்துகளால் அதிமுகவுக்குள் நிலவி வந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.

கதிர் கல்லூரி விவகாரத்தைக் கையில் எடுத்த எடப்பாடி!

செங்கோட்டையனின் தொடர் விமர்சனங்களால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அவரது கடந்தகாலச் செயல்பாடுகளைப் பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

'நீ கதிர் கல்லூரியை எப்படி வாங்கினாய் என்பது எனக்குத் தெரியும். உனக்கு இருந்த கடன்களை அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்து அடைத்தாய் என்பதும் எனக்குத் தெரியும்!' என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்துடன் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சு செங்கோட்டையனுக்கு விடுக்கப்பட்ட நேரடி அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒரு பெண் எம்எல்ஏ பெயரில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை செங்கோட்டையன் பினாமியாக எழுதி வைத்திருப்பதாக உள்ளூர் அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிகின்றன. இதனையும் அதிமுக மேலிடம் அலசி ஆராய்ந்து வருவதாகத் தகவல்

திடீரென எடப்பாடியிடம் தஞ்சமடைந்தாரா செங்கோட்டையன்?

இந்தப் பின்னணியில்தான் அதிமுக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வந்த செங்கோட்டையன், திடீரென அவரிடம் தஞ்சமடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது சில முக்கிய ஆவணங்கள்!

செங்கோட்டையன் தொடர்பான சில ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் கைவசம் இருப்பதாகவும், அவற்றின் நகல்களைத் தூதுவர் ஒருவர் செங்கோட்டையனிடம் நேரில் காட்டியதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆவணங்களைப் பார்த்த பின்னரே செங்கோட்டையனின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருபடி மேலாக, இனிமேல் அதிமுகவுக்கு எதிராகப் பேசமாட்டேன் என்று உறுதியளிக்கும் அளவுக்குச் செங்கோட்டையன் இறங்கி வந்ததாகவும், தூதுவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அடுத்த குறி சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணியா?

செங்கோட்டையன் விவகாரத்தை இவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களும் கோப்புகளும் எடப்பாடி பழனிசாமியின் கைவசம் இருப்பதாகப் பேசப்படுகிறது.

அதிமுகவுக்குள் மீண்டும் பிளவுகள் ஏற்படாமல் தடுக்கவும், கட்சியின் தலைமை அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி வந்திருப்பதாகவும் அவரைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனை எதிர்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் இருவரும் அடுத்ததாக எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கதவு மூடப்பட்டதா?

அதிமுகவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திய சசிகலாவை எந்தச் சூழ்நிலையிலும் மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திற்கு எதிராகத் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வத்தையும் எந்தக் காலத்திலும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று எடப்பாடி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் அதிமுகவில் தனது தலைமைக்கு எதிராக உருவாகும் எந்த மாற்று அதிகார மையத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதியாக பழனிசாமி இருப்பதாகத் தெரிகிறது.

விஜய்யின் தவெகவுடன் கூட்டணி ஆட்சி? சரியான நேரத்தில் சரியான முடிவு!

இதற்கிடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த அரசியல் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை அதிமுக எடுக்கும் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களில் நிலவும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுகவுக்குள் எதிர்ப்புக் குரல்களை அமைதிப்படுத்துவது, கட்சியின் தலைமை அதிகாரத்தை உறுதிப்படுத்துவது, சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு மீண்டும் இடமளிக்காமல் இருப்பது, அதே நேரத்தில் எதிர்காலக் கூட்டணி வாய்ப்புகளைத் திறந்துவைத்திருப்பது எனப் பலமுனை அரசியல் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி கையாள்வதாகத் தெரிகிறது.

செங்கோட்டையனின் அரசியல் மௌனம் தற்காலிகமானதா? அல்லது எடப்பாடியின் அரசியல் வியூகத்துக்குக் கிடைத்த வெற்றியா?

செங்கோட்டையனைத் தொடர்ந்து மற்ற அதிமுக தலைவர்களும் அமைதியாகிவிடுவார்களா?

அதிமுகவில் இனி யார் ராஜா, யார் மந்திரி என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் கைகளில்தான் இருக்குமா?

காத்திருந்து காய்களை நகர்த்தும் எடப்பாடியின் அடுத்த அரசியல் நகர்வில்தான் இதற்கான பதில் இருக்கிறது!

What's Your Reaction?

Like Like 5
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User