பழங்கோயில்களுக்கு அடியில் நவரத்தினங்களா? கோயில்களை இடிப்பதன் பின்னணி என்ன? | தமிழ் ஊடகம் புலனாய்வு
தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள் இடித்துக் கட்டப்படுவது ஏன்? நவரத்தினக் கற்கள், மரபுரிமைக் குழு அனுமதி, குணசீலம் கோயில் சர்ச்சை குறித்து தமிழ் ஊடகம் சிறப்புப் புலனாய்வு.
பழம்பெரும் கோயில்களுக்குக் கீழே விலை மதிக்கமுடியாத வைரம், வைடூரியம் உள்ளிட்ட நவரத்தின கற்கள்?!
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோயில்களை இடித்து மாற்றிக் கட்டத் துடிப்பதன் அதிரவைக்கும் பின்னணி !
பழந்தமிழர் கட்டிடக் கலையை முற்றாக அழிக்கும் சதி ?!
--தமிழ் ஊடகம் சிறப்புப் புலனாய்வுச் செய்தியாளர் குழு
வாஸ்து மற்றும் வஸ்து சாத்திரம் என்று அழைக்கப்படும் கட்டிடக் கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதற்குச் சான்றுகள் தமிழ்நாட்டில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் கோயில்கள்தாம்.
கட்டிடக் கலை மட்டுமல்லாது கோயில் கட்டுமானக் கலையை வகுத்துத் தொகுத்து கொடுத்தவர் தென்குமரியில் வாழ்ந்த "மயன்" எனும் மிகப் பெரும் திறன் வாய்ந்த கட்டிடக் கலை வல்லுநர்தான் என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை கட்டிய வை.கணபதி ஸ்தபதி நிறுவியுள்ளார்.
தமிழர்களின் கோயில் கட்டுமானக் கலையே உலகின் முன்னோடி கட்டுமானக் கலை என்றும் ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மிகப்பழமையான கோயில்கள் தாறுமாறாக இடித்துக் கட்டப்பட்டு வருகின்றன எனும் வருத்தம் தரும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன.
கோயில் பணிகள் என்றாலே, கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைக்கின்றன என்கிற காரணத்தால் கோயில்களின் பழமை குறித்து அக்கறையின்றி அவை இடித்துக் கட்டப்படுகின்றன என்றும் மனம் பதைபதைக்கக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
அப்படி ஒரு நவீன கோயில் கட்டவேண்டும் என்றால் அந்த நன்கொடைப் பணத்தை வைத்து வேறு இடத்தில் புதிதாகக் கட்டிக்கொள்ள வேண்டியதுதானே, எதற்காகப் பழமையான தமிழர் அடையாளங்களை அழிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் வரலாற்றுச் சின்னங்களின் மீது அக்கறை கொண்டவர்கள்.
இதுபோல தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் இடித்து மாற்றிக் கட்டப்பட்டதன் மூலமாக தமிழர்களின் கோயில் கட்டுமானக் கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, கல்வெட்டுகள், ஓவியக்கலை, பழமை, பாரம்பரியம் ஆகியவை முற்றும் முழுதுமாக அழிக்கப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புகழும் பழமையும் பெற்ற தமிழர்களின் அடையாளங்கள் இப்படி இடித்து மாற்றிக் கட்டப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த அவல நிலை குறித்து 2015 ம் ஆண்டு செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தார்.
தமிழ்நாட்டின் பழமையான கோயில்களில் ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தன. குறிப்பாக, கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் பாதுகாப்பின்றி இருத்தல், பழமையான கட்டுமானங்கள் சீரமைப்பு என்ற பெயரில் மாற்றப்படுதல், கோயில் சொத்துகளின் வருவாய் மற்றும் கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படாமை ஆகியவை முக்கியமானவை.
விசாரணையின்போது அறநிலையத்துறை அளித்த தகவலின்படி, அதன் கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் இருப்பதாகவும், அவற்றில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விரிவாக விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு 2021 ஜூன் 7ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக் கோயில்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளில் ஒன்றாகும்.
சுமார் 225 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் 75 முக்கிய வழிகாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நீதிமன்றத்தின் 75 உத்தரவுகளைப் பொருள் அடிப்படையில் சுருக்கினால்:
1. கோயில்களின் தொன்மை பாதுகாப்பு: வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட கோயில்களின் அசல் கட்டுமான அமைப்பும் கலைநயமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
2. கோயில் நிலங்கள் மீட்பு: ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்கவும், நிலங்களின் பரப்பளவு, ஆக்கிரமிப்பாளர்கள், குத்தகைதாரர்கள் குறித்த விவரங்களைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. கோயில் வருவாய்: வாடகை மற்றும் குத்தகைப் பாக்கிகளை வசூலித்து, கோயில் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாயை முறையாகக் கணக்கிட வேண்டும்.
4. சிலைகள், நகைகள் பாதுகாப்பு: கோயில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள பொருட்களைப் பட்டியலிட்டு பாதுகாப்பான அறைகளில் வைக்க வேண்டும்.
5. சீரமைப்புப் பணிகள்: பழமையான கோயில்களைப் புதுப்பிக்கும்போது அவற்றின் தொல்லியல் அடையாளத்தையும் அசல் கட்டடக்கலையையும் அழிக்கக்கூடாது.
6. அறங்காவலர் நிர்வாகம்: அறங்காவலர்கள் நியமனம், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காணுதல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. கோயில் நீர்நிலைகள்: கோயில்களுக்குச் சொந்தமான குளங்கள், நீர்நிலைகள் மற்றும் பிற இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
8. கணக்குத் தணிக்கை: கோயில் வரவு–செலவுக் கணக்குகளில் வெளிப்படைத்தன்மையும் முறையான தணிக்கையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
9. சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம்: கோயில் பாதுகாப்புக்கான விதிகள், சொத்துப் பிரச்சினைகளுக்கான தீர்வு அமைப்புகள் மற்றும் சிலைக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
10. அமலாக்கக் கண்காணிப்பு: அரசும் அறநிலையத்துறையும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, 12 வாரங்களுக்குப் பின்னர் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பன தீர்ப்பின் சாராம்சங்கள்.
இந்த உத்தரவுகளை நிறைவேற்ற மூன்று குழுக்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Heritage Commission (மரபுரிமை ஆணையம்),
State Level Expert Committee (மாநில அளவிலான வல்லுநர் குழு),
District Level Heritage Committee (மாவட்ட அளவிலான மரபுரிமைப் பாதுகாப்புக் குழு) ஆகியவையே அந்தக் குழுக்கள்.
இவற்றில்,
மரபுரிமை ஆணையம் - Heritage Commission :
தமிழ்நாடு முழுவதும் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று, தொல்லியல், பண்பாட்டு மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல் ஆகிய பொறுப்புகளும்,
மாநில அளவிலான வல்லுநர் குழு- State Level Expert Committee :
அறநிலையத்துறை கோயில்களின் பழுதுபார்ப்பு, புதுப்பிப்பு, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தல் ஆகிய பொறுப்புகளும்,
மாவட்ட அளவிலான மரபுரிமைப் பாதுகாப்புக் குழு - District Level Committee
மாவட்டக் கோயில்களை நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் தேவைகளை அறிக்கையிடுதல் ஆகிய பொறுப்புகளும் கொண்டவை.
கோயில்களைப் பொறுத்தவரை மாநில அளவிலான வல்லுநர் குழு- State Level Expert Committee என்பதே மிக முக்கியமான குழு.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் பல கோயில்களில் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைக் கருத்தில் கொண்டு 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில்களுக்கு என்று ஒரு குழுவும், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு என்று ஒரு குழுவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன.
இதில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில்களைப் பொறுத்தவரை பழைமை குறித்த பிரச்சனைகள் இருக்காது. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்கள்களில் பழமை பாதுகாக்கப்படவேண்டிய தேவை உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பில் மேலே நாம் குறிப்பிட்ட 5 வது அம்சமான,
'சீரமைப்புப் பணிகள்: பழமையான கோயில்களைப் புதுப்பிக்கும்போது அவற்றின் தொல்லியல் அடையாளத்தையும் அசல் கட்டடக்கலையையும் அழிக்கக்கூடாது.'
என்பதுதான் மிக முக்கியமானது.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவில் மற்றுமொரு முக்கிய அம்சம், தீர்ப்பு வெளியான காலத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட புதுப்பிப்புப் பணியாக இருந்தாலும் அதனை நிறுத்திவிட்டு இத்தக் குழுக்களின் அனுமதியும், வழிகாட்டுதலும் பெற வேண்டும் என்பது.
ஆனால், இந்தக் குழுக்களின் ஆலோசனையும், அனுமதியும் முறையாகப் பெறப்படுகிறனவா? பெற்றாலும் அவை துல்லியமாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா? எனும் கேள்விக்கு பல கோயில்களில் சரியான பதில்கள் இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் சுமார் 4200 கோயில்களுக்கும் மேலாக குடமுழுக்கு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
அவற்றில் எத்தனை கோயில்களின் புதுப்பிப்புப் பணிகள், கட்டுமானப் பணிகளில் நீதிமன்றம் கூறிய இந்த மாநிலக் குழுவின் ஆலோசனைகள் அல்லது ஒப்புதல்கள் பெறப்பட்டன? எத்தனை கோயில்களில் அவை முறையாகப் பின்பற்றப்பட்டன என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், பழமையான கோயில்களை இடித்துக் கட்ட இந்தக் குழுவால் அனுமதி மறுக்கப்பட்ட கோயில்களிலும்கூட அதனை மீறி இந்து சமய அறநிலையத்துறை அனுமதி கொடுத்த சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
அதற்கு எடுத்துக்காட்டு, திருச்சியில் இருந்து முக்கொம்பு வழியாக கரூர் செல்லும் பாதையில் சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குணசீலம் எனும் ஊரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்.
இந்தக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும்கூட இது "பரம்பரை அறங்காவலர்" பிச்சுமணி ஐயங்கார் என்பவர் வசமே உள்ளது.
கடந்த 2004 ம் ஆண்டு வாக்கில் எந்த அனுமதியும் இன்றி இந்தக் கோயிலின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இடித்து மாற்றிக் கட்டி வைத்திருக்கிறார்கள் பிச்சுமணி ஐயங்கார் தலைமையிலான குழுவினர்.
இந்தப் பிச்சுமணி ஐயங்கார் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று கோயில் தல வரலாறு நூலில் பதிவிட்டிருக்கிறார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி 100 ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கே இந்த மாநில வல்லுனர் குழுவின் அனுமதியும், வழிகாட்டுதலும் அவசியம் எனும்போது 5,000 ஆண்டுகள் பழமையான கோயிலை எவ்வளவு கண்ணும் கருத்துமாகப் பார்த்திருக்க வேண்டும் ?
சரி, 2004 ம் ஆண்டு வழக்கும் இல்லை, இந்தக் குழுக்களும் இல்லை, இந்து சமய அறநிலையத்துறையின் ஒப்புதல் ஆவணங்களாவது இருக்க வேண்டும் இல்லையா...அந்த ஆவணங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பிச்சுமணி அய்யங்கார் எழுத்துப் பூர்வமாக அறநிலையத்துறைக்குத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நின்றுவிடவில்லை, கோயிலை மேலும் மாற்றிக் கட்டுவதற்கு புதிய வரைபடத்துடனும், திட்டத்துடனும் 2019 ம் ஆண்டு வாக்கில் மீண்டும் அனுமதி கோரியிருக்கிறார். அதில் முன்மண்டபம், மகாமண்டபம், பிரகார மண்டபம் ஆகிவற்றை இடித்து மாற்றிக் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட 10 வேலைகளுக்கு ஒப்புதல் கோரியுள்ளார்.
இந்த மூன்றும் மண்டபங்களும் குறைந்தது 500 ஆண்டுகள் பழமையான கல் மண்டபங்கள்.
ஆனால், பிச்சுமணி ஐயங்காரின் கோரிக்கைக்கு இந்து சமய அறநிலையத்துறை அப்போது அனுமதி கொடுக்கவில்லை.
2019ம் ஆண்டிலிருந்து 2021 ம் ஆண்டுவரை தொடர்ந்து பிச்சுமணி ஐயங்கார் இதே கோரிக்கையை முன்வைத்து இந்து சமய அறநிலையத்துறையிடம் விண்ணப்பம் செய்வதும், அதை அறநிலையத்துறை நிராகரிக்கபடுவதுமாகவே காலம் கடந்திருந்தது.
2021 ஆண்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. சேகர் பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சார் ஆகிறார், கே.என்.நேரு திருச்சியைச் சேர்ந்த அமைச்சராகிறார்.
கோயில் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்க உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மாநில வல்லுநர் குழுவும் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட தருணம் அது.
அந்தக் குழுவிடமும் இதே விண்ணப்பத்தை பிச்சுமணி ஐயங்கார் வைத்ததாகவும், ஆனால் அந்தக் குழுவும் மூன்று மண்டபங்களை இடித்துக் கட்ட அனுமதி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே வேளை பழமை மாறாமல் வண்ணம் அடித்தல் போன்ற சில பணிகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இப்படிப்பட்ட நிலையில், இதன்பிறகு சில நாட்களில் பிச்சுமணி ஐயங்கார் கொடுத்திருந்த கோயில் கட்டுமான வரைபடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது என்கிறார்கள் நாம் விசாரித்த அறநிலையத்துறை அதிகாரிகள்.
இங்கேதான் நமக்கு ஒன்று புரியவில்லை, "இடித்துக் கட்ட அனுமதி மறுப்பு - ஆனால் கட்டட வரைபடத்திற்கு மட்டும் ஒப்புதல்" எனும் இந்த அணுகுமுறை ஏன் ? எப்படி என்று புரியவில்லை.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறைதான் முறைப்படி விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆக, கருவறையும், அர்த்த மண்டபமும் 2004 ம் ஆண்டே இடித்துப் புதிதாகக் கட்டப்பட்ட நிலையில், முன்னுள்ள மூன்று மண்டபங்களையும் இடித்துக் கட்டிவிட்டால் குணசீலம் கோயில் பழமையான கோயிலாக இருக்காது அது முழுக்க முழுக்க நவீன காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்று ஆவணமாகிவிடும்.
சரி...அதேவேளை 5,000 ஆண்டுகள் பழமையானது என்று கோயில் நிர்வாகமே பெருமை கூறிக்கொள்ளும் அந்தப் பழைய கோயில் இருக்காதே...முற்றாக அழிக்கப்பட்டுவிடுமே !
இதுதான் தமிழ்நாட்டில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பல வழிபாட்டுத் தலங்களின் மீதான பெருந்தாக்குதல்.
இராமலிங்க வள்ளலார் வடலூர் பார்வதிபுரத்தில் உருவாக்கிய "பெருவெளித் தலத்திலும்" இதே பிரச்சனைதான் எழுந்தது.
தருமச்சாலை மற்றும் ஞானசபையும், மீதமுள்ள 106 ஏக்கருக்கு வெட்டவெளியாக பெருவெளித் தலமாக இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் கட்டளை.
ஆனால், சேகர்பாபு தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை அந்தப் பெருவெளித் தலத்தில் "தற்போது உள்ள 72 ஏக்கரில்" (30 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது) அலங்கார நுழைவாயில், ஆடம்பர மார்பிள் பாதைகள், நவீன தங்கும் விடுதி, பன்னாட்டு உணவு விடுதி போன்ற வள்ளற் பெருமானார் வகுத்த பெருவெளியை முற்றாக சிதைக்கும் திட்டத்தை நிறைவேற்றத் துடித்தது.
பார்வதிபுரம் மக்கள், வள்ளலாரின் அன்பர்கள், உத்தரஞான சிதம்பரப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், வள்ளலார் பணியகம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து போராடியதுடன், பாஜக கோயில் பாதுகாப்புக் குழு நிர்வாகி வினோத் ராகவேந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வழக்கறிஞர் என்.சுரேஷ் அவர்கள் இரண்டரை ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், பெருவெளி சிதைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்பட்டுள்ளது.
நமது விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் பல கோயில்களில் பரம்பரை அறங்காவலர்களாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ளனர்.
இவர்கள், அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதிகாரிகள் சொல்பேச்சு கேட்பதில்லை என்றும் நாம் விசாரித்த பலரும் தெரிவிக்கின்றனர்.
அதிலும், அதிகாரிகள் ஒருவேளை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, அந்த அதிகாரிகளும் நேர்மையான அதிகாரிகளாக இருந்துவிட்டால் அவர்களை மேலும் எப்படி ஒடுக்குவது என்பதில் இந்தப் பரம்பரை அறங்காவலர்கள் பல உத்திகளைக் கையாள்வதாகவும் தெரிகிறது.
நமது விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 3 கோயில்களில், பழமையான கட்டுமானங்களை இடித்துக் கட்ட எதிர்ப்புத் தெரிவித்த நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்பட்டிருக்கிறார்கள். பொய்ப் புகார்களும் சுமத்தப்பட்டுள்ளன.
இதேபோலத்தான், 150 ஆண்டுகள் பழமையான வடலூர் பெருவெளியை சிதைக்கக் கூடாது என்று போராடிய, அந்த நிலத்தை வள்ளலாருக்குக் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட 163 பேர் மீது சேகர்பாபு அறநிலையத்துறை பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
உலகின் மிகச்சிறந்த தமிழர்களின் கட்டிடக்கலை பாதுகாக்கப்பட்டால்தான் தமிழர்களின் அடையாளங்கள் இந்த பூமியில் நிலைத்து நிற்கும்.
ஆனால், பிச்சுமணி ஐயங்கார், சேகர் பாபு, கே.என்.நேரு போன்றவர்கள் அப்படி எந்த அடையாளங்களும் தமிழர்களுக்கு இருந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
இது வெறும் கட்டடங்களை அழிப்பது அல்ல....தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டு சிதைப்பது ஆகும்.
உண்மையான தமிழர்களாக இருந்தால் தமிழர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோயில்களை இடித்துக் கட்ட மனம் வருமா ? என்கிற கேள்வியும் நமக்கு இங்கே எழுகிறது.
அடையாள அழிப்பு ஒருபுறம் இருக்க,
பழங்கோயில்களைக் கட்டும்போது பொதுவாக, கருவறையில் மூலவர் சிலைக்கு கீழே, கருவறைக் கதவுக்குக் கீழே, அத்திவாரத்தில் தங்ககாசுகள், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத கற்கள் இடப்படுவது வழக்கம்.
இப்படி இடித்துக் கட்டப்படும் கோயில்களில் கிடைக்கப்பெற்ற அந்த விலைமதிக்க முடியாத கற்கள் எங்கே ? அவை பாதுகாப்பாக மீண்டும் புதிய கட்டடத்தில் வைக்கப்பட்டனவா ? அதற்கான சான்று எங்கே ? எனும் கேள்விகளும் எழுகிறது.
ஒவ்வொரு பழம்பெரும் கோயில்களிலும் ஓலைச்சுவடிகள் இருக்கும். கோயில் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளுமே அந்தக் கோயிலின் ஆவணங்கள்.
அவை என்ன ஆனது ? அவை பராரிக்கப்பட்டதா ? எனும் கேள்விகளுக்கும் சரியான விடை இல்லை.
சில பரம்பரை அறங்காவலர்கள் கோயில்களில் அடையாள அழிப்பு மட்டுமல்ல விலைமதிக்க முடியாத சிலைகள், கற்கள், ஓலைச்சுவடி, செப்பேட்டு ஆவணங்களின் நிலைகளும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் மிக நேர்த்தியாக, ஆழமாக விசாரித்துக் கொடுத்துள்ள விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினாலே தமிழர்களின் கோயில்கள் பழம்பெரும் வரலாற்று அடையாளங்களாக இந்த மண்ணில் நீடித்து நிற்கும்.
அதனைச் செய்யக்கூடிய பெரும் வாய்ப்பு தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. தவெக அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி பழம்பெரும் கோயில்களைப் பாதுகாத்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)