ஜெம் வீரமணி வழக்கு: விசாரணை வளையத்தில் உயர் அதிகாரிகள்! அடுத்தது பத்திரிகையாளர்களா?

ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பாக எழும் கேள்விகள்! பத்திரிகையாளர்கள் மீதும் விசாரணை திரும்புமா? பருந்தார் தகவல் சிறப்புப் பகுதி.

Oct 13, 2026 - 19:45
Updated: 20 days ago
0 51
ஜெம் வீரமணி வழக்கு: விசாரணை வளையத்தில் உயர் அதிகாரிகள்! அடுத்தது பத்திரிகையாளர்களா?

ஜெம் வீரமணி வழக்கு !

விசாரணை வளையத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ; அடுத்தது யார் ? பரபரக்கும் பத்திரிகை ஊடக உலகம் !

--தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

நமது அலுவலகத்தை நோக்கி யாரோ பதுங்கிப் பதுங்கி வருவது போல இருந்தது. உற்று நோக்கினால், அட நம்ம பருந்தார்.

என்னங்க பருந்தாரே எதுக்கு இப்படிப் பதுங்கிப் பதுங்கி வரீங்க என்று சிரித்துக்கொண்டே கேட்டோம்.

இப்படித்தான் சென்னையில் ஜெம் வீரமணி வழக்கில் பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடாமல் மூடி மறைத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஊடக ஆசிரியர்கள் பதுங்கிக் கொண்டும், பம்மிக்கொண்டும் திரிகிறார்கள் என்றார் பருந்தார்.

ஓ...அதை எங்களுக்கு செய்து காண்பித்தீர்களோ என்று கேட்டுவிட்டு, அது என்ன புதிதாக ஒரு எலெக்ட்ரிக் கார் நிற்கிறது யார் பரிசாகக் கொடுத்தார்கள் என்று நாம் கேட்டவுடன் பருந்தார் முகம் மாறியது...யாரோ பரிசு தர நான் என்ன தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகவா இருக்கிறேன் அது எனது மகன் அவன் ஊதியத்தில் வாங்கி மாதாமாதம் தவணை கட்டி வருகிறான் என்றார் பருந்தார்.

அதானே பார்த்தோம்...பருந்தார் என்ன அப்படி சோரம் போகிற ஆளா என்ன?! என்று சொன்னவுடன் பருந்தாரின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை.

தகவல்களைக் கொட்டத் தொடங்கினார் பருந்தார்.

ஜெம் வீரமணி வழக்கை ஊத்தி மூடுவதற்கு பணம் வாங்கிக்கொண்டு வேலை நடந்திருக்கிறது என்கிற ஐயம் வலுவாக எழுந்தவுடனேயே அதுகுறித்த தகவல்களைத் திரட்ட ஆரம்பித்து விட்டார்கள் விசாரணை அதிகாரிகள்.

ம்....

அவர்களின் விசாரணையில் முதல்கட்டமாக, வழக்கில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புக்குச் சான்றுகள் கிடைத்தவுடன் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாம்.

ம்....

முதலமைச்சரும் பச்சைக் கொடி காண்பிக்க அதன்பிறகே சென்னை மாநகர காவல் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ், கோயமுத்தூர மாநகர காவல் ஆணையராக இருந்த கண்ணன், பெண் காவல் அதிகாரி யாஸ்மின் அகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில்.

ம்.....

அருண் ஐபிஎஸ் ஏடிஜிபி தரத்தில் பொறுப்பில் இருந்த அதிகாரி. அவரையும் மாநகரக் காவல் ஆணையராக இருந்த கண்ணனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஒட்டுமொத்தக் காவல்துறையினரையும் புருவம் உயர வைத்திருக்கிறது.

ம்...

தஞ்சாவூரில் சமாதானம் பேசி பஞ்சாயத்து செய்ய 5 கோடி கையூட்டுப் பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவரைக் கொத்தாகத் தூக்கியதுடன் அவர் சில உயர் அதிகாரிகளை நோக்கிக் கையைக் காட்ட அது சரவெடியாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

ம்....

ஆக, தவறு செய்யும் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான, வலுவான எச்சரிக்கை சமிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பருந்தார், அருண் ஐபிஎஸ் விசாரணைக்கு நேரில் நிற்குமாறு அறிவிக்கை அனுப்பப்பட்டு அவரிடம் 80 கேள்விகள் கேட்கப்பட்டது என்பது தகவல்.

ம்...

ஆனால், அப்படியெல்லாம் அவர் விசாரிக்கப்படவில்லை என்று அந்தச் செய்தியை மழுங்கடிக்கப் படாதுபாடு பட்டிருக்கிறார்கள் அருண் ஐபிஎஸ்-சுக்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும்

ஓ....ஏனாம்.. அதான் காத்திருப்போர் பட்டியலில் வைத்தாகிவிட்டது அப்புறம் விசாரணை செய்தார்கள் என்று செய்தி வெளியானால் என்ன ஆகிவிடப் போகிறது ? அதற்கு இவர்கள் ஏன் பதற வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம்.

உடலில் எங்கோ சிக்கல் வந்தால் வேறு எங்கோ நெறிகட்டும் என்பார்களே, தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே...அதுபோல அந்தச் செய்தியைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பிஞ்சு மனசோடு இருக்கிறார்களாம் அந்த பத்திரிகை ஊடக செய்திப் பிரபலங்கள் என்ற பருந்தாரிடம்,

பிஞ்சுச் சிறுமிகளை சீரழித்தபோது மூடிக்கொண்டிருந்த பிஞ்சு மனசு குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தாகக் கூறப்படுபவர் மீது மட்டும் வெளிப்படுதா என்ன ? என்று கேட்டோம் 

"கோடிக்கணக்கில் கூடிச் சுரண்டினால்" அப்புறம் இப்படிதானே இழிவாக நடந்து கொள்ளத் தோன்றும் என்ற பருந்தாரிடம்,

அதெல்லாம் வாங்கிய பணத்தை வைத்தே துடைத்துக் கொள்வார்கள் என்றோம்.

உண்மைதான். ஜெம் வீரமணி குறித்த வழக்கை ஊத்தி மூட அதிகாரிகளுக்கு பணம் என்றால் அது குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்க பிரபலமான பத்திரிகை, ஊடகத் தலைமைகள் "சிலருக்கு" சரியான கவனிப்பு இருக்கும்போல அதான் இப்போ இவ்வளவு பதட்டம் அடைகிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள் சென்னை பத்திரிகை ஊடக உலகத்தில்.

ம்....

இதற்கிடையில், ஒரு செய்தி ஆசிரியர் தன்னைவிட வயது குறைவான அமைச்சர்கள் கால்களில் விழாத குறையாக ஒவ்வொரு அமைச்சருக்கும் ரூட் போட்டு தாஜா செய்ய முயற்சி செய்கிறாராம். பணம் பிரித்து வழங்கியதாக கூறப்படும் ஒரு பத்திரிகையாளர் அதிகாரிகள் மட்டத்தில் பேசி தாஜா செய்ய முயற்சி செய்கிறாராம்.

ஓ...

அதிலும் திமுக ஆட்சியில் தனக்குத் தொடர்புடைய அதிகாரிகளை தலைமைச் செயலகம் சென்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகிறாராம்.

அடடே...

ஆமாம், அவர் அப்படி சந்தித்த ஒரு அதிகாரி பத்திரப் பதிவுத் துறையுடன் தொடர்புடைய அதிகாரியாம்.

ஓ...அவரை எதற்கு இவர் பார்க்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினோம்.

போன ஆட்சியில் காவல் உயர் அதிகாரி ஒருவரின் ஆசியோடு பல வாரிசு இல்லாத இடங்கள், வெளிநாட்டில் இருப்பவர்களின் இடங்கள் எல்லாம் அது வீடாக இருந்தாலும் ஆட்டையைப் போடப்பட்டதாம்.

யாரால்....என்று கேட்டோம்.

வேறு யாரால் ? அந்த அதிகாரி + பத்திரிகையாளர் இணையரால்தான் என்ற பருந்தார் அந்த ஆசாமி நிலபுலன்கள் ஏராளமாக தென் தமிழ்நாட்டில் வாங்கிப் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் படு ஜோராகச் செய்து வருகிறாராம் என்ற பருந்தாரிடம்...

ஓ...அப்போ பல்வேறு வழிகளில் வாங்கிய பணம் எல்லாம் பல்வேறு இடங்களில் நிலங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் அப்படித்தானே என்று கேட்டோம்.

அப்படி ஒரு பேச்சு ரொம்ப நாளாகப் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஓடுகிறது என்ற பருந்தார் அடுத்த தகவலுக்குத் தாவினார்,

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பொது மக்களாலேயே பாராட்டப்படும் அதேவேளை அப்படியே ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கண் வைக்க வேண்டும் என்கிறார்கள் தலைமைச் செயலகத் தகவலாளர்கள்.

ஓ...அப்படி என்ன பிரச்சனை ? என்று கேட்டோம்.

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் திமுக, அதிமுக கட்சிக்காரர்கள்போல கொஞ்சம் தெனாவெட்டாதான் இருந்தார்களாம். எப்படியும் இந்த ஆட்சி நீடிக்காது என்பது போல குறைவாக மதிப்பிட்டு இருந்தார்களாம்.

ஆனால், இரண்டு இடங்களில் வெற்றி மட்டுமல்லாது அடுத்த 5 தொகுதிகளுக்கும் ஆயத்தமாக இருக்கிறதாம் தவெக.

ஓ...

இதனால் அந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

ம்....

இருந்தாலும், தங்களின் ஆட்சி செயல்பாடு மக்களிடம் சரிவரச் சென்று சேர்வதில்லை என்று வருத்தப்படும் ஆட்சித்தலைமை, பொறுப்பில் அமர்ந்து கொண்டு உள்ளடி வேலை செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளைக் களையெடுக்க துறை ரீதியாகத் தக்வல்கள் திரட்ட உத்தரவிட்டிருக்கிறதாம் என்ற பருந்தார்....

ஜெம் வீரமணி வழக்கில் அதிகாரிகளிடம் விசாரணை முடிந்தவுடன் அதிகாரிகளுக்கும் வீரமணிக்கும் இடைத் தரகர்களாக இருந்த பத்திரிக்கையாளர்கள் மீது புலனாய்வுக் குழுவின் பார்வை திரும்புமாம் என்று சொல்லிவிட்டு ஜிவ்வென்று பறந்து விட்டார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User