சுரேஷ் வேதநாயகம் 2ஆம் கட்ட விசாரணை! தினகரன் தலைமைக்கு காவல்துறை அறிவிக்கை?!

சுரேஷ் வேதநாயகம் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானாரா? தினகரன் தலைமைக்கு காவல்துறை அறிவிக்கை? சென்னை பத்திரிகையாளர் மன்ற அறிக்கை, ரூ.35 லட்சம் கேன்டீன் சர்ச்சை குறித்து பருந்தார் தகவல்கள்.

Oct 26, 2026 - 19:44
Updated: 7 days ago
0 240
சுரேஷ் வேதநாயகம் 2ஆம் கட்ட விசாரணை! தினகரன் தலைமைக்கு காவல்துறை அறிவிக்கை?!

+ அறிக்கை மூலம் மிரட்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம் !

+ அஞ்சி நடுங்கினாரா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ?!

+ சுரேஷ் வேதநாயகம் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜரானாரா?

+ தினகரன் தலைமைக்கு காவல்துறை அறிவிக்கை?!

+ சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 35 லட்சம் செலவில்  'கேன்டீன்' கட்டப்பட்டது யார் பணத்தில்?!

- தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

பருந்தார் எப்போதாவது இரண்டு மூன்று நாட்கள் காணாமல் போய்விட்டுத் தாமதமாக வந்தால் வேண்டுமென்றே பரபரப்பாக வருவார். அவரது பரபரப்பைப் பார்த்தால் அவரிடம் என்ன பருந்தாரே எங்கே ரெண்டு நாட்களாக காணோம் என்று கேட்கமுடியாத வண்ணம் ஒரு செயற்கைப் பரபரப்பை உண்டாக்குவார். அதுபோலத்தான் இன்றும் வந்தார்.

நாம் புன்னகையுடன், அமைதி பருந்தாரே அமைதி...ஒரு பிரச்னையும் இல்லை. பொறுமையாக அமர்ந்து பேசுங்கள் என்றோம்.

நாம் புரிந்துகொண்டுவிட்டோம் என்பதை அறிந்த பருந்தார் வாய்விட்டுச் சிரித்துவிட்டு அமர்ந்தார்.

"எல்லாம் 'பில்ட் அப்தான்'... யார் யாரோ பில்ட் அப் பன்றாங்க, ஏன் நாம் செய்யகூடாதா" என்ற பருந்தார், சில நொடிகளில், "விளையாட்டுக்குச் சொன்னேன் நமக்கு எதற்கு வெட்டி பில்ட் அப் எல்லாம். மக்களை ஏமாற்றிப் பிழைப்போரின் செயல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோம்" என்ற பருந்தார், "நான் உங்களைச் சந்திக்க வரவில்லை என்றால் ஆழமான தேடுதலில் இருக்கிறேன் என்று பொருள்" என்று விளக்கம் கொடுத்தார்.

நல்லதுங்க பருந்தாரே தங்களின் ஆழமான மேன்மையான தேடல் பணிகள் தொடரட்டும் என்றோம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் உள்ளிட்ட பழைய பெருமை வாய்ந்த பத்திரிகையாளர் அமைப்புகளைக் கொத்தாகக் கைப்பற்றிய செயல்களில் வெளியே ஹிந்து என்.ராம் போன்ற பத்திரிகையாளரை முன் நிறுத்திக்கொண்டு உள்ளே பின்னணியில் உள்ளடி வேலை செய்தது பூராவும் இந்த சுரேஷ் வேதநாயகம் தரப்பு தினகரன் ஆட்கள்தான். மிக நுட்பமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். இந்த சுரேஷ் வேதநாயகத்தின் பின்னணியில் தினகரன் தலைமை நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ரமேஷ் இருக்கிறார் என்கிறார்கள் தினகரன் முன்னாள் செய்தியாளர்கள்.

ஓ....

நான் மேலே கூறிய பத்திரிகையாளர் அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களின் சார்பாகவோ அல்லது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது அந்த அமைப்புகளின் பெயரைச் சொல்லி வசூல் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலோ அவற்றின் நிர்வாகங்கள் மாற்றப்படவேண்டும் என்பது நியாயமானது.

ம்....

ஆனால், அப்படி ஒன்றும் பெரிய குற்றச்சாட்டுகள் இருந்திராத இந்த அமைப்புகளை திமுகவின் பெயரில் கைப்பற்றி, தினகரன் நாளிதழின் உரிமையாளர் கலாநிதி மாறன் போல தன்னைக் கருதிக்கொண்டு, காவல்துறை அதிகாரி அருண் ஐபிஎஸ் துணையோடு, தமிழ்நாடு முழுவதுமுள்ள தினகரன் செய்தியாளர்களின் படையைக் கொண்டு ஒரு 'பவர் சென்டராக' உருவாகிக் கொண்டிருந்திருக்கிறார் சுரேஷ் வேதநாயகம்.

விஜயகாந்த் படத்தில் வரும் அருமைநாயகம் கேரக்டர் போல...அப்படித்தானே என்று கேட்டோம்.

அந்தப் படத்தில் AC பன்னீர்செல்வம் நல்ல கேரக்டர். இந்தப் படத்தில் காவல் அதிகாரி அருணும் - சுரேஷ் வேத'நாயகமும்' கூட்டாளிகளாக இருக்கிறார்களே! என்று சொல்லி சிரித்த பருந்தார் தொடர்ந்து பேசினார்.

ஆளும் கட்சியாக திமுக...காவல்துறை அதிகாரத்தில் அருண் ஐபிஎஸ்...கைகளில் தினகரன் பத்திரிகை...தானே தலைவராக இருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்...தனது கையாட்கள் நிரம்பி இருக்கும் MUJ உள்ளிட்ட பத்திரிகையாளர் தொழிற்சங்கங்கள்....அப்புறம் என்ன செய்வார்கள் சுரேஷ் வேதநாயகம் போன்ற ஆட்கள்?!

புரிகிறது பருந்தாரே...அதுதான் ஆட்டம் அதிகமாக இருந்திருக்கிறது என்றோம்.

ம்....'ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் மண்ணுக்குள்ளே' எனும் பாடல்வரி சித்தர்கள் பாடல்களில் இருந்து எடுத்த கருத்துண்மை, சும்மா இல்லை...என்ற பருந்தார், இத்தனை 'பவர்' வைத்துக்கொண்டு பத்திரிகை ஊடகர்களுக்கு நல்லது செய்திருந்தால் பாராட்டலாம், எல்லோரையும் மிரட்டிக் கொத்தடிமை போல ஆக்கி, எதிர்த்துப் பேசும் பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவதூறு பரப்புவது, பொய்ப் புகாரில் FIR போடுவது, சிறைக்குள் அனுப்புவது, குண்டர் சட்டம் போடுவது என்றிருந்ததால்....?!

அதற்கேற்ற பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும் பருந்தாரே. ஆனால், அதேவேளை பத்திரிகையாளர்கள் நலனுக்காக சுமார் 30-35 லட்சம் ரூபாய் செலவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு 'கேன்டீன்' கட்டிகொடுத்திருக்கிறாரே சுரேஷ் வேதநாயகம்? என்று நினைவூட்டினோம்.

அங்கே அத்தனை லட்சம் செலவில் கேன்டீன் வேண்டுமென்றெல்லாம் யாரும் கேட்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு வந்து உணவு உண்ணும் 100க்கு 90 விழுக்காடு பத்திரிகையாளர்கள் வீட்டில் இருந்தே உணவு கொண்டு வந்துவிடுவார்கள். 10 விழுக்காடு பேர்தான் கடையில் வாங்கி வந்து அங்கே உண்பார்கள். அதிலும் ஒரு பார்சல் உணவு வாங்கி இரண்டு பேர் உண்ணும் நிலையில்தான் அத்தகைய பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். இதில் 30 லட்சம் ரூபாய் குளுகுளு கேன்டீன் எங்கே ஓடும்? இதை அன்றே உங்க தமிழ் ஊடகம் ஆசிரியர் சுட்டிக்காட்டினார். அதற்குத்தான் அவர் மீது FIR போட்டார்கள்.

ம்....

கடைசியில் உங்கள் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சொன்னதுபோலவே இன்று அது பிளாட்பாரக் கடையாக மாறிக் கிடக்கிறது என்ற பருந்தார் அந்தக் கேன்டீனை அவ்வளவு செலவு செய்து யார் கட்டிக்கொடுத்தார்கள் என்று இன்றுவரை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மேலும் அது பொதுப்பணித்துறை இடம். அந்த இடத்தில் கூடுதல் கட்டுமானம் கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டதா என்றும் தெரியவில்லை என்ற பருந்தாரிடம்,

புரியலையே பருந்தாரே...யார் கட்டிக்கொடுத்தார்களோ, அல்லது நன்கொடை கொடுத்தார்களோ அவர்கள் பெயர்கள் எல்லாம் கல்வெட்டில் பொறிப்பார்கள், திறப்பு விழாவில் கவுரவிக்கப்படுவார்கள்தானே?! என்று கேட்டோம்.

கரெக்ட். பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ள பெரிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தவர்கள் 'SRM நிறுவனத்தார்'. அந்தக் கொடையாளரின் பெயரில்தான் கட்டடமே உள்ளது. அதேபோல அதே வளாகத்தில் இருக்கும் இன்னொரு கட்டடம் 'திரிசக்தியார் கட்டடம்'. அதன் கொடையாளர் மூத்த பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர் திரிசக்தி சுந்தரராமன்.

ம்...

ஆனால், இந்தக் கேன்டீனில் அப்படி யார் பெயரிலும் கல்வெட்டு இல்லை. ஆனால், இந்தக் கேன்டீனைத் திறந்து வைத்தவர் சுரேஷ் வேதநாயகத்தின் கூட்டாளியும் முன்னாள் ஆணையருமான அருண் ஐபிஎஸ்.

ம்...

இந்த கேன்டீன் திறப்புவிழா நடந்து முடிந்த பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுவில், கேன்டீன் கொடையாளர்கள் யார் என்று கேள்விக்கு நெல்லையைச் சேர்ந்த இரண்டுபேரை மேடையில் நிறுத்தி "இவர்கள்தான்" என்று சுரேஷ் வேதநாயகம் அறிமுகப் படுத்தியுள்ளார். அதற்கு முன்பு அவர்களை மன்ற நிர்வாகிகளும் பார்த்தது இல்லை, உறுப்பினர்களும் பார்த்தது இல்லையாம். அந்த இரண்டு பேர் மீதும் தென்தமிழ்நாட்டில் அவர்களது ஊரில் அவ்வளவு நல்ல பெயரெல்லாம் இல்லை என்கிறார்கள். SRM கல்வி நிறுவனமாவது பத்திரிகை ஊடகக் கல்வி கற்றுக்கொடுக்கும் நிறுவனம், இரண்டு தொலைக்காட்சி சேனல்கள் நடத்துகிறார்கள். ஆனால், இந்தக் கேன்டீனைக் கட்டிக் கொடுத்தவர்கள் என்று சுரேஷ் அறிமுகம் செய்தவர்களுக்கும் பத்திரிகை ஊடகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம்.

ஓ...

அதே பொதுக்குழுவில் வரவு செலவுக் கணக்குகளைக் கேட்டிருக்கிறார்கள் உறுப்பினர்கள். விரைவில் யார் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பதைச் சொல்கிறோம் என்று கூறினார்கள். இரண்டாண்டுகள் ஆகின்றன...இதுவரை அந்த 'விரைவில்' வரவேயில்லையாம் என்ற பருந்தாரிடம்,

ஆக..."அந்தக் கேன்டீன் 'யார்' பணத்தில் கட்டப்பட்டது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் மிக முக்கியமான கேள்வி" அப்படித்தானே பருந்தாரே என்று கேட்டோம்.

மன்ற நிர்வாகக்குழு அதுகுறித்த முறையான வரவுக் கணக்கு, அதற்கு ஆன செலவுக் கணக்கு, கொடையாளர் ஒருவரா இல்லை பலரா ? அவர்கள் பணம் ரொக்கமாகக் கொடுத்தார்களா? இல்லை காசோலைகள் / DD யாகக் கொடுத்தார்களா? அதற்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளதா என்றெல்லாம் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்கிறார்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் என்ற பருந்தாரிடம்,

பிரச்னை எங்கெங்கோ போகும்போல...என்று சொன்னோம்.

ம்...போகலாம்...என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசிய பருந்தார், "ஜெம் வீரமணிமீது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைப் புகார் 2024 ம் ஆண்டிலேயே அப்போதைய  சென்னை தெற்கு மண்டலக் கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ்-சிடம் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் என்பவரால் கொடுக்கப்பட்டுள்ளது."

ம்....

அவர், அந்தப் புகாரை அப்போதையக் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்-சின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

ம்...

அப்போதே இதுகுறித்து சில பத்திரிகையாளர்கள் விசாரித்த போது, "புகாரின்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஓஹோ...

ஆனால், அதன்பிறகு அந்தப் புகாரின் மீது 2025 அக்டோபர் 7 ம் தேதிதான் AVC என்று அழைக்கப்படும் 'விபச்சாரத் தடுப்புப் பிரிவில்' வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற பருந்தாரிடம்,

பருந்தாரே..இங்கே ஒரு கேள்வி எழுகிறது. "ஜெம் வீரமணி மீதான புகார் என்பது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த புகார். அப்படியிருக்க, இப்புகாரின் மீது விபச்சாரத் தடுப்புப் பிரிவில் எதற்கு வழக்குப் பதிவு செய்தார்கள் ?! என்று கேட்டோம்.

வர வர உமக்கு மூளை சுறுசுறுப்பாகத் துல்லியமாக வேலை செய்கிறது பாராட்டுக்கள் என்று நம்மைப் பாராட்டிய பருந்தார், "உமது கேள்வி மிக மிக முக்கியமானது. சொல்கிறேன் கேள். CAWC எனும் ஒரு பிரிவு காவல்துறையில் இருக்கிறது. ஆங்கிலத்தில் விரிவாக்கம் செய்தால் 'Crime Against Women and Children' - குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புக் காவல்பிரிவு என்று பெயர்.

அப்படியென்றால் வீரமணி மீதான புகாரை இந்தப் பிரிவுதானே விசாரித்திருக்க வேண்டும்? என்று கேட்டோம்.

அதைத்தான் சொல்லவருகிறேன். இந்த CAWC அமைப்பு 2019 ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது.

ம்...

இந்தப் பிரிவு சாதாரண பிரிவு அல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள 'அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்', 'குழந்தைகள், சிறுமிகள் கடத்தல் தடுப்புப் பிரிவு', 'சிறப்பு சிறார் குற்றத் தடுப்புப் பிரிவு', 'குழந்தைகள் நலக் காவல் பிரிவு' ஆகியோரை ஒருங்கிணைத்துச் செயல்படும், 'பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும், விசாரிக்கும்' அமைப்பு. இப்போதைய சிங்கப்பெண் படையும் இதன் கீழ்தான் வருகிறது. இதற்குத் தனி DIG தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.

ஓஹ்....

இந்த அமைப்பிடம் வீரமணி மீதான புகாரை கொடுத்து விசாரிக்காமல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் CCB யின் AVC விபச்சாரத் தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்டது என்ற பருந்தாரிடம்,

புரிகிறது பருந்தாரே....முன்னாள் ஆணையர் தனது கட்டுப்பாட்டில் உள்ள குழுவிடம் வீரமணி புகாரை ஒப்படைத்திருக்கிறார்.

ஆமாம், அதுவும் அந்த CCB குழுவில் இருந்த பெரும்பாலான அதிகாரிகள் முன்னாள் ஆணையர் சொன்னால் தட்டாமல் கேட்கும் அதிகாரிகள் என்கிறார்கள்.

தலை சுற்றுகிறது பருந்தாரே என்றோம்.

இதையும் கேட்டுவிட்டு நன்கு சுற்றவிடுங்கள் உங்கள் தலையை என்ற பருந்தார், "இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை விசாரணைக்கு நேரில் நிற்க வேண்டிய சுரேஷ் வேதநாயகம் வழக்கறிஞரை விட்டு திங்கட்கிழமை (இன்று) நேரில் நிற்பதாகக் காவல்துறையினரிடம் கூறினாராம்.

ம்....

முதல் கட்ட விசாரணையில் கேட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் ஜெம் வீரமணி தொடர்பானதாகவே இருந்ததாம்.

ஓஹ்ஹ்ஹ்...ஹோ !

ஆமாம், மேலும் சுரேஷ் வேதநாயகம் மீதான புகார், விசாரணை உள்ளிட்ட விவரங்களை விவரித்து அவர் பணியாற்றும் தினகரன் நாளிதழின் தலைமை நிர்வாகி ஆர்.எம்.ஆர்.ரமேஷ்க்கு முறையாக அறிவிக்கை அனுப்பிவிட்டதாம் காவல்துறை.

அப்புறம்.

இதற்கிடையில் முதல் கட்ட விசாரணை முடிந்து வெளியே வந்த சுரேஷ் இரண்டாம் கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டது "வருத்தமளிக்கிறது" என்று சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக் குழு எனும் பெயரில் ஒரு அறிக்கை வந்ததே வாசித்தீர்களா என்றார் பருந்தார்....

வாசித்தோம் வாசித்தோம் என்றோம்.

இரண்டு முறை வாசித்து இருப்பீர்கள் போல என்று நகைச்சுவை செய்த பருந்தார், சுரேஷ் வேதநாயகத்திற்கு சம்மன் அனுப்பிய புகார் பாலிமர் டிவி க்ரைம் பீட் செய்தியாளர் கதிரவன் கொடுத்த புகார்.

ம்....

அண்ணா பல்கலைக் கழக மாணவி மற்றும் ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் தன் மீது அவதூறு பரப்பி, மிரட்டல் விடுக்கிறார்கள் என்பதுதான் புகார்.

ம்....

ஆனால், கதிரவன் ஒன்றும் காவல்துறையில் உடனே புகார் கொடுத்துவிடவில்லை.

ம்....

முதலில் மிரட்டல், அவதூறு செய்திகள் பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் மறுப்பு தெரிவித்துப் பதிவுகளை நீக்குமாறு கூறுகிறார். சென்னை பத்திரிகையாளர் மன்ற பொதுச்செயலாளர் ஹாசிப்புக்கும் (tag செய்து) புகார் கூறுகிறார்...பகிர்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களிடமும் பேசுகிறார். அப்படிப் பேசியபோது "நாங்கதான் பதிவிட்டோம், பகிர்ந்தோம்" என்று தெனாவெட்டாக ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு கதிரவன், "காவல்துறையில் புகார் கொடுக்கப்படும்" என்று குழுக்களில் அறிவித்திருக்கிறார். அதன்பிறகே புகார் கொடுத்து இருக்கிறார்...புகாரின்பேரில் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ், தினகரன் சுரேஷ் வேதநாயகம், தினகரன் சரத் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரிலேயே முதல் கட்ட விசாரணை நடைபெற்று இருக்கிறது...இரண்டாம் கட்டத்திற்கு 24ம் தேதி ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ம்...புரிகிறது பருந்தாரே என்றோம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொறுப்பு மிக்க தலைவர், பொதுச்செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் சுரேஷ் வேதநாயகம், ஹாசிப் ஆகியோர் இத்தனை நடப்பதற்கு முன்னதாகவே அவ்வாறு பதிவிட்டது தவறு என்று மன்னிப்புக் கேட்டிருந்தால் தொடக்கத்திலேயே பிரச்சனை முடிந்திருக்கும்.

ம்...கரெக்ட்.

ஆனால், முதல் கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டு அலைபேசி பறிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து 'சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக்குழு' பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏன்...அப்படி ?! என்று கேட்டோம்.

நம்மை என்ன செய்துவிட முடியும் என்கிற தெனாவெட்டும் ஆணவமும்தான் வேறு என்ன என்ற பருந்தார். சுரேஷ் வேதநாயகத்திடம் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் காவல்துறை பின்வாங்க வேண்டும், அலைபேசியைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தல்தான் அது.

ம்...புரிகிறது. ஆனால் அந்த அறிக்கையில் ஏன் பொதுச்செயலாளர் கையெழுத்து இடாமல் 'நிர்வாகக் குழு' என்ற பெயரில் வெளியிட்டார்கள் என்று கேட்டோம்.

ஜெம் வீரமணி செய்தி வெளிவராமல் தடுக்க வேலை செய்யும் சுரேஷ் வேதநாயகத்திற்கு ஆதரவாகச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிடுவதை நிர்வாகக்குழுவில் உள்ள எல்லோரும் விரும்பவில்லையாம்.

ஓ....

குறிப்பாக திமுக தினகரன் ஆதரவாளர்கள் மட்டுமே அறிக்கை வெளியிடத் துடித்தார்களாம். பிற நிர்வாகிகள் ஒப்புதல் தரவில்லையாம். அதனால் பொத்தாம் பொதுவாக நிர்வாகக் குழு என்று வெளியிட்டார்களாம்.

ஆமாம்...இது பெரிய ஐநா பாதுகாப்பு கவுன்சில்...இவங்க நிர்வாகக்குழு அறிக்கை விட்டா அலறிடுவாங்க என்றோம்.

ஆமாம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் அதுவும் நிர்வாகக் குழு என்று அறிக்கை விட்டால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் எல்லோரும் உருண்டு ஓடிவந்து சுரேஷ் வேதநாயகத்திற்கு ஆதரவாக நிற்பார்கள் என்பது போல பில்ட் அப் செய்யத்தான் அப்படி அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆனால், சுரேஷ் வேதநாயகத்தை முதல் கட்டமாக விசாரித்தபோதே சுரேஷ் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அவர்களும் தினகரன் ஊழியர்கள். மற்றபடி பிற அமைப்பு, பிற பத்திரிகையாளர்கள் என்று பார்த்தால் 5-6 பேர்தான் இருப்பார்களாம்.

அப்புறம் எதற்கு இவர்களுக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டோம்.

எல்லாம் ஆணையர் அமல்ராஜூக்கு மிரட்டல் விடுக்கத்தான் என்ற பருந்தார், ஆனால் அவர் இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. ஜெம் வீரமணி விவகாரத்தில் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜயின் நேரடிக் கண்காணிப்பில் வழக்கைக் கையாளுகிறார் ஆணையர் அமல்ராஜ் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் என்ற பருந்தாரிடம்,

அடுத்து என்னங்க பருந்தாரே என்று கேட்டோம்.

அடுத்து என்னவென்று காவல்துறையினர்தான் சொல்ல வேண்டும். மற்றபடி வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று ஞாயிற்றுக் கிழமை SIT வெளியிட்ட அறிக்கையில் "இறுதி அறிக்கை விரைவில்" என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்ற பருந்தாரின் அலைபேசி சிணுங்கியது. வாட்ஸ்ஆப் தகவலை உற்றுப்பார்த்தவர் முகம் பிரகாசமானது, உடனே ராக்கெட் வேகத்தில் எங்கோ பறந்து போனார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User