போக்சோ வழக்குகள்: பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை மறைக்க வேண்டும்; குற்றச்சாட்டுச் செய்திகளை அல்ல!
ஜெம் வீரமணி போன்ற போக்சோ வழக்குகளில் செய்தி வெளியிடத் தடையா? குழந்தைகளின் அடையாளப் பாதுகாப்பு, நீதிமன்றக் கட்டுப்பாடுகள், பத்திரிகை ஊடகச் சுதந்திரம் குறித்த சட்ட விளக்கம்.
போக்சோ சட்டம்: குழந்தையின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை, பத்திரிகை ஊடகங்களின் கடமை!
விசாரணை இரகசியம் எதற்காக? குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், புகைப்படத்தை வெளியிடலாமா? செய்தியியல் சுதந்திரத்திற்கும் சட்டக் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான எல்லை எது?
தமிழ் ஊடகம் | சிறப்புச் சட்ட ஆய்வுக் கட்டுரை | 02.11.2026
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காகவும், குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதற்காகவும் இயற்றப்பட்ட முக்கியமான சட்டம், 2012ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences Act – POCSO).
இச்சட்டம் 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தைகளாகக் கருதுகிறது. ஆண், பெண் என்ற பாலின வேறுபாடின்றிப் பாதுகாப்பு வழங்குகிறது.
போக்சோ சட்டத்தின் நோக்கம் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம், தனியுரிமை, கண்ணியம், மனநலம், பாதுகாப்பு ஆகியவற்றை விசாரணையின் ஒவ்வொரு நிலையிலும் உறுதிசெய்வதும் அதன் முக்கிய நோக்கமாகும்.
அதேநேரத்தில், ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துவிட்டது என்பதற்காகவே அவர் குற்றவாளியாகிவிடுவதில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நியாயமான விசாரணை பெறுவதற்கான சட்ட உரிமைகள் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் பத்திரிகை ஊடகங்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானதாகிறது.
பாலியல் குற்றச்சாட்டைச் செய்தியாக வெளியிடுவது பொதுநலன் சார்ந்த செயலாக இருக்கலாம். ஆனால் அந்தச் செய்தியை வெளியிடும்போது பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிப்படுமானால், அது மற்றொரு சட்ட மீறலாக மாறக்கூடும்.
உண்மையை வெளிப்படுத்தும் ஊடகச் சுதந்திரமும், குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் சட்டக் கடமையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டும் இணைந்தே செயல்பட வேண்டும்.
1. போக்சோ சட்டத்தின் பிரிவு 23: ஊடகங்களுக்கான சட்டக் கட்டுப்பாடு
போக்சோ சட்டத்தின் பிரிவு 23, பத்திரிகை ஊடகங்களுக்கான நேரடிக் கட்டுப்பாடுகளை வகுக்கிறது.
பிரிவு 23(1)ன்படி, முழுமையானதும் நம்பகமானதுமான தகவல்கள் இல்லாமல், குழந்தையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய அல்லது தனியுரிமையை மீறக்கூடிய செய்திகளையும் கருத்துகளையும் வெளியிடக்கூடாது.
பிரிவு 23(2)ன்படி, குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விவரங்கள், பள்ளி, வசிக்கும் பகுதி அல்லது குழந்தையை அடையாளம் காண வழிவகுக்கும் வேறு எந்தத் தகவலையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது.
குழந்தையின் நலனுக்காக அடையாளத்தை வெளியிடுவது அவசியம் என்று சிறப்பு நீதிமன்றம் கருதினால், அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து அனுமதி வழங்கலாம்.
இது பொதுவான விதிவிலக்கு அல்ல. குழந்தையின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய சிறப்பான சட்ட ஏற்பாடு.
பிரிவு 23(3)ன்படி, ஊடக நிறுவன ஊழியரின் செயல்கள் மற்றும் தவறுகளுக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது வெளியீட்டாளரும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கலாம்.
பிரிவு 23(4)ன்படி, பிரிவு 23(2)-ஐ மீறினால் ஆறு மாதங்களுக்குக் குறையாத, ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
எனவே குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பது வெறும் செய்தியியல் அறம் சார்ந்த பரிந்துரை அல்ல. அது சட்டப்பூர்வமான கடமையாகும்.
2. பெயரை மறைத்தால் மட்டும் போதுமா?
ஒரு குழந்தையின் பெயரை வெளியிடாமல், அதற்குப் பதிலாக வேறொரு பெயரைப் பயன்படுத்துவதால் மட்டுமே சட்டக் கடமை நிறைவேறிவிடாது.
குழந்தையின் பெற்றோர் பெயர், பள்ளி, உறவினர் விவரம், வசிக்கும் சிறிய கிராமம், வீட்டின் புகைப்படம் போன்ற தகவல்கள் வெளியிடப்பட்டால், அவற்றின் மூலம் குழந்தையின் அடையாளத்தைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக, ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட தொழிலைச் சேர்ந்த ஒருவரின் மகள் என்று செய்தி வெளியிட்டால், குழந்தையின் பெயரை மறைத்திருந்தாலும் அடையாளம் வெளிப்பட வாய்ப்புள்ளது.
2018 டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய Nipun Saxena & Another versus Union of India & Others தீர்ப்பு இந்தப் பிரச்சினையை விரிவாக ஆராய்ந்தது.
குழந்தையின் அடையாளத்தை நேரடியாக மட்டுமல்ல, மறைமுகமாகவும் வெளிப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
குழந்தை வசிக்கும் சிறிய கிராமத்தின் பெயரை வெளியிடுவதுகூட சில சூழ்நிலைகளில் சட்ட மீறலாக மாறக்கூடும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனால், செய்தியாளர்கள் குழந்தையின் பெயரை மட்டும் மறைத்துவிட்டு மற்ற அடையாளத் தகவல்களை வெளியிடும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
3. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், புகைப்படத்தை வெளியிடலாமா?
போக்சோ வழக்குகளில் அடிக்கடி எழும் முக்கியமான சட்டக் கேள்வி இதுதான்.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடுவதற்கு போக்சோ சட்டம் முழுமையான, பொதுவான தடையை விதிக்கவில்லை.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் யார், அவருக்கும் குழந்தைக்கும் என்ன உறவு, அவருடைய அடையாளத்தை வெளியிடுவதால் குழந்தையின் அடையாளம் வெளிப்படுமா என்பவை முக்கியமானவை.
குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையின் தந்தை, தாய், நெருங்கிய உறவினர் அல்லது குழந்தையுடன் நேரடியாக அடையாளம் காணக்கூடிய தொடர்புடையவர் என்றால், அவருடைய பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடுவது குழந்தையின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடும்.
அத்தகைய சூழலில் குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தையும் மறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மாறாக, குற்றம் சாட்டப்பட்ட வயதுவந்த நபரின் பெயரை வெளியிடுவதால் குழந்தையின் அடையாளம் வெளிப்படாது என்றால், போக்சோ சட்டத்தின் பிரிவு 23 மட்டுமே அவரது பெயரை வெளியிடுவதற்கு முழுமையான தடையாகாது.
இருப்பினும், நீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவுகள், விசாரணை நிலை, தனியுரிமை, செய்தியின் பொதுநலன் ஆகியவற்றையும் ஆசிரியர் குழு பரிசீலிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரே 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 74 உள்ளிட்ட அடையாளப் பாதுகாப்பு விதிகளும் பொருந்தும்.
குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடும் உரிமை, பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் உரிமையாக மாறிவிடக்கூடாது.
4. குற்றச்சாட்டும் குற்றம் நிரூபிக்கப்படுவதும் ஒன்றல்ல!
ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒரு சட்டநிலை.
காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது மற்றொரு நிலை.
கைது, குற்றப்பத்திரிகை தாக்கல், நீதிமன்ற விசாரணை, குற்றம் நிரூபிக்கப்பட்ட தீர்ப்பு ஆகியவை வெவ்வேறு சட்டநிலைகள்.
இவற்றைச் செய்தியாளர்கள் தெளிவாக வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டும்.
காவல்துறை ஒருவரைக் கைது செய்துவிட்டது என்பதற்காகவே அவர் குற்றவாளி என்று அறிவிக்க முடியாது.
அதேநேரத்தில், போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 29 மற்றும் 30, குறிப்பிட்ட குற்றங்கள் மற்றும் குற்ற மனநிலை தொடர்பாகச் சட்ட அனுமானங்களை ஏற்படுத்துகின்றன. இவை வழக்கில் சாட்சியச் சுமையைப் பாதிக்கக்கூடிய சிறப்பு விதிகளாகும்.
எனவே, போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கும் நடைமுறை குறித்து பொதுவான குற்றவியல் கோட்பாடுகளை மட்டுமே வைத்து முடிவெடுக்க முடியாது.
இந்தச் சட்ட அனுமானங்களும் உரிய நீதிமன்ற விசாரணை, பொருந்தக்கூடிய சட்ட நிபந்தனைகள், எதிர்த்தரப்பின் விளக்கம் ஆகியவற்றுக்கு உட்பட்டவையே.
பத்திரிகை ஊடகங்கள் இத்தகைய சட்டச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.
5. காவல்துறை விசாரணையில் குழந்தையின் பாதுகாப்பு
போக்சோ சட்டத்தின் பிரிவு 24, குழந்தையின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடைமுறைகளை வகுக்கிறது.
குழந்தையின் வாக்குமூலம், இயன்றவரை குழந்தையின் வீட்டிலோ அல்லது குழந்தை விரும்பும் இடத்திலோ பதிவு செய்யப்பட வேண்டும்.
குழந்தையை அச்சுறுத்தாத சூழலில் விசாரணை நடைபெற வேண்டும்.
வாக்குமூலம் பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி சீருடையில் இருக்கக்கூடாது.
குழந்தை குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொள்ளாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும்.
குழந்தையை இரவில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது.
குழந்தையின் அடையாளம் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் கடமையும் காவல்துறைக்கு உள்ளது.
இதனால் காவல்துறையின் செய்திக் குறிப்புகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் குழந்தையின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
காவல்துறையே ஒரு தகவலை வெளியிட்டிருந்தாலும், அது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தால், ஊடகங்கள் அதனை மீண்டும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
6. முதல் தகவல் அறிக்கையை முழுமையாக வெளியிடலாமா?
போக்சோ வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் பொதுவெளியில் பதிவேற்றப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபுண் சக்சேனா தீர்ப்பில் வழிகாட்டியுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் குழந்தையின் பெயர், குடும்ப விவரங்கள், சம்பவ இடம் மற்றும் பிற அடையாளத் தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம்.
அந்த ஆவணம் செய்தியாளருக்குக் கிடைத்துவிட்டது என்பதற்காகவே அதனை முழுமையாக வெளியிடுவது சட்டப்படி பாதுகாப்பான நடைமுறையாகாது.
செய்தியாளர் பொதுநலன் சார்ந்த தகவல்களைச் சரிபார்த்து வெளியிடலாம். ஆனால் குழந்தையின் அடையாளம் அல்லது விசாரணையின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நீக்க வேண்டும்.
குறிப்பாக, முதல் தகவல் அறிக்கையின் நகலைப் புகைப்படமாகவோ, PDF ஆவணமாகவோ, சமூக ஊடக இணைப்பாகவோ பகிர்வது மிகுந்த சட்ட அபாயத்தை ஏற்படுத்தலாம்.
7. நீதிமன்ற விசாரணையும் இரகசியமும்
போக்சோ சட்டத்தின் பிரிவு 33(7), விசாரணை மற்றும் வழக்கு நடத்தப்படும் காலத்தில் குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்குக் கடமை விதிக்கிறது.
பிரிவு 37ன்படி, போக்சோ வழக்குகள் பொதுவாக மூடிய நீதிமன்ற நடைமுறையில் விசாரிக்கப்பட வேண்டும்.
அதாவது பொதுமக்களும் ஊடகங்களும் வழக்கமான திறந்த நீதிமன்ற விசாரணையைப் போல இவ்விசாரணையில் பங்கேற்க முடியாது.
சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நபர்களும், நீதிமன்றம் அனுமதிக்கும் நபர்களும் மட்டுமே உரிய நிபந்தனைகளின் கீழ் பங்கேற்க முடியும்.
இதன் நோக்கம் குழந்தையை அச்சத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் பாதுகாப்பதாகும்.
நீதிமன்ற விசாரணையின் போது குழந்தை அளிக்கும் சாட்சியங்களைப் பரபரப்பான செய்திகளாக மாற்றுவதும், அடையாளத்தை வெளிப்படுத்தும் விவரங்களை வெளியிடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
8. குழந்தையிடம் நேரடியாகப் பேட்டி எடுக்கலாமா?
பாலியல் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை நேரடியாகச் சந்தித்துப் பேட்டி எடுப்பது மிகுந்த கவனம் தேவைப்படும் செயலாகும்.
புகாரில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை மீண்டும் மீண்டும் விவரிக்குமாறு குழந்தையைக் கேட்பது மனரீதியான பாதிப்பை அதிகரிக்கலாம்.
நிபுண் சக்சேனா தீர்ப்பில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊடகங்கள் நேரடியாகப் பேட்டி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தையின் பெற்றோர் பேட்டி அளிக்கச் சம்மதித்துவிட்டார்கள் என்பதற்காகவே குழந்தையின் அடையாளத்தை வெளியிட அனுமதி கிடைத்துவிடாது.
சிறப்பு நீதிமன்றத்தின் சட்டபூர்வமான அனுமதியே அடையாள வெளியீட்டுக்கான விதிவிலக்கின் அடிப்படையாகும்.
குழந்தையின் நலனும் கண்ணியமும் செய்தியின் பரபரப்பைவிட முக்கியமானவை.
9. பாலியல் குற்றம் பற்றித் தகவல் அளிப்பது சட்டக் கடமை
போக்சோ சட்டத்தின் பிரிவு 19, சட்டத்தின் கீழ் குற்றம் நிகழ்ந்திருப்பதை அறிந்தவர்களுக்கும் குற்றம் நிகழக்கூடும் என்ற தகவல் உள்ளவர்களுக்கும் உரிய காவல்துறை அமைப்பிடம் தெரிவிக்கும் கடமையை விதிக்கிறது.
பிரிவு 20, குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் குறிப்பிட்ட ஆவணங்கள் அல்லது பொருட்கள் குறித்து ஊடகங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், புகைப்பட நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமையை வகுக்கிறது.
பிரிவு 21, சட்டப்படி தகவல் தெரிவிக்கத் தவறுவதற்கான தண்டனைகளைக் குறிப்பிடுகிறது.
இங்கே இரண்டு செயல்களைத் தெளிவாக வேறுபடுத்த வேண்டும்.
ஒன்று, சட்டப்படி காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பது.
மற்றொன்று, அந்தத் தகவலைச் செய்தியாக வெளியிடுவது.
புகார் தெரிவிப்பதற்கான சட்டக் கடமை இருப்பதால், அதன் அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது.
10. சமூக ஊடகங்களுக்கும் சட்டக் கட்டுப்பாடுகள் உண்டு
இன்றைய சூழலில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல் இணையச் செய்தித்தளங்கள், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களிலும் போக்சோ தொடர்பான செய்திகள் வெளியாகின்றன.
உச்சநீதிமன்றத்தின் அடையாளப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அச்சு, மின்னணு, சமூக ஊடகங்கள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன.
செய்தியின் முதன்மை உரையில் குழந்தையின் பெயரை மறைத்திருந்தாலும், முன்படம், காணொளி, தலைப்பு, புகைப்பட விளக்கம் அல்லது சமூக ஊடகப் பதிவு மூலம் அடையாளம் வெளிப்படலாம்.
குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்துடன் அவரது குடும்ப உறவை இணைத்துக் குறிப்பிடுவது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் பாதுகாப்பாக வெளியிடப்பட்ட செய்தி, அதன் சமூக ஊடக வடிவத்தில் சட்ட மீறலாக மாறிவிடக்கூடாது.
எனவே ஒவ்வொரு வெளியீட்டு வடிவத்திற்கும் தனித்தனியான ஆசிரியர் சரிபார்ப்பு அவசியம்.
11. ஊடக விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு மாற்றாக முடியாது
குற்றச்சாட்டு எழுந்தவுடன் சில ஊடகங்கள் குற்றம் சாட்டப்பட்டவரை ஏற்கெனவே குற்றவாளியாக அறிவித்துவிடுகின்றன.
ஜெம் வீரமணி வழக்கில் இதனைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி 'மீடியா ட்ரையல்' நடத்தக்கூடாது என்று சுட்டிக்காட்டி உத்தரவிட்டது. அதேபோல குழந்தைகளின் படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்தது.
மற்றொரு புறம், பாதிக்கப்பட்ட குழந்தையின் புகாரை விசாரணைக்கு முன்பே பொய்யானது என்று சித்தரிக்கும் நடைமுறையும் காணப்படுகிறது.
இரண்டுமே பொறுப்பற்ற செய்தியியல் அணுகுமுறைகளாகும்.
காவல்துறையின் குற்றச்சாட்டு, புகார்தாரரின் விளக்கம், குற்றம் சாட்டப்பட்டவரின் மறுப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை அவற்றின் சட்டநிலைக்கேற்ப செய்தியாக வெளியிட வேண்டும்.
சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலோ, விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையிலோ செய்திகள் வெளியாகக்கூடாது.
அதேநேரத்தில், காவல்துறையின் விசாரணை முறைகள், கைது நடவடிக்கைகள், தாமதங்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கேள்வி கேட்பது ஊடகங்களின் பொதுநலக் கடமையாகும்.
காவல்துறையின் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செயல்கள் அல்ல.
12. பத்திரிகை ஊடக நிறுவனங்களுக்கான ஆசிரியர் நெறிமுறைகள்
போக்சோ வழக்குகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு ஒவ்வொரு ஊடக நிறுவனமும் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்ப வேண்டும்.
குழந்தையின் பெயர் அல்லது புகைப்படம் இடம்பெற்றுள்ளதா?
குடும்பம், பள்ளி, வசிக்கும் பகுதி போன்ற தகவல்களின் மூலம் குழந்தையின் அடையாளத்தைக் கண்டறிய முடியுமா?
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடுவதால் குழந்தையின் அடையாளம் வெளிப்படுமா?
செய்தி நம்பகமான தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதா?
புகார், கைது, குற்றப்பத்திரிகை, விசாரணை, தீர்ப்பு ஆகியவை சரியாக வேறுபடுத்தப்பட்டுள்ளனவா?
நீதிமன்றம் வெளியீட்டுத் தடையோ ரகசிய உத்தரவோ பிறப்பித்துள்ளதா?
செய்தியின் தலைப்பு அல்லது முன்படம் குழந்தையின் கண்ணியத்தைப் பாதிக்கிறதா?
பொதுநலனுக்குத் தேவையற்ற தனிப்பட்ட விவரங்கள் நீக்கப்பட்டுள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில்களைப் பெற்ற பிறகே செய்தியை வெளியிட வேண்டும்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட செய்தியில் குழந்தையின் அடையாளம் வெளிப்படும் அபாயம் கண்டறியப்பட்டால், இணையதளம், சமூக ஊடகப் பதிவுகள், காணொளி முன்படங்கள் உள்ளிட்ட அனைத்திலும் உடனடியாகத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
13. செய்தியியல் சுதந்திரம் என்பது பொறுப்புடன் செயல்படும் உரிமை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பொதுநலன் சார்ந்த முக்கியமான செய்திகளாகும்.
அரசியல் அதிகாரம், பொருளாதாரச் செல்வாக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாகம், காவல்துறையின் செயல்பாடு போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் விசாரித்துச் செய்தியாக வெளியிடுவதற்கான சனநாயகப் பொறுப்பு இருக்கிறது.
அதிகாரமுள்ளவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்காகச் செய்திகளை மறைக்க வேண்டியதில்லை.
அதேநேரத்தில், அதிகாரமுள்ள ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதற்காகப் பாதிக்கப்பட்ட குழந்தையின் தனியுரிமையை மீறவும் முடியாது.
பத்திரிகை ஊடகச் சுதந்திரத்தின் அடிப்படை நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதுதான்; ஒருவரை விசாரணைக்கு முன்பே குற்றவாளியாக அறிவிப்பதோ, குழந்தையின் தனிப்பட்ட வேதனையைப் பரபரப்பான வணிகப் பொருளாக்குவதோ அல்ல.
நிபுண் சக்சேனா தீர்ப்பில், பாலியல் குற்றங்களைச் செய்தியாக வெளியிடுவது ஊடகங்களின் உரிமையும் கடமையும் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேநேரத்தில், செய்திகளைப் பரபரப்பாக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதுவே போக்சோ வழக்குகளில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை அணுகுமுறையாகும்.
குழந்தையின் பாதுகாப்பும் நியாயமான விசாரணையும் செய்தியியல் அறத்தின் இரு தூண்கள்!
போக்சோ சட்டம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டம் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்ணியம், தனியுரிமை, பாதுகாப்பு, நியாயமான நீதிச் செயல்முறை ஆகியவற்றை உறுதிசெய்யும் சட்டமாகும்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை மறைப்பது குற்றத்தை மறைப்பதாகாது.
குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே குற்றவாளியாகச் சித்தரிக்காமல் இருப்பது குற்றத்தை ஆதரிப்பதாகாது.
காவல்துறையின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்பது விசாரணையைத் தடுப்பதாகாது.
குழந்தையின் உரிமைகளைப் பாதுகாத்தபடியே குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராய்வதும், காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் துல்லியமாக வெளியிடுவதும் பத்திரிகை ஊடகங்களின் கடமையாகும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்குப் பாதுகாப்பு! குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமான விசாரணை! பொதுமக்களுக்கு உண்மையான தகவல்!
இந்த மூன்றையும் சமநிலையுடன் உறுதிசெய்வதே அறம் சார்ந்த பத்திரிகை ஊடகத்தின் அடையாளம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)