ஜெம் வீரமணி வழக்கு: மேலாளர் சக்திவேல் கைது! பணம் பெற்றவர்கள் சிக்குவார்களா?
ஜெம் வீரமணி வழக்கில் மேலாளர் சக்திவேல் கைது! பணப்பரிமாற்றங்கள் குறித்து SIT விசாரணை. அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்குத் தொடர்பா? ஏழாவது வழக்கு பதிவு!
ஜெம் கிரானைட் மேலாளர் சக்திவேல் கைது!
வீரமணியைத் தப்பிக்க வைக்க உதவிய அதிகாரிகள், பத்திரிகையாளர்களை நெருங்குகிறதா காவல்துறை விசாரணை?!
ஜெம் வீரமணி மீது ஏழாவது பாலியல் குற்ற வழக்கு! 11 சிறுமிகள் தொடர்பான புகார்கள்! வீடு, பண்ணை வீடு, நிறுவன அலுவலகத்தில் அதிரடிச் சோதனை!
சென்னை | 18.10.2026 | தமிழ் ஊடகம்
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கில், ஜெம் கிரானைட் நிறுவன மேலாளர் சக்திவேல் இன்று (18.10.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கில் மிகமுக்கியமான திருப்பமாக இது கருதப்படுகிறது.
காரணம் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள். ஆனால் வீரமணி வழக்கை விசாரிக்கமல் முடித்துவைக்க உதவியவர்கள் மீதான விசாரணைக்குத் தொடர்புடையவராக இந்த ஜெம் கிரானைட் நிறுவன மேலாளர் சக்திவேல் கருதப்படுகிறார்.
ஜெம் வீரமணியைத் தப்பிக்க வைக்க யார் யாரெல்லாம் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டார்களோ அவர்கள் குறித்த விவரங்கள் மேலாளர் சக்திவேல் மூலம் வெளிப்படும் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில், இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பணப்பரிமாற்றங்களின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? வீரமணியைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் அல்லது பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா ? அப்படியென்றால் யார் யாருக்கு ? இதுதொடர்பாக சக்திவேல் மூலம் வீரமணியை யார் யார் சந்தித்தார்கள் என்பது குறித்த பல தகவல்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
வீரமணியின் மூன்று இடங்களில் சோதனை! முக்கிய ஆதாரங்கள் சிக்கின!
வீரமணிக்குச் சொந்தமான சென்னை லாயட்ஸ் சாலை வீடு, கானத்தூர் பண்ணை வீடு மற்றும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் ஸ்டோன் நிறுவன அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிரச் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சோதனைகளில் வழக்குத் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சிறுமி புகார்! வீரமணி மீது ஏழாவது வழக்கு!
ஜெம் வீரமணி மீது ஏற்கெனவே ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று ஏழாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டிலேயே சம்பவம் நடைபெற்றிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்ட 11 சிறுமிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பென்டிரைவ் வீடியோவில் தொடங்கிய விசாரணை!
சென்னை பெருநகரக் காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த பென்டிரைவில் இருந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சாந்தி, மகேந்திரசிம்ஹன் ஆகியோர் ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காததாகக் கூறப்படும் கணேசன் செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமிகளை வீரமணியிடம் அழைத்து வந்து பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் அக்டோபர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கில் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து, புழல் சிறையில் வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
1
Sad
0
Angry
0
Comments (0)