ரஜினியிடம் மோதாதே! கமலுக்கு பஞ்சு அருணாச்சலம் கொடுத்த அட்வைஸ் – 20 ஆண்டு மோதல் பின்னணி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் - 8
ரஜினியுடன் 20 ஆண்டுகளாக மோதுவது ஏன்? கமலுக்கு பஞ்சு அருணாச்சலம் கூறியதாகப் பத்திரிகையாளர் நாச்சி. செல்வராஜ் விவரிக்கும் திரையுலகச் சம்பவங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் - 8
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் - 8
-நாச்சி.செல்வராஜ், பத்திரிகையாளர்
அரசியலும், சினிமாவும் ஒன்றோடு ஒன்று கலந்தது. ஆனால் சினிமாவில் தோன்றும் கதாநாயகர்களுக்கு இடையே புகழ், வர்த்தகம், பேராசை, பொறாமை இவற்றின் காரணமாக ஒருவர் மீது ஒருவருக்கு எழும் போட்டி, அரசியலில் தெரிவது போல அவ்வளவாக வெளியில் தெரியாது.
இதைத் தெரிந்தும் தெரியாததும் போல் நடிக்கும் அந்த 'மகா நடிகரை' சுற்றி வாழும் மனித வட்டம் ஒன்று.
அந்த வட்டத்தில் இருப்பவர்களில் சிலர் அவர்கள் அறிந்ததைப் பத்திரிகையாளர்களிடம் தெரிந்தும் தெரியாதது போல சொன்னதால் பிறந்ததுதான் இந்த கட்டுரை.
அதே நேரத்தில் சினிமாவிற்குள் ஒளிந்திருக்கும் அரசியல், தந்திரம், சூதுவாது ஆகியவற்றை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
ரஜினி – கமல்: திரையுலகப் போட்டியின் தொடக்கம்
சினிமாவில் தோன்றும் கதாநாயகர்கள் கே.ஆர். ராமசாமி - தியாகராஜ பாகவதர் முதல்... ரஜினி, கமல் வரை இந்தப் போட்டி இருந்து வருகிறது.
"களத்தூர் கண்ணம்மா படம் தொடங்கி தொடர்ந்து நடித்து வரும் என்னிடம் இப்ப வந்த ரஜினி மோதுவதா?" என்கிற எண்ணம் நடிகர் கமல்ஹாசனிடம் 1980 களின் தொடக்கத்திலேயே ஈகோ பிரச்சனையாக வலுத்தது.
தன்னிடம் ஏற்பட்ட அந்த ஈகோவை ரஜினியைப் போன்ற தோற்றத்தில் இருந்த நளினிக்காந்த் மீது காட்டினார் கமல்ஹாசன்.
மங்கம்மா சபதம் திரைப்படமும் நளினிகாந்த் கதாபாத்திரமும்
1985 ஆம் ஆண்டு வெளியான ஹிந்திப் படத்தின் தழுவலான 'மங்கம்மா சபதம்' என்ற திரைப்படத்தின் மூலம் அந்தக் கோபத்தை காட்டினார் கமல்.
கே.கே.விஜயின் இயக்கத்தில் வெளியான மங்கம்மா சபதம் படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்திலும் நளினி காந்த் வில்லன் வேடத்திலும் நடித்திருந்தனர்.
இதில் சண்டைக் காட்சிகளில் ரஜினியைப் போன்ற உருவத்திலிருந்த நளினிக் காந்த்தை அடித்துத் துவைத்து அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அப்போது திரை உலகத்தைச் சேர்ந்த ஜாம்பவான்கள் எல்லாம் கமலுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை ? ரஜினியை அவமதிப்பது போல இப்படிப் படம் எடுக்கலாமா என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினர்.
அப்போது இந்தக் காட்சிகள் ரஜினி கமல் ரசிகர்களிடையே பெரும் மோதலை உருவாக்கியது. ஆனாலும் ரஜினிகாந்த் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.
விக்ரம் – விடுதலை: திரைப்படக் காட்சிகளின் பின்னணி
இருந்தாலும் 1986 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி - ரஜினிகாந்த் - விஜயகுமார் நடிப்பில் உருவான 'விடுதலை' படம் வெளியானது. விடுதலை படம் வெளியாவதற்கு முன்பு கமல் நடித்த 'விக்ரம்' படமும் வெளியாகி இருந்தது.
அதில் கமலஹாசனின் கதாபாத்திரத்தின் பெயர் விக்ரம். இந்தப் படம் திரைக்கு வந்து சில நாட்களில் ரஜினி நடித்த விடுதலைப் படமும் வெளியானது.
அதில் வில்லனாக நடித்த விஜயகுமார் பெயர் விக்ரம். விடுதலைப் படத்தில் ஒரு காட்சியில் விக்ரம் என்ற விஜயகுமார் ஓட்டிவந்த கார் ரஜினி மீது மோதுவது போல ஒரு காட்சி. பதிலுக்கு ஏன் இப்படி மோதினாய் என ரஜினி கேட்பது போலக் காட்சி
கேள்வி கேட்ட ரஜினியைப் பார்த்து விக்ரம் என்ற விஜயகுமார் "யூ பா...ர்டு" என்று ஆங்கிலத்தில் திட்டுவார்.
உடனே ரஜினி "பா...டர்டு என்றால் அர்த்தம் என்ன தெரியுமா? தே...யா புள்ள என்று பொருள்" என்று விக்ரம் விஜயகுமாரிடம் சொல்லி "இது போன்று பொது இடங்களில் கெட்ட வார்த்தைகள் பேசுவது தவறு" என்று கூறிவிக்ரம் விஜகுமாரின் தலையில் ஓங்கி அடித்து ஓட விடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் காட்சியை விடுதலை படத்தில் பார்த்த ரஜினி ரசிகர்கள் பரபரப்பாகப் பேசித் திரை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.
இதுபோன்று கமலுக்கும், ரஜினிக்கும் இடையே திரை உலக அரசியல் நடந்து கொண்டே வந்தது.
இதனைப் பாலச்சந்தர், இயக்குனர் எஸ் பி முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் போன்ற திரை உலக சீனியர்கள் ரசிக்கவில்லை. ரஜினி கமல் இருவரையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து சமாதானப்படுத்தி வருவது திரையுலகில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது.
சிவாஜி திரைப்படப் பாடலும் பஞ்சு அருணாச்சலத்தின் விமர்சனமும்
இந்தியத் திரையுலகில் முதல் முதலாக பான் இந்தியா திரைப்படம் 'சிவாஜி தி பாஸ்' வெளிவந்து திரை உலக வசூலைப் புரட்டிப் போட்டது.
அந்தப் படத்தின் பாடல்கள் காட்சி அமைப்புகள் மிகப் பிரமாண்டமாக இருந்தன. பல கோடிகள் செலவு செய்து பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
அதில் ஒரு பாடலான 'வாஜி வாஜி வாஜி சிவாஜி' என்ற பாடலைத் திரையில் பார்த்து வியந்த தயாரிப்பாளரும், கவிஞருமான பஞ்சு அருணாச்சலம் அந்தப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்துவைத் தன் வீட்டிற்கு அழைத்தார்.
பஞ்சு அருணாச்சலம் அழைக்கிறார், ஏதாவது விவகாரம் இருக்கும், நாம் தனியாகப் போனால் பிரச்சனை என எண்ணிய வைரமுத்து, ரஜினியையும் பஞ்சு ஐயா கூப்பிடுகிறார் வாருங்கள் என அழைத்தார்.
பஞ்சு அருணாச்சலம் என்ற பெயரைச் சொன்னால் எப்போதுமே தட்டாமல் வரும் ரஜினிகாந்த் அன்றும் உடனே வந்து விடுகிறேன் எனக் கூறி கூறப்பட்டார்.
பஞ்சு அருணாச்சலம் வீட்டிற்குப் புறப்படும் போது, நாம் தனியாகப் போனால் ஆபத்து கமல்ஹாசனையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணி கமலுக்கு போன் போட்டார் ரஜினி.
பஞ்சு அருணாச்சலம் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் சந்திப்பு
அடுத்த சில மணிகளில், பஞ்சு அருணாச்சலம் இல்லத்தில் வைரமுத்து, ரஜினி, கமல்ஹாசன் மற்றுமொரு சீனியர் பத்திரிகையாளர் ஆகியோரும் ஐக்கியமாகி விட்டனர்.
மாலைப் பொழுது என்பதால், உற்சாக பான மீட்டிங்கும் நடந்தது. பஞ்சாயத்து ஆரம்பமானது. பஞ்சு அருணாச்சலம் தொடங்கினார் "யோவ் கவிஞரே என்னய்யா வாஜி, வாஜி சிவாஜி என எழுதி இருக்கிறாய் சாமானியனுக்கு இது புரியுமா...புரியும்படி வார்த்தைகள் போட்டு எழுத கூடாதா?" என கவிஞர் வைரமுத்துவை பார்த்து பஞ்சு அருணாச்சலம் கேள்வி எழுப்பினர்..
(வைரமுத்து குறித்து விமர்சனம் செய்ய பஞ்சு அருணாச்சலத்திற்கு தகுதி உள்ளது என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்)
எம்ஜிஆர் நடித்த கலங்கரை விளக்கம் என்ற படத்தில் 'பொன் எழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் இளவேனில்' என்ற பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். திரை உலகத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய முதல் பாடல் அது.
படப்பிடிப்பின் போது இந்தப் பாடல் குறித்து கேட்ட எம்ஜிஆர், இதை எழுதியது கவிஞர்தானே (கண்ணதாசன்தானே) என நம்பிக்கையுடன் கேட்க, "இல்லை கவிஞரின் உறவுக்காரரான பஞ்சு அருணாச்சலம்" எழுதியது எனக் கூறினார்கள்.
அதைக் கேட்ட எம்ஜிஆர் பிரமித்து போனார். காரணம் இந்த பாடலை இலக்கிய நயத்தோடு இல் இல் என முடித்து தனது தமிழ்த் திறமையும் காட்டியிருப்பார் பஞ்சு அருணாச்சலம்.
பிறகு படத்தைப் பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த பொழுது, நீண்ட நேரம் ஆகிவிட்டதால் ரஜினி, புகைப்பிடிக்க அந்த சீனியர் பத்திரிகையாளருடன் பஞ்சு அருணாச்சலம் வீட்டின் பாத்ரூமுக்குச் சென்றனர்.
இந்த இடைவெளியில் கமலிடம் பேசிய பஞ்சு அருணாச்சலம், "யோவ் கமல் நீ ஏன்யா 20 ஆண்டுகளா ரஜினி.. ரஜினி.. என அவரிடமே மோதிக் கொண்டிருக்கிறாய். திரை உலகில் ரஜினி கமர்சியல் கிங், வர்த்தக ரீதியாக ரஜினியை அடிச்சுக்க முடியாது. நீ நடிப்பில் கிங்.. நீ உன்னோட வழியில் போ. உனக்கென ஒரு மார்க்கெட் உள்ளது. ரஜினி அவரது வழியில் போகட்டும். நீ இனிமேல் ரஜினி ரஜினி என மோதிக்கொண்டே இருக்காதே! உன் வேலையை மட்டும் பார்" எனக் கமலிடம் பஞ்சு அருணாச்சலம் காட்டமாகப் பேசி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் நடுவே புகை பிடித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ரஜினிக்கு இதெல்லாம் காதில் விழுந்தது. எனினும், அதைக் கேட்காதது போலக் காட்டிக்கொண்டார் ரஜினிகாந்த்.
பார்ட்டி தொடர்ந்தது.
நேரம் செல்லச் செல்ல பஞ்சு அருணாசலத்தின் 'பன்ச்' டயலாக்குகள் பறந்து கொண்டே இருந்தன. முடிவில் மூன்று பேரும் எழுந்து செல்ல, தனது காரில் ஏறிய ரஜினி "20 வருஷமா திருந்தாத இந்த ஆளு (கமல்) இனிமேல் திருந்தவா போறார்... அட அத விடப்பா இப்போ வண்டிய எடுப்பா" என்று தனது ஸ்டைலில் கூறிவிட்டுப் பஞ்சு வீட்டிலிருந்து நகர்ந்தார் ரஜினி.
ரஜினி – கமல் நட்பு: திரைக்குப் பின்னால் என்ன நடந்தது?
திரையுலக மேடைகளில் ரஜினி - கமலையும், கமல் - ரஜினியையும் புகழ்ந்து கொள்வது ஒரு நாடகம்தான்.
கமல் ஒருபடி மேலே சென்று மேடையில் அடிக்கடி, "நானும் ரஜினியும் 40 ஆண்டு கால நண்பர்கள், அது மட்டுமல்ல இந்தக் கால திரையுலகக் கதாநாயகர்களுக்கு எங்களது நட்பு ஓர் எடுத்துக்காட்டு" என்பார்.
'என்னே ஒரு நகைச்சுவை உணர்வு' என்று விவரமறிந்தவர்களுக்குத் தோன்றும்.
திரை உலகில் இது போன்று 'உள்ளே மிருகம் வெளியே மனிதன் விளங்க முடியாத புதிராகத்' திரை அரசியல் இன்றளவும் வேறு வேறு நடிகர்களுக்கிடையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ரஜினியுடன் மோதி மண்டையை உடைத்துக்கொண்ட அடுத்தகட்ட நடிகர்கள் யார் யார் என்று அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)