ஜெம் வீரமணி பாலியல் வழக்கு ! "பயிரை மேய்ந்த வேலிகள்" பத்திரிகையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை ?!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் நீதிமன்ற உத்தரவு என்ன? வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயன்றதாக எழும் குற்றச்சாட்டுகள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் தொடர்பான கேள்விகள் குறித்து தமிழ் ஊடகம் புலனாய்வு.

Oct 11, 2026 - 08:51
Updated: 22 days ago
0 95
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு !  "பயிரை மேய்ந்த வேலிகள்" பத்திரிகையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை ?!

-தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் செய்தியே வெளியிடக்கூடாது என்பதல்ல நீதிமன்றம் அளித்த உத்தரவு,

"பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஊடகங்களே விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போன்ற அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டும்" என்பதே நீதிமன்ற உத்தரவின் சாராம்சம்.

ஜெம் வீரமணி சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தி வன்கொடுமை செய்தது என்பது வழக்கின் நேரடித் தன்மை.

அதேவேளை, இந்த வழக்கை நீர்த்துபோகச் செய்ய அல்லது முடித்து வைக்க பல கோடி ரூபாய் பணம் கைமாறியது என்பது இந்த வழக்கின் இன்னொரு மிக முக்கியமான குற்றச் செயல்.

வீரமணி ஏதோ ஒரு மளிகைக் கடையில் நான்கு அப்பளக்கட்டைத் திருடிவிட்டார் அந்த வழக்கில் அவர் தப்பிக்க பணம் கையூட்டாகக் கொடுத்தார் என்பதல்ல வழக்கு.

வீரமணி செய்ததாகக் கூறப்படுவது, கல்விக்குப் பண உதவி செய்வது, பரிசுகள் கொடுப்பது என்று சிறுமிகளைத் தனது பாலியல் வக்கிரத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட பன்னாட்டு அளவில் மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றம்.

அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் கணவன் மனைவி என்று கூறப்படும் மஹேந்திர சிம்ஹன் மற்றும் சாந்தி. இந்த மூன்றுபேர் தவிர மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். SRMU நிர்வாகியின் மகன் பிரகாஷ் இன்னும் பிடிபடவில்லை.

இந்த வழக்கை விசாரிக்க SIT - சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், இந்த வழக்கை முடித்துவைத்து வீரமணியைத் தப்பிக்க வைக்க மிக முக்கிய உயர் பணிகளில் இருந்து செயல்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ், யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் முடித்து வைக்க காவல்துறையில் பணிபுரிந்த இவர்கள் முழு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிந்து அந்த முகாந்திரத்தின் அடிப்படையிலேயே இவர்களின் "பொறுப்புகள்" பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிகிறது. இவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்படக் காரணங்கள் வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும் இந்த வழக்கின்போதுதான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது எழும் அடுத்த கேள்வி, காவல்துறை அதிகாரிகள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காவல்துறை அதிகாரிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்ட வீரமணிக்கும் இடையே "இடைத்தரகர்களாக" செயல்பட்ட பத்திரிகையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கேள்வி சென்னை பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.

எந்தவிதப் பொருளாதார பின்புலமும் இல்லாத, சரியான மாத ஊதியம் கூடக் கிடைக்காத பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சிலர் செய்திப் பத்திரிகை அறத்தோடு வாழ்ந்து வரும் நிலையில், பத்திரிகையாளர் சந்திப்புகளின்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் 300 ரூபாய் 500 ரூபாய் மதிப்புள்ள நினைவுப் பரிசுகளுக்கு ஈடான பணத்தை வாங்கி வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கிச் செல்வதை பெரும் கொலைக் குற்றம் போல பார்க்கிற சிலர், வீரமணி போன்ற பாலியல் குற்றவாளிகள், வாரிசு இல்லாத சொத்துக்களைக் களவாடும் குற்றவாளிகள், கட்டப்பஞ்சாய்த்து செய்யும் குற்றவாளிகள், பெண்களைப் பாலியல் பண்டமாக வன்கொடுமை செய்யும் புரோக்கர் குற்றவாளிகள், ஹவாலா வழக்கில் மாட்டுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகைக் குற்றவாளிகளிடம் கோடிக்கணக்கான ரூபாயை மிரட்டி வாங்கி Real Estate வணிகம் செய்வது, பங்களா போல வீட்டைக் கட்டிக்கொள்வது ஆகிய கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களைச் செய்து வருபவர்களை "தலைவர், பத்திரிகை உலகை வாழவைக்க வந்த மகாத்மா" என்று புகழ் பாடும் அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு ஜெம் வீரமணி வழக்கில் சமரசம் இல்லாது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகள்.

கிடைக்கின்ற தகவல்கள், விசாரணையின் போக்குகளை ஆழ்ந்து கவனிக்கும்போது, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய, வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் இருக்க காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள் அதற்குப் பின்னணியில் பல கோடி ரூபாய் பணம் விளையாடி இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்க முடிகிறது.

எனவே, இந்த வழக்கில் இரக்கமே இல்லாமல், அடிப்படை அறம் கூட இல்லாமல் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாகக் கருதப்படும், அதிகாரிகளோடு நெருக்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் எவரும் தப்பித்து விடக்கூடாது.

அவ்வாறு தப்பிக்க விட்டால் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்கிற பழிச்சொல்லை மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஆட்சியின் மீது விழுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.

எனவே, இந்த வழக்கில் வீரமணியிடமிருந்து வழக்கை முடித்து வைக்க பணம் பெற்ற பத்திரிகையாளர்கள் யார் யார் ? முதன்மை இடைத்தரகாராக செயல்பட்டவர் யார் ? அவர் எந்த இடத்தில் வைத்து பணத்தைப் பட்டுவாடா செய்தார் ? எந்த எந்தப் பத்திரிகை ஊடகருக்குப் பணம் கொடுத்தார் ? அந்தக் காலகட்டங்களில் அருண் ஐபிஎஸ் அதிகாரியோடு மணிக்கணக்கில் பேசிய பத்திரிகை ஆசிரியர்கள் யார் யார் ? அந்த செய்தி ஆசிரியர் அல்லது மூத்த பத்திரிக்கையாளரிடம் மணிக்கணக்கில் அருண் ஐபிஎஸ் பேச வேண்டிய தேவை என்ன இருந்தது ? உள்ளிட்ட கேள்விகளுக்குள் இந்த சமூகத்தின் "பயிரை மேய்ந்த இரக்கமற்ற வேலிகள்" ஒளிந்து கொண்டிருக்கின்றன.

பத்திரிகையாளர்கள் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு இதுபோன்ற தொடர் குற்றங்கள் செய்வதும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் செயல் எப்பேர்ப்பட்ட கேடுகெட்ட குற்றச்செயல் ?!

இந்தப் பத்திரிகையாளர்கள் சிலரும், காவல்துறை அதிகாரிகள் சிலரும் பணத்தை வாங்கிக்கொண்டு வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளைத் தப்பிக்க வைத்திருந்தால் இன்னமும் அவர்கள் எத்தனை சிறுமிகளின் வாழ்க்கையைச் சூறையாடி இருப்பார்கள் ?!

அவ்வளவு ஏன் இதே பணத்தை வாங்கிக்கொண்டு செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களின் வீட்டுச் சிறுமிகள் கூட இந்த வக்கிரத்திற்கு பலியாகும் அபாயம் உள்ளதா இல்லையா ?

இத்தகைய குற்றம் சட்டப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அதனை பத்திரிகை - ஊடகர்கள், செய்தி ஆசிரியர்கள் என பிரித்துக் கொடுத்த அந்த இடைத்தரகர் மற்றும் அந்தப் பணத்தை வாங்கிய பத்திரிகை ஊடகர்கள் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தானவர்கள்?!

சனநாயகத்தின் நான்கு தூண்களில் அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்போர் இரண்டு தூண்கள்.

அந்த இரண்டு தூண்களும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களை ஊக்குவித்தால் சனநாயகம் எப்படி வாழும் ?! மக்கள் எப்படி பெண் குழந்தைகளை, பெண்களை வைத்துக்கொண்டு நிம்மதியாகப் பாதுகாப்பாக வாழ இயலும் இந்த மண்ணில் !?

எனவே எந்தவித அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் தொடர்புடைய பத்திரிகை ஊடகர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தயக்கமின்றி எடுத்து உண்மையில் தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதே மாண்புமிகு ஜோசப் விஜய் அரசின் மிகப்பெரிய கடமை.

அதனை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நேர்மையான அதிகாரிகள் குழு செய்வார்கள் என்று பத்திரிகை ஊடகத்துறையின் நேர்மையான பத்திரிகை ஊடகர்கள் எதிர்பார்க்கிறார்கள், உன்னிப்பாகக் கவனித்து வரும் மக்களும் விரும்புகிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User