பிரான்சில் மக்கள் போராட்டம் ஏன்? பொருளாதார நெருக்கடி, கல்விப் பிரச்சினை, ஐரோப்பாவின் கொந்தளிப்பு!
பிரான்சில் இலட்சக்கணக்கான மக்கள் போராடுவது ஏன்? கல்வி நெருக்கடி, அரசுக் கடன், விலைவாசி உயர்வு, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் ஐரோப்பியப் போராட்டங்களின் உண்மையான பின்னணி.
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
பிரான்சில் பற்றி எரிவது வாகனங்கள் மட்டுமல்ல; மக்களின் எதிர்கால நம்பிக்கையும்தான்! உண்மையில் என்ன நடக்கிறது?
பிரான்சில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். காவல்துறை வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அரசுக் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான பிரான்சில் ஏன் இந்த நிலை?
இதற்கான பதிலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், போராட்டங்களில் நடைபெறும் வன்முறைகளை மட்டும் பார்க்காமல், பிரான்சின் கல்வி, பொருளாதாரம், சமூக அமைப்பு, அரசியல் ஆகியவற்றையும் ஆராய வேண்டும்.
பிரான்சின் தற்போதைய போராட்டங்களுக்கு உடனடிக் காரணமாக அமைந்தது பள்ளிக் கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிதான்.
கடந்த செப்டம்பர் 17 அன்று பாரிஸ் புறநகரான கிரெத்தெய்லில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது. மாணவர்களும் ஆசிரியர்களுடன் இணைந்தனர்.
பிரான்சின் கல்வி அமைச்சகப் புள்ளிவிவரங்களின்படி, 2024–25 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளின் இடைநிலைக் கல்வியில் நடத்தப்பட வேண்டிய பாட நேரங்களில் 9.8 விழுக்காடு நடத்தப்படவில்லை. ஆசிரியர்கள் பணிக்கு வராதபோது மாற்று ஆசிரியர்களை நியமிக்க முடியாததும் முக்கியக் காரணமாக இருந்தது.
ஒரு மாணவி, பிரெஞ்சு மொழிக்கான ஆசிரியரே இல்லாமல் அந்தப் பாடத்தின் தேர்வை எழுத வேண்டியிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதான் பிரான்சின் உண்மையான பிரச்சினையை வெளிப்படுத்துகிறது.
செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் தொழிலாளர்கள், ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கும் இடையே கல்வி வசதிகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
பிரான்சில் கல்வி அனைவருக்கும் பொதுவான உரிமையாக இருந்தாலும், அந்த உரிமையைச் சமமான தரத்தில் அனுபவிக்க முடியவில்லை என்பதே மாணவர்களின் குற்றச்சாட்டு.
இந்தக் கல்விப் போராட்டம் ஏன் நாடு தழுவிய மக்கள் போராட்டமாக மாறியது?
ஏற்கெனவே பிரான்ஸ் மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை, எரிசக்திச் செலவு, வீட்டுவாடகை ஆகியவை குடும்பங்களின் செலவுகளை அதிகரித்துள்ளன. அதற்கேற்ப வருமானம் உயரவில்லை என்பது பலருடைய குற்றச்சாட்டு.
மறுபுறம், அரசின் நிதிநிலையும் நெருக்கடியில் இருக்கிறது.
பிரான்சின் பொதுக்கடன், நாட்டின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 119 விழுக்காட்டை எட்டியுள்ளது. அரசின் வருவாயைவிடச் செலவு அதிகமாக இருப்பதால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,400 கோடி யூரோ அளவுக்குச் செலவுகளைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இங்குதான் மிகப்பெரிய முரண்பாடு உருவாகிறது.
அரசு கடனைக் குறைக்க வேண்டும் என்கிறது. மக்கள் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவைகளுக்கான செலவுகளைக் குறைக்கக் கூடாது என்கிறார்கள்.
அரசின் நிதிநிலையைச் சரிசெய்வதற்காக மக்கள் ஏற்கெனவே பெற்றுவரும் அடிப்படை வசதிகளை இழக்க வேண்டுமா என்பதுதான் இந்தப் போராட்டத்தின் மையக் கேள்வி.
இதனுடன் இன்னொரு முக்கியமான பிரச்சினையும் இணைந்துள்ளது.
பிரான்சில் குடும்பத்தின் பொருளாதார நிலை, ஒருவர் பெறும் கல்வியையும் எதிர்கால வாய்ப்புகளையும் தீர்மானிக்கும் அளவுக்குச் சமூக ஏற்றத்தாழ்வு உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒருகாலத்தில் அரசின் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கின. அந்த வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்ற அச்சம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.
அதனால்தான் பள்ளி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
அக்டோபர் 17 அன்று சுமார் 5.5 இலட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றதாக பிரான்ஸ் அரசு தெரிவித்தது. அக்டோபர் 24 அன்று மீண்டும் 4.10 இலட்சம் பேர் வீதிகளில் திரண்டனர்.
பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றாலும், சில நகரங்களில் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. அரசுக் கட்டடங்கள் தாக்கப்பட்டன. காவல்துறையினரும் போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.
காவல்துறையின் நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. போராட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி கையெறிகுண்டை எடுத்த ஒரு சிறுவன் கையை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளவுக்கு மீறிய காவல்துறை நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளும் நடைபெறுகின்றன.
இருப்பினும், அமைதியாகப் போராடும் மக்களையும் வன்முறையில் ஈடுபடும் குழுக்களையும் ஒன்றாகக் கருதுவது தவறானது.
இந்தப் போராட்டங்களுக்கு இன்னொரு அரசியல் பின்னணியும் உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசு ஏற்கெனவே நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாத சிக்கலை எதிர்கொள்கிறது. 2027ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் அதிருப்தியை எதிர்க்கட்சிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
இடதுசாரி அரசியல் அமைப்புகள் சமூகநீதி, கல்வி, பொருளாதாரச் சமத்துவம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன. வலதுசாரி அமைப்புகள் சட்டம்–ஒழுங்கு, பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் ஆகியவற்றை முன்னிறுத்துகின்றன.
பிரான்சில் நடைபெறும் வன்முறைகள் அனைத்திற்கும் குடியேறிய மக்களே காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போதைய போராட்டங்களின் அடிப்படைக் காரணங்கள் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியும் பொதுச் சேவைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளும்தான் என்பதையே சர்வதேசச் செய்தி ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பிரான்சின் இந்த நெருக்கடி ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும் வாழ்க்கைச் செலவு, கல்வி, ஊதியம், வீட்டு வசதி போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் போராடுகின்றனர். ஆனால் இவை அனைத்தும் பிரான்ஸ் போராட்டத்தின் நேரடித் தொடர்ச்சியோ, ஒரே தலைமையின்கீழ் நடைபெறும் இயக்கமோ அல்ல.
பிரான்சில் உண்மையில் நடைபெறுவது அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதாரப் போராட்டம் மட்டுமல்ல. எதிர்காலத்தில் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்குமா என்ற கேள்விக்கான போராட்டமும்தான்.
அரசு தனது கடனைக் குறைக்க முயற்சிக்கிறது. மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரம் குறைந்துவிடக் கூடாது என்று போராடுகின்றனர்.
இந்த இரண்டு தேவைகளுக்கும் இடையே சமநிலையை உருவாக்க முடியாததுதான் பிரான்சின் தற்போதைய நெருக்கடியின் அடிப்படை.
வாகனங்களுக்குத் தீ வைப்பதையும் கடைகளைச் சூறையாடுவதையும் தடுத்து நிறுத்தலாம். ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, சமூகச் சமத்துவம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மக்களின் அதிருப்தியை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது.
பிரான்சில் பற்றி எரிவது வாகனங்கள் மட்டுமல்ல; தங்களுடைய எதிர்காலம் குறித்த இளைஞர்களின் நம்பிக்கையும்தான்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)