1,450 அடி உயரத்தில் காதல் ! எம்பயர் ஸ்டேட் கட்டட உச்சியில் திருமண முன்மொழிவு; சாகச இணையர் கைது
நியூயார்க் நகரின் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் சட்டவிரோதமாக ஏறிய ரஷ்ய நாட்டு இணையர், உலக அமைதிக்கான பதாகையை விரித்து திருமண முன்மொழிவு செய்தனர். பிறகு அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் சுமார் 1,450 அடி உயரமுள்ள உச்சிப் பகுதியில் ஏறிச் சென்ற சாகச இணையர், அங்கு உலக அமைதியை வலியுறுத்தும் பதாகையை விரித்ததுடன், திருமண முன்மொழிவும் செய்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சாகசம் முடிவில் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த சாகச வீரர்களான ஆஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் இவான் பீர்கஸ் (Ivan Beerkus) பாதுகாப்புத் தடைகளை மீறி, பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லாத கட்டடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறினர்.
அங்கு அவர்கள் "When the power of love beats the love of power, the world knows peace" என்ற வாசகம் இடம்பெற்ற கருப்பு நிற பதாகையை விரித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இவான் தனது காதலியான ஆஞ்சலாவிடம் திருமண முன்மொழிவு செய்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி உலகளவில் பேசுபொருளாக மாறின.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
சம்பவத்திற்குப் பிறகு இருவரையும் நியூயார்க் போலீசார் கைது செய்தனர். கட்டடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைதல், பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை
இந்தச் சம்பவம் அனுமதியின்றி நடைபெற்றதாக எம்பயர் ஸ்டேட் கட்டட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கட்டடத்தில் இருந்த பார்வையாளர்கள் அல்லது பணியாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், போலீசாரின் ஒத்துழைப்புடன் நிலைமை விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் நிர்வாகம் விளக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரல்
உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசமும், அதனைத் தொடர்ந்து நடந்த திருமண முன்மொழிவும் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இந்தச் செயலை துணிச்சலான காதல் என பாராட்டினாலும், பலர் இதுபோன்ற ஆபத்தான செயல்கள் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என விமர்சித்து வருகின்றனர்.
சிறையில் இருந்துகொண்டே அந்தப் பெண் தனக்கு திருமணம் உறுதியான மோதிரத்தைக் காண்பித்து மகிழ்ச்சி அடைந்த காணொலி மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)