விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?!
சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும், தேவையான இடங்களில் விமர்சித்தும் வந்த தனது பத்திரிகைப் பயணத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் சிறப்புக் கட்டுரை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?!
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகத்தில் கால்பதித்த கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 12 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி குறித்தும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குறித்தும் பெரும்பாலும் நேர்மறையான பதிவுகளையே இட்டு வருகிறோம். அவர்களை எதிரிகளிடம் விட்டுக்கொடுத்துப் பேசியதில்லை, எழுதியதில்லை.
நான் சார்ந்த பத்திரிகை ஊடக உலகில் மட்டுமல்லாமல் அரசியல், அதிகார மையங்களில் கூட "அவர் சீமான் ஆள்" என்று பேசுமளவுக்கே எமது சீமான் மற்றும் நாம் தமிழர் குறித்த நேர்மறைப் பதிவுகள் இருந்தன.
ஆனால் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் எந்தக் கட்சி ஆதரவாளரும் அல்ல, எதிர்ப்பாளரும் அல்ல, தனி மனிதத் துதி பாடியும் அல்ல என்று.
காரணம், தொடக்கத்தில் சுமார் 2 ஆண்டுகள் காலைக்கதிர் நாளிதழில் பணியாற்றியவன். அதற்காகப் பார்ப்பனிய / பிராமணிய ஆதரவாளன் ஆகிவிடவில்லை. 7 ஆண்டுகள் ஜெயாத் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றியதால் நான் அதிமுககாரன் ஆகிவிடவில்லை, 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் புதியதலைமுறைத் தொலைக்காட்சியில் உள்ளீட்டு ஆசிரியர் பிறகு மூத்த ஆசிரியராகப் பணியாற்றியதால் நான் ஐ.ஜெ.கே கட்சிக்காரன் ஆகிவிடவில்லை. ஐந்தரை மாதங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றியதால் நான் ஒன்றும் திமுககாரன் ஆகிவிட்டிருக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் சீமான் மற்றும் நாம் தமிழர் குறித்து நேர்மறைப் பதிவுகள் இட்ட காரணத்தால் நான் நாம் தமிழர் கட்சிக்காரன் ஆகிவிடவில்லை.
அடிப்படையில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் ஒருபோதும் வந்தது இல்லை. காரணம், சுமார் 25 ஆண்டுகள் சென்னை பத்திரிகை ஊடக உலகில் முழு நேரம் பணியாற்றிக் கொண்டிருந்ததாலும், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினரின் இன்னொரு பக்கம் நன்கு அறிந்த காரணத்தாலும் எனக்கு அரசியல் கட்சிகள் மீது ஈர்ப்பு ஏற்படவேயில்லை.
சராசரி மக்கள் மட்டுமல்ல, கட்சியின் தொண்டர்கள் - நிர்வாகிகளுக்குக்கூடத் தெரிந்திராத அரசியல் தலைவர்களின், கட்சிகளின் "இன்னொரு உண்மையான பக்கத்தை" நன்கு அறிந்தவன் என்கிற முறையிலும் எனக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும் இணையும் எண்ணம் ஏற்படவேயில்லை, மாறாக வெறுப்பே ஏற்பட்டது.
கடந்த 26 ஆண்டுகளாக நான் சார்ந்திருக்கும் எமது பத்திரிகை ஊடகத்துறையிலும் செய்யப்படும் தவறுகள், பிழைகளை சமரசமின்றி எதிர்த்து சுட்டிக்காட்டி வருகிறேன். இதனால் நான் 22 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள எமது துறை சார்ந்த பத்திரிக்கையாளர் மன்ற அமைப்பின் புதிய நிர்வாகிகளால் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டு பொய் வழக்கையும் சந்தித்து வருகிறேன்.
2009 ம் ஆண்டு ஈ*ழப்போர் இறுதி நிலை எட்டிய காலம். சீமான் அப்போது இயக்கமும் ஆரம்பித்திருக்கவில்லை, கட்சியும் ஆரம்பித்திருக்கவில்லை. அப்போது இந்திய மண்ணில், அவ்வளவு ஏன் உலக அளவில் இலங்கை வடக்கில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்கு*ற்றம் குறித்தும், தமிழர் இனவழி*ப்பு குறித்தும் செய்திகளை உலகிற்கு அதன் உண்மைத் தன்மையோடு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த ஒரே ஊடகம் "குமுதம் டாட் காம்" இணைய ஊடகம் மட்டுமே. எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த ஒரே பத்திரிகை ஊடகவியலாளர் ஐயா பா.ஏகலைவன் மட்டுமே.
அந்தக் காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அத்தனை ஈ*ழ ஆதரவு நிகழ்வுகளின் செய்திக் காணொளிகளையும் குமுதம் டாட் காமுக்கு அளித்து வந்தோம். இதுகுறித்து ஏகலைவன் ஐயா பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்போது TNTV Internatioanal News Network எனும் பெயரில் காட்சி ஊடகங்களுக்கு News Agency - செய்தி முகமைப் பணிகளைச் செய்தி வந்தோம். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் செய்தி மற்றும் காணொலிகளை சேகரித்து வழங்கும் முகமைப் பணி. வட இந்தியாவில் ANI நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம். அதேபோல சிறிய அளவில் நான் தொடங்கி நடத்திய நிறுவனம் TNTV . ஒரு கட்டத்தில் ANI எம்மிடம் செய்தி மற்றும் காணொலிகளைப் பெற்றுக்கொள்ளக் கடிதமே கொடுத்தது.
எமது அந்த செய்திச் சேவையைப் பெற்றிடாத காட்சி ஊடகங்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவின் most wanted எனும் தொலைக்காட்சி சீரியலுக்குத் தேவைப்பட்ட காணொலி கூட மாமல்லபுரத்திலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளோம். லண்டன் BBC ஊடகத்தின் சுனாமி தொடர்பான ஒரு ஆவணப்படத்துக்கு ஆய்வுப் பணி - Research செய்து கொடுத்துள்ளோம். தூர்தர்ஷன் செய்திச் சேவைக்கு 100 க்கணக்கான செய்திக் காணொலிகள் வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இணையதள வசதி (Internet service) Browsing center களில் மட்டுமே இருந்த காலத்தில் TVTV பெயரில் செய்தி இணையதளம் தொடங்கி நடத்தினோம். அநேகமாக தமிழ்நாட்டின் முதல் செய்தி இணையதளமாகக்கூட அது இருந்திருக்கலாம். பத்திரிகை - தொலைக்காட்சி ஊடகங்கள்கூட செய்தி இணையதளம் அப்போது தொடங்கியிருக்கவில்லை.
அதேபோல 2012 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை அங்கு சென்று நேரடியாக நேரலை செய்த ஒரே ஊடகம் புதிய தலைமுறை மட்டுமே, அதைச் செய்தவன் நான் மட்டுமே.
அதன்பிறகு அடுத்தாண்டுதான் தந்தி டிவி சார்பில் சீமான் அங்கு சென்றார்.
அப்படி ஒரு நிகழ்வு அங்கே நடக்கிறது என்பதும் அது ஈ*ழத் தமிழர் வாழ்வில் மிக முக்கியம் என்பதும் தமிழ்நாட்டின் எந்தப் பத்திரிகை ஊடகத்திற்கும் தெரிந்திருக்கவில்லை.
ஆக, தமிழ்நாடு பத்திரிகை ஊடக உலகில் 100 க்கு 99.9 பத்திரிகை ஊடகர்கள் இலங்கை அரசு மற்றும் இந்திய அரசின் பார்வையில் மட்டுமே விடுதலைப் போரில் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வழங்கி வந்த காலத்தில் ஏகலைவன் மட்டுமே உண்மையான செய்திகளை, நேர்காணல்களை வெளியிட்டார்.
ஜெனீவா நேரலையின் மூலம் காட்சி ஊடகத்தின் வாயிலாக கடந்த சுமார் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஈ*ழப் போராட்டம் குறித்த பொய்யான பிம்பங்களை உடைத்தெறியும் அறிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஆக தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களை அந்தக் காலகட்டங்களில் துணிச்சலாக வெளிபடுத்திய பெரும்பணி செய்த பத்திரிகை ஊடகர்களில் எமது முன்னோடி பா.ஏகலைவன் அடுத்து நான்.
இப்படித்தான் செய்தி ஊடகத்துறையில் தமிழர்களின், தமிழ்நாட்டின் நலனுக்காக பா.ஏகலைவன் மற்றும் எமது குரல்கள் விளம்பரமின்றி மிக உரக்க ஒலித்தன தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
சுற்றுச்சூழல் குறித்த எமது கட்டுரைகள் தினமணி, பசுமை விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமாதல், எல் நினோ உள்ளிட்டவைகள் குறித்து அப்போது எந்தப் பத்திரிகை ஊடகம் முக்கியத்துவம் தராத காலத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டேன். அதற்கேற்ப BBC லண்டன் ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட சுற்றுச் சூழலியல் பத்திரிகை ஆவணப்பட பயிற்சி வகுப்பை ஒருங்கிணைக்கும், கலந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
BBC லண்டன் மற்றும் Thomson Foundation நடத்திய இரண்டு மூன்று பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்த பணியை எமது மூத்த செய்தியாளர் ராம் என்கிற ராமசுப்பிரமணியன் சார் அளித்திருந்தார்.
அந்தப் பயிற்சி வகுப்புகளில் பெலிக்ஸ் ஜெரால்டு, லட்சுமி சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ் வாங்கினார்கள்.
ஆக, மண்சார்ந்த, தமிழர் இனம் சார்ந்த உண்மைகளை பத்திரிகை ஊடகத்துறைக்குள் இருந்து கொண்டே இயல்பாக தொடர்ந்து எடுத்துச் சொல்லி வருபவன் நான்.
தமிழர் இறையியல், மெய்யியல் குறித்து சுமார் 30 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருவன். இதைக்காகவே MA தத்துவம் மற்றும் மதம் குறித்து படித்துப் பட்டம் பெற்றேன்.
ஆக, தமிழ், தமிழர் சார்ந்த நலனுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் குரல் எமது அடிப்படை சிந்தனைக்கு ஒத்துப்போன காரணத்தாலேயே நேர்மறையான ஆதரவுப் பதிவுகளை அவர்களுக்காக இடத் தொடங்கினேன்.
அதேவேளை சீமான், ரஜினியின் பாபா முத்திரைகளை "இலுமினாட்டிக் கைக் குறியீடுகள்" என்று அபத்தமாகத் தவறாக மேடைகளில் பேசியபோது அது தவறு என்றும் பாபா முத்திரை என்பது தமிழ் சித்தர்களின் முத்திரை ஓக (யோக) முறை என்றும், தமிழர் கோயில்களின் ஒவ்வொரு சிற்பங்களிலும் சித்தர் முத்திரைகள் உள்ளன என்றும் விளக்கி எழுதினேன்.
அதேபோல, கருணாநிதி தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை அந்தக் குடும்பத்தில் யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத மு.க.முத்து இறந்துபோன நிகழ்வுக்கு மு.க.ஸ்டாலினிடம் சென்று சீமான் துக்கம் விசாரித்த படத்தைப் பார்த்ததும் அதைக் கண்டித்துப் பதிவிட்டேன். மேதகு தலைவரோ, அரசியல் பிரிவு தமிழ்ச்செல்வனோகூட இப்படி எந்த எதிரி வீட்டிற்கும் சென்று அந்தக் குடும்பத்தினரே பெரிதும் எடுத்துக்கொள்ளாத ஒரு நபரின் இறப்புக்குத் துக்கம் விசாரித்ததில்லை என்று சுட்டிக்காட்டிக் கண்டித்தேன்.
இத்தனை ஆண்டுகாலம் சீமான் மேடைதோறும் முழங்கி மேதகு படம், சிந்தனைகளை, கொடியை, நம்மாழ்வாரின் சிந்தனைகளை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சேர்த்தார். அதனையொட்டியே அவர் மீதான தவறான அவதூறுகளையெல்லாம் நாம் தொடர்ந்து எதிர்த்து எழுதினோம்.
எடுத்துக்காட்டாக, அவர் காஞ்சி மடத்திற்குச் சென்றார் என்று ஒரு அவதூறு பரப்பப்பட்டபோது, அது காஞ்சிபுரம் மடம் அல்ல, சென்னையில் உள்ள கிளை மடம் என்றும் எதற்காக அவர் அங்கு சென்றார் என்பதையும் இராம.இரவிக்குமாரிடம் செவ்வி எடுத்துப் போட்டு அந்த அவதூறை உடைத்துக் கொடுத்தோம்.
இப்படி சுமார் 20 - 30 மிக முக்கியமான சீமானை முற்றாக சிதைத்துவிடும் பல அவதூறுகளை எதிர்த்து எழுதிப் பதிவிட்டும், காணொலி வாயிலாகவும் வெளியிட்டு வந்தோம்.
எனவே...சீமானை, நாம் தமிழரைக் கண் மூடித்தனமாக நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.
தமிழுக்கும், தமிழருக்கும் நல்லது செய்தால் ஆதரிப்போம், தீயது செய்தால் அவர் எவராக இருந்தாலும் கடுமையாக எதிர்ப்போம்.
அந்தச் சிவனே நேரடியாக வந்தபோது போய்யா அந்தப்பக்கம் என்று கூறி "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று கூறிய தமிழர் இனத்தில் பிறந்தவன் நான்.
ஜகத் கஸ்பாரிடம் மேதகு சொன்னதுபோலதான்..."நீங்க எங்க தமிழர் இனத்துக்கு எதிரா ஏதாவது செஞ்சு பாருங்க அப்போப் பார்ப்பீங்க என்னோட கோபத்தை" என்பது போலத்தான்.
தனிமனித வாழ்க்கையையும், கோடிகளில் ஊதியத்தையும் இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்குள் நின்று இந்த இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காகத் தனியாகப் போராடிக்கொண்டிருப்பவன் நான். எமது பணிகள் குறித்து இங்கே சொன்னது ஒரு "துளி" மட்டுமே
சீமான் அவர்களையும் நானே கேட்டு நேரடியாகச் சென்று சந்தித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் வடலூர் வள்ளலார் பெருவெளி மீட்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக. அதற்கு சில காலம் முன்னதாகவும், பிறகு கடந்த வாரம் வரையிலும்கூட சீமான் அவர்களோடு பலமுறை அலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அந்த சந்திப்பின்போது அநுராகம் பதிப்பகம் வெளியிட்ட "வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தமிழ்த் தேசியம் கேள்வி பதில் நூலை" திரு சீமானிடம் அளித்தேன்.
தமிழ், தமிழர் இனம் சார்ந்த பணிகளில் எவர் சமரசம் செய்தாலும், பின்வாங்கினாலும் அதனை சுட்டிக்காட்டுவது எமது இனத்தின் கடமை.
அது சீமானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் இதே வரைமுறைதான்.
தமிழ் இனத்திற்கு எதிராக நான் துரோகம் செய்தால் என்னையும் சுட்டு விடுங்கள் என்று சொன்ன ஒரு தலைவர் பிறந்ததும் அறம் காட்டி வாழ்ந்து வழிகாட்டிச் சென்றதும் இதே தமிழினத்தில்தான்.
தமிழரின் தாகம் தமிழின விடுதலை !
இதில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை !!
-கட்டுரையாளர் : நிறுவனர் - ஆசிரியர் - பதிப்பாளர் : தமிழ் ஊடகம் மற்றும் நிறுவனர் : தமிழியல் நடுவம்.
What's Your Reaction?
Like
9
Dislike
1
Love
4
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)