சீமான் இடைத்தேர்தல் போட்டி: வெற்றியா? அரசியல் தற்கொலையா?

இடைத் தேர்தலில் சீமான் போட்டியிடுவது சரியா? தமிழ்த் தேசியம், திராவிட அரசியல், நீதிக்கட்சி வரலாறு மற்றும் அரசியல் பின்னணியை அலசும் வளர்மெய்யறிவான் சிறப்புக் கட்டுரை.

Jun 28, 2026 - 18:58
Updated: 7 days ago
0 406
சீமான் இடைத்தேர்தல் போட்டி: வெற்றியா? அரசியல் தற்கொலையா?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதும் சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு   

-பகுதி 1-

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தமிழர்களின் (ஆட்சி) ஆளுகைக்குள் இல்லாமல் பிறமொழியாளர்களின் குறிப்பாகத் தெலுங்கர்களின் ஆட்சி - ஆளுகைக்குள் ஏன் இருக்கிறது என்பதற்கான காரணம் மிக எளிதான ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டதுதான்.

பிரிட்டிஷ்காரர்கள் 1757 ம் ஆண்டு இங்கே வந்து ஆட்சி அமைக்கத் தொடங்கிய பிறகு பிற்காலத்தில் தங்கள் நிர்வாக வசதிக்காக மதராஸ், கல்கத்தா, வங்காளம் என்று மூன்று மாகாணங்களாக இந்தியாவைப் பிரித்துக் கொண்டார்கள்.

இதில் மதராஸ் என்பது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசாவின் ஒரு பகுதி அடங்கிய தென்னிந்திய மாநிலங்கள் கொண்ட ஒரே மாகாணம்தான்.

இந்த மாகாணத்தின் தலைநகரம் இப்போதைய சென்னை, அப்போதைய மெட்ராஸ்.

இதில் மலையாளிகள், கன்னடர்களை விட அதிக அளவு தெலுங்கர்கள் அரசியல், வணிகம், திரைத்துறை ஆகியவற்றில் தொடக்கம் முதலே ஆர்வம் காட்டினார்கள், ஈடுபட்டார்கள்.

பாண்டிய மன்னர்கள் அழைப்பின்பேரில் ஒரு காலகட்டத்திலும், அங்கே இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு மற்றும் சில மன்னர்களின் கொடுமை தாளாமல், பெண்களைக் காத்துக்கொள்ள ஒரு காலகட்டத்திலும், தமிழ்நாட்டின் வணிகம், திரைத்துறை உள்ளிட்ட பன்முக வேலை மற்றும் வருவாய் தரும் வாய்ப்புகளுக்காக மற்றொரு காலகட்டத்திலும் தமிழ்நாட்டுக்குள் வந்தவர்களே இப்போது நாம் பார்க்கும் கன்னடர்களும், தெலுங்கர்களும். அவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் அல்ல.

இதில் அதிக அளவில் தமிழ்நாட்டுக்குள் வந்து குடியேறியவர்கள் தெலுங்கர்களே.

கடந்த 2011 ம் ஆண்டு இந்திய அரசின் மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 45 லட்சம் தெலுங்கர்கள் உள்ளனர். தமிழர்கள் 6 கோடி மக்கள் உள்ளனர்.

மதராஸ் மாகாணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகள் பேசும் மக்கள் கொண்ட மாகாணமாக இருந்ததால் இந்த வேறுபாடுகள் அப்போது பெரிதாகப் பார்க்கப்படவில்லை.

வந்தாரை வாழ வைக்கும் மண் தமிழர் மண் என்பதால் இயல்பாக இருந்துவிட்டனர் தமிழர்கள்.

யார் ஆண்டால் என்ன நல்லாட்சி கொடுத்தால் போதும் என்கிற பெருந்தன்மை தமிழர்களிடம் இருந்தது. ஆனால் இதனால் தெலுங்கர்கள் ருசி கண்ட பூனையாகிவிட்டனர்.

இதன் காரணமாகவே 1956 ம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட பிறகும் இங்கே தெலுங்கர்களின் ஆளுகை - ஆட்சி அதிகாரம் தொடர்வதோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தைய வரலாற்றைவிட, ஆங்கிலேயர்கள் ஆட்சி ஆண்ட காலத்தில், தற்காலத் தமிழர் அரசியலுக்குள் தெலுங்கர்கள் எப்படிக் காலூன்றினார்கள் என்பதுதான் இன்றைய, நாளைய தமிழர் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய வரலாறு.

அதுகுறித்து அறிய சற்று பின்னோக்கிப் போவோம் !

1912 ம் ஆண்டு "பிராமண உயர் அதிகாரிகள் தங்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள், என்ன செய்வது" என்று சென்னை திருவல்லிக்கேணியில் மருத்துவராக இருந்த நடேசன் (முதலியாரிடம்) ஒரு நான்கு அரசு ஊழியர்கள் கவலை தெரிவிக்க அப்போது நடேசனார் ஆலோசனையில் பேரில் உருவாக்கப்பட்ட அமைப்பு "Madras United League" - "ஒருங்கிணைந்த மெட்ராஸ் கூட்டமைப்பு" என்பதாகும்.

பிறகு நடந்த இந்த அமைப்பின் பொதுக்குழுவில் இந்த அமைப்பின் பெயர் Madras Dravidian Association - மெட்ராஸ் திராவிடிய சங்கம் என்று மாற்றப்பட்டது.

ஆக, ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய எனும் தமிழ்ச் சொல்லுக்கு "ட்ராவிடியன்" எனும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி பிராமணர்கள் / பார்ப்பனர்கள் அல்லாதோரின் நலனுக்காக அமைப்பு ஆரம்பித்தவர் நடேசன் முதலியார் எனும் தமிழர்.

காரணம் அப்போது தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் எல்லோரும் ஒரே மதராஸ் மாகாணத்தின் குடிமக்களே. மேலும், இந்த ஒட்டுமொத்த மாகாணத்துக்கும் தலைநகரம் சென்னை (மெட்ராஸ்) என்றிருந்ததால்.

அதன் காரணமாகவே இன்றுவரை சென்னையில் இருக்கும் நடிகர் சங்கத்துக்கு "தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்" என்று பெயர்.

1956 வரைக்கும் அப்பெயர் இருந்தது சரி. அதன்பிறகும் இப்போதும் எதற்காக அந்தப்பெயர் ?

தமிழ்த் தேசியர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டதன் ஆபத்துதான் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணம்.

தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மூலமாகவே தெலுங்கர்கள் மக்களை மயக்கி ஆட்சி அதிகாரத்தினுள் நுழைகின்றனர். அவர்களின் நுழைவாயிலே திரைப்படத் துறைதான்.

கடந்த 1956 ம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபிறகும், "தென்னிந்திய எனும் நான்கு பெரிய மாநிலங்கள் கொண்ட ஒரே மாகாணச் சிந்தனையில்" தமிழர்கள் இருந்தார்கள்...ஆனால் தெலுங்கர்கள் அப்படி எண்ணவில்லை, தமிழர்களுக்கே தாங்கள்தான் முதலாளிகள் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

(கவனியுங்கள் : நடேசன் பற்றி பெரியார் இராமசாமியின் வகையறாக்கள் வாயே திறக்க மாட்டார்கள். காரணம், நடேசன் ஒரு தமிழர் என்பதால்)

நடேசன் அவர்களின் முன்னெடுப்பு காரணமாக அடுத்து 1916 ம் ஆண்டு The South India Liberal Federation - SILF எனும் அமைப்பு சென்னை விக்டோரியா அரங்கில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் சரியான தமிழ்ப் பெயர் "தென்னிந்திய தாராளமயக் கூட்டமைப்பு" என்பதே.

அதே நாளில் அதே அரங்கில் இரண்டு அமைப்புகள் தொடங்கப்பட்டன. ஒன்று South India People’s Association எனும் "தென்னிந்திய மக்கள் சங்கம்" மற்றும் "The South India Liberal Federation - SILF "தென்னிந்திய தாராளமயக் கூட்டமைப்பு".

இதில் "தென்னிந்திய மக்கள் சங்கத்தின்" நோக்கம் மற்றும் பணி, "பிராமணர்கள் அல்லாதவர்களின் நலனுக்கான பார்வையில் "தமிழ், தெலுங்கு, ஆங்கில  மொழிகளில்" பத்திரிகைகள் வெளியிடுவது. 

"SILF - தென்னிந்திய தாராளமயக் கூட்டமைப்பு" என்பது "பிராமணர்கள் அல்லாத சாதி இந்துக்கள் நலனுக்காகப் பாடுபடுவது", அரசியல் இயக்கமாக செயல்படுவது.

இந்த SILF எனும் தென்னிந்திய தாராளமயக் கூட்டமைப்புதான் "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" என்று அழைக்கப்படத் தொடங்கியது.

இவர்கள் வெளியிட்ட பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் "JUSTICE" - தமிழில் "நீதி" என்றும் பெயர்.

இதனால் SILF அமைப்பு "ஜஸ்டிஸ் பார்ட்டி" - "நீதிக்கட்சி" என்றே அழைக்கப்பட்டது.

இந்த நீதிக்கட்சிக்குத்தான் 1939 ம் ஆண்டில் பெரியார் இராமசாமி தலைவராக்கப்படுகிறார்.

இந்த நீதிக்கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் "பிராமணர்கள் அல்லாத சாதி இந்துக்கள் நலனுக்காகப் பாடுபடுவது" என்பதுதான். பிறகு பெரியார் இராமசாமி அந்தக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து "திராவிடர் கழகம்" என்று பெயர் மாற்றி அதில் கடவுள் மறுப்பு, நாத்திகம் போன்ற கொள்கைகளை நுழைத்து அந்த அமைப்பினையே தெலுங்கர்கள் முகமூடியாக மாற்றினார். தமிழ், தமிழர்களை அழிக்கும் செயலை முதன்மைப்படுத்தினார்.

தமிழர்களின் மொழி, தொன்மம், வரலாறு, பண்பாடு எல்லாவற்றையும் "திராவிட முகமூடிக்குள்" மறைத்துத் தமிழர்களை அவர்களின் சுயத்திலிருந்து வெளியேற்றி அவர்களை மரத்துப் போகச் செய்ய இறுதிவரை 'உழைத்தார்' பெரியார் இராமசாமி. பெரியார் இராமசாமிக்கும் இப்படிப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தைக் கொடுத்தவர்கள் தெலுங்கர் நிழல் அமைப்பினரே.

தமிழ்த் தேசியத்தின் கடமை இந்த வஞ்சக சூழ்ச்சிக்குள் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டுத் தமிழர்கள் எனும் சுயத்தில் நிற்க வைக்க வேண்டியதுதான்.

பெரியார் இராமசாமிக்குப் பிறகு இந்தப் பணிகளைத் "தெலுங்கர் நிழல் அமைப்புகள்" திக, திமுகவை வைத்து செய்து கொண்டிருந்த.

இந்த நுண்ணரசியலை மக்களிடம் எடுத்துச்சொல்லி, திராவிட முகமூடிகளை கிழித்து எறிந்து, பெரியார் இராமசாமி எனும் பொய்யான பூதத்தை மக்கள் மத்தியில் போட்டுடைத்த பெரும்பணியை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்து முடித்தார்.

தமிழ்த் தேசியர்களின் உண்மை சார்ந்த பரப்புரை காரணமாக திக, திமுக மீது தமிழர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்று அறிந்த பிறகு இப்போது நடிகர் விஜய் அவர்கள் மூலமாக புதிய ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த அந்த நிழல் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுள்ளன.

ஆக, சுமார் 54 ஆண்டுகால "திராவிட பூதத்தை" மக்கள் மத்தியில் "அடையாளம் காட்டியவுடன்" அந்தப் பெயரில் இல்லாமல் அந்தப் பூதம் இப்போது புதிய வடிவெடுத்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த பூதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி வெளிப்படுத்திய நிலையில் அத்துடன் தமிழ்த் தேசியப் பணிகள் நிறைவடைந்து விட்டதா என்றால் நிச்சயம் இல்லை. இனிமேல்தான் முழு வீச்சில் பணி செய்தல் தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டால் "தமிழர் இன விடுதலை" முழுவதும் சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை.

பெ.மணியரசன் ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவதுதான். "234 சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்துப் போட்டு ஒரு தீர்மானம் போட்டாலும், அதில் இந்திய அரசின் "மேனேஜர்" ஆளுநர் கையெழுத்துப் போட்டால்தான் அது சட்டமாகும். அவர் ஒப்புதல் கொடுக்கவில்லையெனில் அது வெறும் காகிதம்தான்.

கடந்த 1967ம் ஆண்டிலிருந்து மாறி மாறி ஆட்சி புரிந்த "திராவிட முகமூடி" ஆட்சிகளால்கூட தமிழ்நாட்டின் "மாநில சுயாட்சியை" மீட்டெடுக்க முடியவில்லை.

ஆண்டுக்கணக்கில் மேடைகளில், பத்திரிகை -ஊடகங்களில், காட்சி ஊடகங்களில் "மாநில சுயாட்சி" குறித்து வீர வசனங்கள் பேசி அதன் மூலம் "வளர்ச்சி" பெற்றவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்தானே தவிர தமிழ்நாடு மாநிலம் அல்ல.

ஆக, இந்த அரசியல் அமைப்பில் முதலமைச்சர் ஆவது, சட்டமன்ற உறுப்பினர் ஆவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆவது மட்டுமே தமிழ்த் தேசியத்தின் இலக்கு என்றால் அதில் "தமிழர் இனவிடுதலைக்கான" எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை.

ஆனாலும், அந்த ஆட்சி அதிகாரத்திலும் தமிழர்கள் இடம்பெறவேண்டும் என்பது ஒரு இலக்கே தவிர அது மட்டுமே இலக்கு அல்ல.

இப்படிப்பட்ட நிலையில், எந்த திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளின்போது நாம் தமிழரும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் கைது செய்யப்பட்டாரோ, 250க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டார்களோ அவர்களின் பொது வேட்பாளராக அம்பாசமுத்திரமோ அல்லது வேறு ஒரு தொகுதியிலோ சீமான் போட்டியிடுவார் என்றால் அதைவிட ஒரு அவலம் தமிழ்த் தேசியத்துக்கு இருக்க முடியுமா ?

காரைக்குடி வாக்காளர்கள் நிராகரித்த நிலையில் வேறு ஒரு தொகுதி இடைத்தேர்தலில் சென்று சீமான் போட்டியிடுவது வாக்காளர்களை அவமதிப்பது ஆகாதா?

அப்படி எந்தக் கட்சி ஆதரவும் இல்லாமல், நாம் தமிழர் சார்பில் சீமான் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது ? வெற்றி பெற்றால் பரவாயில்லை, தோற்றுப்போனால் ??? நாம் தமிழரின் எதிர்காலம் என்ன ஆகும் ?

இடைத்தேர்தலில் போட்டியிட்டு சீமான் வெற்றி பெறுவார் என்று அவரைத் தேர்தலில் நிறுத்தத் துடிக்கும் ஒவ்வொருவரும் இதை உறுதி செய்து கெயெழுத்து இட்டுத் தருவார்களா ?!

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், அம்பா சமுத்திரத்தில் வெற்றி பெற்ற

அதிமுக இசக்கி சுப்பையா பெற்ற வாக்குகள் - 65,589

அவருக்கு அடுத்து...

காங்கிரஸ் வி.பி.துரை பெற்ற வாக்குகள் - 55,344

வெ எஸ்.ராஜகோபால் பெற்ற வாக்குகள் - 53,611

நாம் தமிழர் கட்சி டாக்டர் சிவசங்கரன் பெற்ற வாக்குகள் - 14,906

பகுஜன் சமாஜ் இசக்கி கண்ணன் பெற்ற வாக்குகள் - 685

இதில் சீமான் எந்த வாக்குகளைப் பெறுவார் ?!

இதற்குள் அந்த அளவுக்கு விஜய் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களா ? அடுத்து உடனே சீமானை வெற்றி பெற வைக்க அவர்கள் காத்திருக்கிறார்களா என்ன ?

திரைக் கவர்ச்சியை மையமாக வைத்தே தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பது தெரிந்தும் அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் இருக்கும் பிறமொழியாளர்களின் நுண்ணரசியலை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்வதை விடுத்து அந்தக் கவர்ச்சி அரசிலுடன் மோதி மோதித் தோற்றுகொண்டே இருப்பதா இனவிடுதலைப் போராட்டம் ?!

ஆளும்கட்சி விஜயும், எதிர்க்கட்சி உதயநிதியும் இணைந்து "மேக்கேதாட்டு அணை கட்டலாமா கூடாதா என்று ஆராய ஒரு குழு" அமைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து நாடு முழுதும் பெரும் உரிமைப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் நாம் தமிழர். ஆனால், வயதான காலத்தில் அதற்காக பெ.மணியரசன் சாலைக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார். அதில் நாம் தமிழரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சீமான் சென்னையில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து நாம் தமிழர் சமூக ஊடகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்.

சீமான் மட்டுமாவது சட்டமன்றத்தினுள் போனால் போதும் என்று மாரியாத்தாவிடம் வேண்டிக் கொள்ளாத குறையாக இருக்கிறார்கள் அவரது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

சீமான் மட்டும் சட்டப்பேரவைக்குள் சென்றாலும் அவைத் தலைவர் பேச அனுமதிக்கும்போது மட்டுமே பேச முடியும். அதிகம் பேசினால் அவைக் காவலர்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்.

மேதகு தலைவர் விரும்பியிருந்தால் இலங்கை வடக்கு - கிழக்கில் அவர் நிரந்தர முதலமைச்சராக இருந்திருக்க முடியும்.

அதற்காகவா அவர் தியாகம் செய்தார் ? அதற்காகவா 60 ஆயிரம் மாவீரர்கள் உயிர் துறந்தார்கள் ? அதற்காகவா உலகெங்கிலும் வாழும் சுமார் 10 லட்சம் *த் தமிழர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள் ?

இனவிடுதலைக்கான போராட்டங்களின் தலைவராக, பதவி, பணம், புகழுக்கு ஆசைப்படாத தலைவராக சீமான் இருக்கும்வரைதான் இன விடுதலைக்கான பாதை தெளிவாகும்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இடைத்தேர்தலில் நாம் தமிழரின் திறன் வாய்ந்த தம்பி தங்கைகள் ஆகட்டும். அவர்களை வெற்றிபெற வைக்க சீமான் உழைக்கட்டும்.

பொதுத் தேர்தலில் வேண்டுமானால் சீமான் போட்டியிடட்டும்.

பொதுத் தேர்தலில் நிராகரித்வாக்காளர்களின் முன் சென்று நின்று  இடைத்தேர்தலில் என்னை வெற்றி பெற வையுங்கள் என்று எப்படிக் கேட்பீர்கள் ?!

இடைத்தேர்தல் என்பதே ஆளும்கட்சியின் தேர்தலாகவே இருக்கும். அதிலும் சீமான் நின்று தோற்றுப்போனால் அது அரசியல் தற்கொ*லைக்கு சமம்.

ஜோசப் விஜயை எதிர்ப்பதால் மட்டும் நாம் தமிழர் வளர்ச்சி பெறுமா ?

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

What's Your Reaction?

Like Like 9
Dislike Dislike 0
Love Love 3
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User