திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார் கைது ஏன்? தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்!
திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து முழு விவரம்.
சிலகாலம் பாஜகவில் இருந்துவிட்டுப் பிறகு திமுகவுத் தாவியிருந்தவர் பி.டி.அரசகுமார்.
இவர் "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்" என்ற பெயரில் ஒரு பதிவு பெறாத சங்கத்தை நடத்தி வந்துள்ளார். ஆளும் திமுகவில் இருந்ததாலும், இப்படி ஒரு சங்கம் நடத்தி வந்ததாலும், தனியார் பள்ளிகளுக்கு திமுக அரசில் உரிமம் பெறுதல், தரம் உயர்த்துதல், பள்ளிக்கான இடம் / மனை உரிமம் பெற்றுத்தருவதாகவும் கூறி தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பள்ளி தொடங்க விரும்புபவர்களிடம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வாங்கிவிட்டு அவர்களுக்கு எந்த வேலையும் செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும், வேலை நடக்காத நிலையில் திரும்பக் கேட்ட பணத்தையும் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பி.டி.அரசகுமாரைக் கைது செய்துள்ளனர். அரசகுமாருடன் அவரது பதிவு செய்யப்படாத சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தேன்மொழி மேற்பார்வையில், நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-III) உதவி ஆணையாளர். V.E.செந்தில் தலைமையில், EDF-III பிரிவு காவல் ஆய்வாளர் கொண்ட தனிப்படையினரால் விசாரிக்கப்பட்டு இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசரணைக்குப் பிறகு அரசகுமார் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் சேவை மனப்பான்மையுடன் பள்ளிக்கூடங்கள் திறக்க முயற்சி செய்தபோது அதற்கு கடந்த திமுக ஆட்சியில் கையூட்டு கேட்கப்பட்டதாக சோஹோ நிறுவன அதிபர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட சிலர் வெளிப்படையாகவே கவலைப்பட்டு பொதுத் தளங்களில் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)