மேக்கேதாட்டு அணை: ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கிளர்ந்தெழ பெ.மணியரசன் அறைகூவல் | காவிரி உரிமை மீட்புக் குழு போராட்டம்
கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சட்டமன்றத் தீர்மான நகலை எரித்து போராட்டம் நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் கிளர்ந்தெழ வேண்டும் என்று பெ.மணியரசன் அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டு அணை;
சட்டமன்றத் தீர்மான நகல் எரித்து போராட்டம் !
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் உற்பத்தியானாலும்கூட அது பாய்ந்து ஓடிக் கடலில் கலக்கும் கடைமடை நிலப்பரப்புக்கும் சொந்தம் என்பது விதி.
அந்த வகையில் தமிழ்நாட்டுக்குள் சுமார் 410 கிலோ மீட்டர் ஓடி, மயிலாடுதுறை பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி. இத்தகைய நிலையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டி நீரைத் தேக்கி வைக்க விரும்பினால் தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறவேண்டும்.
ஆனால் அவ்வாறு அனுமதி பெறாமல் ஏற்கனவே கூடுதலாக இரண்டு அணைகள் உட்பட நான்கு அணைகள் காட்டிவிட்டது கர்நாடகா. ஐந்தாவது அணையாக மேக்கேத்தாட்டுவில் அணை கட்ட முயலுகிறது.
இதனால், இந்த ஐந்து அணைகளில் தேக்கப்படும் நீர் போக எஞ்சியிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்கும் நிலை. இப்படிப்பட்ட நிலையில், இந்த அணை கூடவே கூடாது என்று தீர்மானம் போடாமல், அணை கட்டலாமா கூடாதா என்று ஆராய ஒரு குழு நியமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டது விஜய் அரசு.
இந்தத் தீர்மானம் தமிழ்நாடு அரசே தனது தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொண்ட தீர்மானம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்மானத்தினை இரத்து செய்யக்கோரி பெ.மணியரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தித் தீர்மான நகலை எரித்துப் போராடினர்.
இதுகுறித்து பெ.மணியரசன் வெளியிட்டிருந்த அறிக்கையை அப்படியே இங்கே பதிவிடுகிறோம்.
"கர்நாடக அரசு, தமிழ்நாட்டு எல்லைக்கு அருகே - தனது எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் கட்டும் முயற்சியில் இருப்பதை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முற்றாக நூறு விழுக்காடு (100%) எதிர்த்து வந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்மொழிய - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரிக்க - மற்ற கட்சியினரும் ஆதரிக்க ஒருமனதாக மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு 50% ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
கர்நாடக அரசு, மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவேரி) பகுதியில் அணை கட்ட அனுமதிக்கலாமா - அனுமதிக்கக் கூடாதா என்பதை முடிவு செய்து தீர்ப்பு வழங்கப் புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை (டிரிப்யூனல்) இந்திய அரசு அமைக்க வேண்டும் என்பதே தீர்மானத்தின் சாரம்.
இத்தீர்மானத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. அரசின் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தங்களின் தி.மு.க. ஆட்சி கடந்த 04.03.2026 அன்றே மேற்படித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி இந்திய அரசுக்கு முறைப்படி வேண்டுகோள் கடிதம் அனுப்பிவிட்டது என்றார்.
அதற்கு விடையளித்துப் பேசிய முதல்வர் விசய், தாம் கடந்த 26.05.2026 அன்று புது தில்லியில் இருந்தபோதே மேற்படித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி இந்திய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, மேக்கேதாட்டு அணைக்கான தீர்ப்பாயம் அமைக்கக் கோருவதை - விடுபட்டுப்போன செய்தியாகத் தீர்மானத்தின் கடைசியில் கொண்டுவந்து சேர்த்த முறையைக் கண்டித்தார். ஆனால் மேற்படித் தீர்ப்பாயம் கூடாது, நமக்கு அது பாதகமானது என்று நேரடியாகப் பேசவில்லை.
மற்ற கட்சிகள் பேரவையில் தீர்ப்பாயம் அமைக்கும் அத்திருத்தத்தை எதிர்க்கவில்லை.
ஆனால் அன்று (19.06.2026) மாலையே காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் கலந்துபேசி - நான், மேக்கேதாட்டு அணை கட்ட தீர்ப்பாயம் அமைப்பது குறித்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தமிழினத் துரோகம் என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.
மறுநாள் 20.06.2026 அன்று தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தமிழினத் துரோகத் தீர்மானத்தை - காவிரியைக் கன்னடர்களுக்குத் தாரைவார்க்கும் உட்பொருள் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தை எதிர்க்கும் பெருந்திரள் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தோம். அப்போராட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மேக்கேதாட்டு அணைக்கான மறைமுக ஆதரவுத் தீர்மானத்தை எரிப்பது என்று முடிவு செய்தோம்.
அதன்படி 27.06.2026 அன்று காலை 10:30 மணி அளவில் தஞ்சாவூர் - பழைய பேருந்து நிலையம் எதிரே பெருங்கூட்டம் கூடியது.
காவிரி உரிமை மீட்புக் குழுவில் தொடர்ந்து செயல்படும் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழர் தேசியக் களம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கம் முதலிய அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டு இருந்தனர்.
இந்த நகல் எரிப்புப் போராட்டத்தின் சிறப்புப் பங்கெடுப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களும் - பொறுப்பாளர்களும் - உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட இன உணர்வாளர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்து பங்கேற்றார்கள். எடுத்துக்காட்டாக ஒருவரைச் சொல்கிறேன், பெங்களூரில் இருந்து பணி ஓய்வுபெற்ற முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தமிழ் இன உரிமை அக்கறையுடன் முதல் நாள் இரவு வந்து விடுதியில் வாடகை அறை எடுத்துத் தங்கி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்.
சிங்கப்பூரிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ஒருவர் மனைவி, மகனுடன் வந்து தஞ்சையில் அறை எடுத்துத் தங்கி போராட்டத்தில் பங்கேற்றார். வேலூர், திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் தனித்தனி ஆர்வலர்கள் வந்து கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைப்புகள் வழியாகவும், தனித்தனி ஆர்வலர்களாகவும் திரளானோர் கலந்து கொண்டனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் (பெ. மணியரசன்) அப்போராட்டத்திற்குத் தலைமையேற்றேன்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி வெங்கட்ராமன், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் (தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மண்டலத் தலைவர் திரு. ப. செகதீசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சுந்தர விமலநாதன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னதுரை, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கல்வியாளர் மு. இ. ஹுமாயூன் கபீர், வழக்கறிஞர் குடந்தை மணி. செந்தில், மாநிலப் பொருளாளர் மருத்துவர் மன்னை இலரா. பாரதிச்செல்வன், ந. கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர்கள் ஐயா சாமி. கரிகாலன், தமிழர் தேசியக் களத்தின் அமைப்பாளர் திரு. ச. கலைச்செல்வன், திரு. மன்னை இரா. இராசசேகரன், தோழர்கள் துரை இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், பூதலூர் சுந்தரவடிவேல், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழுத் தோழர்கள் பூதலூர் தென்னவன், குடந்தை க. விடுதலைச்சுடர், சாமிமலை தீந்தமிழன், தஞ்சை பழ. இராசேந்திரன், செம்மலர்ச்செல்வி, திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பெண்ணாடம் மணிமாறன், மதுரை கதிர்நிலவன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, புதுச்சேரி வேல்சாமி, பாவலர் முழுநிலவன் மற்றும் சிதம்பரம் வேந்தன் சுரேசு, கோவை பாலமுருகன், உடுமலை இராஜேஷ், வெண்ணந்தூர் ஐயா தங்கவேலு, குமாரபாளையம் ஆறுமுகம், புளியங்குடி பேச்சி துரைச்சி எனப் பலரும் பங்கேற்றனர். மிக எழுச்சியாக நகல் எரிப்பு நடந்தது. ஆனால் காத்திருந்த காவல்துறையினர் பாய்ந்துவந்து தண்ணீர் ஊற்றி அணைத்து மீண்டும் எரிக்க விடாமல் தடுத்தனர்.
தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளும் செய்த தமிழினத் துரோகத்தைக் கண்டித்து நம்மால் இயன்றளவு கூட்டு முயற்சியாக மக்கள் திரள் போராட்டம் நடத்தியுள்ளோம்.
கர்நாடகம் தனது கடைசி எல்லையில் மேக்கேதாட்டில் 67.16 ஆ.மி.க. (T.M.C.) கொள்ளளவில் அணை கட்டுவதன் நோக்கம், மிகை வெள்ளத்தால் வெளியேற்றப்படும் காவிரி நீரும் மேட்டூர் அணைக்குப் போய்விடக் கூடாது என்ற தமிழினப் பகை வெறிதான்.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட காவிரி நீர்த் தீர்ப்பாயம் நடுநிலை தவறி 192 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டால் போதும் என்று தீர்ப்பளித்தது.
அதற்கு முன் 1934 முதல் 1984 வரை சராசரியாக ஓராண்டுக்கு 362 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துள்ளது என்று தமிழ்நாட்டுப் பாசனப் பொறியாளர்கள் அமைப்பு கூறியது. (ஆங்கில இதழ் Irrigation Era - மேட்டூர் அணையின் ஐம்பதாம் ஆண்டு - பொன்விழா மலர்)
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு தான் இந்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக - நடுநிலை தவறிய எஸ்.கே. அல்தரை அமர்த்தியது. இந்த ஆணையம் மிகை வெள்ள வெளியேற்ற காலம் தவிர - சாதாரண காலத்தில் - உச்ச நீதிமன்றம் வகுத்த அளவுபடி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் பெற்றுத் தந்ததில்லை.
இந்தப் பாடம் தமிழர்களுக்கு இருக்கிறது. "இப்போது மேக்கேதாட்டு அணை கட்டலாமா? வேண்டாமா? இரண்டில் ஒன்றைச் சொல்" என்று கேட்டால் இதற்காக இந்திய அரசு அமைக்கும் தீர்ப்பாயம், "அணை கட்டலாம்" என்றே தீர்ப்பு வழங்கும்.
புதுதில்லி ஏற்பாடு செய்த சதியில் தெரிந்தே இணைந்துள்ளன - தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும் - எதிர்க்கட்சிகளும்! பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேக்கேதாட்டு தீர்ப்பாயத் தீர்மானத்தை எதிர்த்து வருகின்றன.
எனவே தமிழர்களின் தற்காப்பு எழுச்சிதான் - காவிரி உரிமை மீட்புக் கிளர்ச்சிகள்தாம் - மேக்கேதாட்டு அணை கட்டாமல் தடுக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படியாவது மாதாமாதம் காவிரி நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வழி பிறக்கும்!
"ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கிளர்ந்தெழ ஆயத்தம் ஆகுங்கள். அடுத்தடுத்த களங்களில் சந்திப்போம்!"
தஞ்சாவூர்
28.06.2026
இவ்வாறு பெ.மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)