தோற்பது தமிழ்த் தேசியமா ? இல்லை நாம் தமிழர் கட்சியா ?
தேர்தல் தோல்வியைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம், நாம் தமிழர் கட்சியின் பயணம் மற்றும் தமிழர் அடையாளம் குறித்து பகுப்பாய்வு
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களின் இயற்கையான தேசியம். அதில் செயற்கை கிடையாது.
ஆனால் திராவிட முகமூடி தேசியம், இந்திய தேசியம் என்பவை செயற்கையானவை. செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவை.
அமெரிக்கா என்பது இயற்கையான, பூர்வகுடி மக்களால் உருவான தேசம் அல்ல. அந்த நாட்டின் பூர்வகுடி மக்களான செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அவர்களைச் சுருக்கிவிட்டு ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு மேலாதிக்க மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு செயற்கையான தேசம்.
அமெரிக்கா ஒரு தனி மொழிவழி இனத்தால் கட்டமைக்கப்பட்ட நாடு கிடையாது. அது பலசரக்குக் கடை போல பல மொழி மக்களால் கட்டமைக்கப்பட்ட நாடு.
ஆனால் தமிழ்நாடு அப்படிப்பட்டது அல்ல. "எமது மொழி தமிழ், எமது இனம் தமிழர், எமது நாடு தமிழ் நாடு" என்று கூறுதற்கு உரிய நாடு.
கடந்த 1956 ம் ஆண்டுக்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்த "மாகாணங்களில்" மதராஸ் மாகாணமும் ஒன்று.
அது, தமிழ்நாடு - ஆந்திர - கர்நாடக - கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மாகாணம். இதன் தலைநகரம் இப்போதய சென்னை, அப்போதைய மெட்ராஸ்.
இந்த மாகாணத்தை ஒரே "திராவிட நாடு" என்று பிரித்துத் தருமாறு பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா ஆகியோர் தனித்தனியே கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் 1956 ம் ஆண்டு, மொழி வழி மாநிலங்களாகவே இந்தியா பிரிக்கப்பட்டது.
மெட்ராஸ் மாகாணத்திற்குத் தலைநகராக மெட்ராஸ் இருந்த காரணத்தாலேயே என்னவோ, மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டை "திராவிட நாடு" போலவே கட்டமைக்க ஆரம்பித்தனர்.
ஒரு யானைக்கு அது குட்டியாக இருக்கும்போது அதன் கால்களில் சங்கலி போட்டுக் கட்டி விடுவார்கள். அந்தச் சிறு வயதில் அந்தச் சங்கிலியை அதனால் அறுக்க முடியாது. அதுபோலவே பெரிய யானையாக வளர்ந்த பிறகும்கூட அந்தச் சங்கிலியைத் தன்னால் அறுக்க முடியாது என்றே அந்த யானை எண்ணும்.
அதுபோல ஒன்றாக இருந்த மதராஸ் மாகாணத்தின் அரசியல், ஆட்சி அதிகாரத் தலைமைப் பொறுப்புகளில் கூட்டம் கூட்டமாக வந்தமர்ந்திருந்த தெலுங்கர்கள், மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டை மட்டும் "திராவிட நாடாகவே" அதாவது தென்னிந்தியாவாகவே பாவிக்கத் தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டின் 85 விழுக்காடு தமிழர்களும் தங்களைத் "திராவிட அதாவது தென்னிந்தியவராகவே" எண்ணிக்கொண்டு இப்போதும் வாழ்கிறார்கள்.
கேரள மாநிலத்தவர்கள் தங்களை மலையாளிகளாக உணர்ந்து வாழ்கிறார்கள், ஆந்திர மாநிலத்தவர் தங்களைத் தெலுங்கர்களாக உணர்ந்து வாழ்கிறார்கள், கர்நாடகாவில் தங்களைக் கன்னடர்களாக உணர்ந்து வாழ்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் தங்களைத் "திராவிட அதாவது தென்னிந்தியர்களாகவே" எண்ணி வாழ்கிறார்கள்.
எனவே, ஆட்சி அதிகாரத்தில் "திராவிட எனும் முகமூடியில்" தெலுங்கர்கள் இருந்தாலும், கன்னடர்கள் இருந்தாலும் வேறு எந்த மொழியினர் இருந்தாலும் கவலை கொள்ளாதவர்களாகத் தமிழர்கள் உள்ளனர். காரணம் அந்த ஆட்சியாளர்களும் "திராவிடர்கள்தானே" என்ற எண்ணமே.
சிறு வயதில் பூட்டிய சங்கிலி போல உளவியல் ரீதியாகப் பூட்டப்பட்ட இந்தச் சங்கலியை உடைக்க விரும்புவோரையே "பிரிவினைவாதி" என்று கருதும் அளவுக்கு இங்கே உளவியல் சூழ்ச்சி சுமார் 100 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக "நாம் தமிழர்" எனும் தமிழர் உணர்வை மீட்டெடுக்கும் அரசியற் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் ஒருவர் "நாம் மலையாளி" என்று சொன்னால் அது பிரிவினை இல்லை,பெருமை. ஆந்திராவில் நாம் தெலுங்கர் என்று சொன்னால் பிரச்சனை இல்லை, கர்நாடகாவில் நாம் கன்னடர் என்று சொன்னால் எந்தப் பிரச்சனையும் இல்லை, அவை வரவேற்கப்படுகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் "நாம் தமிழர்" என்றால் பிரிவினைவாதி என்று பிரச்சனை கிளப்பப்படுகிறது.
இது திமுக ஆட்சியில் இருக்கும்போதும் அதன் பின்னணியில் திக இருக்கும்போது மட்டும்தான் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறதா என்றால், இல்லை...இந்திய அரசாலும் அப்படியே பார்க்கப்படுகிறது.
இந்திய அரசை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் திக, திமுகவைவிட தமிழ்த் தேசிய, தமிழர் உணர்வை மிகக் கடுமையாகவே பார்க்கின்றன.
மதராஸ் மாகாணத்தில் அங்கங்களாக இருந்த கேரளாவையோ, கர்நாடகாவையோ, ஆந்திராவையோகூட இப்படிப் பார்ப்பதில்லை இந்திய அரசுகள்.
காரணம் தமிழ்நாட்டில் மட்டுமே "ஒரு இனம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே மண்ணில் நிலைத்து வாழ்ந்த தொன்ம அடையாளங்கள், எச்சங்கள்" இன்றும் இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் வேறு எங்கும் இத்தகைய தொன்மைச் சான்றுகளும், ஒரே இன மக்களும் ஒரே இடத்தில் வாழ்ந்ததற்கான தடயங்கள் இல்லை.
இப்படிப்பட்ட மிக முக்கியமான நிலையில்தான் நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலைக் கைகளில் எடுத்து நடத்தி வருகிறது.
யானைச் சங்கிலி உளவியல் உத்தியில் தமிழர்களுக்கு "திராவிட முகமூடிகளை" மாட்டிவிட்டு அதன் பின்னணியில் மிக நுட்பமாகச் சாதிகள் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி அதனைத் தடிமனாக்கி வைத்திருக்கிறார்கள்.
நாம் இத்தகைய "உளவியல் சூழ்ச்சிக்கு" ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாதவகையில், அதனை உணராத வகையில் "பார்ப்பனப் பூச்சாண்டி" காட்டப்பட்டு மடைமாற்றப் பட்டிருந்தோம்.
இத்தகைய நிலையில் தமிழ்நாடு மக்கள் திமுகவை தூக்கி எறிந்திருக்கிறார்கள். திமுக - அதிமுக எனும் இருமுனை அரசியலை வேறும் வேரடி மண்ணுமாகப் பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்.
இதனால் பார்ப்பனப் பூச்சாண்டி முகமூடியும், திராவிட முகமூடியும் முற்றும் முழுதுமாக கிழிந்து போய்விட்டன.
கன்னடர்களான களப்பிரர் காலம் தொடங்கி சுமார் 1000 ஆண்டுகாலப் பிறமொழியின ஆதிக்க வேரைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டி அதனைப் பிடிங்கியெறியவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை, ஆக்கத்தைக் கொடுத்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது நாம் தமிழர்.
இது கனவில்கூட தமிழர்கள் கண்டிராத வெற்றி.
இதைவிட நாம் தமிழர் கட்சிக்கு வேறு என்ன வெற்றி வேண்டும்...இனி இதைவிட வேறு என்ன ஒரு வாய்ப்பு நாம் தமிழருக்குக் கிடைக்க முடியும் ?
தமிழர் கலை, பண்பாடு, இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றைத் தமிழ்நாடெங்கிலும் தமிழர் வாழும் ஒவ்வொரு மாநிலங்கள்,நாடுகளிலும் முன்னெடுக்க வேண்டும்.
சேற்றில் விழுந்து அடையாளம் மறைந்து போன குழந்தையை நன்னீர் ஊற்றிக் கழுவுவது போல தமிழர்களின் மேலிருந்த திராவிட, பார்ப்பனிய, இந்திய தேசிய அழுக்குகளை அகற்றி சுத்த சுயம்புத் தமிழர்களை அவர்களுக்கே அடையாளம் காட்ட வேண்டும். அதற்கான மிகச் சரியான காலம் இது.
மலிவான அரசியலுக்கு மட்டும் முகம் கொடுத்துக் கொண்டிராமல் "தலைவரின்" பன்முகத் தன்மை கொண்ட தமிழர் பண்பாடு, அறத்துடன் கூடிய தமிழ்த் தேசியக் கனவுகளை நனவாக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
அப்போது இந்த அற்பத் தேர்தல் தோல்விகள் ஒரு பெரும் பொருட்டாகத் தெரியாது.
மக்கள் பிரச்சனைகளுக்கு ஒருபுறம் போராட்டங்கள், மறுபுறம் தேர்தல் பணிகள் ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை கலை, இலக்கியம், பண்பாடு, சுற்றுச்சூழல், இலக்கிய, ஆன்மிக, மெய்யியல் கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாதம் முழுதும் நாம் தமிழர் திருவிழாக்கள் நடைபெறவேண்டும்.
நாம் தமிழருக்கென்ற அதிகார பூர்வ பத்திரிகை, ஊடகங்களை இன்னும் ஆழமாக மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும். அவையே நாம் தமிழரின் முகங்களாக இருக்க வேண்டும்.
அதுதான் மக்களோடு மக்களாக நாம் தமிழர் எப்போதும் நிற்பதற்கான சூழலை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து தேர்தல் வெற்றி இயற்கையாக வந்து சேரும்
-கட்டுரையாளர் : ஆசிரியர் - தமிழ் ஊடகம், நிறுவனர் - தமிழியல் நடுவம்.
What's Your Reaction?
Like
5
Dislike
0
Love
3
Funny
0
Wow
0
Sad
0
Angry
1
Comments (0)