சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலும் மின்தடை | "வந்துருச்சு போயிருச்சு" நிலை | மு.க.ஸ்டாலினும் உள்ளே இருந்தார்.
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் ஏசி, போர்டிங், உணவகங்கள் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் கடும் அவதி அடைந்த நிலையில், மு.க.ஸ்டாலினும் அப்போது வானூர்தி நிலையத்தில் இருந்தார்.
--ஏர்போர்ட் பாலு, சிறப்புச் செய்தியாளர்
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை லண்டன் பயணத்திற்காக சென்னை வானூர்தி நிலையம் வந்திருந்த நிலையில், அதே நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திடீர் மின்தடையால் வானூர்தி நிலையத்தின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. குளிரூட்டி இயந்திரங்கள், மின்சார இயந்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் செயலிழந்ததால், பயணிகள் நீண்ட நேரம் சிரமத்தை எதிர்கொண்டனர்.
மின்தடை காரணமாக போர்டிங் கார்டு வழங்குதல், டிக்கெட் சரிபார்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
மேலும், வானூர்தி நிலைய உணவகங்களிலும் மின்தடையின் தாக்கம் காணப்பட்டது. காபி, டீ உள்ளிட்ட சூடான பானங்களையும், வெப்பமாக வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் தயாரித்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கழிவறைகளுக்குத் தேவையான தண்ணீரை ஏற்ற முடியாததால், அங்கும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பலருக்கு குடிநீர் வசதியும் போதுமான அளவில் கிடைக்காததால் அவதி அதிகரித்தது.
இதற்கிடையில், வானூர்தி நிலையத்தின் ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டபோது, ஏரோஹப் கிழக்கு பகுதியில் கரும்புகை வெளியேறியது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஜெனெரேட்டர்களைத் திடீர் என இயக்கியதால் இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து வானூர்தி நிலைய அதிகாரிகள் விளக்கமளிக்கையில், தமிழக அரசின் சார்பில் சென்னை வானூர்தி நிலையத்திற்கு 24 மணி நேரமும் தனி உயர் மின்னழுத்த (High Voltage) மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், முன் அறிவிப்பின்றி தமிழக மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்து, புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியை மேற்கொள்வதாகத் தெரிகிறது. இதனால் இடைவிடாத மின்தடை தொடர்ந்து ஏற்பட்டது. இதன் காரணமாக வானூர்தி நிலையத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
மேலும், மின்துறை அதிகாரிகளுடன் இணைந்து மின் விநியோகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த மின்தடையால் வானூர்தி சேவைகளின் இயக்கத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வானூர்தி நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)