கால்பந்து உலகக் கோப்பை மேடையை நோக்கி எழும் ஈ*ழத் தமிழர் வீரர் நிஷான் வேலுப்பிள்ளை !

ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த ஈழத் தமிழர் வம்சாவளி வீரர் நிஷான் வேலுப்பிள்ளை உலகக் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Jun 23, 2026 - 14:04
Updated: 10 days ago
0 6
கால்பந்து உலகக் கோப்பை மேடையை நோக்கி எழும் ஈ*ழத் தமிழர் வீரர் நிஷான் வேலுப்பிள்ளை !

ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட உலகில் வேகமாக உயர்ந்து வரும் பெயராக மாறியுள்ள ஈ*ழத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை, 2026 பிஃபா உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்ததன் மூலம் பன்னாட்டுக் கவனத்தை ஈர்த்துள்ளார்.

2001 மே 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளை, சிறுவயதிலிருந்தே உள்ளூர் கால்பந்து போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் ஆஸ்திரேலிய ஏ-லீக் அணியான மெல்போர்ன் விக்டரி (Melbourne Victory) - இன் இளைஞர் அகாடமியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கினார்.

மெல்போர்ன் விக்டரியின் நட்சத்திரமாக உருவெடுத்தவர் நிஷான் வேலுப்பிள்ளை. 2019ஆம் ஆண்டு தொழில்முறை வீரராக அறிமுகமானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 2021 முதல் மூத்த அணியில் நிரந்தர இடம்பிடித்தார். மெல்போர்ன் விக்டரிக்காக இதுவரை அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 146 போட்டிகளில் விளையாடி 25 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

வேகம், பந்தைக் கட்டுப்படுத்தும் திறன் மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் காட்டும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

2024-25 காலகட்டம் அவரது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியக் கோப்பை (Australian Cup) தொடரில் மெல்போர்ன் விக்டரி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியதுடன், தொடரின் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் திகழ்ந்தார்.

ஆஸ்திரேலிய தேசிய அணியில் அதிரடி அறிமுகம் :

கிளப் மட்டத்தில் வெளிப்படுத்திய அபார ஆட்டம் காரணமாக, 2024 உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளுக்காக ஆஸ்திரேலிய தேசிய அணியில் முதல் முறையாக அழைக்கப்பட்டார்.

சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், களமிறங்கிய ஏழு நிமிடங்களிலேயே கோல் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த அறிமுகப் போட்டியே அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்டு உலகக் கோப்பை அணியில் இடம் :

2025-26 பருவத்திற்கு முன்பாக நடைபெற்ற பயிற்சியின்போது தொடைநார் (Hamstring) காயத்தால் பாதிக்கப்பட்ட நிஷான், பருவத்தின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட்டார். எனினும் காயத்திலிருந்து மீண்டு திரும்பிய அவர், மீதமுள்ள போட்டிகளில் ஐந்து கோல் பங்களிப்புகளை வழங்கி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அந்த செயல்திறனே அவருக்கு 2026 பிஃபா உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க வழிவகுத்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய அத்தியாயம்

2026 உலகக் கோப்பை போட்டிகளில் நிஷான் வேலுப்பிள்ளை களமிறங்கினால், இந்த உலகக் கோப்பை பதிப்பில் விளையாடும் முதல் தமிழர் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அதேவேளை, காயத்திலிருந்து மீண்ட பிறகு தேசிய அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதால், அவர் முதன்மை அணியில் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

உலகத் தமிழர்களின் பெருமை

தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் உலகக் கால்பந்தின் மிகப்பெரிய மேடையான பிஃபா உலகக் கோப்பை வரை முன்னேறியிருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் தெற்காசிய கால்பந்து ரசிகர்களுக்கும் பெருமைக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை மேடையில் நிஷான் வேலுப்பிள்ளை களமிறங்கும் தருணத்தை எதிர்நோக்கி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User