உற்சவத் திருமேனிகளுக்கும் தவறாது வழிபாடு; கோயில்களில் வைக்கவும் ஏற்பாடு – அறநிலையத்துறை பதில்!

உற்சவத் திருமேனிகளுக்கு வழிபாடு தொடரவும், பாதுகாப்புடன் கோயில்களில் வைக்கவும் ஏற்பாடு. சுரேஷ் பாபு மனுவுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்.

Oct 29, 2026 - 07:20
Updated: 4 days ago
0 29
உற்சவத் திருமேனிகளுக்கும் தவறாது வழிபாடு; கோயில்களில் வைக்கவும் ஏற்பாடு – அறநிலையத்துறை பதில்!

பாதுகாப்பு அறைகளில் உள்ள உற்சவத் திருமேனிகளுக்கும் வழிபாடு தொடர வேண்டும்!

 உற்சவத் திருமேனிகளை மீண்டும் திருக்கோவில்களுக்கு கொண்டு செல்ல அறநிலையத்துறை நடவடிக்கை!

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சண்டிகேஸ்வரர் அறக்கட்டளையின் நிர்வாகி சுரேஷ் பாபுவின் மனு மீதான விசாரணையில் அறநிலையத்துறை உறுதி.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களிலிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டு, சிலைகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள உற்சவத் திருமேனிகளுக்கும் முறையான பூஜைகள், திருவிளக்கு ஏற்றுதல், திருவமுது (நைவேத்தியம்) படைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை வழக்கு 27/10/26 அன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சண்டிகேஸ்வரர் அறக்கட்டளையின் நிர்வாகி சுரேஷ் பாபு இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

உற்சவத் திருமேனிகளுக்கு வழிபாடு மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டின் பல்வேறு திருக்கோவில்களில் உள்ள தொன்மையான உற்சவத் திருமேனிகள், திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், இந்து சமய அறநிலையத்துறையின் சிலைகள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள உற்சவத் திருமேனிகள், திருவிழாக்கள் மற்றும் உற்சவக் காலங்களில் மட்டும் சம்பந்தப்பட்ட திருக்கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், மற்ற நாட்களில் பாதுகாப்பு அறைகளிலேயே வைக்கப்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் உற்சவத் திருமேனிகளுக்கு நாள்தோறும் நடைபெற வேண்டிய பூஜைகள், திருவமுது படைத்தல், திருவிளக்கு ஏற்றுதல் மற்றும் ஆகம விதிகளின்படியான வழிபாடுகள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உற்சவத் திருமேனிகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அவற்றுக்குரிய வழிபாடுகள் தடையின்றி நடைபெறுவதும் அவ்வளவு முக்கியமானது என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது.

பாதுகாப்பு வசதிகளுடன் திருக்கோவில்களுக்கே கொண்டு செல்லக் கோரிக்கை!

சிலைகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள உற்சவத் திருமேனிகளை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட திருக்கோவில்களுக்கே மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், உற்சவத் திருமேனிகளுக்கு முறையான பூஜைகள், திருவமுது, திருவிளக்கு உள்ளிட்ட வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில் மனு!

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழ்நாடு முழுவதும் 25 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் 188 கண்காணிப்புக் கேமராக்கள், 33 களவு எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மையங்களில் உள்ள திருமேனிகளுக்கான வழிபாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை என்றும், திருவொற்றியூர் உள்ளிட்ட மையங்களில் தினசரி பூஜைகளும், பிற மையங்களில் நடைமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பூஜைகளும் நடைபெறுவதாகவும் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

1,881 திருக்கோவில்களில் பாதுகாப்பு அறைகள்!

மேலும், தமிழ்நாட்டில் 1,881 திருக்கோவில்களில் உறுதியான பாதுகாப்பு அறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1,782 பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 118 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசுத் தரப்பு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள் நிறைவடைந்து, உரிய அனுமதி பெறப்பட்ட பின்னர், பாதுகாப்பு மையங்களில் உள்ள உற்சவத் திருமேனிகளைச் சம்பந்தப்பட்ட திருக்கோவில்களுக்கே மீண்டும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 342 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களிலிருந்து திருக்கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு!

இந்த நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உற்சவத் திருமேனிகளுக்கான வழிபாடுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் திருக்கோவில்களுக்கு மீண்டும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன.

அரசுத் தரப்பின் விளக்கங்களையும் உறுதிமொழிகளையும் கருத்தில் கொண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு குறித்து சுரேஷ் பாபுவிடம் கேட்டபோது, "உலோகத் திருமேனிகளுக்கு பூசை  வழிபாடு என்பது வெறும் பக்திக்காக மட்டுமல்ல, அபிடேகம் என்பதே அந்தத் திருமேனிகளின் உலோகத்தன்மையைப் பாதுகாப்பதற்கே. நமது வீட்டில் உள்ள செப்பு அல்லது பித்தளை பாத்திரங்களை நாம் கழுவி வைக்காமல் பராமரிப்பு இல்லாமல் நீண்ட காலம் வைத்துவிட்டால் அதில் இரசாயன மாற்றம் ஏற்படும். அதுபோலதான் உலோகத் திருமேனிகளும். அவற்றை அபிடேகம், வழிபாடு, பூசை, திருவமுது தருதல் மூலம் உயிர்ப்போடு வைத்திருப்பதே மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் செயலாகும்" என்றார். நீதிமன்ற உத்தரவுகளை அறநிலையத்துறை பின்பற்றவேண்டும் என்றும் சுரேஷ் பாபு கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User