வள்ளலார் பெருவெளியையும் சுத்த சன்மார்க்கத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் உறுதி!
வடலூர் வள்ளலார் பெருவெளியில் கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், சுத்த சன்மார்க்கத்தையும் பெருவெளியையும் பாதுகாக்க விஜய் அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதி.
--தமிழ் ஊடகம் செய்திக் குழு
சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழா சென்னை மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்தப் பெருவிழாவில் கலந்து கொண்டு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "வடலூர் பார்வதிபுரம் கிராம மக்களிடம் 80 காணி நிலத்தைத் தானமாகப் பெற்ற வள்ளலார் அங்கு மாடமாளிகைகளோ, கூட கோபுரங்களோ கட்டுவதற்காக நிலம் கேட்கவில்லை. பசித்தோருக்கு உணவு அளிக்க தருமச்சாலை கட்டவும், அறிவு விளக்கம் அடைய ஞான சபையையும் கட்டவுமே நிலம் கேட்டு வாங்கினார். இன்றளவும் அங்கு பசித்தோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
வள்ளலார் அதனைக் கோயிலாகக் கட்டவில்லை, தருமச்சாலை, ஞான சபை என்றே அமைத்தார், பெயர் சூட்டினார்.
துன்பப்படும் உயிர்களுக்கு உதவுதல் என்பதே இறைப்பணி. அத்தகைய உதவி செய்யும் ஒவ்வொருவருமே வள்ளலாரின் பின்பற்றாளர்கள்தான்.
நான் சபரிமலை ஐயப்பனின் பக்தன். ஐயப்ப வழிபாட்டிலும் அன்னதானம்தான் அளிக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக பணத்தை அளித்து எளியோருக்கு உணவு அளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இப்படி உணவு வழங்கும் ஒவ்வொருவரும் வள்ளலாரின் பின்பற்றாளர்களே.
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு
வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்
என்கிறார் திருமூலர்.
நமது உள்ளமே பெருங்கோயில் என்கிறார், வாய் கோபுர வாசல் என்கிறார் திருமூலர் பெருமானார்.
ஐம்புலன்களை மயக்கத்துக்கு ஆளாகாமல் நிலை நிறுத்தக்கூடியவரே சிறந்த மனிதர் ஆகிறார். இதைத்தான் வள்ளலாரும் சொல்கிறார்.
இப்படிப்பட்ட வடலூர் பெருவெளியைக் காப்பாற்ற வேண்டும் என்று வள்ளலாரின் சன்மார்க்க அன்பர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
அதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்த பிறகே பெருவெளியில் எந்தக் கட்டுமானங்களும் கூடாது என்று முடிவெடுத்து நீதிமன்றத்தில் நாம் அந்தத் திட்டத்தைக் கை விடுவதாகக் கூறினோம்.
பெருவெளியைத் துன்புறுத்தாமல் தேவையான சில அடிப்படை வசதிகளைச் செய்து தர நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
உண்மையைச் சொல்கிறேன், வள்ளலாரின் பின்பற்றாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வள்ளலாரின் நூல்களை மலிவு விலையில் நாம் அச்சடித்து விற்பனை செய்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பக வெளியீடுகளில் அதிகம் விற்பனையாவது வள்ளலாரின் நூல்களே என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
எனவே, வடலூர் வள்ளலாரின் பெருவெளி, சுத்த சன்மார்க்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் அரசும், நானும் உறுதுணையாக இருப்போம். உங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம். அதற்கு எங்களுக்கு காலம் தேவைப்படுகிறது. நாங்கள் இப்போதுதான் வந்து பணிகளைத் தொடர்ந்திருக்கிறோம். எனவே, சற்று கால அவகாசம் கொடுங்கள் செய்து தருகிறோம்.
கருணை மட்டுமல்ல பெருங்கருணை என்கிறார் வள்ளலார். பெருங்கருணை கொண்டவர் சிறந்தவர் ஆகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உரையாற்றினார்.
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
2
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)