வள்ளலார் பெருவெளியின் ‘விளிம்பு’ எது? வள்ளலார் சொல்லாத சாலைகள் எதற்கு?

வடலூர் வள்ளலார் பெருவெளியின் ‘விளிம்பு’ என்று HR&CE குறிப்பிடுவது எந்தப் பகுதி? விவகார சாலை, யோக சாலை உள்ளிட்ட கட்டுமானங்கள் எதற்காக? பொதுக் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை.

Oct 07, 2026 - 08:30
Updated: 26 days ago
0 31
வள்ளலார் பெருவெளியின் ‘விளிம்பு’ எது? வள்ளலார் சொல்லாத சாலைகள் எதற்கு?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளும் நீதிமன்ற வழக்குகளும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.

பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் முந்தைய திட்டம் கைவிடப்படுவதாகவும், பெருவெளிக்குள் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது பெருவெளியைப் பாதுகாக்கப் போராடியவர்களுக்குக் கிடைத்த முக்கியமான முன்னேற்றம்.

ஆனால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டதா?

இல்லை.

பெருவெளியின் “விளிம்புப் பகுதியில்” விவகார சாலை, நூலகம், யோக சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் மாற்றுத் திட்டம் பரிசீலிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.

1. பெருவெளியின் “விளிம்பு” என்பது எது?

முதலில் இந்து சமய அறநிலையத்துறை இதற்குத் தெளிவான பதிலைச் சொல்ல வேண்டும்.

பெருவெளி எங்கிருந்து தொடங்குகிறது? அதன் வரலாற்று எல்லை எது? “விளிம்பு” என்று துறை குறிப்பிடுவது எந்த நிலப்பகுதியை?

அதற்கான நில அளவை வரைபடம் என்ன? சர்வே எண்கள் என்ன? கட்டுமானங்கள் எந்த இடத்தில் அமைய இருக்கின்றன?

“பெருவெளிக்குள் கட்டவில்லை; விளிம்பில்தான் கட்டுகிறோம்” என்று கூறுவது மட்டும் வெளிப்படைத்தன்மையாகாது.

எந்த இடத்தை “விளிம்பு” என்று அரசு வரையறுக்கிறது என்பதை முதலில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

2. வள்ளலார் சொல்லாத “சாலைகள்” எதற்காக?

வள்ளலாரின் வடலூர் பணிகளுடன் வரலாற்றுரீதியாக நேரடியாக இணைந்திருப்பவை சங்கம், தருமச்சாலை, சத்திய ஞானசபை ஆகியவை.

இந்நிலையில் “விவகார சாலை”, “யோக சாலை” போன்ற பெயர்களில் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

அவை வள்ளலாரின் எந்த ஆவணத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன?

வள்ளலார் வகுத்த சன்மார்க்க நெறியைப் பாதுகாப்பது வேறு; அவரது பெயரில் புதிய கட்டமைப்புகளையும் புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்குவது வேறு.

எனவே ஒவ்வொரு புதிய கட்டுமானத்திற்கும் அதன் வரலாற்று ஆதாரம், தேவை, நோக்கம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டும்.

வள்ளலாரின் வரலாற்றை அலுவல்பூர்வமாக எழுதிய வள்ளலாரின் நேரடி சீடரான காரணப்பட்டு கந்தசாமி பிள்ளை எழுதிய பிரபந்தத் திரட்டில் வள்ளலார் கைவிட்ட வேத பாடசாலை, வைத்தியசாலை ஆகியவற்றின் பின்னணி தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1867 ம் ஆண்டு தருமச்சாலை அமைத்த வள்ளலார் 1872 ல் ஞானசபை அமைக்கிறார். இந்த 5 ஆண்டுகளில் வள்ளலார் நினைத்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறை கூறும் அமைப்புகளை காட்டியிருப்பார். ஆனால் அவர் கட்டவில்லை எனபது மட்டுமல்ல, பெருவெளியில் தோண்டப்பட்ட குளத்தைக் கூட மூடவே உத்தரவிட்டார்.

3. “வடலூர் தலைமைச் சங்கம்” யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது?

இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது.

வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திற்கும், தற்போது செயல்படுவதாகக் கூறப்படும் “வடலூர் தலைமைச் சங்கம்” என்ற அமைப்பிற்கும் உள்ள சட்டபூர்வமான, வரலாற்றுரீதியான தொடர்பு என்ன?

இந்த வடலூர் தலைமைச் சங்கம் என்பது படைப்பை பாலகிருஷ்ணன் எனும் ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் உருவாக்கியது. இராமலிங்க வள்ளலார் உருவாக்கியது அல்ல. மேலும், இதே படைப்பை பாலகிருஷ்ணன் தொடக்கத்தில் பெருவெளிக்குள் சில கட்டுமானங்கள் வேண்டும் என்று சொன்னவர், பிறகு உண்மை தெரிந்து அப்படி எந்தக் கட்டுமானமும் கூடாது என்று மறுத்துவிட்டார்.

பெருவெளியைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் இந்த அமைப்பை அரசியல் சார்புடைய பினாமி அமைப்பு என்று கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சங்கத்துக்கு கட்டடம் என்பது இந்த பினாமி அமைப்பின் சூழ்ச்சிதான்.

வடலூர் பெருவெளி என்ன தொழிற்சாலையா அங்கு தொழிற் சங்கத்திற்கு கட்டடம் கட்ட ?! 1865 களில் 'சமரச வேத சன்மார்க்க சங்கம்' எனத் தொடங்கி, பின்னர் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என வள்ளலாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சங்கத்திற்கு என்று ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்று வள்ளலாருக்குத் தெரியாதா ? கட்டியிருக்க முடியாதா? ஏன் கட்டவில்லை ? சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது வழிபாட்டு நெறி, மார்க்கம். அது Society / Trust சட்டங்களின் படி அமைக்கப்படும் சங்கம் அல்ல. புத்தரின் சங்கம் என்பதை நினைவு கூறலாம் இங்கே.

ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது:

பெருவெளியின் எதிர்காலத்தை முடிவு செய்வதில் எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பின் கருத்தை மட்டும் அரசு பிரதானமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

முடியாது.

பொதுக் கருத்துக் கேட்பு நடத்துங்கள்!

பெருவெளி என்பது ஒரு துறையின் நிர்வாக வசதிக்கான வெற்று நிலம் அல்ல.

அது வள்ளலாரின் வரலாறு, சன்மார்க்க மரபு, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்பாட்டு வெளி.

எனவே பெருவெளியின் விளிம்பு என்று அரசு குறிப்பிடும் பகுதியில் எந்தக் கட்டுமானத்தையும் முடிவு செய்வதற்கு முன்பு, முழுமையான திட்ட வரைபடத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

அதன்பிறகு வள்ளலார் அமைப்புகள், சன்மார்க்க அன்பர்கள், பெருவெளியைப் பாதுகாக்க நீதிமன்றம் வரை சென்று போராடியவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், உள்ளூர் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து வெளிப்படையான பொதுக் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும்.

கருத்துக் கேட்பு முடிவதற்கு முன்பு எந்தப் புதிய கட்டுமானப் பணியையும் தொடங்கக்கூடாது.

கடந்த தவறு மீண்டும் வேண்டாம்!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க முயன்றபோது எழுந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, பெருவெளியின் வரலாற்று மற்றும் ஆன்மநேய முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்களின் கருத்துகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதுதான்.

அந்த அணுகுமுறையே போராட்டத்திற்கும் நீதிமன்ற வழக்குகளுக்கும் வழிவகுத்தது.

இப்போது ஆட்சி மாறியிருக்கலாம்.

ஆனால் ஆட்சி மாறினால் மட்டும் போதாது; அணுகுமுறையும் மாற வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியின் இந்து சமய அறநிலையத்துறை செய்ததாக விமர்சிக்கப்பட்ட அதே தவறை தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் தொடரக்கூடாது.

பெருவெளி யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல.

வள்ளலாரும் எந்த ஓர் அமைப்புக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல.

எனவே அரசு முதலில் சொல்லட்டும்:

பெருவெளியின் “விளிம்பு” எது?

அங்கு என்ன கட்டப்போகிறீர்கள்?

அதற்கான வள்ளலாரின் வரலாற்று ஆதாரம் என்ன?

யாருடைய கருத்தைக் கேட்டீர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான வெளிப்படையான பதிலுக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை இருக்க வேண்டும்.

பெருவெளியைப் பாதுகாப்பது என்பது கட்டுமானத்தின் இடத்தை மாற்றுவது மட்டுமல்ல; வள்ளலாரின் நோக்கத்தையும் அந்த வெளியின் தனித்துவத்தையும் பாதுகாப்பதும்தான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User