எந்திரன் 2.0 ஆகும் எடப்பாடி பழனிச்சாமி! நவம்பர் 13க்குப் பிறகு விஜய் அரசுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம்?!

நவம்பர் 13க்குப் பிறகு விஜய் அரசுக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானமா? அதிமுகவின் 9 எம்எல்ஏக்கள், எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி வியூகங்கள் குறித்த அரசியல் அலசல்.

Oct 29, 2026 - 11:20
Updated: 4 days ago
0 39
எந்திரன் 2.0 ஆகும் எடப்பாடி பழனிச்சாமி! நவம்பர் 13க்குப் பிறகு விஜய் அரசுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம்?!

--நாச்சி.செல்வராஜ், பத்திரிகையாளர் 

முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆறுமாத காலம் முடிவடையும் நிலையில், நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு விஜய் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தவெக கூட்டணி அரசு அதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது எனும் கேள்வி தமிழ்நாட்டில் பேசுபொருளாகி இருக்கிறது.

2026-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான 117 இடங்களைப் பெற முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

அப்போது, ஜோசப் விஜய் அரசு மீது திமுக - அதிமுக கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதில் எவரும் எதிர்பாராத விதமாக அதிமுக வில் உள்ள 47 எம்எல்ஏக்களில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஜோசப் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேபோல் திமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. இதனால் திமுகவைச் சார்ந்த 59 எம்எல்ஏக்கள் வாக்களிக்கவில்லை.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் மட்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு முடிவில் ஆதரவாக 144 வாக்குகளும், எதிர்ப்பாக 22 எம்எல்ஏக்களும் நடுநிலையாக 5 பேரும் வாக்களித்தனர்.

ஒரு அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் அரசியல் சாசன சட்டப்படி குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் இடைவெளி வேண்டும். இந்நிலையில் வரும் நவம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பார்வை மீண்டும் அதிமுக பக்கம் திரும்பி உள்ளது. அதாவது வேலுமணி தலைமையில் மீண்டும் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுராந்தகம் தாராபுரம் எம்எல்ஏக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் போட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், கரூர் , விராலிமலை, பெருந்துறை அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காலும் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 20 எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கிடுக்குப்பிடி போடுவதால் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

வேலுமணி தலைமையில் சி.வி.சண்முகம் , கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், அருண்மொழித் தேவன், ஆர் காமராஜ் ஆகிய 9 எம்எல்ஏக்கள் நடு நிலைமையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி இந்த ஒன்பது பேருக்கு எதிராக சில ஆவணங்களைத் திரட்டி வருவதாகவும், கட்சி மாறி ஓட்டளித்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எந்திரன் 2.0 ஆக அவதாரம் எடுத்து அதிமுகவைக் காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க எடப்பாடி கே.பழனிச்சாமி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஒருவர் ராஜினாமா செய்ய உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த என்.அசோக்குமார் என்று கூறுகிறார்கள்.

விருகம்பாக்கம் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவும், தமிழக அரசு கொறடாவாகவும் உள்ள சபரிநாதனின் உறவுக்காரரான என்.அசோக்குமார் விரைவில் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆறு மாத காலத்தில் இந்த ஆட்சி அகற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி வந்த நிலையில், ஆறு மாதத்தைக் கடந்தும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது.

நவம்பர் 13 ம் தேதிக்குப் பிறகு அதிமுக - திமுக ஆகியவை வகுக்கப்போகும் வியூகங்கள் என்னென்ன? அதனைத் தவெக எப்படி உடைக்கபோகிறது என்பதே அரசியல் திருப்பங்களாக இருக்கபோகின்றன.

எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை வியூகம் அதிமுகவை வலிமைப்படுத்துவதாகவே இருக்கும் என்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User