அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி வழக்கு: பத்திரிகையாளர் மீது அவதூறு புகார்! தினகரன் செய்தியாளர்களிடம் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி வழக்குச் செய்திகளை வெளியிட்ட பாலிமர் கதிரவன் மீது அவதூறு பரப்பியதாகப் புகார். தினகரன் சுரேஷ் வேதநாயகம், சரத்குமாரிடம் விசாரணை; செல்போன் பறிமுதல்.

Oct 21, 2026 - 22:55
Updated: 12 days ago
0 240
அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி வழக்கு: பத்திரிகையாளர் மீது அவதூறு புகார்! தினகரன் செய்தியாளர்களிடம் விசாரணை!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிப்பு மற்றும் ஜெம் வீரமணி வழக்குச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது அவதூறு பரப்பியதாகப் புகார்!

தினகரன் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம், செய்தியாளர் சரத்குமாரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள்! செல்போன் பறிமுதல்! தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை!

சென்னை | 21.10.2026

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு மற்றும் ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகள் குறித்து ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டு வரும் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன் மீது, வாட்ஸ்அப் குழுக்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தினகரன் நாளிதழின் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம், தாம்பரம் செய்தியாளர் சரத்குமார் ஆகிய இருவரிடமும் இன்று (அக்டோபர் 21) நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

என்ன புகார்?

பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன் அளித்த புகாரில், தான் சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு மற்றும் ஜெம் வீரமணி வழக்குகள் தொடர்பாக ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி REPORTERS GUILD, KINDNESS WING, காவலர் இரகசிய தகவல், நீர் நிலம் காற்று ஆகிய நான்கு வாட்ஸ்அப் குழுக்களில், தான் கோயம்பேடு காவல் ஆய்வாளரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக அவர் புகார் அளித்துள்ளார்.

தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாமோதரன் பிரகாஷிடம் விசாரணை!

இந்தப் புகார் தொடர்பாக அக்டோபர் 20ஆம் தேதி நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, புகாரில் குறிப்பிடப்பட்ட சம்பவம் உண்மை எனத் தெரியவந்ததாகக் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வாட்ஸ்அப் மூலம் பொய்யான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பி, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தவும், புகார்தாரரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் முயன்றதாக G-1 வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

தினகரன் செய்தியாளர்களிடம் விரிவான விசாரணை!

விசாரணையின் அடுத்தகட்டமாக, தினகரன் தலைமைச் செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் மற்றும் தாம்பரம் செய்தியாளர் சரத்குமார் ஆகிய இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி, இன்று அக்டோபர் 21ஆம் தேதி இருவரும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இருவரிடமும் தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

செல்போன் பறிமுதல்! தடய அறிவியல் ஆய்வுக்கு நடவடிக்கை!

விசாரணையின்போது, அவதூறான தகவலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசியை, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்ட விதிகளின்படி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசியை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டு, BNSS சட்டப்பிரிவு 35(3)இன் கீழ் அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. இந்தப் பிரிவு, ஒருவரைக் கைது செய்யாமல் விசாரிக்கும் அழைப்பாணையாகும். இதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் தவறாமல் விசாரணை அதிகாரி முன்பு நேரில் நின்று விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

சுரேஷ் வேதநாயகம் மற்றும் சரத் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User