அன்பில் மகேஷ் கைதுக்குக் காரணம் : அரசியல் பழிவாங்கலா? ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியா?
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது பின்னணி என்ன? ஆதவா, நீம் பவுண்டேஷன் ஆசிரியர் நியமன முறைகேடு புகார்கள் குறித்து டி.எஸ்.எஸ்.மணி விளக்கம்.
--தமிழ் ஊடகம் செய்திப்பிரிவு
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது நடவடிக்கை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையெல்லாம் இல்லை, உண்மையில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களை, ஆசிரியர்களைப் பழி வாங்கி இரத்தம் குடித்த குற்றச்சாட்டின் மீதான நடவடிக்கை என்பதாகவே பார்க்கவேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான டி.எஸ்.எஸ். மணி.
தமிழ் ஊடகம் சார்பில் டி.எஸ்.எஸ். மணி அவர்களிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான நடவடிக்கை குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.
முதலில் 'ஆதவா பவுண்டேஷன்' எனும் அமைப்பிலிருந்து இந்த பிரச்சனை தொடங்குகிறது என்ற டி.எஸ்.எஸ்.மணி, "ஆறுமுகனேரியை மையமாகக் கொண்ட'ஆதவா ட்ரஸ்ட் அல்லது ஆதவா பவுண்டேஷன்' எனும் அரசு சாரா அமைப்பு 2021-22 ம் ஆண்டு வாக்கில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அணுகி ஒரு சிறப்பு அனுமதி கோருகிறது.
அந்த அனுமதி என்னெவென்றால், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளுக்குத் தாங்கள் ஆசிரியர்களை நியமனம் செய்து தந்து, பராமரிப்பு செய்து தருவதாகவும் அதற்கு கல்வித்துறை அனுமதி வேண்டும் என்பதே.
அந்தவகையில், ஆதவா பவுண்டேஷன் நிர்வாகத்திற்கு அனுமதி தரப்படுகிறது. 2021 - 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி (CEO) சாகேஷ் ஆதர், அரசு பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு ஆதவா பவுண்டேஷனுக்கு தனது கையொப்பமிட்டு ஒரு ஆணை தருகிறார்.
இதுதொடர்பான விளம்பரங்கள் செய்த ஆதவா பவுண்டேஷன், சுமார் 3,000 ஆசிரியர்களிடம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெற்றுக்கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணியில் அம்ரித்தியுள்ளனர் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவெனில், அந்த ஆசிரியர்களுக்கு ஆதவா பவுண்டேஷன்தான் ஊதியம் கொடுக்கும். ஆசிரியர்களின் வங்கிக்கணக்குகளுக்கு ஊதியம் அனுப்பப்படும் என்று உறுதியும் கொடுக்கப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் ஒழுங்காக ஊதியம் அளிக்கப்பட்டன. அதன்பிறகு ஊதியம் தருவது நிறுத்தப்பட்டது.
முன்பணத்தையும் கொடுத்து ஊதியமும் நிறுத்தப்பட நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட 1,150 ஆசிரியர்கள் கொடுத்த புகார்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்படும் வழக்கில் பதிவாகியுள்ளது. கணக்குப் போட்டுப் பாருங்கள், சராசரியாக குறைந்த அளவு ஐந்து லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டாலும் கூட சுமார் 57 கோடி ரூபாய் வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலைவாய்ப்பு எனும்போது அதற்காக பணத்தைத் திரட்டி கட்டிவிட்டு ஊதியம் கூட கிடைக்கவில்லையென்றால் அந்த ஆசிரியர்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்!
மொத்தம் 3 ஆயிரம் பேர் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இதுவே 100 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடி. இவைதவிர தனியார் பள்ளிகளுக்கு உரிமம் பெறுதல் எனும் வகையில் அது ஒரு தனி மோசடி. ஆக, இவற்றுக்கெல்லாம் முறையான புகார்கள், விசாரணைகள் அதற்கு மேலாக நீதிமன்றம் முன்பிணையை மறுத்தது என அன்பில் மகேஷ் மீதான புகார்களில் முகாந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க இதைப் பழி வாங்கும் நடவடிக்கை என்று ஒதுக்கித் தள்ளுவது 3,000 ஏழை, எளிய ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயல் ஆகாதா?
தண்டனை ஒருபுறம் இருக்க பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், உறுதியான ஊதியத்துடன் வேலை உறுதியும் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்." என்று கூறிய டி.எஸ்.எஸ்.மணி, "அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருந்த காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தனியார் பள்ளிகளுக்கான உரிமம் தருவதில் மோசடி வழக்குடன் இந்த ஆதவா பவுண்டேஷன் மற்றும் நீம் பவுண்டேஷன் வழக்குகளையும் இணைத்து விசாரிக்க வேண்டும்" என்கிறார்.
தமிழ் ஊடகம் விசாரணையில் ஆறுமுகனேரியில் 'ஆதவா பாவுண்டேஷன், தூத்துக்குடியில் நீம் பவுண்டேஷன்' ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இப்படி ஒரு ஒப்பந்தம் கல்வித்துறையால் தரப்பட்டுள்ளது தெரியவருகிறது.
இந்தப் புகார் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்குக் கடந்த 2023 ம் ஆண்டு கருத்துத் தெரிவித்த நீம் பவுண்டேஷன் தரப்பு, "நாங்கள் நல்ல நோக்கத்தில் இந்தப் பணிகளைச் செய்கிறோம். நன்கொடைகள் மூலம் நடக்கும் எங்கள் அமைப்பு ஆசிரியர்களின் முன்பணம் மற்றும் ஊதியத்தை விரைவில் வழங்குவோம்" என்று கூறியுள்ளது.
ஆனால், இதுவரை அப்படி வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆதவா பவுண்டேஷனின் மேலாண்மை இயக்குனர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கில் 2024 ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)