மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்த வேண்டும்: தமிழ்த்தேசியப் பேரியக்கம் தீர்மானம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்த வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் இன்று கடந்த புதன்கிழமை (26.08.2026) தஞ்சையில் நடைபெற்றது.
பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், பி. தென்னவன், க. விடுதலைச்சுடர், மா. மணிமாறன், க. செம்மலர், வெற்றித்தமிழன், இரா. வேல்சாமி, வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன், கதிர்நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மிக முக்கியமான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் 2026 செப்டம்பரில் (17.09.2026) நடைபெறுவது வரவேற்கத் தக்கது.
அக்குடமுழுக்கு விழாவை, முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், அதனைப் புறக்கணித்துவிட்டு கடந்த தி.மு.க. அரசின் வழியில், சமற்கிருத வழியிலேயே குடமுழக்கை நடத்திட த.வெ.க. அரசு முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழில் பாதி – சமற்கிருதம் மறுபாதி என குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென பலமுறை தீர்ப்பளித்துள்ளது. அண்மையில், 21.04.2026 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரி கரூர் வழக்கறிஞர் இரா. இராசேந்திரன் தொடுத்த வழக்கில் (வழக்கு எண்: W.P. (MD) No: 11386 of 2026) தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள், கருவறை – வேள்விச் சாலை – கோபுரக் கலசம் ஆகிய முகாமையான மூன்று நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டுமெனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, இத்தீர்ப்பை ஏற்று, சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட முன் வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்திக் கோருகிறது!
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)