பரந்தூர் ரத்து பின்னணியில் என்ன நடந்தது? முன்னாள் அமைச்சர்கள் முதல் ₹100 கோடி ‘முதலீடு’ வரை | பருந்தார் தகவல்கள்
பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் நில முதலீடுகள் குறித்த பரபரப்புத் தகவல்கள், முன்னாள் அமைச்சர்கள், செய்தி ஆசிரியர் குறித்த குற்றச்சாட்டுகள், புதிய அரசு நியமனம் மற்றும் தமிழ் அமைப்பு தொடர்பான கேள்விகளை அலசுகிறார் பருந்தார்.
+ பரந்தூர் ரத்து ; தூக்கத்தைப் பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்கள்
+ பரந்தூரில் 100 கோடி "முதலீடு" செய்திருக்கும் பிரபல "செய்தி ஆசிரியர்" !
+ முன்னாள் முதலமைச்சரின் வாக்கிங் நண்பரின் நண்பருக்கு தவெக அரசில் பதவி !
+ எந்த ஆட்சி வந்தாலும் காக்கா பிடிக்கத் தயங்காத தமிழ் அமைப்பு அம்மணி !
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
டொக் டொக்...கதவு தட்டும் ஓசை, திறந்தால் பரபரவென உள்ளே வந்தார் பருந்தார்.
வந்ததும் வராததுமாக, "27,400 கோடி ரூபாய் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டம் ரத்து என்ற தகவல் கேட்டு முதலில் பதறி அடித்து எழுந்து கதறியவர் முன்னாள் 3+2 எழுத்துப் பெயர் கொண்ட அமைச்சர்.
ஆமாம், பார்த்தோம். தொழில்துறை...தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டதே என்ற வருத்தமாக இருக்கலாம் என்றோம்.
சிரித்த பருந்தார்...பரந்தூரில் வானூர்தி நிலையத் திட்டம் ரத்து, ஆனால் வேறு இடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க இடம் பார்க்கப்படும்" என்பதுதானே முதலமைச்சர் ஜோசப் விஜயின் அறிவிப்பு ? என்று கேள்வி எழுப்பினார் பருந்தார்.
ஆமாம்...
இதில் தமிழ்நாடு வளர்ச்சிக்கு எங்கே பாதிப்பு ? என்று கொக்கி போட்டார் பருந்தார்.
ஆமா இல்ல...என்றோம் நாம்.
ஆமாவா...இல்லையா என்று கேட்ட பருந்தார் தொடர்ந்தார், "பரந்தூரில் வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த வானூர்தி நிலையப் பகுதியை ஒட்டியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிப்போட்டுவிட்டனர் முன்னாள் தலைமைக்கு வேண்டப்பட்டவர்கள். அந்தப் பொறுப்பு பதறிக் கதறிய அமைச்சருடையது.
ஓ....
அந்தவகையில் அவர் பொறுப்பில் கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடிகளுக்கு நிலத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கு.
அடேங்கப்பா...அப்போ, வானூர்தி நிலையம் அமைஞ்சிருந்தா அந்த இடங்களின் மதிப்பு 100 மடங்கு அதிகமாகியிருக்கும் என்று வாயைப் பிளந்தோம் நாம்.
ஆமாம்..."மெகா மெகா பம்பர் ஜாக்பாட்" அடிக்கத் திட்டம் போட்டிருந்தாங்க. அந்தப் பிழைப்பில்தான் "பரந்தூர் மண்" விழுந்திருக்கு என்ற பருந்தார்...இதில் அந்த 3 + 2 பெயர் அமைச்சர் மூலமா பகலவன் டிவி செய்தி ஆசிரியர் மட்டுமே 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறாராம்.
ஏற்கனவே நீங்க சொல்லியிருந்தீங்களே, அந்த அமைச்சர்தான் இந்த செய்தி ஆசிரியருக்கு எலெக்ட்ரிக் கார் கொடுத்தார்னு, அவருடைய துறையில்தான் 300 - 400 கோடி தேற்றி வைத்திருந்தார் அந்த செய்தி ஆசிரியர் சாரி செய்தி வியாபாரி என்றோம் நாம்.
ஆமாம் அதே டெய்லர் அதே கட்டிங், கமிஷன், கரப்ஷன்தான் என்றார் பருந்தார்.
மஹ்ம்... "எங்க தமிழ் ஊடகம் செய்தி ஆசிரியரும்தான் இருக்காரே அலுவலகத்துக்கு வாடகை ஒழுங்காக் கொடுக்க முடியல, எங்களுக்கு சம்பளம் கூட ஒழுங்காக் கொடுக்க முடியல, கடன்ல அல்லாடிக்கிட்டு" என்று பெருமூச்சு விட்டோம்.
மீண்டும் சிரித்த பருந்தார்...அப்படி இருப்பதால்தான் உங்க தமிழ் ஊடகத்துக்கு நல்ல பெயர் இருக்கு. சுரண்டிச் சம்பாதிச்சிருந்தா அந்த பகலவன் டிவி ஆசிரியர் போல பெயர் நாறியிருக்கும் என்றார்.
ஆமாம்...ஆமாம்...உண்மை. விளையாட்டுக்குப் பெருமூச்சு விட்டோம் என்று சொன்னோம்.
அந்த நபர் பகலவன் டிவில சேர்ந்த காலத்துல இருந்து செய்தியை ஒருநாளும் எண்ணியதேயில்லை, கரன்சியை மட்டும்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எங்கே ஓசியில் கார் வாங்கலாம், எங்கே நிலம் வாங்கலாம் அதற்கு ஏற்ப அவர்கள் தொடர்புடைய செய்திகளை எப்படிப் போடலாம்...ஒவ்வொரு செய்திக்கும் எப்படி எவ்வளவு பேரம் பேசலாம் என்று கடந்த ஐந்தாண்டுகளில் அவர் தேற்றிய பணமும் சொத்தும், 400 கோடியை எட்டிவிட்டது என்கிறார்கள். அப்படி ஒரு பிழைப்பு உங்களுக்கு வேண்டுமா என்ற பருந்தார் அடுத்த தகவலுக்குத் தாவினார்.
தடுப்புக்காவல் அறிவுரைக் குழு அதான் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விசாரித்து விடுவிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அட்வைசரி கமிட்டி இருக்கு இல்லையா ....
ஆமாம்...என்றோம்.
ம்..அந்தக் கமிட்டி இப்போ மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கு. அதுக்குத் தலைவரா ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை புதிதாக நியமிச்சிருக்காங்க.
ஓ...அந்த செய்தியா பார்த்தோம் பார்த்தோம் என்று தலையாட்டினோம்.
ம்...அந்த ஓய்வு பெற்ற நீதிபதி வேறு யாருமல்ல.. ஒன்னே முக்கால் வருடத்துக்கு முன்னாடி திமுக ஆட்சியில உங்க சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு களேபரமா ஒரு தேர்தல் நடந்துச்சே....
ஆமாம்....
அப்போ தேர்தல் அதிகாரியா செயல்பட்டவர்தான் இந்த (ஓய்வு) நீதிபதி என்ற பருந்தார். இவர் முன்னாள் முதலைமைச்சரின் வாக்கிங் நண்பர் - மவுன்ட் ரோடு மகாவிஷ்ணுவின் மதிப்புக்கு உரிய நண்பர் என்றும் சொல்கிறார்கள்.
ஓ...பெயரைப் பார்த்தவுடனே எனக்கும் ஒரு ஐயம் வந்துச்சு....நல்லது மகிழ்ச்சி, வாழ்த்த வயதில்லை வணங்குவோம் என்றோம் நாம்.
அடுத்த தகவலை நோக்கி நகர்ந்த பருந்தார், "ஓலைச்சுவடி புகழ் தமிழ் அமைப்பின் அம்மணி ஆட்சி மாறியதும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சுடுச்சு பார்த்தீரா" என்றார் பருந்தார்.
பார்த்தோம் பார்த்தோம்...என்று சொன்ன நாம், கூட்டணி சிறுத்தைக் கட்சிக்கு வேண்டப்பட்ட பெண்மணிதானே அவர் என்றோம்.
ஆமாம், கருத்தைக் கன கச்சிதகமாகப் பிடித்துக்கொண்டாய் என்று பாராட்டிய பருந்தார், அதிமுக ஆட்சியின்போது அப்போதைய தமிழ்துறை அமைச்சரை வைத்து ஒரு நிகழ்ச்சி, திமுக ஆட்சியில் அப்போதைய தமிழ்த் துறை அமைச்சரை வைத்து ஒரு நிகழ்ச்சி, இப்போது தவெக ஆட்சியில் ஒரு நிகழ்ச்சி என்று எந்த ஆட்சி வந்தாலும் நிகழ்ச்சி நடத்தி, படம் எடுத்து செய்தி வெளியிட்டு ஆவணப்படுத்திவிடுவார் அந்த அம்மணி என்ற பருந்தாரிடம்...
ஆமாம் அப்படி என்னதான் தமிழ் ஆராய்ச்சி செய்யுது அந்த அம்மணி ? அந்தத் அம்மாவுக்கு மட்டும் எப்படி இப்படி நாடு நாடாகப் போய்ட்டு வர பணம் கிடைக்குது ? எந்த அரசாங்கம் வந்தாலும் நெருங்க முடியுது ? உண்மையில் கல்வெட்டு படிக்கத் தெரிஞ்சவங்க , ஓலைச்சுவடி வாசிக்கத் தெரிஞ்சவங்க, தமிழ் ஆராய்ச்சி செய்யுறவங்க எல்லாம் பணத்துக்கு அல்லாடிட்டு இருக்காங்க....கடல் சார் தமிழியல் ஆய்வு செய்த ஒரிசா பாலு ஐயா கடைசி வரைக்கும் கடன் வாங்கியே இறந்தே போனார்...என்று கேள்வி எழுப்பினோம் நாம்.
இந்தக் கேள்விதான் தமிழ் ஆய்வு உலகத்துல பெரியதாகக் கேட்கப்படுது, விடை அந்த அம்மணிக்கு மட்டுமே தெரியும். கடந்த திமுக ஆட்சியில் இந்த அம்மணியோட அமைப்புடன் தமிழ்நாடு அரசு ஏதோ ஒரு MOU போட்டிருப்பதாகவும் தகவல். அந்த அடிப்படையில் இந்த அம்மணி உலக நாடுகளில் உள்ள காட்சியகங்கள் (மியூசியம்) உள்ளிட்ட இடங்களுக்குப் போய் தமிழ் ஓலைச்சுவடி, செப்பு பட்டயம் உள்ளிட்ட ஆவணங்களைப் பார்வையிடவும் செய்வதாக ஒரு தகவல் என்ற பருந்தாரிடம்....
நீங்க சொன்ன சிறுத்தையை லண்டன் மியூசியம் கூட்டிட்டுப் போச்சே இந்த அம்மணி என்று நினைவூட்டினோம்.
"ஆமாம்....ஆக சுமார் ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஓலைச்சுவடிகள் காணாமல் போனதாக வெளியான தகவல், அவை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டதான குற்றச்சாட்டை அடுத்து அடக்கி வாசித்த அந்த அம்மணி, தொடர்ந்து தமிழ்நாட்டுல எந்த ஆட்சி மாறினாலும் தொடர்பில் இருக்கு. ஆக, ஏதோ ஒரு பெரிய வேலையை அந்தம்மா மறைமுகமா செஞ்சுட்டு இருக்குன்னு மட்டும் உறுதியாத் தெரியுதுன்னு சொல்றாங்க என்ற பருந்தார் தவெக முதலமைச்சரும், அமைச்சர்களும் கவனமா இருக்கனும்னு ஆய்வு வட்டாரத்தில் பேசிக்கிறாங்க என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
அதே போல, அந்த அம்மணியின் அமைப்புக்கு தமிழ்நாடு அரசு எந்த ஒப்பந்தங்களும் தரக்கூடாது. அப்படித் தந்திருந்தால் அதனை ரத்து செய்யணும். காரணம், அப்படிக் கொடுத்தால் ஓலைச்சுவடிகளுக்கு ஏற்பட்ட அதே கதிதான் உலக மியூசியங்களில், நூலகங்களில் உள்ள தமிழ் ஆவணங்களின் கதியும் என்றும் தமிழ் ஆய்வு வட்டாரத்தினர் சொல்லிக் கவலைப்படுறாங்க" என்ற பருந்தாரின் அலைபேசி சிணுங்கியது. எடுத்து ஹல்லோ என்று சொல்லிக்கொண்டே பறந்துவிட்டார் பருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)