தமிழ்நாடு நாள் நவம்பர் 1: தியாகத்தின் திருவுருவ நாள்! தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்! ம.பொ.சி., மார்ஷல் நேசமணி, சங்கரலிங்கனார் உள்ளிட்ட தியாகிகளின் போராட்டங்களும் தமிழ்நாடு உருவான வரலாறும்.

Nov 01, 2026 - 11:29
Updated: 1 day ago
0 9
தமிழ்நாடு நாள் நவம்பர் 1: தியாகத்தின் திருவுருவ நாள்! தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு

தமிழ்நாடு நாள் – நவம்பர் 1

தியாகத்தின் திருவுருவ நாள்!

தமிழ் ஊடகம் | சிறப்புக் கட்டுரை | 01.11.2026

தமிழ்நாடு என்பது வெறும் நிலப்பரப்பின் பெயரல்ல. அது மொழிக்காகவும், இனத்தின் அடையாளத்திற்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் போராடிய எண்ணற்ற தியாகிகளின் வரலாறு!

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் என்பது தமிழர்களின் மொழியுரிமை, நிலவுரிமை, தனித்துவமான பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றை நினைவுகூரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

மொழிவாரி மாநிலம் உருவான வரலாறு!

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை. பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்தனர்.

மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற போராட்டங்களின் விளைவாக, 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதன் மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாநிலம் புதிய எல்லைகளுடன் உருவானது. இதுவே நவம்பர் 1 தமிழ்நாடு நாளின் வரலாற்று அடிப்படை.

எல்லை காத்த தியாகிகள்!

தமிழகத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளை மீட்கும் போராட்டத்தில் ம.பொ.சிவஞானம், திருத்தணி விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றிய பங்கு வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் தலைமையிலான தமிழரசுக் கழகம் தொடர்ந்து போராடியது. தளபதியாக விநாயகம் போராடினார். திருத்தணி 1960ஆம் ஆண்டில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டம் மகத்தான தியாக வரலாற்றைக் கொண்டது.

மார்ஷல் நேசமணி தலைமையில் நடைபெற்ற திருவிதாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டத்தில் பலர் சிறை சென்றனர்; காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களும் உண்டு.

அந்தப் போராட்டங்களின் விளைவாக அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.

தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்த்தியாகம்!

சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1956ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் தியாகி சங்கரலிங்கனார்.

விருதுநகரில் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அவரது தியாகம் தமிழ்நாட்டின் பெயர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

பின்னர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு நிறைவேற்றியது. 1969 ஜனவரி 14 முதல் தமிழ்நாடு என்ற பெயர் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

நவம்பர் 1 – ஜூலை 18: இரண்டும் வரலாற்று நாட்கள்!

நவம்பர் 1 என்பது மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் மூலம் இன்றைய தமிழகத்தின் முக்கிய நில எல்லைகள் உருவான நாள் ; தமிழ்நாடு உருவான நாள்

ஜூலை 18 என்பது 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாள்.

ஒன்று தமிழர் நிலத்தின் ஒருங்கிணைப்பை நினைவூட்டுகிறது; மற்றொன்று தமிழ்நாடு என்ற பெயருக்கான உரிமைப் போராட்டத்தின் வெற்றியை நினைவூட்டுகிறது.

தியாகிகளை நினைவுகூர்வோம்!

தமிழ்நாடு இன்று பெற்றிருக்கும் நிலப்பரப்பும், மொழி அடையாளமும், பண்பாட்டு உரிமைகளும் எளிதாகக் கிடைத்தவை அல்ல.

வடக்கில் ம.பொ.சி., தெற்கில் மார்ஷல் நேசமணி, தமிழ்நாடு என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனார் உள்ளிட்ட எண்ணற்ற போராளிகளின் உழைப்பும் தியாகமும் அவற்றின் பின்னணியில் உள்ளன.

அவர்களின் தியாகத்தை நினைவுகூர்வதோடு நின்றுவிடாமல், தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழர் ஒற்றுமை, மாநில உரிமைகள், சமூகநீதி ஆகியவற்றைக் காப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

தமிழ்நாடு நாள் என்பது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல; அது தியாகத்தின் திருவுருவ நாள்!

தமிழ்நாடு வாழ்க! தமிழ் வளர்க! தமிழர் வாழ்க !

தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User