8% முதல் 4% ஆகச் சரிந்த நாம் தமிழர்: அங்கீகாரம் இரத்தாகுமா?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் 3.98% ஆகக் குறைந்துள்ளன. இதனால் மாநிலக் கட்சி அங்கீகாரம் இரத்தாகுமா? இடைத்தேர்தல் வாக்குகள் கணக்கிடப்படுமா?
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் 8 விழுக்காடு வாக்குகள் பெற்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற நாம் தமிழர் கட்சி கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 3.98 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.
இத்தகைய நிலையில், மீண்டும் எட்டு விழுக்காடு வாக்குகள் பெற வேண்டும் அல்லது குறித்த எண்ணிக்கையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றாக வேண்டும் எனும் நிலை.
இதையடுத்து இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது.
8 விழுக்காடு வாக்குகள் பெற்று கிடைத்த நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கட்சி அங்கீகாரம், தற்போது 4 விழுக்காடாக வாக்குகள் சரிந்ததால் பறிபோகுமா?
மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆம்’ என்று தோன்றலாம்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதி அப்படிச் சொல்லவில்லை!
8% மட்டுமே மாநிலக் கட்சி அங்கீகாரத்திற்கான அளவுகோல் அல்ல!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னங்கள் ஆணை - Election Symbols (Reservation and Allotment) Order, 1968-ன் பத்தி 6A, ஒரு அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்குப் பல வழிகளை வகுத்துள்ளது.
ஒரு மாநிலத்தில் நடைபெற்ற கடைசி மக்களவை அல்லது சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தது 8% வாக்குகளைப் பெறுவது அவற்றில் ஒரு வழி.
இதுதவிர 6% வாக்குகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டப்பேரவை அல்லது மக்களவை இடங்களை வெல்வது அல்லது சட்டப்பேரவையின் மொத்த இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இடங்களை வெல்வது போன்ற வேறு தகுதிகளும் இருக்கின்றன.
ஆனால் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய விவகாரத்தில் மிகவும் முக்கியமானது
வாக்கு விழுக்காடு 4% ஆகக் குறைந்தாலும் உடனடியாக அங்கீகாரம் போகாது!
இங்குதான் தேர்தல் ஆணைய விதியில் பலரும் கவனிக்காத முக்கியமான பாதுகாப்பு இருக்கிறது.
ஒரு கட்சி ஒரு பொதுத்தேர்தலின் செயல்பாட்டின் அடிப்படையில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நடைபெறும் அடுத்த பொதுத்தேர்தலில், மாநிலக் கட்சிக்கான தகுதிகளை மீண்டும் பூர்த்தி செய்யத் தவறினாலும், அதன் அங்கீகாரம் உடனடியாகப் பறிக்கப்படுவதில்லை.
தேர்தல் சின்னங்கள் ஆணை - Election Symbols Order-ன் பத்தி 6C(1) அதற்கான தொடர்ச்சியை வழங்குகிறது.
இதனை நாம் தமிழர் கட்சிக்குப் பொருத்திப் பார்த்தால் இன்னும் எளிதாகப் புரியும்.
+ 2024 மக்களவைத் தேர்தல்: 8 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள்.
+ 2025: மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம்.
+ 2026 சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்கு விகிதம் சுமார் 4 விழுக்காடாகக் குறைவு.
இதனால் மட்டும், “நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கட்சி அங்கீகாரம் உடனடியாக இரத்தாகிவிட்டது”என்று கூற முடியாது.
அங்கீகாரம் தொடர்வதற்கான பாதுகாப்பை பத்தி 6C வழங்குகிறது.
ஆனால் நிரந்தரப் பாதுகாப்பு கிடையாது!
இதன் இன்னொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டும்.
4 விழுக்காடாக வாக்குகள் குறைந்துவிட்டாலும் அங்கீகாரம் உடனடியாகப் பறிபோகாது என்பதற்காக, நாம் தமிழர் கட்சிக்கு இந்த அங்கீகாரம் நிரந்தரமாகிவிட்டது என்றும் பொருள் கொள்ள முடியாது.
பத்தி 6C-ன் அடுத்த கட்ட விதி முக்கியமானது.
அடுத்தடுத்த பொதுத்தேர்தலில் மாநிலக் கட்சியாகத் தொடர்வதற்கான பத்தி 6A தகுதிகளில் ஏதேனும் ஒன்றை மீண்டும் எட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, எதிர்கால மக்களவை அல்லது சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் அதன் அங்கீகார நிலைக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றால்?
இதில் இன்னொரு சுவாரசியமான கேள்வி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்து ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அதில் நாம் தமிழர் கட்சி 10%, 15% அல்லது 20% வாக்குகளைப் பெற்றால், அந்த வாக்குகளை வைத்து மாநிலக் கட்சி அங்கீகாரத்திற்குத் தேவையான வாக்கு சதவீதத்தை ஈடுகட்ட முடியுமா?
முடியாது.
ஏனெனில் வாக்கு சதவீத அளவுகோல் பொதுத்தேர்தலின் (General election) செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தனித் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல், மாநிலம் முழுவதற்குமான அந்த வாக்கு சதவீதக் கணக்காக மாற்றப்படுவதில்லை.
அதேபோல் ஒரு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றாலும், அதைக் காரணமாக வைத்தும் மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறிக்க முடியாது.
அப்படியானால் இப்போது நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?
எட்டு விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு என்பது நாம் தமிழர் கட்சிக்கு அரசியல் ரீதியாக ஒரு பின்னடைவுதான் ; ஆனால் அதுவே உடனடியான அங்கீகார ரத்து அல்ல!
தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைத் தக்க வைக்க மட்டுமல்ல தேர்தல் வெற்றிகளைப் பெற நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)