ஈ*ழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிரந்தரக் குழு: முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரான்ஸ் தமிழர் அமைப்பு வேண்டுகோள்
பிரான்ஸ் தமிழர் அமைப்பான AFTE, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் ஈ*ழத் தமிழர்களுக்காக நிரந்தர சட்டமன்றக் குழு, புதிய தீர்மானம் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
--வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் செயல்படும் AFTE எனும் அமைப்பு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளது.
AFTE அமைப்பு ஐரோப்பா முழுமைக்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் செயலாற்றி வருகிறது. சுமார் 360 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள ஐக்கிய நாடுகள் சமூகப் பேரவை ECOSOC -ன் பன்னாட்டு சமூக அமைப்புகளின் பரந்த வலையமைப்புடன் இணைந்து செயலாற்றுகிறது.
இந்த அமைப்பு, தமிழ்நாடு முதலைமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கீழ்கண்ட ஆறு கோரிக்கைகளை ஈழத் தமிழர் நலனுக்கான உடனடித் தீர்வுக்கான ஆலோசனைகளாக முன்வைத்துள்ளது.
1. ஈழத்தமிழர் விவகாரங்களுக்காக நிரந்தர சட்டமன்றக் குழு
ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது மட்டுமே நடைபெறாமல், தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழ்நாடு சட்டமன்றத்தின் கீழ் நிரந்தரக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்தக் குழு, ஈழத்தமிழர்களின் அரசியல், மனித உரிமை மற்றும் மனிதநேயப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கும் அமைப்பாக செயல்பட வேண்டும்.
2. ஈழத்தமிழர் உரிமைகளை வலியுறுத்தும் புதிய சட்டமன்றத் தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கான நீதி, அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சர்வதேச பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீர்மானம், இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் அரசியல் ஆவணமாக அமைய வேண்டும்.
3. இந்திய மாநிலங்களின் ஆதரவை ஒருங்கிணைக்க வேண்டும்
ஈழத்தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்குள்ள சட்டமன்றங்களிலும் ஆதரவு தீர்மானங்கள் நிறைவேறத் தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும்.
4. சர்வதேச அரங்குகளில் தமிழ்நாட்டின் குரலை வலுப்படுத்த வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் ஈழத்தமிழர்களின் உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில் தமிழ்நாடு தனது அரசியல் மற்றும் மனிதநேயக் குரலை வலுப்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
5. இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான வாய்ப்புகளை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.
6. "தமிழர் இனப்படுகொ*லைக் கல்வி வாரம்" அறிவிக்க வேண்டும்
ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த வரலாறு, ஆவணங்கள் மற்றும் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆண்டுதோறும் "தமிழர் இனப்படுகொ*லைக் கல்வி வாரம்" கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகள் அனைத்தும் எமது அமைப்பின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்ல; அவை ஆண்டுக்கணக்கில், பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் புலம்பெயர் சமூகங்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் தொகுப்பு விளைவாகும். இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசுக்கும் சட்டமன்றத்திற்கும் தேவைப்படும் எந்தவொரு ஆவணமும், சர்வதேச சட்ட ஆலோசனையும், தொடர்பு இணைப்புகளும் வழங்க எமது அமைப்பு எப்போதும் தயாராக உள்ளது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு தொடர்பான ஆவணங்கள், செம்மணி மற்றும் பிற பொதுக் கல்லறைகள் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள், மற்றும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் சாட்சியங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் தொடர்புடைய துறைகளுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். இது தொடர்பான எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும், எமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எமது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவோ சந்திக்கத் தயாராக உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால், ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு பார்வையாளர்களாக வருகை தரவும், அங்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் நேரடியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்ய எமது கூட்டமைப்பு உதவ முடியும். இத்தகைய நேரடி அனுபவம், தமிழ்நாட்டு அரசியல் தலைமையினருக்கு ஈழத்தமிழர் பிரச்சினையின் சர்வதேச பரிமாணத்தை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு AFTE யின் நிர்வாகிகள் தலைவர் சிவலிங்கம் கமலதாசன், பொதுச் செயலாளர் அழகைய்யா விஜயகுமார், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் போஸ்கோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகம் இணைய இதழை Subscribe செய்யுங்கள். Subscribe பொத்தான் மேலே வலதுபுறம் உள்ளது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)