பிராமி என்பதே தவறு ; தமிழி - வடதமிழி என்பதே சரி ! : மொழியியல் - தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகிறார்
"பிராமி" அல்ல "தமிழி - வடதமிழி" என்பதே சரி என மொழியியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி முன்வைக்கும் விளக்கக் கட்டுரை.
சுமார் 2000 - 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்களையெல்லாம் "பிராமி" எழுத்துக்கள், "தமிழ் - பிராமி" எழுத்துக்கள் என்றே சில ஆய்வாளர்களும், பத்திரிகை ஊடகங்களும் குறிப்பிட்டு வருகின்றன.
ஆனால், "அது தவறு, தமிழி என்பதே சரி" என்று தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உறுதியாகக் கூறுகிறார்.
முன்னதாக இதற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து கொள்வோம்.
மொழி என்றால் என்ன ?
"மொழி" என்பது மனிதர்கள் தங்களது எண்ணங்கள், உணர்வுகள், அறிவு, அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் தொடர்பு முறை ஆகும்.
மொழி இரண்டு முக்கிய வடிவங்களில் இயங்குகிறது:
1. பேச்சு மொழி (Spoken Language) – ஒலிகளின் மூலம் கருத்துகளை வெளிப்படுத்துவது.
2. எழுத்து மொழி (Written Language) – எழுத்து அல்லது வரிவடிவங்களின் மூலம் கருத்துகளைப் பதிவு செய்வது.
உலகில் பல மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் "பேச்சு மொழியாக மட்டுமே" இருந்து பின்னர் எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளன.
வரிவடிவம் என்றால் என்ன?
வரிவடிவம் (Script) என்பது ஒரு மொழியின் ஒலிகளை எழுத்துக்களாகப் பதிவு செய்யப் பயன்படும் "எழுத்து முறை" ஆகும்.
அதாவது,
மொழி என்பது ஒலி; வரிவடிவம் என்பது அந்த ஒலியை எழுதும் முறை.
எடுத்துக்காட்டாக,
தமிழ் மொழி ஒரு மொழி. அதை எழுதத் தொல் தமிழர்கள் தனித்துவமாக தாமே உருவாக்கிப் பயன்படுத்திய எழுத்து வடிவமே தமிழ் வரிவடிவம். அதாவது தமிழ் எழுத்து வடிவம். இது காலந்தோறும் வளர்ச்சி பெற்று தமிழுக்கே உரித்தான வரிவடிவமான தமிழி / வட்டெழுத்து / தமிழம் என்பதாக (இன்றைய தமிழ் எழுத்து) பரிணாம வளர்ச்சி பெற்றது.
மொழிக்கும் வரிவடிவத்திற்கும் உள்ள வேறுபாடு
மொழி - பேசப்படும் ஒலிகளின் அமைப்பு
வரிவடிவம் - அந்த ஒலிகளை எழுதும் எழுத்து முறை
மொழி - கேட்க முடியும்.
வரிவடிவம் - பார்க்கவும் எழுதவும் முடியும்.
எளிய உதாரணம்
தமிழ் ஒரு மொழி.
"தமிழ்" என்ற சொல்லை,
தமிழ் எழுத்தில் – தமிழ்
Roman எழுத்தில் – Tamil
தேவநாகரி எழுத்தில் – तमिऴ् (அண்மித்த வடிவம்)
என்று எழுதலாம்.
ஆக, மொழி ஒன்றே; வரிவடிவம் மட்டும் மாறுகிறது.
உலக மொழிகளில் எடுத்துக்காட்டுகள்
ஆங்கிலம் → இலத்தீன் (Roman) வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறது.
இந்தி → தேவநாகரி வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறது.
உருது → பாரசீக-அரபு வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறது.
பஞ்சாபி → இந்தியாவில் குர்முகி, பாகிஸ்தானில் ஷாஹ்முகி என இரண்டு வேறு வரிவடிவங்களில் எழுதப்படுகிறது.
இதனால், ஒரே மொழிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வரிவடிவங்கள் இருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. ஆனால் தமிழ்மொழிக்கு தனக்கே அமைக்கப்பட்ட தமிழ்வரிவடிவம் மட்டுமே உள்ளது. அதாவது தமிழ்மொழியின் வரிவடிவம் எங்கிருந்தும் கடன் பெறப்படவில்லை.
மொழி (Language) = மனிதர்கள் பேசும், கருத்துகளைப் பகிரும் ஒலி அமைப்பு.
வரிவடிவம் (Script) = அந்த மொழியை எழுதப் பயன்படும் எழுத்து முறை.
மொழி வேறு; வரிவடிவம் வேறு.
ஒரு மொழி பல வரிவடிவங்களில் எழுதப்படலாம்; அதே வரிவடிவத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தவும் முடியும்.
உண்மையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சமவாயாங்க சூக்தம் எனும் ஒரு சமண சமய நூலில் அன்றைய இந்திய நிலப்பரபில் பேசப்பட்ட மொழிகளின் எழுத்து வடிவத்தைக் குறிப்பிடும் போது "பம்பி" என்ற வரிவடிவத்தைத் தான் அந்நூல் குறிப்பிடுகிறது. இந்த 'பம்பி' தான் பின்னாட்களில் பிரஹ்மி/பிரம்மி/பிராமி என சமஸ்கிருத வடிவாக்கப்பட்டது.
வடமொழி வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் யாவும் வழிவழியாகக் கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வந்தவைதான். எனவேதான் அவை ஸ்ருதிகள் (கேட்கப்பட்டவை) என்றும் ஸ்மிருதிகள் (சொல்லப்பட்டவை/நினைவு கூரப்பட்டவை) என்றும் அழைக்கப்படுகின்றன.
காகேசியப் பேரினத்தின் ஒரு பிரிவான இந்தோ-இரானிய / இந்தோ ஆரியர்களில் சிலர் வட இந்தியப் பகுதிகளில் சிந்துவெளி நாகரீகத்தின் கடைசிக் காலகட்டத்துக்குப் பின் நுழைந்த போது அவர்கள் பேசிய மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருந்திருக்கவில்லை.
எனவே தமது முன்னோர்கள் முலம் தங்களுக்குக் கடத்தப்பட்ட வாய்வழிச் செய்திகளை அவர்கள் எழுத்து வடிவில் ஆவணப்படுத்த இயலவில்லை. எனவே அன்று அப்போது அன்றைய இந்திய நிலப்பகுதி முழுதும் வழக்கிலிருந்த தமிழ் மொழியின் வரிவடிவமான தமிழியில் தமது மொழிக்கேற்றவாறு சிற்சில உச்சரிப்பு மாற்றங்கள் செய்து நீக்கி/ சேர்த்து எழுதலாயினர்.
இவ்வாறு தமிழ்மொழி வரிவடிவில் இருந்து கட்டமைக்கப்பட்ட எழுத்து முறைதான் பம்பி என்று அழைக்கப்பட்டு பிற்பாடு பிரம்மியாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டது.
தமிழ்மொழியின் சிறப்பு உயிர்மெய் எழுத்துக்களான ன ழ ற ள இல்லாமலும் உயிர் எழுத்துகளில் எ ஒ இல்லாமலும் தமது மொழிக்ககேற்ற நான்கு வல்லின அழுத்த எழுத்துக்கள் சேர்த்தும் இவ்வாறு சேர்க்கப்பட்ட இந்த 'எழுத்துக்களுக்கு மட்டும்' புதிய ஒரு வரிவடிவத்தை உருவாக்கியும் எழுதலாயினர்.
இதைத்தான் பிரஹ்மி / பிரம்மி / பிராமி என்று அழைக்கின்றனர். உண்மையில் இவை தமிழி எழுத்துக்களே. இவற்றை வடதமிழி என்று அழைக்கலாமே தவிர பிரம்மி என்றோ அசோகன் பிரம்மி என்றோ அழைப்பது மொழியியல் அடிப்படையில் தவறு என்கிறார் நாராயணமூர்த்தி.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
3
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)