கேரளத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தொப்பிக்கல் கண்டுபிடிப்பு: பெருங்கற்காலப் புதைகுழி குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி விளக்கம்
கேரளத்தின் மங்கலம் ஆற்றங்கரையில் 3000–4000 ஆண்டுகள் பழமையான தொப்பிக்கல் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால இரும்புக்காலச் சின்னம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி விளக்கம்.
கேரளத்தில் மங்கலம் நதிக்கரையில் 3000 ஆண்டுகள் பழமையான புதைப்பிடக்குழி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
கேரள மாநிலம் பாலக்காடு- திருச்சூர் மாவட்ட எல்லையில் மங்கலம் ஆற்றங்கரை ஓரம் ஒரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 3000 முதல் 4000 ஆண்டுகள் பழமையான புதைப்பிடக்குழி ஒன்று கண்டறியப்பட்டது. இப்புதைப்பிடக்குழி தொப்பிக்கல் வகையைச் சேர்ந்தது.
பண்டைய நாட்களில் சேரநாட்டில் (இன்றைய கேரளம்) இறந்தவர்களைப் புதைக்கும் பல தனித்துவமான முறைகள் புழக்கத்தில் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த தொப்பிக்கல் புதைகுழிகள். இறந்தவர்களை மண்ணில் நேரடியாகப் புதைத்தோ அல்லது ஒரு தாழியில் வைத்துப் புதைத்தோ புதைத்த இடத்தின் மேல் அடையாளத்துக்காகவும் நாய் நரி தோண்டாமல் இருக்க மிகக் கனமான அரைக்கோள வடிவில் செதுக்கப்பட்ட கல்லை வைப்பது வழக்கம்.
இந்தக் கல்லை மலையாளத்தில் வெட்டுக்கல் என்றும் தமிழில் செம்பறாங்கல் என்றும் அழைப்பர். செம்மை நிறமுள்ள பாறாங்கல் என்பதே செம்பறாங்கல். கேரளப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைப் புறங்களில் இக்கல் அதிக அளவில் காணப்படுகிறது. கடினத் தன்மை கொண்ட கல் என்பதால் கட்டுமானங்களில் இது அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.
இக்கல்லை ஓர் அரைக்கோள வடிவில் செதுக்கிப் புதைகுழிகள் மேல் வைப்பது பண்டைய வழக்கமாக இருந்துள்ளது. பார்ப்பதற்கு தலையில் வைக்கும் தொப்பி போல காட்சி தருவதால் இதற்கு தொப்பிக்கல் (hat stone)என்று ஆங்கிலேயத் தொல்லியலாளர்கள் பெயர் வைத்தனர்.
தற்போது கண்டறியப்பட்ட தொப்பிக்கல் பாலக்காடு-திருச்சூர் மாவட்ட எல்லையில் மங்கலம் நதியின் வடகரையில் காணப்படுகிறது. மேல் பகுதி, அளவில் சுமார் 118 செ.மீ ஆக உள்ளது. எடை ஒரு டன் இருக்கலாம்.
கடல்மட்டத்தில் இருந்து 45 மீட்டர் உயரத்தில் 10.6619 வடக்கு அட்ச ரேகையில் 76.4563 கிழக்கு தீர்க்க ரேகையில் இது அமைந்துள்ளது.
இங்கு அதிக அளவில் இந்த தொப்பிக்கல் சின்னங்கள் இருந்திருக்க வேண்டும். எனினும் இது ஒன்றுதான் தற்போது தப்பிப் பிழைத்திருக்கிறது.
இது சுமார் 3000 முதல் 4000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால இரும்புக்காலத்தைச் சேர்ந்த புதைகுழி அமைப்பாகும்.
இந்தத் தொப்பிக்கல் புதைகுழி அமைப்பு தற்போதைய கேரளத்துக்கு மட்டுமே உரித்தான தனித்துவமான அமைப்பாகும்.இதை உலகில் வேறு எங்கும் காண இயலாது.
இதைப் போன்ற தொப்பிக்கற்கள் திருச்சூர் (திருச்சிவப்பேரூர்) மாவட்டத்தில் உள்ள செர்மனங்ஙாடு (சேரமான்காடு) எனும் சிற்றூரில் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இந்த சேரமான்காடு பெருங்கற்காலச் சின்னங்கள் "உலகப் பாரம்பரிய சின்னம்" எனும் அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை.
அந்த அங்கீகாரம் விரைவில் கிடைக்கவும் மங்கலம்ஆறு தொப்பிக் கல் சின்னத்தை பாதுகாக்கவும் கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இவை நமது தொன்மையான பண்பாட்டுச் சின்னங்கள்.
இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)