சென்னை விமான நிலைய நிர்வாகம் தனியாருக்கா? விஜய் கடிதம் முதல் அடானி வரை — முழுப் பின்னணி
சென்னை விமான நிலையத்தின் AAI நிர்வாகத்தை மாற்றி தனியார் நிறுவனத்தைக் கொண்டுவர விஜய் கோரியுள்ளாரா? AAI-யின் அதிகாரங்கள் என்ன? ஏற்கெனவே தனியார் நிர்வாகத்திற்குச் சென்ற விமான நிலையங்கள் எவை? அடானி வருகிறாரா? விரிவான பின்னணி
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையத்திற்கு வந்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை விமான நிலையத்தின் தற்போதைய அரசு செயல் நிறுவனமான "இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை" — Airports Authority of India (AAI)வை மாற்றி, வேறு தனியார் நிறுவனத்திடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியிருப்பதாக இன்று செப்டம்பர் 19 அன்று பல செய்திகள் வெளியாகியுள்ளன.
பயணிகள் வசதி, விமான இயக்கம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சிக்கு உலகத்தரமான விமான நிலையம் தேவை என்பதையும் அந்தக் கோரிக்கைக்கான காரணங்களாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதில் எழும் அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே பல தனியார் நிறுவனங்கள் வேலை செய்யும்போது, AAI-யிடம் அப்படி சிறப்புப் பொறுப்புகள் உள்ளன ? அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தால் உண்மையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
விமான நிறுவனம் வேறு; விமான நிலைய நிர்வாகம் வேறு!
இந்திய அரசிடம் தற்போது பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசுக்குச் சொந்தமான பெரிய வணிக விமான நிறுவனம் இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்கும் AAI-க்கும் தொடர்பில்லை.
Air India போன்ற வானூர்தி சேவை நிறுவனம், பயணிகளை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.
ஆனால்,
AAI என்பது ஒரு Airport operator / infrastructure authority, அதாவது வானூர்தி நிலைய செயல் இயக்ககம் மற்றும் வானூர்தி நிலைய அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கிப் பராமரிக்கும் ஆணையம் ஆகும்.
AAI-யின் அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, விமான நிலையங்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல்; ஓடுபாதைகள், விமானம் நகரும் பாதை, விமான நிறுத்தக் களம் ஆகியவற்றை உருவாக்கிப் பராமரித்தல்; பயணிகள் முனையங்களை நிர்வகித்தல்; பயணிகள் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை அதன் பணிகளில் அடங்குகின்றன.
அதைவிட முக்கியமாக இந்திய வான்வெளிக்கான விமான வழிச்செலுத்தல் சேவைகள், கண்காணிப்பு, வான் போக்குவரத்து மேலாண்மைபோன்ற மிக முக்கியமான விமானப் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் AAI மேற்கொள்கிறது.
எனவே,
“அரசிடம் விமான நிறுவனம் இல்லை; ஆகவே விமான நிலையத்திலும் அரசுக்கு வேலை இல்லை” என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
இரண்டும் முற்றிலும் வெவ்வேறு துறைகள்.
அப்படியானால் தனியார் நிறுவனங்கள் இப்போது என்ன செய்கின்றன?
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு பணிகளை ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. விமானத் தரை கையாளுதல் (Ground handling) போன்ற பணிகளில் தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. AAI-யின் தற்போதைய Aeronautical Information Publication-ல் சென்னை விமான நிலையத்தின் ground handlers ஆக AI Airport Services மற்றும் Bird Airport Services நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதுபோல உணவகங்கள், கடைகள், வாகன நிறுத்தம், தூய்மை, சில பராமரிப்புப் பணிகள், எரிபொருள் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமான சேவைகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
2026-ல்கூட சென்னை விமான நிலையத்திற்கான தரை கையாளும் சலுகைப் பணிக்கு (ground-handling concession-க்கு) AAI தனியாக சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதேபோல மின் தூக்கி (elevators), நகரும் படிக்கட்டு (escalators), நகரும் தரைப்பாதை (travellators) போன்றவற்றின் சேவை வழங்கல்கள் தனியார் ஒப்பந்தத்துடன் செயல்படுகின்றன.
ஆனால் ஒரு விமான நிலையத்தின் சில பணிகளைத் தனியாரிடம் ஒப்பந்தம் கொடுப்பதும், விமான நிலையத்தின் ஒட்டுமொத்த இயக்கம், மேலாண்மை மற்றும் வளர்ச்சி (Operation, Management and Development) உரிமையை ஒரு தனியார் நிறுவனத்தாருக்கு வழங்குவதும் ஒன்றல்ல.
இதுதான் தற்போதைய விவாதத்தின் அடிப்படையாக இருக்கிறது.
முழு நிர்வாகம் தனியாரிடம் சென்றால் என்ன நடக்கும்?
இந்தியாவில் இதற்கு ஏற்கெனவே முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
மத்திய அரசு சில AAI விமான நிலையங்களை PPP அதாவது "பொது மற்றும் தனியார் பங்காண்மை" (Public Private Partnership) முறையில் தனியார் நிறுவனங்களிடம் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படையில் வழங்கியுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட பின்னரும் விமான நிலையத்தின் உரிமையாளராக AAI தொடரும்; ஒப்பந்தச் சலுகைக் காலம் முடிந்ததும் விமான நிலையம் மீண்டும் AAI-க்கு திரும்பும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளது.
அதாவது எளிமையாகச் சொன்னால்,
நிலத்தையே தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிடுவது அல்ல.
ஆனால் விமான நிலையத்தை நடத்துதல், பராமரித்தல், வணிக ரீதியாக மேம்படுத்துதல் போன்ற மிகப்பெரிய நிர்வாக அதிகாரங்கள் நீண்டகால சலுகை ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனத்திற்குச் செல்லக்கூடும்.
இதுதான் சென்னை விமான நிலையத்திலும் நடந்தால் ஏற்படக்கூடிய அடிப்படை மாற்றம்.
ஆனால் இதில் இன்னொரு முக்கியமான செய்தி இருக்கிறது!
சென்னை விமான நிலையத்தை PPP அல்லது சொத்தைப் பணமாக்குதல் (asset monetisation) பாதைக்கு கொண்டுவருவது 2026-ல் திடீரென்று உருவான எண்ணம் அல்ல.
மத்திய அரசின் National Monetisation Pipeline திட்டத்தின் கீழ் அதாவது அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ள பழைய அல்லது முடங்கிய பொதுத்துறைச் சொத்துக்களை தனியாருக்குப் பங்கு அல்லது குத்தகைக்கு விடுவது என்ற அடிப்படையில் 2022–2025 காலத்தில் அடையாளம் காணப்பட்ட 25 AAI விமான நிலையங்களின் பட்டியலில் சென்னையும் ஏற்கெனவே இடம்பெற்றிருந்தது.
ஆகவே,
“விஜய் கடிதம் எழுதிய பிறகுதான் சென்னை விமான நிலையத்தைத் தனியார் நிர்வாகத்திற்கு மாற்றும் எண்ணமே உருவானது” என்பது தவறான புரிதல்.
மத்திய அரசின் முந்தைய கொள்கைப் பட்டியலிலேயே சென்னை இருந்திருக்கிறது.
இப்போது முக்கியத்துவம் பெறுவது, AAI-யை மாற்றி வேறு செயற்பாட்டாளர் (operator) வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரே மத்திய அரசிடம் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்தான்.
அதேவேளை,
“சென்னை விமான நிலையத்தைத் தனியார் நிறுவனத்திடம் மாற்றும் கோரிக்கையின் அடுத்த கட்டம் என்ன? அதற்கான போட்டியில் அடானி உள்ளிட்ட நிறுவனங்கள் வருமா?”
என்று கேள்வி எழுப்புவதற்கு நியாயமான அடிப்படை இருக்கிறது.
முதலமைச்சரின் கடிதத்தின் முழு நகல் அரசு சார்பில் வெளியிடப்பட்டால்தான் உண்மை தெரியும்.
+ AAI-யை முழுமையாக செயற்பாட்டாளர் (operator) பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளாரா?
+ PPP முறையைத்தான் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளதா? + தனியார் நிறுவன operator குறித்து குறிப்பிட்டுள்ளதா?
+ எத்தனை ஆண்டுகளுக்கான திட்டமிடப்பட்ட சலுகை தரப்படுகிறது?
+ விமான நிலையத்தின் வருவாய், கட்டணங்கள், ஊழியர்கள் மற்றும் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை முதலீடுகளின் நிலை என்ன?
இவைதான் அடுத்தகட்டத்தில் பதில் தேடவேண்டிய கேள்விகள்.
விமான நிலைய நிர்வாகம் மற்றும் இயக்கப் (operator) பொறுப்பிலிருந்து AAI-யை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உண்மையிலேயே செயல்படுத்தப்பட்டால், அது சில பராமரிப்புப் பணிகளை வெளியார் நிறுவனத்திடம் outsource செய்வது போன்ற சாதாரண மாற்றமல்ல.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் நிர்வாக மாதிரியையே மாற்றக்கூடிய மிகப்பெரிய கொள்கை முடிவாக அது அமையும்.
அதேவேளை, சென்னையில் இப்படியொரு நிர்வாக மாற்றம் நடந்தால் அது இந்தியாவில் ஒன்றும் முதல் மாற்றம் அல்ல, புதியதுமல்ல; ஆனால் அது எந்த நிறுவனத்தின் கைகளுக்குச் செல்லும் என்பதுதான் அடுத்த கேள்வியாக எழலாம்.
இந்தியாவில் ஏற்கெனவே தனியார் நிர்வாகத்திற்குச் சென்ற AAI விமான நிலையங்கள்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, AAI தனது எட்டு விமான நிலையங்களை நீண்டகால PPP முறையில் ஒப்படைத்துள்ளது:
அவை,
01. டெல்லி – இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
02. மும்பை – சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையம்
03. அகமதாபாத் விமான நிலையம்
04. லக்னோ விமான நிலையம்
05. குவாஹாத்தி விமான நிலையம்
06. திருவனந்தபுரம் விமான நிலையம்
07. மங்களூரு விமான நிலையம்
08. ஜெய்ப்பூர் விமான நிலையம்.
இந்த எட்டு AAI விமான நிலையங்களும் Adani Enterprises நிறுவனத்தின் Special Purpose Vehicle நிறுவனங்களிடம் PPP முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)