தாய்லாந்து தங்க மோதிரத்தில் இருப்பது தமிழ்ப் பெயரல்ல? தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியின் புதிய ஆய்வு

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தங்க முத்திரை மோதிரத்தில் உள்ள தமிழி (பிராமி) எழுத்துப் பொறிப்பு தமிழ்ப் பெயரா அல்லது வேறு மொழிச் சொல்லா? பல்வேறு வாசிப்புகளை ஒப்பிட்டு தொல்லியல் ஆய்வறிஞர் நாராயணமூர்த்தி முன்வைக்கும் விரிவான ஆய்வு.

Jul 27, 2026 - 15:18
Updated: 3 days ago
0 194
தாய்லாந்து தங்க மோதிரத்தில் இருப்பது தமிழ்ப் பெயரல்ல? தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியின் புதிய ஆய்வு

தொல்லியல், மொழியியல் ஆய்வறிஞர் நாராயணமூர்த்தி

தாய்லாந்து அகழாய்வில் கிடைத்த தங்க முத்திரை மோதிரம்

அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடந்த அகழாய்வில் கிடைத்த இரண்டு மோதிரங்களில் ஒரு தங்க மோதிரத்தில் இருந்த பிராமி என்று வடமொழியில் அழைக்கப்படக்கூடிய 'தமிழி' எழுத்து உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திதை நாம் அறிவோம். அங்கு கிடைத்த மற்றொரு மோதிரத்தில் எழுத்துப் பொறிப்பு இல்லை.

உலகளவில் கவனம் பெற்ற தமிழி எழுத்துப் பொறிப்பு

இந்த எழுத்துப் பொறிப்பு பொதுவாக 'பண்டைய இந்திய எழுத்து' என அறிவிக்கப்பட்டது. இதை ஆராய்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் இந்த முத்திரை மோதிர எழுத்துப் பொறிப்பை 'கண்ணாடிப் பார்வை முறை' என்று அறிவித்தார்கள். அதாவது தற்போதைய Ambulance வண்டிகளில் எழுத்துகள் திருப்பி எழுதப் பட்டிருப்பதைப் போன்ற முறை. கண்ணாடியில் பார்த்தால் மட்டுமே நேரடியாக வாசித்துப் பொருள் காண முடியும். தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் போல, தமது அங்கீகாரத்தை அளிக்க இதை அச்சுப் பதித்து அனுப்புவது அன்றைய வழக்கம்.

வடஇந்திய ஆய்வாளர்களின் ‘புஸரக்ஷேதர’ வாசிப்பு

இதை ஆராய்ந்த வடஇந்திய கல்வெட்டாய்வாளர்கள் "புஸரக்ஷேதர (ட)" என்று வடதமிழி (பிராமி) எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள். அத்துடன் அதை புஸ என்றால் பூச நட்சத்திரம் என்றும் ரக்ஷேதர(ட) எனில் ரக்ஷிக்கப்பட்டவர் என்றும் ஆகவே பூசநட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர் என்றும் பொருள் கூறினார்கள்.

முருகனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பெயர் விளக்கம்

இதை வடமொழி மோகம் கொண்ட நமது சில தமிழ் ஆய்வாளர்கள் , பூசநட்சத்திரம் கார்த்திகேயனாகிய முருகனுக்குரியது என்பதால் முருகனால் காக்கப்பட்டவர் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்.

அளர்வைரதன்’ என்ற தமிழ்ப் பெயர் வாசிப்பு

இந்த எழுத்தை முதன்முதலில் முத்திரை மோதிரம் கிடைத்த தாய்லாந்தில் வசிக்கும் பண்டைய தமிழி வரிவடிவத்தைப் படிக்கத் தெரிந்த ஒரு மென்பொருளாளர் இது வடமொழி அல்ல என்றும் அது தமிழ்ப்பெயர் என்றும் அதில் "அளர்வைரதன்" என்று தூய தமிழில் எழுதி இருப்பதாகவும் அறிவித்தார். இந்த வாசிப்பை மார்க்சியகாந்தி, சாந்தலிங்கம் போன்ற கல்வெட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மையில் அந்த மோதிரத்தில் என்னதான் எழுதப்பட்டுள்ளது?

அது ஒரு தங்கமோதிரம். முத்திரை மோதிரம். அந்த மோதிரத்தில் உள்ள எழுத்துகள் மோதிரம் செய்யப்பட்ட பின்பு உலோகத்தால் கீறி எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு உலோகத்தில் பொறிப்பு மேற்கொள்வது கடினமான செயல். கீறும்போது எழுத்துக்களின் முழு வடிவமும் வராமல் ஆங்காங்கே இடைவெளி ஏற்பட்டு விடும். தங்கமும் சேதாரம் ஆகும் என்பதால் அழுத்தமான கீறலை தவிர்ப்பது இயல்பானதே. இந்த மோதிரத்திலும் இவ்வாறான கீறல் முறையில்தான் எழுதப்பட்டுள்ளது.

தேனூர் தங்கக் கட்டிகளின் தமிழி எழுத்துகளுடன் ஒப்பீடு

கடந்த 2013 ல் நானும், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் பெரியசாமியும் வாசித்த,

"கடந்த 2009 ஆம் ஆண்டு புதையலாகக் கிடைத்து, மதுரை அரசு கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் தேனூர் தங்கக் கட்டிகளில்" இருந்த தமிழி எழுத்துக்கள் (போகுல் குன்றக் கோதஇ) இவ்வாறு கீறல் முறையில் இல்லாமல், எழுத்துக்கள் புள்ளி இடப்பட்டு எழுதப் பட்டிருந்தன. அதாவது தற்கால பாத்திரங்களில் பொறிக்கப்படும் மெஷின் பொறிப்பைப் போல. எனவே அதை வாசிப்பது எங்களுக்கு எளிதாக இருந்தது.

ஆனால் தற்போது வெளியான புகைப் படத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமலும் கீறல் முழுமை பெறாமலும் இருப்பதால் இதை வாசிப்பதில் பலருக்கும் குழப்பம் நேரிடுகிறது. எனவேதான் வட இந்திய ஆய்வாளர்களுக்கும் தமிழக ஆய்வாளர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

சரி. தாய்லாந்து முத்திரை மோதிர எழுத்துக்கு வருவோம்.

மோதிரத்தில் உள்ள எழுத்துக்களை நேரடியாக இடமிருந்து வலமாக வாசித்தால் "ர(ட)தளாரளரி என்று தமிழிலும் வடமொழியிலும் வாசிக்க முடிகிறது. இதில் இரண்டிலுமே பொருள் வரவில்லை என்பதால் இந்த நேரடி வாசிப்பு முறையை கைவிட்டு கண்ணாடிப்பார்வை வாசிப்பு முறைக்கு மாறுவோம்.

குன்றக்குடி தமிழி எழுத்துகள் தரும் சான்று

உலகெங்கிலும் இவ்வாறான சில முத்திரை மோதிரங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் கண்ணாடிப்பார்வை பொறிப்பு முறை உள்ளது. குன்றக்குடி குகையில்உள்ள தலைகீழ், வல-இட தமிழி எழுத்துகள் இவ்வாறான எழுத்துமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். 

இந்த மோதிர எழுத்துக்களை வட தமிழி (பிராமி) எழுத்து முறையில் கண்ணாடிப் பார்வையில் கீழ்க்கண்டவாறு வாசித்தார்கள்

"புஸரக்ஷேதர" (ட).

 இதற்கு அவர்கள் கூறிய விளக்கம் முன்பே கூறப்பட்டது.

நட்சத்திரங்களின் பெயர்களோடு தொடர்புபடுத்திப் பிற்காலத் திருவிதாங்கூர் சேர மன்னர்கள் தங்கள் பெயர்களை சித்திரை திருநாள் மகாராஜா /ஆயில்யம் திருநாள் மகாராஜா என்று வைத்திருந்ததை இதோடு ஒப்பு நோக்க முடிகிறது.

எனினும் இவ்வழக்கம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. 2000 வருடங்களுக்கு முந்தைய இந்த தாய்லாந்து மோதிரத்தை அணிந்திருந்தவருக்கு சேர மன்னர்களோடு இருந்த தொடர்பை உறுதிப்படுத்த நமக்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து அங்கு போனவர் எனில் அவருக்கோ அல்லது அவர் தாய்லாந்துக்காரர் எனில் அங்கோ இவ்வழக்கம் இருந்ததா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.

புஸர’ மற்றும் ‘சைதர’ சொற்களின் தாய்லாந்து தொடர்பு

புஸ என்பதை பூச நட்சத்திரம் எனக் கருதாமல் அதை புஸ எனும் ஏதோ ஒரு வடநாட்டு அரசனால் காக்கப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம்.இந்த புஸ என்பவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புஸ்ய(மித்ரசுங்கன்) என கருதினால் புஸ்யமித்ர சுங்கனால் காக்கப்பட்டவர் என்றும் இந்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் வடமொழியின் வட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்றும் ஆகிறது.

அவ்வாறு இல்லாமல் இந்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்களை பாலிமொழி என்று கருதினால் அது ஏதோ ஒரு பௌத்தம் தொடர்பான பெயராக இருக்கலாம் என்று கருத முடிகிறது. ஏனெனில் தாய்லாந்தில் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் வேரூன்றி விட்டது. பௌத்தத்தின் பாலிமொழிக் கல்வெட்டுகளில் 'திஸ' என்று இருப்பதைப் போலவே 'புஸ' என்பதும் ஒரு பெயராக இருந்திருக்கலாம். எனினும் மோதிர எழுத்துக்களில் வலமிருந்து இடமாக 4 ஆவதாக உள்ள எழுத்து வடமொழி கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுவது போல "க்ஷ" எனும் கூட்டெழுத்து அல்ல.

தாய்லாந்து மோதிரத்தில் உள்ள 'புஸ' எனும் சொல் இலங்கையில்... 

தாய்லாந்து மோதிரத்தில் உள்ள 'புஸ' எனும் இதே  சொல் இலங்கை அவுகானா வில் கிடைத்த சிங்கள பிராகிருத மொழியின் இதே காலகட்டத்தைச் சேர்ந்த கிமு.3 > கி.பி.1 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த  கல்வெட்டில் ஒரு  தலைவனுக்குஉரிய சொல்லாக 'புஸ' குறிக்கப்பட்டுள்ளது.
 

எனவே மோதிரச் சொல் இலங்கை தேரவாத பௌத்தத்தைச் சேர்ந்த புஸ என்பவருக்கு உரியது என்பது மேலும் உறுதியாகிறது.

அந்த மோதிரத்தில் வலமிருந்து இடமாக 2 ஆம் எழுத்து கண்ணாடிப்பார்வையில்  "ஸ" .
இது எனக்கு குறிப்பாக இலங்கை 'சார்ந்த' பாலிமொழி கல்வெட்டுகளை நினைவூட்டியது.
 

எழுத்தமைதி (Paleography) சற்றேறக்குறைய கி.பி. முதல் நூற்றாண்டாக இருப்பதால் இவர் இலங்கையின் தேரவாத பௌத்தத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கித்தேன்.

கி.மு1 / கி.பி 1 ல் தாய்லாந்தில் இலங்கையின் தேரவாத பௌத்தம் பரவத்தொடங்கிய காலத்தில் இம்மோதிர எழுத்துப் பொறிப்பு நிகழ்ந்துள்ளது. எனவே இம் மோதிரத்துக்குரியவர் இலங்கையைச் சேர்ந்த பௌத்தராகவோ/அல்லது உள்ளூர் தாய்லாந்து பௌத்தராகவோ இருந்திருக்க வேண்டும் எனக் கருதினேன்.

புத்தர் இறந்த பிறகு அவரை அடியொற்றி "எரிப்பு"கள் நடந்தாலும் தேரவாத /ஹீனயான /மகாயான  பௌத்தத்திலும் புதைப்பு சிறியஅளவில் (20%) நடைபெற்றே வந்துள்ளது.


அந்த'சிறியஅளவு'இந்த ஃபெட்சாபுரி எனக்  கருதினேன்.இந்த மோதிரமும் /எழுத்தும்/அதை அணிந்திருந்தமனிதரும் இலங்கை சார்ந்த தேரவாதத்தை பின்பற்றிய தாய்லாந்துக்காரர் என்பது எனது பணிவான கருத்து

தமிழி, வடதமிழி, பல்லவ கிரந்த வரிவடிவங்களின் தாக்கம்

உண்மையில் அது 'சை' அல்லது 'வை' எனும் தனி எழுத்து. வட தமிழி (பிராமி) கல்வெட்டுகளில் மட்டுமே காணப்படும்- தமிழில் இல்லாத- இந்தக் கூட்டெழுத்து முறையின் அடிப்படையில் அவர்கள் உரிமை கோரும் வட தமிழி (பிராமி) வரிவடிவம் தவறு. அந்த 4 ஆம் எழுத்தில் 'ஸ' என்பதற்கான வடிவம் இருந்தாலும் 'க்' என்பதற்கான வட தமிழி (பிராமியின்) தனித்துவமான கூட்டெழுத்து வடிவம் இல்லை. அசோக மன்னர் பொறிப்பித்த நேபாளத்தில் உள்ள லும்பினி- ருமின்தே தூண் கல்வெட்டு போன்ற வட தமிழி (பிராமி) கல்வெட்டுகளில் இந்தக் கூட்டெழுத்து முறையை நாம் தெளிவாகக் காண முடியும்.

எனவே அது வடமொழிப் பெயர் அல்ல. 'ஸ' எனும் ஒரு எழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதை அவர்கள் உரிமை கொண்டாட இயலாது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள சங்க கால சமணக் கல்வெட்டுகளில் இந்த 'ஸ' அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ரமேஷ் பரமேஸ்வரன் போன்ற தமிழ்ப்பெயர்களில் ஸ ஷ இருப்பதால் தமிழர்கள் வடவர்கள் ஆகிவிட மாட்டார்கள் அல்லவா..!

இப்போது 'அளர்வைரதன்' எனும் தமிழி எழுத்துப் பொறிப்புக்கு வருவோம்.

தமிழ்நாட்டுக்கும் தாய்லாந்து உள்ளிட்ட கீழ்த் திசை நாடுகளுக்கும் உள்ள பண்டைய தொடர்புகள் உலகப் புகழ் பெற்றவை. உறுதி செய்யப்பட்டவை. இதே தாய்லாந்தில் 2000 ஆண்டுகள் பழமையான 'பெரும்ப(த்)தன்கல்'என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு உள்ள உரைகல் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

தாய்லாந்து தங்கமோதிர எழுத்தை கண்ணாடிப்பார்வையில் வாசித்த மென்பொறியாளர் இதை அளர்வைரதன் என்று தமிழ்ப்பெயராக வாசித்துள்ளதால் அதை ஆராய்வோம்.

உண்மையில் அந்த எழுத்துப் பொறிப்பில் உள்ள முதல் எழுத்து 'அ' அல்ல. மாறாக அது 'பு' ஆகும். அடுத்து வாசித்த 2 ஆம் எழுத்து ள அல்ல.உண்மையில் அது 'ஸ' எனும் வட தமிழி (பிராமி) எழுத்தாகும். 3 ஆம் எழுத்தான 'ர' வை சரியாக வாசித்துள்ளார்.அடுத்த 4 ஆம் எழுத்து சிக்கலான எழுத்தமைப்பைக் கொண்டுள்ளது. அதை 'வை'என வாசித்துள்ளார். எழுத்தின் கீழ்ப்பகுதி வளைந்து அருகில் உள்ள நேர்கோட்டுடன் ஒட்டாததால் 'சை' என படிக்க வேண்டும். அடுத்து 5 ஆம் எழுத்தாக அவர் வாசித்த 'ர' எழுத்து, அந்த மோதிரத்தில் இல்லவே இல்லை. அந்த இடத்தில் ஒரு கற்பனையான நேர்குத்து ஒற்றைக் கோட்டை அவராகப் புகுத்தி உள்ளார். அடுத்த 'த' வை சரியாக வாசித்துள்ளார். எனினும் எழுத்தின் அடிநுனியில் ஒரு சிறு படுக்கைக் கோடு ஒட்டி இருப்பதாக காட்சி தருவதால் அதை 'து' எனவும் வாசிக்க முடிகிறது. அதன் பிறகு கடைசி எழுத்தை 'ன்' என வாசித்துள்ளார். ஆனால் கடைசி எழுத்தில் ன அல்லது ன் க்கு உரிய வடிவம் இல்லை. அது ஒரு நேர்குத்துக் கோடாக காட்சி தருவதால் அதை ர என வாசிக்க வேண்டும். எழுத்தின் அடியில் ஒரு படுக்கைக் கோடு இருப்பதாகக் காட்சி தருவதாக எடுத்துக் கொண்டாலும் அது தமிழுக்கே உரிய தனித்துவமான 'ன' இல்லை. ஏனெனில் அது ன/ன் என இருந்தால் எழுத்தின் மேல்பக்க வளைவு வலது புறம் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இதில் இடது புறம் திரும்பி உள்ளது. எனவே 'னே' என அதை வாசிக்க வேண்டி வருகிறது.

கண்ணாடிப்பார்வை காட்சியை நமது 'வசதிக்கு' ஏற்ப மாற்றிப் படிக்க இயலாது. கோட்டின் அடி நுனியில் வலதுபுறம் திரும்பிய ஒரு சிறு படுக்கைக் கோடு இருப்பதாகக் காட்சி அளிப்பதால் எழுத்தின் தெளிவின்மை காரணமாக அதை வடமொழிக் கல்வெட்டாய்வாளர்கள் 'ட' அல்லது 'ர' என வாசிக்கிறார்கள். சத்தீஸ்கட் என்றும் சத்தீஸ்கர் என்றும் வாசிப்பதைப் போல.

அந்த எழுத்தைத் (தென்) தமிழி எனக் கருதி வாசித்தால்

அதை புஸரளேதர என்று வாசிக்க முடிகிறது. எழுத்தின் தெளிவின்மை காரணமாக அதை புஸரவைதர/புஸரசைதர எனவும் வாசிக்க முடிகிறது.இது தமிழ்ப் பெயருக்கு ஒத்து வரவில்லை.

எவ்வாறாயினும் 'அளர்வைரதன்' என்னும் வலுக்கட்டாய வாசிப்பு முறை தவறானது.

இவ்வாறாக இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் எழுத்தின் தெளிவின்மையும் அதை நாம் புரிந்து கொள்ளும் தன்மையும்தான். அதில் உள்ள 'ஸ' எனும் வட தமிழி (பிராமி) எழுத்தை 'ள' என வாசிக்கும் தமிழ் வாசிப்பு முறையும், சை/வை/ளே என்பதை 'க்ஷே'என வாசிக்கும் வட தமிழி (பிராமி) வாசிப்பு முறையும்தான். மோதிரத்தை நேரில் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தமிழி எழுத்தை வாசிக்கத் தெரிந்த யாரும் அதை மிகச் சரியாக வாசித்துவிட முடியும்.

தமிழுக்கு 'வலுக்கட்டாயப் பெருமைகள்' தேவையில்லை. 

அண்மையில் எகிப்து பிரமிடில் கிடைத்த சிகைக் கொற்றன் எனும் தமிழ்பெயர் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அறிவோம். அது நமது தூய தமிழ்ப்பெயராக இருந்தும் கூட அதை சில வடமொழி ஆய்வாளர்களும் 'சில' தமிழ் 'ஆய்வாளர்'களும் சிகை என்பது சமஸ்கிருதச் சொல் என்று உரிமை கொண்டாடியதையும் அறிவோம். அதை நாம் மறுத்துக் காணொலியும் பதிவிட்டிருந்தோம். அவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து விடக் கூடாது. தமிழுக்கு 'வலுக்கட்டாயப் பெருமைகள்' தேவையில்லை. அது தமிழுக்குப் பெருமை சேர்க்காது.

மோதிரத்தை அணிந்திருந்த தாய்லாந்து நாட்டுக்குரியவரின் பெயர்

 அந்த முத்திரை மோதிரம் கிடைத்த இடம் ஃபெட்சாபுரி எனும் தாய்லாந்துப் பகுதி. அகழாய்வு செய்யப்பட்ட இடம் ஒரு புதைகுழி. எனவே அதைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் தமிழி/பிராமி எழுத்துக்கள்தான். அதில் ஐயமில்லை.ஆனால் அந்தப் பெயர் அந்த மோதிரத்தை அணிந்திருந்த தாய்லாந்து நாட்டுக்குரியவரின் பெயர் என்பதை ஆய்வாளர்கள் ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது தவறி விட்டார்கள்..?

தாய்லாந்து தொல்லியலாளர்களால் அதை ஒரு DNA test மூலம் கண்டறிந்து விட முடியும்

அவர் தமிழரா அல்லது தாய்லாந்துக்காரரா என்பதைக் கண்டறிவது நாம் வாழும் இந்த அதிநவீன அறிவியல் உலகில் மிக எளிதானது. தாய்லாந்து தொல்லியலாளர்களால் அதை ஒரு DNA test மூலம் கண்டறிந்து விட முடியும். ஓரளவு நமக்கு தெளிவு கிடைத்துவிடும். தமிழர் தாய்(லாந்து)மொழி எழுத்துள்ள மோதிரத்தைப் பயன்படுத்தினாரா அல்லது தமிழி எழுத்தில் வடமொழி 'ஸ' உள்ள தமது பெயரை பயன்படுத்தினாரா என்பது ஓரளவு(தான்) தெளிவாகும். அல்லது தாய்(லாந்து)மொழிக்காரர் அக்காலகட்டத்தில் அங்கு புழக்கத்தில் இருந்த தமிழி/வடபிரம்மி எழுத்தில் அம்மோதிர எழுத்துக்களை பொறிப்பித்தாரா என்பதும் ஓரளவு தெரியக்கூடும். எதுவும் நடந்திருக்கலாம். அது அந்த மோதிரத்தை அணிந்திருந்தவருக்கே வெளிச்சம்..!

தமிழ்மொழிப் பற்றின் காரணமாக நாமோ அதை வலுக்கட்டாய உரிமை கொண்டாடுவது சரியல்ல.

புஸர என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயராக இருக்கலாம். அல்லது அதை அணிந்திருந்த மனிதரின் முதல் பெயராகவும் இருக்கலாம்.சைதர என்பது ஒரு தாய்(லாந்து)மொழிச் சொல். தாய்(லாந்து) மொழி வடமொழியுடன் நெருங்கிய தொடர்புள்ள மொழி. அங்கு பௌத்தம் பரவியதன் காரணமாக வடமொழிச் சொற்கள் 50 % அதில் கலந்துள்ளன.மேலும் மோதிரத்தில் உள்ள 'சைதர' எனும் சொல் தாய்லாந்தில் புழக்கத்தில் உள்ள பெயர்ச் சொல்தான். சைதர என்பது சித்திரை மாதத்தைக் குறிக்கும் சொல். எனவே புஸரசைதர என்பது அந்த மண்ணுக்குரியவரின் பெயர்ச் சொல் என்று கருதலாம். நட்சத்திரம் மாதத்தின் அடிப்படை கொண்ட சொல் என்று கருதலாம். அல்லது புஸர எனும் ஊரைச் சேர்ந்த சைதர என்பவரின் பெயர் என்றும் கருதலாம். (புஸர என்பதற்கு தாய் மற்றும் மலாய் மொழிகளில் புதைகுழி/புதைக்கும் இடம் என்று ஒரு பொருள் இருக்கிறது). ஆய்வுகள் அந்தந்த மண்ணுக்குரிய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளாக இருக்க வேண்டும். மாறாக வடமொழிப்பற்றின் காரணமாக வடமொழி ஆய்வாளர்களோ, நமது தமிழ்மொழிப் பற்றின் காரணமாக நாமோ அதை வலுக்கட்டாய உரிமை கொண்டாடுவது சரியல்ல.

இவ்வாறே எகிப்து பிரமிடில் உள்ள பாண்டியநாடன் எனும் பெயரை நமது தமிழக ஆய்வாளர்களே அது பாண்ட்யத்தம்/பந்தம் எனும் வடசொல் எனக் கூறியபோது நமது உண்மையான உரிமையை விட்டுக் கொடுக்காமல் அது தமிழ்மொழி பாண்டியநாடன் தான் என நிறுவினோம்.

எனவே நமது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்தவர் உரிமையை வலுக்கட்டாய அபகரிப்பு செய்யாமல் இருப்பதும்தான்.

எழுத்து வரிவடிவம் தமிழி அல்லது வட தமிழி (பிராமி) வரிவடிவம்தான். ஆனால்....

எனவே நமது ஆய்வுகளின் படி அம்மோதிரத்தில் இருக்கும் எழுத்து வரிவடிவம் தமிழி அல்லது வட தமிழி (பிராமி) வரிவடிவம்தான் என்பதும், ஆனால் அதே வேளை அந்த வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் தாய்லாந்து மண்ணின் மைந்தர் பெயர் என்பதும்தான்.

ஏனெனில் கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை தமிழி/பிராமி வரிவடிவங்ளைத்தான் தாய்(லாந்து) மொழி தனக்கு பயன்படுத்தி வந்தது. கி.பி.1292 ல் தான் தமிழி/பிராமி/பல்லவகிரந்த வரிவடிவத்தை அடிஒற்றி தாய்(லாந்து) மொழி தனக்கான தனியான வரிவடிவத்தை அமைத்துக் கொண்டது.

தூய தமிழ்ப் பெயர்கள் ஏன் அவசியம்?

 இதன்மூலம் இந்த மோதிரம் தமிழர்களாகிய நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் நாம் நமது குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்பதுதான்.இந்த மோதிரத்தின் எழுத்து வரிவடிவம் தமிழியாக இருந்தும் 'ஸ' எனும் வடபிராமி எழுதப்பட்டிருப்பதால் அதை தனித்துவ தமிழாக/ தமிழியாக அடையாளப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

நாம் ஸ ஷ ஹ தஸ் புஷ் என்று வடமொழி மோகத்தில் நமது குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பெயர் என்பதும் தாய்மொழி என்பதும் ஓர் இனத்தின் அடையாளம்.

தமிழ்நாட்டில் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதை கேலிக்குரியதாகவும் ஏளனமாகவும் பார்க்கும் பார்வை ஒழிய வேண்டும்.அண்மைக்கால திருமண, காதணி விழா அழைப்பிதழ்களில் குட்டீஸ் என்று போட்டு உஸ் புஷ் என்று நமது தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணச் சகிக்கவில்லை.

எதிர்காலத் தொல்லியல் ஆய்வுகளுக்கான எச்சரிக்கை

எதிர்கால அகழாய்வுகளில் தமிழினத்தில் பிறந்த ஒருவரின் பெயர் வடமொழி /ஆங்கிலம் என எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் தாய்லாந்து மோதிரக்காரரான புஸரசைதர/புஸரவைதர, தனது அடையாளத்தை நம்மிடமும் வட தமிழி (பிராமி) ஆய்வாளர்களிடமும் இருந்து மீட்டெடுக்கத் தவிப்பதைப் போல நாமும் எதிர்காலத்தில் தவித்து விடக் கூடாது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்” உணர்த்தும் ஆய்வு நெறி

எகிப்து பிரமிடில் பொறிக்கப்பட்டிருக்கும் நமது சிகைக் கொற்றனையும் பாண்டியநாடனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது மொழியும் பெயரும் நமது அடையாளங்கள்.நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டால் நாம் போராடுவதைப் போல, அடுத்தவர் அடையாளங்களை நாம் (அளர்வைரதன் என்று) பறித்துக் கொள்ளாமல் இருப்பதும் நமது அடையாளம்தான்.பிறரை மதிப்பதும் அவர் அடையாளங்களைப் போற்றுவதும், பாதுகாப்பதும், பறித்துக் கொள்ளாமல் இருப்பதும், அவர்களை நமது சொந்தங்களாகப் பார்ப்பதும்தான் நமது அடையாளம்.அதுதான் தமிழர்களின் தனித்துவமான அடையாளம்.அதைத்தான் நமது முன்னோர்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று -நமக்கு மட்டுமல்ல- உலகுக்கே அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User