கட்டப்பட்ட காவல்துறைத் தலைமையின் கைகள்? ஆட்டம் போடும் எம்.எல்.ஏக்கள்; அமைச்சர்களைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழ்நாட்டின் சட்டம்–ஒழுங்கு நிர்வாகத்தில் நிழல் அதிகாரம் செயல்படுகிறதா? அமைச்சர் பதவிக்கான முயற்சிகள், எம்.எல்.ஏக்களின் அதிகார ஆட்டம் குறித்து தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

Sep 15, 2026 - 15:27
Updated: 2 days ago
0 164
கட்டப்பட்ட காவல்துறைத் தலைமையின் கைகள்? ஆட்டம் போடும் எம்.எல்.ஏக்கள்; அமைச்சர்களைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!

+ திறமையான காவற் தலைமை அதிகாரியின் கட்டப்பட்ட கைகள் !?

+ஆட்டம் போடும் எம்.எல்.ஏக்கள் !?

+ அடித்தாடிப் 'பணம்' பார்க்கும் அமைச்சர்கள் !?

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

"பெய்து பிறந்த புரட்டாசி" என்பது வேளாண் மக்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தி. அதாவது புரட்டாசி மாதம் பிறக்கும்போது மழை பெய்தால் அந்தப் பருவம் நல்ல பருவமாக அமையப்போகிறது என்று பொருள். அப்படிப்பட்ட மழை கொட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த மழையை எல்லாம் தாண்டி பறந்து வந்து நமது அலுவலகத் தாழ்வாரத்தில் அமர்ந்தார் பருந்தார்.

வந்தவருக்கு மிளகுப் பொடி தூவி, தக்காளிச் சுடுசாறு கொடுத்தோம். சுவைத்துக் கொண்டே தொடங்கினார் பருந்தார்.

"ஆட்சி நிர்வாகத்தில் ஆளாளுக்கு ஆட்டம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள்" என்று எடுத்தவுடனே அதிர்ச்சித் தகவல்களோடு ஆரம்பித்தார் பருந்தார்.

விளக்கமாகச் சொல்லுங்க பருந்தாரே என்றோம் !

சென்னைக்கு மிக அருகில் உள்ள பல்லவர் காலத் தொகுதி. அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் ஆட்டம்தான் ரொம்ப உக்கிரமா இருக்காம். அந்த அம்மையார் அந்தத் மாவட்டமே இல்லை. சென்னைக்குள் இருந்து அங்கு வந்து எம்எல் ஆகியிருக்காங்கவந்த கையோடு அந்தம்மா செய்த வேலை, "மாவட்டச் செயலாளர்" பொறுப்பும் தனக்கே வேணும் என்று கேட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தமான செயலாளர், "ஏம்மா இப்பதான் எம்எல் ஆகி இருக்கீங்க அதுக்குள்ள ஏற்கனவே இருக்கிற மாவட்ட செயலாளரைத் தூக்கச் சொல்றீங்களே...அந்தத் தம்பி ஆரம்பத்துல இருந்து நம்ம தலைவருக்காக உழைச்சிட்டு இருக்கான். அவனை எல்லாம் நீங்க நினைக்கிற மாதரி மாற்ற முடியாதுன்னு" கறாரா சொல்லியிருக்கார்.

நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுன்னு சொன்ன அந்த எம்எல், ஆனந்தத்துக்கு ஒரு படி மேல போய் அந்தப் பிரபல ஆலோசகரைப் பிடித்து மாவட்ட செயலாளர் ஆகியிடுச்சு.

...பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே ஆட்டம் ! என்றோம்.

அத்தோட நிற்கலை அந்த அம்மணியின் ஆட்டம், "அமைச்சர் ஆகியே தீருவேன்" அப்படின்னு சபதம் போட்டிருக்காம். பணத்தை தண்ணீரைப் போல வாரி இரைக்குதாம்.

அம்மணி பெரிய இடம் போல...என்று நாம் சொல்ல,

ஆமாம் ஆமாம் பெரிய இடம் மட்டுமல்ல திமுகவின் மிகப்பெரிய "உலகம் காக்கும்" பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான பிரமுகருக்கு வேண்டப்பட்டவராம் என்ற பருந்தார் இப்போவே 20 சி அட்வான்ஸ் போட்டு வேலை நடக்குதாம், அமைச்சர் ஆகிட்டுதான் அடுத்த வேலைன்னு.

அடேங்கப்பா என்று வாயைப் பிளந்தோம்.

வாயை மூடும்...என்று சிரித்துக்கொண்டே சொன்ன பருந்தார், அந்தத் தொகுதி ஒடுக்கப்பட்ட மக்கள், கிறித்தவ, இஸ்லாமிய மக்கள் அதிக வசிக்கும் தொகுதி. ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி. இப்போ அவர், அவரைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிடுச்சு இந்த அம்மணி.

அப்படிப்போடு என்றோம்

அதுமட்டுமல்ல அந்தத் தொகுதியில் சிலபேர் கோபிசெட்டிபாளையம் அமைச்சரை சந்திச்சு கட்சியில் இணைஞ்சிருக்காங்க. அவங்களைக்கூடக் கண்டுக்கவே இல்லையாம் ந்த அம்மணி. பல்லவ அரசருக்கு அடுத்துத் தான்தான் அரசி என்பது போல தலைக்கனத்தோடு ஆட்டம் அதிகமாக இருக்காம் என்ற பருந்தார், ஒருவேளை இந்த அம்மணிக்கு அமைச்சர் பதவி கொடுத்தா நாளைக்கு முதலமைச்சரையே என்ன விலை என்று கேட்டாலும் கேட்கும் என்கிறார்கள் அந்தத் தொகுதியின் ஆளும் கட்சிக்காரர்கள் என்ற பருந்தார், அமைச்சராக 50 சி வரை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருக்கும் அந்த அம்மணி, அமைச்சர் ஆயிட்டா எவ்வளவு 'சம்பாதிப்பார்னு' கணக்குப் போட்டுக்குங்க அப்படின்னும் பேச்சு ஓடுது என்றார்.

இராணுவத்துல அழிஞ்சவரைவிட ஆணவத்துல அழிச்சவங்களே அதிகம் என்று கூறிவிட்டு அடுத்த தகவல் பருந்தாரே என்றோம்.

ம்.....அந்த காவல்துறை தலைமை அதிகாரி சிறந்த அதிகாரி, நேர்மையானவர், திறமையானவர்னு பெயர் எடுத்தவர். குறைந்த வயதில் அந்தப் பொறுப்புக்கு வந்தவர்னும் நல்ல பெயர் இருக்கு. அதுமட்டுமல்ல, இருப்பதிலேயே உயர் பொறுப்புக்கு வந்த பிறகும் இப்போதும் காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பில்தான் குடியிருக்கார்னா அவரது எளிமையைப் புரிஞ்சுக்கலாம். அவர் நினைச்சா தனியான பெரிய பங்களாவில் குடியிருக்கலாம்.

ம்...

அவரது கைகள் கட்டப்பட்டு இருக்கிறதாலதான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இன்னும் அபாயகட்டத்துல தொங்கிட்டு இருக்குன்னு காவல்துறை வட்டாரத்திலேயே பேச்சு பலமா அடிபடுது.

...அப்படியா ? கட்டிப் போட்டது யார் ? என்று கேட்டோம்.

போன திமுக ஆட்சியில் பெயருக்கு பெரிய பொறுப்புகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அதிகாரிதான் அவர்களைக் கட்டுப்படுத்திட்டு இருந்தார், "நிழல் தலைமை" போல செயல்பட்டார்னு பேச்சு இருந்துச்சே நினைவிருக்கா என்று கேட்டார் பருந்தார்.

ம்..மறக்க முடியுமா ? கடைசிவரை காவல்துறை தலைவரை சட்ட விதிமுறைப்படி நியமிக்காமல், பொறுப்புத் தலைவர்னு உட்கார வஞ்சிருந்தாங்களே என்றோம் நாம்.

ஆமாம், அதேபோல ஒரு "நிழல் அதிகாரம்" இந்த ஆட்சியிலும் செய்யுறாராம் வேறு ஒரு அதிகாரி.

ஆஹான்....ஆட்சி மாறியும் கட்சி மாறலை போல என்றோம் !

ஆட்சி மாறி, அதிகாரிகளும் மாறி...ஆனா "அதிகாரம்" மட்டும் மாறாம இருக்கு என்று விளக்கினார் பருந்தார்.

சுத்தம்....என்றோம்.

காவல்துறை தலைமைக்கு உரிய அதிகாரத்தை, திறந்த கைகளோடு கொடுத்தால் அதிகபட்சம் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை எல்லோரும் பாராட்டும் வகையில் கொண்டுவரும் திறன் படைத்தவர் அந்தத் தலைமை அதிகாரி என்கிறார்கள்.

....

நாம் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டோம். இது குறித்து முதலமைச்சர் விசாரித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தால் அவரது ஆட்சிக்கு நல்லபெயர் என்று சொன்ன பருந்தார் அமைச்சர்கள் சிலர் குறித்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. அடுத்த சந்திப்பில் அதனை விளக்குகிறேன் என்று சொல்லிவிட்டு மழையை கிழித்துக் கொண்டு விண்ணில் பறந்தார் பருந்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User