மணிவண்ணன் முதல் களஞ்சியம் வரை… விலகியவர்கள்… விலக்கப்பட்டவர்கள்… சுருங்கிய நாம் தமிழர்! எதிர்காலம் என்ன?
மணிவண்ணன் காலம் முதல் மு.களஞ்சியம் வரை நாம் தமிழர் கட்சியுடன் பயணித்த முக்கிய முகங்கள் ஏன் விலகினர்? விலக்கப்பட்ட நிர்வாகிகள், சீமான் மீதான குற்றச்சாட்டுகள், 8% இலிருந்து 4% சரிவு, கட்சியின் எதிர்காலம் — ஆழமான அரசியல் ஆய்வு.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சியின் பயணம் ஒரு சாதாரண சிறுகட்சியின் வரலாறு அல்ல. அது ஒரு காலகட்டத்தில் ஈழப் போருக்குப் பிந்தைய தமிழர் உணர்வு, தமிழ்த்தேசிய அரசியல், மொழி–இனம்–நிலம் பற்றிய கேள்விகள்,தமிழின அழிப்பு, இனத்துரோகத்தை சந்தித்த இளைஞர்களின் மாற்று அரசியல் தேடல் ஆகியவற்றின் சந்திப்பில் உருவான அரசியல் அலை.
2009-ல் “நாம் தமிழர்” இயக்கம் உருவாகும் ஆரம்பகால பொதுக்கூட்டங்களில் இயக்குநர் மணிவண்ணன், மருத்துவர் எழிலன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் சீமானுடன் மேடை பகிர்ந்ததாக அக்காலச் செய்திகள் பதிவு செய்கின்றன. 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியாக அமைப்புபெற்றது என்று கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாறும் குறிப்பிடுகிறது.
ஆனால் 2026 ஜூலைக்கு வந்தபோது அந்தப் பயணத்தின் இன்னொரு முனையில் நின்றவர் இயக்குநர் மு.களஞ்சியம்.
2016 முதல் சீமானுடன் தமிழ்த்தேசிய அரசியலில் பயணித்ததாக தனது விலகல் கடிதத்திலேயே கூறிய அவர், 2026 ஜூலை 18 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். அவர் கூறிய காரணம் வெறும் பதவி அல்லது தேர்தல் சீட் அல்ல.
“நாம் தமிழர் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்ட மாற்றம்”, “சக அரசியல் கட்சியினர் மீதான வெறுப்பரசியல்”, “மாற்றுக் கருத்துடையவர்களை இழிவுபடுத்துவது”, “கொள்கை விமர்சனம் தனிநபர் தாக்குதலாக மாறுவது” ஆகியவற்றைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியுள்ளார்.
மணிவண்ணனுக்கும் களஞ்சியத்திற்கும் இடையிலான இந்த பதினைந்து ஆண்டுப் பாதையில்தான் நாம் தமிழரின் எழுச்சியும், வளர்ச்சியும், உள் முரண்பாடுகளும், மனிதவள இழப்பும், தற்போது ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவும் அடங்கியிருக்கின்றன.
மணிவண்ணன் காலத்து நாம் தமிழர் எப்படி இருந்தது?
2012-ல் நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டு விழாவில் “மீட்பு உரை” ஆற்றுபவர்களாக சீமானும் மணிவண்ணனும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இயக்குநர்கள் செல்வமணி, பாலா, அமீர், ஜனநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றனர்.
இதனால் ஒரு முக்கியமான விசயம் புரிகிறது.
அன்றைய நாம் தமிழர் என்பது சீமானைச் சுற்றிய ஒரு தேர்தல் அமைப்பு மட்டுமல்ல.
திரைப்படத்துறை + தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் + பெரியாரியப் பின்னணி கொண்டவர்கள் + ஈழ ஆதரவாளர்கள் + சமூக இயக்கத் தலைவர்கள் + இளைஞர்கள்எனப் பல்வேறு வட்டங்கள் சந்தித்த ஒரு பரந்த தளம்.
மணிவண்ணன் மரணத்துக்குப் பிறகு 2013-ல் நாம் தமிழர் நடத்திய நினைவேந்தலில் சீமான், மணிவண்ணனைத் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகக் குறிப்பிட்டார். அந்த நிகழ்வில் சர்வதேசத் தொடர்பாளர் அய்யநாதன், வெற்றிக்குமரன், இயக்குநர் கார்வண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
இதுவே அக்காலத்தின் அமைப்பு அகலத்தை வெளிப்படுத்துகிறது.
அமீர்: நண்பராக இருந்தவர்; பின்னர் அரசியல் தூரம்
இயக்குநர் அமீரும் ஆரம்பகால சீமானின் அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமானவர். நாம் தமிழர் கட்சி உருவாகுவதற்கு முன்பே சீமானுடன் ஈழத்தமிழர் ஆதரவு அரசியலில் செயல்பட்டவர்; சீமானுடன் சிறையிலும் இருந்தவர். கட்சி உருவான பின்னரும் ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் சீமானிடமிருந்து அரசியல் ரீதியாக விலகினார்.
2021-ல் அவர் முன்வைத்த விமர்சனம் சாதாரணமானது அல்ல.
சீமானின் சில கருத்துகள் இந்துத்துவ அரசியலுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும், நாம் தமிழர் அமைப்புக்குள் RSS/BJP சார்ந்தவர்கள் இருப்பதாகத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அமீர் குற்றஞ்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை என்று சொல்ல முடியாது; அது அமீரின் அரசியல் குற்றச்சாட்டு.
ஆனால் ஆரம்பகால சகபயணி ஒருவர் இத்தகைய தீவிரமான கருத்து வேறுபாட்டுக்குச் சென்றது கட்சியின் சிந்தனை மாற்றம் குறித்த விவாதத்தில் முக்கியமான பதிவு.
ஆரம்பகால கூட்டணி மனப்பான்மையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அரசியல் வரை?
நாம் தமிழரின் ஆரம்பப் பயணத்தைப் பார்க்கும்போது பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகளுடன் சீமான் ஒரே மேடையில் இருந்துள்ளார்.
2018 காவிரி உரிமை போராட்டத்தில் பெ.மணியரசன், வேல்முருகன், தமிமுன் அன்சாரி, மு.களஞ்சியம், கி.வெங்கட்ராமன், தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களுடன் சீமான் இணைந்து செயல்பட்டுள்ளார்.
அதாவது ஆரம்பகால நாம் தமிழரின் தமிழ்த்தேசிய அரசியல்:
“நாம் மட்டும்” என்பதைக் காட்டிலும்,
“தமிழர் உரிமைக்காக பலர் சேர்ந்து போராடலாம்”
என்ற பரந்த நடைமுறையையும் கொண்டிருந்தது.
இந்த இடத்தில்தான் மு.களஞ்சியத்தின் 2026 விலகல் அரசியல் அர்த்தம் பெறுகிறது.
ஏனெனில் அவர் எழுப்பிய கேள்வி, “தமிழ்த்தேசியம் அனைவரையும் இணைக்கும் அதிகார மாற்றக் கருத்தியல் என்றால், மாற்றுக்கருத்துடையவர்களை தனிநபர் அளவில் தாக்குவது அதற்கு எப்படி பொருந்தும்?” என்பதாக இருந்தது.
கட்சி வளர்ந்ததா? ஆம் — தேர்தல் தரவு அதை மறுக்க முடியாது
நாம் தமிழரை விமர்சிக்கும்போது இந்த உண்மையை மறைக்க முடியாது.
கட்சியின் வாக்கு வளர்ச்சி ஒரு கட்டம் வரை தொடர்ச்சியாக இருந்தது.
தேர்தல்
நாம் தமிழர் வாக்கு
2016 சட்டப்பேரவை
1.10%
2019 மக்களவை
3.89%
2021 சட்டப்பேரவை
6.72%
2024 மக்களவை
8%+
2026 சட்டப்பேரவை
3.89 %
2016 முதல் 2021 வரையிலான வளர்ச்சியை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ தரவுகளே பதிவு செய்கின்றன.
2024-ல் நாடாளுமன்ற பொதுத் தேர்த்லில் 8% கடந்த வாக்கு ஆதரவால் மாநிலக் கட்சி அங்கீகாரமும் கிடைத்தது.
அதாவது,
“நாம் தமிழர் ஒருபோதும் வளரவில்லை”
என்று சொல்வது உண்மைக்கு மாறானது.
அது வளர்ந்தது.
ஆனால் அந்த வளர்ச்சி அரசியல் அதிகாரமாக மாற்றப்படவில்லை என்பது உண்மை நிலவரம்.
2026: முதல் பெரிய பின்னடைவு
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.
மொத்தமாக சுமார் 19.72 லட்சம் வாக்குகள் — 3,89 % என தேர்தல் முடிவு தொகுப்புகள் காட்டுகின்றன.
சில தொகுதிகளில் நிலை இன்னும் தீவிரமாக இருந்தது.
கரூரில் 2.38%, நன்னிலத்தில் சுமார் 3–4% அளவு, திருவண்ணாமலையில் 6,011 வாக்குகள், மேட்டூரில் 7,109 வாக்குகள் என பல இடங்களில் நாம் தமிழர் நான்காவது அரசியல் சக்தியாகத் தள்ளப்பட்டது.
இதற்குக் காரணம் ஒன்றே ஒன்று அல்ல.
விஜயின் தவெக எழுச்சி மிகப்பெரிய காரணியாக அமைந்தது. 2026-ல் TVK மட்டும் சுமார் 34.9% வாக்குகளைப் பெற்றது.
மாற்று அரசியலை விரும்பிய இளம் வாக்காளர்களில் ஒரு பகுதி நாம் தமிழரிடமிருந்து தவெகவுக்கு நகர்ந்திருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் booth-level voter transfer ஆய்வு இல்லாமல்,
“NTK-யின் 3.08 % வாக்கு முழுவதும் TVK எடுத்தது”
என்று சொல்ல முடியாது.
விலகல்கள்: ஒரு பெயர் பட்டியல் அல்ல — அமைப்பு பிரச்சினையா?
இதுதான் இந்த ஆய்வின் மையம்.
ஒரு கட்சியிலிருந்து ஒருவர் அல்லது இரண்டு பேர் விலகுவது இயல்பு.
ஆனால் ஒரே கட்சியிலிருந்து வெவ்வேறு காலங்களில்:
+ கா. அய்யநாதன்
+ வியனரசு
+ கல்யாணசுந்தரம்
+ ராஜீவ் காந்தி
+ வெற்றிக்குமரன்
+ புகழேந்தி மாறன்
+ ராஜா அம்மையப்பன்
+ இரா. பிரபு
+ டாக்டர் இளவஞ்சி
+ ஜெகதீச பாண்டியன்
+ கோ.தமிழரசன்
+ காளியம்மாள்
+ ஞானசேகரன்
+ சிவகுமார் ஆறுமுகம்
+ முகமது அலி ஜின்னா
+ வினோத்குமார்
+ மு.களஞ்சியம்
என்று மாநில, மாவட்ட, பாசறை, தேர்தல் வேட்பாளர் அளவிலான முகங்கள் தொடர்ந்து பிரிந்தால் அது தனிநபர் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.
ஒவ்வொருவரின் காரணமும் வேறு.
ஆனால் சில பொதுவான குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன:
தலைமை மையப்படுத்தல், நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பின்மை, உட்கட்சி ஜனநாயகம் பற்றிய கேள்வி, வேட்பாளர்/பொறுப்பு தேர்வில் ஆலோசனையின்மை, மாற்றுக் கருத்துகளுக்கான இடமின்மை, தனிநபர் தாக்குதல் அரசியல்.
காளியம்மாளின் 2025 பேட்டி இதற்கு மிகத் தெளிவான ஆவணம்.
சீமான் வெளியேறும் நிர்வாகிகளை “களைகள்” என்று உவமைப்படுத்தியதற்கு அவர்,
“நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள் என்று ஆராய வேண்டும்”
என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் கட்சியில் முடிவுகள் ஜனநாயகபூர்வமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
வெளியேறிய பலரும் முன்வைத்த கருத்து இதுதான்.
மிகப்பெரிய மனிதவள இழப்பு எது?
இங்கே எண்ணிக்கையைவிட quality of political capital முக்கியம்.
ஒரு கட்சியின் பலம் வெறும் உறுப்பினர் எண்ணிக்கை அல்ல.
அதற்கு ஐந்து வகையான மூலதனங்கள் தேவை:
+ மக்கள் முகம்
+ அறிவுசார் முகம்
+ ஊடக முகம்
+ அமைப்பு நிர்வாகி
+ தொகுதி வாக்கு கொண்ட உள்ளூர் தலைவர்.
நாம் தமிழரை விட்டு வெளியேறியவர்களில் இந்த ஐந்து பிரிவினரும் இருந்துள்ளனர்.
கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி போன்றவர்கள் ஊடக வாதத் திறன் கொண்டவர்கள்.
காளியம்மாள் தனித்த மக்கள் ஈர்ப்பு கொண்டவர்.
வெற்றிக்குமரன், பிரபு போன்றவர்கள் நீண்டகால கள அமைப்பு அனுபவம் கொண்டவர்கள்.
அய்யநாதன் போன்றவர்கள் சிந்தனை/ஊடகத் தொடர்புடையவர்கள்.
களஞ்சியம் திரைத்துறை அடையாளம் + தமிழ்த்தேசிய இயக்க அனுபவம் + மாநில நிர்வாகப் பொறுப்பு + களப்பணி அனுபவம் ஆகிய நான்கையும் கொண்டவர்.
ஒவ்வொரு வெளியேற்றத்திலும் கட்சி ஒரு உறுப்பினரை மட்டும் இழக்கவில்லை.
அவருடன் இருந்த நம்பிக்கைக் குழு + தொடர்பு வலை + சமூக அடையாளம் + பேச்சாற்றல் + நிர்வாக அனுபவம் ஆகியவற்றின் ஒரு பகுதியையும் இழந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இவர்கள் எல்லோரும் இருந்திருந்தால் நாம் தமிழர் எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும்?
இதற்கு எவராலும் நேர்மையாக ஒரு வாக்குச் சதவீதம் சொல்ல முடியாது.
“அனைவரும் இருந்திருந்தால் 15% வந்திருக்கும்” அல்லது “20% வந்திருக்கும்” என்பது ஆதாரமற்ற ஊகம்.
ஆனால் அமைப்பு அறிவியலின் அடிப்படையில் ஒரு விஷயம் சொல்லலாம்.
இவர்கள் தொடர்ந்து கட்சிக்குள் இருந்திருந்தால் நாம் தமிழருக்கு குறைந்தது நான்கு நன்மைகள் இருந்திருக்கலாம்.
+ முதலாவது — இரண்டாம் நிலைத் தலைமை.
சீமானைத் தவிர மாநிலம் அறிந்த 10–15 முகங்கள் இருந்திருக்கும்.
+ இரண்டாவது — சமூக விரிவு.
மீனவர், சிறுபான்மை, பெண்கள், கல்வியாளர்கள், திரைத்துறை, வழக்கறிஞர்கள், தொழில்நுட்பத்துறை என்று வெவ்வேறு சமூகத் தொகுதிகளிடம் பாலங்கள் உருவாகியிருக்கும்.
+ மூன்றாவது — தொகுதி அமைப்பு.
15 ஆண்டுகள் பணியாற்றிய நிர்வாகியை இழந்தால் புதிய நிர்வாகி பெயரில் பதவி நிரப்பலாம்; ஆனால் அதே சமூக வலையமைப்பை உடனே உருவாக்க முடியாது. 15 ஆண்டுகள் பின்னைடைவு.
+ நான்காவது — கட்சியின் முகம் சீமான் மட்டும் அல்ல என்ற தோற்றம்.
இதுவே மிக முக்கியமானது.
ஒரு கட்சி ஒரு தலைவரை விடப் பெரியதாக வேண்டும்
அரசியல் அறிவியலில் ஒரு கட்சி நிலைத்திருக்க வேண்டுமெனில் institutionalisation தேவை.
அதாவது,
தலைவர் → அமைப்பு
அமைப்பு → நிர்வாகத் தலைமுறை
நிர்வாகம் → புதிய தலைவர்கள்
புதிய தலைவர்கள் → அதிகாரப் பகிர்வு
என்று வளர வேண்டும்.
திமுகவில் கருணாநிதி இருந்தபோதும் ஆயிரக்கணக்கான இரண்டாம், மூன்றாம் நிலை நிர்வாக அமைப்பு இருந்தது.
அதிமுக ஜெயலலிதா மையக் கட்சியாக இருந்தபோதும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அதிகாரக் கட்டமைப்பு இருந்தது.
நாம் தமிழரில் மக்களுக்குத் தெரியும் மைய முகம் தொடர்ந்து சீமான் ஒருவராகவே இருக்கிறாரா என்ற கேள்வி இப்போது கூர்மையாகிறது. இது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
அதற்கு காரணம் எதிரிகளின் பிரசாரம் மட்டும் இல்லை.
முன்னாள் நிர்வாகிகளின் தொடர்ச்சியான வெளியேற்றங்களும் அந்தக் கேள்வியை உருவாக்கியுள்ளன.
“சீமான் உண்மையில் வெற்றி பெற முயற்சித்தாரா?” — மிகக் கடினமான குற்றச்சாட்டு
வெளியேறியவர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகவும் கடுமையாக எழுப்பப்படும் கேள்விகளில் ஒன்று:
“சீமான் தேர்தலில் வெற்றி பெறவே விரும்பவில்லை; வாக்கு சதவீதத்தை மட்டும் வளர்த்து தனித்த அரசியல் வட்டத்தை வைத்திருக்க விரும்புகிறார்”
என்பது.
மாறாக, தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என்றும், எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் சீமான் பலமுறை கூறியிருக்கிறார். 2021 தேர்தலுக்குப் பிறகும் நாம் தமிழர் மேலும் வலுவாக செயல்பட்டு மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சியாக உயர்வோம் என்று கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது என்பதை ஆய்வு செய்யலாம்.
குற்றச்சாட்டுக்கு ஆதரவாக விமர்சகர்கள் முன்வைக்கும் 5 கேள்விகள்
1. வெல்லக்கூடிய தொகுதிகளைத் தேர்வு செய்து வளங்களை குவித்தார்களா?
234 தொகுதிகளிலும் சமமாகப் போட்டியிடுவது ஒரு கருத்தியல் அரசியல்.
ஆனால் வெற்றியை இலக்காகக் கொண்ட கட்சி பொதுவாக,
முதலில் 10 தொகுதி
பிறகு 25
பிறகு 50
என்று வெல்லக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அதிக வளங்களை செலுத்தும்.
நாம் தமிழர் நீண்டகாலமாக “234-லும் நாம்” என்ற அரசியல் அடையாளத்தை முன்னிறுத்தியது.
அது பிராண்ட் கட்டுவதற்கு உதவியது.
ஆனால் seat conversion-க்கு உதவியதா?
இது கேள்விக்குறி.
2. நல்ல வாக்கு பெற்ற வேட்பாளர்களை தொடர்ந்து வளர்த்தார்களா?
ஒரு தொகுதியில் 20,000 அல்லது 30,000 வாக்கு பெற்ற வேட்பாளர் அடுத்த ஐந்து ஆண்டும் அங்கேயே வளர்க்கப்பட்டால் அவர் 50,000 வாக்கை எட்ட வாய்ப்பு உள்ளது.
ஆனால் தொடர்ந்து வேட்பாளர் மாற்றங்கள் நிகழ்ந்தால் தனிநபர் வாக்கு வங்கியின் வளர்ச்சி துண்டிக்கப்படும்.
இதை நாம் தமிழரின் அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவாகச் சொல்ல முடியாது; ஆனால் candidate retention strategy குறித்து விமர்சகர்கள் எழுப்பும் கேள்வி நியாயமான ஆய்வுப் பொருள்.
3. வளர்ந்த தலைவர்களைப் பாதுகாத்தார்களா?
காளியம்மாள் போன்ற ஒருவர் நாடறிந்த முகமாக மாறினால் அது தலைவருக்கான போட்டியா?
அல்லது கட்சிக்கான சொத்தா?
ஒரு நிறுவனமயமான கட்சி இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காளியம்மாள் பேட்டியில், கட்சியில் ஒருவர் வளர்ந்தால் சிலருக்கு முரண் ஏற்படும் சூழலை சீமான் தானே தன்னிடம் ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். இது அவரது சொந்த விளக்கம்; சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாத உரையாடல். ஆனால் அது உள்கட்சித் தலைமுறை வளர்ச்சி குறித்த முக்கிய சாட்சியம்.
4. கூட்டணி என்பதை முழுமையாக நிராகரித்தது சரியா?
கூட்டணி வேண்டாம் என்பது தவறான கொள்கை என்று அவசியமில்லை.
தனித்து வளர்ந்தால்தான் கொள்கைத் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என்பது நாம் தமிழரின் வாதம்.
இதனால் 1.1% இருந்து 8% வரை வளர்ந்ததும் உண்மை.
ஆனால் தேர்தல் அரசியலின் அடுத்த கட்டத்தில் 8% → 15% → seats ஆக மாற்ற வேண்டிய நேரத்தில் tactical alliances, issue-based coordination போன்றவற்றையும் முழுமையாக மறுப்பது வெற்றி பாதையை குறுக்குகிறதா?
2026 முடிவு அந்தக் கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
5. தேர்தல் இயந்திரத்தை விட பேச்சு மைய அரசியல் அதிகமா?
சீமானின் மிகப்பெரிய அரசியல் பலம் அவரது பேச்சாற்றல்.
அதே சமயம் அது ஒரு சிக்கலையும் உருவாக்கலாம்.
கட்சி:
பேச்சு → வைரல் வீடியோ → சமூக ஊடக ஆதரவு
என்ற நிலையைத் தாண்டி,
booth committee → voter list → local issue → door-to-door network → polling agent → vote conversion
என்ற தேர்தல் இயந்திரமாக மாற வேண்டியது அவசியம்.
2024 வரை வாக்கு உயர்ந்ததால் இந்த அமைப்பு இல்லவே இல்லை என்று கூற முடியாது.
ஆனால் 2026-ல் புதிய போட்டியாளர் வந்தபோது அந்த அமைப்பு எவ்வளவு உறுதியானது என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் “சீமான் வெல்ல முயற்சிக்கவில்லை” என்று முடிவெடுப்பது ஏன் தவறு?
இதற்கு எதிர்வாதமும் மிகவும் வலிமையானது.
ஒருவர் வெல்ல முயலவில்லை என்றால்:
+ 234 தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்துவது,
+ 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது,
+ ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வது,
+ 1.1% வாக்கை 8% வரை உயர்த்துவது
என்பவற்றுக்கு எளிய விளக்கம் கிடையாது.
எனவே ஆதாரங்கள் காட்டுவது:
சீமான் வெற்றி பெற விரும்பவில்லை என்பது அல்ல.
மாறாக, சீமான் தேர்ந்தெடுத்த வெற்றி பாதை தேர்தல் அதிகாரமாக மாறக்கூடிய பாதையா?
என்பதுதான் நியாயமான கேள்வி.
இவை இரண்டும் வேறு.
“திசை மாறிய நாம் தமிழர்” என்ற குற்றச்சாட்டு எங்கிருந்து வருகிறது?
ஆரம்பகால நாம் தமிழர் அரசியலில்:
+ ஈழம்
+ தமிழர் உரிமை
+ மொழி
+ மண்
+ நீர்
+ சுற்றுச்சூழல்
+ தமிழர் ஒற்றுமை
என்ற பரந்த அரசியல் இருந்தது.
பின்னர் சீமானின் அரசியலில்:
+ திராவிடம் எதிர்ப்பு
+ பெரியார் குறித்த கடுமையான விமர்சனங்கள்
+ மத அடையாளங்கள் தொடர்பான சர்ச்சைகள்
+ பிற கட்சித் தலைவர்களுடன் தனிநபர் மோதல்கள்
அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமீர் 2021-லேயே இதை எச்சரித்தார்.
2026-ல் மு.களஞ்சியமும் வேறு சொற்களில் அதே இடத்தில் வந்து நின்றார்:
தமிழ்த்தேசிய அரசியலை வெறுப்பரசியலாக மாற்றக் கூடாது.
இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் உள்ளன.
அதனால்தான் இதை தனிப்பட்ட ஒருவரின் மனக்கசப்பு என்று மட்டும் தள்ளிவிட முடியாது.
“தேய்ந்து போன தமிழ்த்தேசியக் குரல்” என்று சொல்லலாமா?
தமிழ்த்தேசிய அரசியல் தேய்ந்து போகவில்லை.
அது நாம் தமிழர் கட்சிக்குள் மட்டும் அடங்கியதும் இல்லை.
மாறாக நாம் தமிழரின் 2024 → 2026 தேர்தல் வீழ்ச்சி காட்டுவது:
“தமிழ்த்தேசியக் குரலின் ஒரே பிரதிநிதி நாம் தமிழர்” என்ற நிலை பலவீனமடைந்திருக்கிறதா? என்பது.
இது மேலும் துல்லியமான கேள்வி.
8% இருந்த கட்சி ஏன் 4% ஆனது?
நாம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய warning signal இதுதான்.
ஒரு தேர்தல் மட்டும் வைத்து கட்சி முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
ஆனால்,
8% → 4%
என்பது சுமார் பாதி வாக்கு விகித இழப்பு.
2026 முடிவுத் தரவுகளின்படி நாம் தமிழர் 3.89 % மட்டுமே பெற்றுள்ளது.
இதை மூன்று காரணிகளின் சேர்க்கையாகப் பார்க்கலாம்:
+ TVK-வின் புதிய மாற்று அரசியல் ஈர்ப்பு
+ NTK-யின் நிர்வாக மனிதவள இழப்பு
+ சீமான் மைய அரசியல் மீதான voter fatigue / புதிய தலைமுறையின் மாற்றம்.
மூன்றாவது காரணியை நிரூபிக்க opinion-poll அல்லது voter study தேவை என்பதால் அதை சாத்திய விளக்கமாக மட்டுமே பார்க்க வேண்டும்.
மிகவும் ஆபத்தான இழப்பு: வாக்கு அல்ல, நம்பிக்கை
அரசியலில் 3.89 % மீண்டும் 8% ஆகலாம்.
ஆனால் ஒரு கட்சி நல்ல மனிதர்களை தக்க வைக்காது என்ற perception உருவானால் அது வளரும் கட்சிக்கு மிகவும் ஆபத்தானது.
ஏனெனில் அடுத்த தலைமுறை திறமையானவர்கள் கட்சிக்குள் சேரும்போது கேட்பார்கள்:
“நான் வளர்ந்தால் என்ன நடக்கும்?”
இதற்கு கட்சி நம்பிக்கை தரும் பதிலை வழங்க வேண்டும்.
இந்த ஆய்வு சீமானின் அரசியல் முடிந்துவிட்டது என்று கூறவில்லை.
அவருக்கு இன்னும் சில அரிதான பலங்கள் இருக்கின்றன.
+ தமிழகம் முழுவதும் அடையாளம்.
+ தனித்துவமான பேச்சாற்றல்.
+ பல ஆண்டுகளாக நிலைத்த core vote.
+ தமிழ், சூழல், விவசாயம், மொழி உரிமை தொடர்பான தெளிவான brand recall.
+ கூட்டணி இல்லாததால் உருவான “சமரசமில்லாதவர்” என்ற ஆதரவாளர் perception.
இவை அனைத்தும் இன்னும் அரசியல் மூலதனம்.
3.89 % என்பது தமிழகத்தில் சுமார் 20 லட்சம் வாக்குகள். அது சிறிய அரசியல் வளம் அல்ல.
ஆனால் பழைய வழியிலேயே சென்றால்?
2026க்குப் பிறகும்:
+ ஒரே தலைவர்
+ ஒரே குரல்
+ அதே வகை தனிநபர் மோதல்கள்
+ வளரும் நிர்வாகிகளுடன் முரண்பாடு
+ வெளியேறுபவர்களை மதிப்பிழக்கச் செய்தல்
+ 234 தொகுதிகளிலும் ஒரே தேர்தல் முறை
என்ற பாதை தொடருமானால், நாம் தமிழர் மேலும் சுருங்கும் அபாயம் இருக்கிறது.
TVK தற்போது நாம் தமிழர் முன்பு பிடித்திருந்த “புதிய மாற்று அரசியல்” இடத்தின் பெரும்பகுதியைப் பிடித்துவிட்டது.
எனவே 2016–24 வரை இருந்த சந்தை அரசியல் இப்போது இல்லை.
மீண்டும் எழ என்ன செய்ய வேண்டும்?
சீமானின் அடுத்த அரசியல் முடிவு மிகவும் முக்கியமானது.
அவருக்கு தேவையானது பெயர் மாற்றமோ புதிய முழக்கமோ அல்ல.
உள்கட்சி மறுசீரமைப்பு.
முன்னாள் நிர்வாகிகளை எல்லாம் திரும்ப அழைக்க வேண்டும் என்பதும் அவசியம். இல்லை ஆனால் அதேவேளை, ஏன் அவர்கள் சென்றார்கள் என்பதை சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்.
+ மாநில அளவில் collective leadership உருவாக்க வேண்டும்.
+ மாவட்ட நிர்வாகிகளுக்கு உண்மையான அதிகாரம் கொடுக்க வேண்டும்.
+ வளரும் இரண்டாம் நிலைத் தலைவர்களை போட்டியாளராக அல்ல, சொத்தாகப் பார்க்க வேண்டும்.
+ தனிநபர் தாக்குதல்களை குறைத்து policy politics-க்கு திரும்ப வேண்டும்.
+ வெல்லக்கூடிய 25–40 தொகுதிகளை அடையாளம் கண்டு ஐந்தாண்டு திட்டமிட்ட தேர்தல் அமைப்பை உருவாக்க வேண்டும்.
மணிவண்ணன் முதல் களஞ்சியம் வரை — வட்டம் நிறைவடைந்ததா?
மணிவண்ணன் காலத்தின் நாம் தமிழரில் இருந்த முக்கிய உணர்வு:
தமிழர் அரசியலை பல்வேறு முகங்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
களஞ்சியம் வெளியேறும் போது எழுப்பிய கேள்வியும் அதே இடத்திற்குத் திரும்புகிறது: தமிழ்த்தேசியம் வெறுப்பு அரசியல் அல்ல; அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்.
இதுதான் இந்த பதினைந்து ஆண்டுப் பயணத்தின் மிகப்பெரிய முரண்பாடு.
ஒரு காலத்தில் பல ஆளுமைகளைச் சுற்றிக் கொண்டிருந்த நாம் தமிழர்,
இன்று பெரும்பாலும் சீமானைச் சுற்றி அடையாளப்படுத்தப்படும் கட்சியாக மாறியிருக்கிறதா?
அப்படியானால் அது சீமானின் மிகப்பெரிய வெற்றியும் அதே நேரத்தில் கட்சியின் மிகப்பெரிய பலவீனமும் ஆகும்.
அவர் இல்லாமல் கட்சியை நினைக்க முடியவில்லை என்பது தலைவரின் சாதனை.
அவரைத் தவிர வேறு தலைவர்களை நினைக்க முடியவில்லை என்றால் அது கட்சியின் தோல்வி.
ஆக இறுதியாக,
+ நாம் தமிழர் கட்சியின் வரலாற்றை இரண்டு வரிகளில் எழுதிவிட முடியாது.
+ அது தமிழக அரசியலில் தமிழ்த்தேசியத்தை மீண்டும் இளைஞர்களிடம் கொண்டு சென்றது.
+ கூட்டணி இல்லாமல் வாக்குகளை வளர்த்தது.
+ பெண்களுக்கு 50% வேட்பாளர் வாய்ப்பு என்ற முக்கியமான அரசியல் முயற்சியை செய்தது.
+ 2016-ல் 1.1% இருந்த வாக்கை 2024-ல் 8% கடந்த அளவுக்கு வளர்த்தது.
அதே கட்சி,
தன்னை வளர்த்த பல்வேறு காலகட்ட நிர்வாகிகளைத் தக்கவைக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் சந்திக்கிறது.
மணிவண்ணன், அமீர் போன்ற ஆரம்பகால தமிழ்த்தேசிய திரைத்துறை வட்டத்திலிருந்து தொடங்கி, அய்யநாதன், வியனரசு, கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி, வெற்றிக்குமரன், காளியம்மாள், ஜெகதீச பாண்டியன் புகழேந்தி மாறன் வழியாக 2026-ல் மு.களஞ்சியம், முத்துபாண்டி வரை பிரிவுகள் தொடர்ந்திருக்கின்றன.
இவர்களில் அனைவரும் ஒரே காரணத்தால் வெளியேறவில்லை.
அனைவரும் கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக இருந்தவர்களும் அல்ல.
அனைவரும் சீமானின் எதிரிகளாக மாறியவர்களும் அல்ல.
இதுவே முக்கியம்.
சிலர் கட்சியை விட்டு வெளியேறியும் தமிழ்த்தேசியத்தை விட்டு வெளியேறவில்லை. அதுவே நாம் தமிழர் கவனிக்க வேண்டிய மிகப்பெரிய அரசியல் செய்தி.
பிரச்சினை தமிழ்த்தேசியத்தில் இருக்காமல், அதை நடத்தும் அரசியல் முறையில் இருக்கிறதா?
அந்தக் கேள்விக்கு நாம் தமிழர் பதில் தேடாவிட்டால் 2026-ன் 3.08% ஒரு தற்காலிகச் சரிவாக இருக்காமல் புதிய அடித்தளமாக மாறலாம்.
ஆனால் சீமான் இந்தத் தோல்வியை அமைப்புச் சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாக மாற்றி, பல தலைமைகளை உருவாக்கி, கொள்கை அரசியலுக்கு மீண்டும் திரும்பினால் — 20 லட்சம் அளவிலான core vote கொண்ட ஒரு கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையும் இல்லை.
எனவே நாம் தமிழரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் கேள்வி:
“சீமான் இன்னும் எவ்வளவு வலிமையானவர்?” அல்ல.
“சீமானைத் தவிர நாம் தமிழரில் இன்னும் எத்தனை வலிமையான தலைவர்களை உருவாக்க முடியும்?”
என்பதே.
அதற்கான பதில்தான், மணிவண்ணன் காலத்தில் எழுந்த தமிழ்த்தேசியக் குரல் மீண்டும் விரிவடையுமா — அல்லது ஒரே மனிதரைச் சுற்றிச் சுருங்கி மேலும் தேயுமா என்பதை தீர்மானிக்கும்.
இறுதியாக ஒரு முக்கியமான எச்சரிக்கை...
நாம் தமிழர் கட்சியையும், சீமானின் அரசியல் அணுகுமுறையையும் விமர்சிப்பவர்கள் அனைவரையும் எதிரிகளாகவோ, “துரோகிகள்” என்றோ முத்திரை குத்துவது; அவர்கள் வேறு கட்சிகளிடம், குறிப்பாக தவெகவிடம் பணம் பெற்றுவிட்டதாக ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்டுவது; விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசமான வசைமொழிகளைப் பயன்படுத்துவது போன்ற போக்குகள் சில நாம் தமிழர் ஆதரவாளர் வட்டங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் காணப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன.
ஒரு அரசியல் இயக்கத்திற்கு விமர்சனம் எதிரியல்ல; தன்னைத் திருத்திக்கொள்வதற்கான கண்ணாடி.
கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் அனைவரையும் “துரோகிகள்” என்று ஒதுக்கத் தொடங்கினால், இறுதியில் கட்சிக்குள் தலைவரைப் பாராட்டுபவர்கள் மட்டுமே எஞ்சும் அபாயம் உருவாகும். அது ஒரு இயக்கத்தின் பலத்தின் அடையாளம் அல்ல; கருத்துப் பன்முகத்தன்மை சுருங்குவதற்கான அறிகுறியாக மாறலாம்.
அதிலும் நாம் தமிழர் தன்னை தமிழர்களின் உரிமை, தமிழ்த்தேசியம், மாற்று அரசியல் ஆகியவற்றின் பிரதிநிதியாக முன்னிறுத்தும் நிலையில், தமிழர்களுக்குள்ளேயே எழும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பது அதன் அரசியல் நம்பகத்தன்மைக்கு மிகவும் அவசியம்.
விமர்சிப்பவர்களிடம் ஆதாரத்துடன் பதிலளிக்கலாம். தவறான குற்றச்சாட்டுகளை மறுக்கலாம். அரசியல் ரீதியாகக் கடுமையாக எதிர்க்கலாம். ஆனால் விமர்சனம் செய்பவரின் குணநலனைத் தாக்குவது, பணம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டுவது, ஆபாச வசைமொழிகளை அரசியல் பதிலாக மாற்றுவது தொடருமானால், நாம் தமிழர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு தேர்தல் தோல்வியைவிட ஆழமானதாக இருக்கலாம்.
ஏனெனில் ஒரு தேர்தலில் இழந்த வாக்குகளை அடுத்த தேர்தலில் மீட்டெடுக்க முடியும்.
ஆனால் ஒரு அரசியல் இயக்கம் தமிழர்கள் மத்தியிலேயே தனது நம்பகத்தன்மையையும், அரசியல் மரியாதையையும் இழந்துவிட்டால், அதை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.
எனவே நாம் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது சீமானின் பேச்சாற்றலோ, வாக்கு சதவீதமோ, தேர்தல் கூட்டல்–கழித்தல்களோ மட்டும் அல்ல.
விமர்சனத்தைத் துரோகமாகப் பார்க்கிறதா?
அல்லது திருத்தத்திற்கான வாய்ப்பாகப் பார்க்கிறதா?
என்பதும் தீர்மானிக்கும்.
இந்த அரசியல் பண்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால், மேற்கண்ட அனைத்து அரசியல் அறிவியல் கணக்குகளையும் தாண்டி, நாம் தமிழர் தமிழர்கள் மத்தியிலேயே தனது தனித்துவமான அடையாளத்தைப் படிப்படியாக இழக்கும் அபாயம் உள்ளது.
What's Your Reaction?
Like
9
Dislike
1
Love
3
Funny
0
Wow
1
Sad
0
Angry
0
Comments (0)