நேர்மையான, தெளிவான தமிழ்த் தேசிய அரசியலுக்கான மிகச் சரியான களமும் காலமும் இது!
தமிழ்த் தேசியம் ஏன் ஆட்சி அதிகாரத்தைப் பெறவில்லை? ஆபாசப் பேச்சு, அரசியல் நாகரிகம், கொள்கை முரண்பாடுகள், மக்கள் நம்பிக்கை குறித்து தமிழ் ஊடகம் திறனாய்வு.
தமிழ்த் தேசியம் ஏன் இன்னும் ஆட்சி அதிகாரத்தைப் பெறவில்லை? மக்களின் நிராகரிப்பா? இயக்கங்களின் அணுகுமுறையில் குறைபாடா?
தமிழ் ஊடகம் | அரசியல் திறனாய்வுச் சிறப்புக் கட்டுரை
தன் வாழ்நாளில் மது, மாது, கடும்சொல், ஆபாச பேச்சு என ஒருபோதும் தவறாக சிந்தித்திராத, பேசியிராத உலகம் புகழும் ஒரு தேசியத் தலைவரின் படம், பெயரை வைத்துக்கொண்டு ஆபாசமாகப் பேசுவது, அருவருப்பு சொற்களைக் கொண்டு வசைபாடுவது, ஒரு நிரந்தர நேர்மையான கொள்கை இல்லாது மாற்றி மாற்றிப் பேசித் தமிழர்களைக் குழப்புவதல்ல தமிழ்த் தேசியம் !
தமிழ்த் தேசிய அரசியல் நேற்று பிறந்ததல்ல. நூறாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணி கொண்டது.
பெரியார் ஈ.வெ.ராமசாமி முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்திலும் நீதிக்கட்சி அரசியலிலும் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முக்கியப் பங்காற்றினர். சுயமரியாதை இயக்கமே ஈ.வெ.ராவும் தானும் இணைந்து பெற்ற குழந்தை என்றே கி.ஆ.பெ.விசுவநாதம் வருணித்தார்.
1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றப்பட்ட காலகட்டத்தில், தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முன்னிறுத்திய கருத்தியல் முரண்பாடுகள் வலுப்பெற்றன.
கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ உள்ளிட்டோர் தமிழர் கழகம் என்றே இயக்கம் தொடங்கினர்.
'தமிழ்நாடு தமிழருக்கே!' என்ற முழக்கம் ஒலித்தது.
மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் உள்ளிட்ட பலரும் தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர்.
சி.பா.ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கி, தமிழர் அடையாள அரசியலைத் தேர்தல் களத்திற்கும் கொண்டு சென்றார்.
2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் தேர்தல் களத்தில் வலுவாக முன்னெடுத்தது.
பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழர் தன்னுரிமை, மொழியுரிமை, வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தது.
ஆனால், இத்தனை நீண்ட வரலாறும் போராட்டங்களும் இருந்தும் தமிழ்த் தேசிய அரசியல் ஏன் ஆட்சி அதிகாரத்தைப் பெறவில்லை?
தமிழர்கள் தமிழ்த் தேசியத்தை நிராகரிக்கிறார்களா?
அப்படியொரு முடிவுக்கு வர முடியாது.
தமிழ்மொழியை நேசிப்பதும் தமிழர் உரிமைகளை ஆதரிப்பதும் தமிழ்த் தேசியக் கட்சிக்கே வாக்களிப்பதும் ஒன்றல்ல.
மக்கள் தேர்தலில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூகநீதி, பாதுகாப்பு, நிர்வாகத் திறன், தலைமை மீதான நம்பிக்கை ஆகியவற்றையும் மதிப்பிடுகின்றனர்.
தமிழ்த் தேசிய உணர்வை ஆட்சி அதிகாரத்திற்கான மக்கள் நம்பிக்கையாக மாற்றுவதில்தான் சவால் இருக்கிறது.
பிற மொழியாளர்களின் அரசியல் மேலாதிக்கம் தடையா?
ஆட்சி அதிகாரத்தில் "திராவிட" எனும் முகமூடிக்குப் பின்னால் பிறமொழியாளர்கள் தங்களின் சுயநலனுக்கான அரசியலை முன்னெடுத்த காரணத்தால் "தமிழ் மொழி மீதான பற்றுதலை" மட்டும் முன்னிறுத்தி "தமிழர் நலன்" பின்னுக்குத் தள்ளப்பட்டது என்கிற குற்றச்சாட்டு வலுவாக தமிழ்த் தேசியர்களால் முன்வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தமிழர்கள் சாதி ரீதியாகத் தொடர்ந்து பிரித்தாளப்பட்டு வருகின்றனர் என்பதும் தமிழ்த் தேசியர்களின் மற்றுமொரு வலுவான குற்றச்சாட்டு. இதில் அரசியல் ஆட்சி அதிகார அதிக இலாபம் அடைபவர்களாகப் பிறமொழியாளர்கள் இருக்கின்றனர் என்பதும் தமிழர்களின் வாதம்.
அதேவேளை, தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பதும் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினரின் சம உரிமைகளை உறுதிப்படுத்துவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், அதில் சரியான விகிதாச்சாரம் இல்லாமல் உள்ளது என்பதுதான் தமிழ்த் தேசியர்களின் வலுவான வாதம். பிறமொழியாளர்கள் அவர்களின் எண்ணிக்கைக்கும் அதிகமான விகிதாச்சாரத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள் என்பதை எண்ணிக்கை ஆவணத்தோடு முன்வைக்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள்.
சீமானின் நாம் தமிழர் கட்சி கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
தொடர்ச்சியான தேர்தல் பங்கேற்பும் கணிசமான வாக்கு வளர்ச்சியும் இருந்தபோதிலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பின்னடைவைச் சந்தித்தது.
இதற்கான காரணங்களைத் தலைமை, கூட்டணிக் கொள்கை, வேட்பாளர் தேர்வு, தொகுதிவாரியான களப்பணி, மக்களின் அன்றாடத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்தல் தோல்வியை எதிரிகளின் சூழ்ச்சியாக மட்டுமே விளக்காமல், தன்னுடைய குறைபாடுகளையும் ஆய்வு செய்வதே அரசியல் முதிர்ச்சி.
தமிழ்த் தேசியர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
1. "தெளிவான அரசியல் இலக்கு" : மாநிலத் தன்னாட்சி, கூட்டாட்சி உரிமைகள், தேசியத் தன்னுரிமை ஆகியவற்றில் தங்களின் நிலைப்பாட்டை விளக்குதல்.
2. "வாழ்வாதார அரசியல்": விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான நடைமுறைத் திட்டங்களை உருவாக்குதல்.
3. "சாதி ஏற்றத்தாழ்வற்ற சமூகநீதி": பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் சம உரிமைகளையும் பாதுகாத்தல்.
4. "அமைப்பு வலிமை": தனிநபர் புகழை மட்டுமே நம்பாமல், ஜனநாயகத் தலைமை, உள்ளாட்சிக் கட்டமைப்பு, தொகுதிவாரியான களப்பணியை வளர்த்தல்.
5. "அறிவார்ந்த தேர்தல் அணுகுமுறை": வாக்காளர் ஆய்வு, தேர்தல் தரவுகள், வெற்றி தோல்விகளுக்கான நேர்மையான மதிப்பீடு.
6. "பொதுக் கோரிக்கைகளில் ஒற்றுமை": தமிழ்த் தேசிய இயக்கங்கள் தங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டே மொழியுரிமை, காவிரி, ஈழத்தமிழர் நீதி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இணைந்து செயல்படுதல்.
பிற கட்சிகள், இயக்கங்களின் சமூகப் பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டே அவற்றின் அரசியல் குறைபாடுகளை விமர்சிக்கும் நேர்மையும் தமிழ்த் தேசிய அரசியலுக்குத் தேவை.
தமிழ்த் தேசிய அரசு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
தமிழ்மொழியைப் பாதுகாக்கும் அரசாக மட்டுமல்ல; சாதி ஆதிக்கம், ஊழல், பொருளாதாரச் சுரண்டல், அதிகாரக் குவிப்பு ஆகியவற்றை எதிர்க்கும் அரசாகவும் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டதா என்பதல்ல கேள்வி. தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கான அரசியல் தகுதியையும் மக்கள் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளனவா என்பதே கேள்வி!
உணர்ச்சிகரமான முழக்கங்கள் மட்டும் இனி போதாது.
அச்சுறுத்தாத அரசியல்; வெறுப்பை விதைக்காத தேசியம்; சாதியற்ற சமூகநீதி; அறிவார்ந்த பொருளாதாரத் திட்டம்; நேர்மையான தலைமை; மக்கள் நம்பும் நிர்வாகத் திறன்!
இவற்றை உருவாக்கினால் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் புதிய வாய்ப்புகள் திறக்கலாம்.
நேர்மையான, தெளிவான தமிழ்த் தேசிய அரசியலுக்கான மிகச் சரியான களமும் காலமும் இதுதான்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)