ஜெம் வீரமணி வழக்கு: கோடிகள், சொகுசு ரிசார்ட்டுகள்! வெளிவரும் மர்மங்கள்?!
ஜெம் வீரமணி வழக்கின் Closure Report சர்ச்சை! கொடைக்கானல் ரிசார்ட், நில அபகரிப்பு, கோடிக்கணக்கான பணப் பரிமாற்றங்கள் குறித்த புதிய குற்றச்சாட்டுகள் உண்மையா? பருந்தார் தகவல்கள்.
+ கிணறு வெட்டக் கிளம்பியதா பூதம்?!
+ ஜெம் வீரமணி பணத்தில் கொடைக்கானலில் ரிசார்ட்?!
+ நிலஅபகரிப்பு வழக்குகளில் புகுந்து விளையாடிக் கோடிகள் சேர்ப்பா?!
+ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அவலம் !
+ கோடிக்கணக்கில் 'கறக்கப்பட்ட' பணம்?!
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
யாரிடமோ மிகத் தீவிரமாக அலைபேசியில் பேசிக்கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்த பருந்தார் இருக்கையில் வந்தமர்ந்தார்.
அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு சிறிது நேரம் மவுனம் காத்தார் பருந்தார். என்றுமில்லாத அளவில் பருந்தார் முகத்தில் ஆழமான சிந்தனை ரேகை. முகம் சற்று இறுக்கமாக இருந்தது.
என்னங்க பருந்தாரே உங்கள் முகம் சற்று இறுக்கமாக இருக்கிறதே? என்று மெதுவாகக் கேட்டுக் கொண்டே இயற்கை முறையில் விளைந்த தேநீர் இலையைக் கொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட தேநீரில் இனிப்பு சற்று கூடுதலாகச் சேர்த்து சூடாகக் கொடுத்தோம்.
கொஞ்சம் அருந்திய பிறகு முகம் சற்று இலகுவானது. பேசத் தொடங்கினார் பருந்தார்.
"எனக்குத் தெரிந்த சில பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் UNI நிறுவனத்தில் பணியாற்றிய குமார் எனும் ஒரு பத்திரிகையாளர் காலமாகிவிட்டார். அவர்கள் ஒருமுறை அயோத்திக்குப்பம் வீரமணியை அப்போதைய மாநகர காவல் ஆணையர் விஜயகுமார் ஐபிஎஸ் முன்னால் நிறுத்தி, "இனி தவறு செய்யமாட்டேன் சத்தியம் என்று கூறவைத்து, எனக்குத் திருந்த வாய்ப்புக் கொடுங்கள்" என்று கேட்க வைத்தார்கள்.
ம்...
அப்போது விஜயகுமார் IPS சொன்னது இதுதான், "உன் முழு ஜாதகம் என்னிடம் உள்ளது. 300 கோடிக்கு சொத்து வைத்திருக்கிறாய். உனக்கு ஒரு மாதம் வாய்ப்பு தருகிறேன். சென்னைக்குள் இருக்கவே கூடாது. மேலும், எந்தப் பிரச்சனையிலும் உன் பெயர் வராமல் பார்த்துக்கொண்டால் உனக்கு மன்னிப்புத் தர முதலமைச்சரிடம் பேசுகிறேன்" என்று எச்சரித்து அனுப்பினார்.
ம்...
சரிங்க சார்...என்று சொல்லிவிட்டு வந்த வீரமணி புதுச்சேரி பக்கம் சென்றார். ஆனால், அடங்கமாட்டாமல் அடுத்த வாரமே மீண்டும் சென்னைக்குள் வந்து அமர்ந்து கொண்டு கட்டப் பஞ்சாயத்துப் பேச ஆரம்பித்தார்.
ஓ...
அடுத்த சில நாட்களில் மெரினா கடற்கரையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரையின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார் அயோத்திகுப்பம் வீரமணி.
போச்சா...ம்...திருந்த வாய்ப்புக் கொடுத்தும் அடங்காம இருந்தா என்ன செய்ய முடியும் என்றோம்.
ஆமாம், Greater Chennai Police என்றழைக்கப்படும் பெருமை மிகுந்த சென்னை மாநகரக் காவல்துறையில் அப்படிப்பட்ட ஹானஸ்ட்டான ஆணையர்களும் பணியாற்றினார்கள், அண்ணா பல்கலைக் கழக மாணவியின் முதல் தகவல் அறிக்கையைக் கசியவிட்டு, ஜெம் வீரமணியின் வழக்கை ஊத்தி மூடிய ஆணையர்களும் பணியாற்றியுள்ளார்கள் என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக உள்ளது என்ற பருந்தார் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
ஒரு காவல்துறை அதிகாரி, ஒருவேளை அவர் கறைபடிந்த கைக்கு சொந்தக்காரர் என்றாலும்கூட அவரைப் போன்ற அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவேண்டிய பத்திரிகையாளர்களும் அவருடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஆட்டம் போட்டால் என்ன சொல்வது?! அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறது என்றார் பருந்தார்.
உண்மைதான் பருந்தாரே...நீங்கள் சொல்லும் இந்த உண்மை சக பத்திரிகை ஊடகர்களுக்கே இப்போதுதான் உரைக்கத் தொடங்கியிருக்கிறது என்றோம்.
உண்மைதான், பொய் புல்லட் வேகத்தில் சென்றால் உண்மை ஆமை வேகத்தில்தான் மக்களிடம் சென்று சேரும் என்ற பருந்தார் தொடர்ந்து பேசினார். மாநிலத்தில் எந்த ஊரில் ரவுடிகள் மீது 'என்கவுன்ட்டர்' திட்டமிடப்பட்டாலும் அந்தத் தகவல் இவர்களின் கவனத்துக்கு வந்துவிடுமாம். அந்த ரவுடிகள் சிலரைக் காப்பாற்றும் 'வேலைகளும்' நடந்தேறியிருக்கின்றன என்கிறார்கள். சில வேண்டப்படாத ரவுடிகளை வேறு சில அவர்களுக்குத் தொடர்பே இல்லாத வழக்குகளில் 'போட்டுத்தள்ளப்பட்ட சம்பவங்களும்' நடந்தேறியிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.
ஓ...இது வேறயா..என்று அதிர்ச்சியாகக் கேட்டோம்.
ஆமாம், இந்தத் தகவல் கேட்டுத்தான் எனக்கு அயோத்திக் குப்பம் வீரமணி என்கவுன்ட்டர் நினைவுக்கு வந்தது என்றார் பருந்தார்.
புரிகிறது பருந்தாரே...கொடுமை...ம்..அப்புறம்.
இவர்கள் எள் என்றால் எண்ணெய் அரைத்துக் காய்ச்சிக் கொண்டு வந்து தருவதற்கு நிலம் தொடர்பான பிரிவில் 'உதவிகள்' இருவர் இருக்கிறார்களாம். ஒருபுறம் பத்திரப்பதிவுத் துறையிலிருந்து அனாமத்து, பஞ்சாயத்து, பிரச்னைக்குரிய இடங்களின் பட்டியல் வந்துவிடுமாம்.
ம்....
அந்த விவரம் நிலஅபகரிப்புப் பிரிவின் உதவிகளிடம் கொடுக்கப்படுமாம்.
ஓ.....
அதன்பிறகு என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவேண்டியதில்லை, இந்தக் கோணத்திலும் விசாரணை நடக்கிறதாம் என்ற பருந்தாரிடம்,
தலை சுற்றுகிறது பருந்தாரே...நீங்கள் விசாரிக்காமல் எதையும் சொல்ல மாட்டீர்கள். இருந்தாலும் எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது என்றோம்.
நான் கற்பனையில் சொல்லவில்லை, அதேபோல நான் என் கண்களால் நேரில் பார்த்தும் நான் சொல்லவில்லை...இரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை மட்டுமே கூறுகிறேனே தவிர இவையெல்லாம் காவல்துறை விசாரணையின் முடிவில்தான் உண்மையா இல்லையா என்று தெரியும் என்ற பருந்தார், 'ஜெம் வீரமணி ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக' இருந்திருக்கிறார் என்று அடுத்த தகவலைக் கொட்டத் தொடங்கினார்.
ம்....
ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்கும் அதே சென்னை மாநகரக் காவல்துறையினர் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் இதுவரை 11 சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
ம்....
அதே சென்னை காவல்துறையின் முன்னாள் அதிகாரிகள், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்த வழக்கில் FAD என்று சுருக்கமாக அழைக்கப்படும் Further Action Dropped அதாவது மேலதிக விசாரணை கைவிடப்பட்டது என்று முடிவு அறிக்கை ஒன்றை போக்சோ நீதிமன்றத்தில் 18/02/26 அன்று சமர்ப்பிக்கின்றனர்.
ம்...வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது பருந்தாரே ?
வீரமணி மீது வழக்கு 17/10/2025 ல் பதிவு செய்யப்பட்டது. நான்கு மாதங்களில் வழக்கு கைவிடப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நான்கு மாதங்களில் என்ன நடந்தது என்பதுதான் சில காவல்துறை மற்றும் சில பத்திரிகையாளர்கள் தொடர்புடைய மிக முக்கியமான மர்மம்...இல்லையா பருந்தாரே என்றோம்.
ம்...கரெக்ட்., ஆனா..என்ன கொடுமைன்னா, இன்று 11 சிறுமிகளை அடையாளம் கண்டு வாக்குமூலம் வாங்க முடிந்த நிலையில், அன்று அந்த விசாரணை கைவிடப்பட்ட அறிக்கை தாக்கல் செய்தபோது...
"01. காணொலியில் இடம்பெற்ற சிறுமியை அடையாளம் காண முடியவில்லை; அவரது வயதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
02. காணொலி 2019ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பதால், சம்பந்தப்பட்ட வீட்டின் DVR சாதனத்திலிருந்து அசல் பதிவை மீட்க முடியவில்லை.
03. வீரமணி, காணொலியில் இருப்பவர் தாம் அல்ல என்று மறுத்துவிட்டார். சாந்தியும் மறுத்துவிட்டார்.
04. வீரமணி, சாந்தி மீது முந்தைய காலத்தில் எந்தக் குற்ற வழக்கும் இல்லை"
இப்படிச் சொல்லி கிட்டத்தட்ட வீரமணி, சாந்தி ஆகியோருக்கு 'நற்சான்றிதழ்' வழங்காத குறையாக அந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டிருக்கிறது.
அடக்கொடுமையே....இப்போது மட்டும் எப்படி இந்தக் காவல்துறையினர் அத்தனை பேரையும் உள்ளே தள்ளி, 11 சிறுமிகளை அடையாளம் கண்டு, அதிகாரிகளைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்து விசாரிக்கின்றனர்?! என்று வியப்போடு கேட்டோம்.
இப்போது புரிகிறதா எந்த அளவுக்கு முந்தைய காவல்துறை அதிகாரிகளின் காலத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று?! என்ற பருந்தாரிடம்...
புரிகிறது...பருந்தாரே, காவல்துறையுடன் இணைந்து பத்திரிகைத் துறையில் பணியாற்றும் கருப்பு ஆடுகளும் அதிகாரத்தைத் தவறாகத் தங்கள் 'வசதிக்கு' ஏற்ப வளைத்திருக்கிறார்கள் என்றோம்.
ஆமாம்... அதாவது காவல்துறை தரப்பு இப்படி வழக்கை ஊத்தி மூடிவைக்க ஒருபுறம் 'வேலை' செய்ய, அந்தச் செய்தி வெளியில் கசிந்துவிடாமல் பத்திரிகை - ஊடகங்களின் வாயை மூடிவைக்க சிலர் மறுபுறம் 'வேலை' செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆக இரண்டு தரப்புகள் மெனக்கெட்டு வேலை செய்திருக்கின்றன. அதிலும் அந்தச் செய்தி பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் 'கவனிப்புகள்' சிலதும் நடந்திருக்கிறதாம் என்ற பருந்தாரிடம்,
இதில் என்ன சந்தேகம் பருந்தாரே....பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தச் செய்தி ஒன்றும் பெரிய அளவில் வெளிவரவில்லையே...ஆட்சி மாறி, அதிகாரிகள் மாறிய பிறகுதானே குறிப்பாக மாநகர ஆணையராக அமல்ராஜ் வந்தபிறகுதானே சில நாளிதழ்களிலும், சில Youtube களிலும் வரத் தொடங்கியது என்று நினைவூட்டினோம்.
ஆமாம், அப்படி வெளிக்கொண்டுவந்த பாலிமர் கதிரவன், நியூஸ் மினிட் ஷபீர் அகமது உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீதுதான் "கோயம்பேடு காவல் ஆய்வாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டினார்கள், வீரமணியைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள்" என்று ஒரு அபாண்டமான அவதூறுத் தகவலைப் பரவவிட்டது சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவரும், தினகரன் தலைமைச் செய்தியாளரும், அருண் ஐபிஎஸ்-சின் உயிர் நண்பருமான சுரேஷ் வேதநாயகம் மற்றும் நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் அன் கோ.
ஓ....இப்போத் தெளிவாகப் புரிகிறது பருந்தாரே...எதனால் சுரேஷ் வேதநாயகம், பிரகாஷ் அன் கோ மீது வழக்கு பதிவாகியது என்று நாம் கூற,
அதிலும் கொடுமை, அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட பிறகும் சுரேஷ் வேதநாயகம் அன் கோ இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறர்கள் எனும்போது 'அப்படி ஜெம் வீரமணி செய்தி வெளியாகாமல் கட்டையைக் கொடுப்பதில் இவர்களுக்கு என்ன அக்கறை?! என்ற கேள்வி எழுகிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பினார் பருந்தார்.
ஆமாம் பருந்தாரே...சரியான கேள்விதான் என்றோம்.
இப்படிப் பலர், வீரமணி எனும் பொன் முட்டையிடும் வாத்தை கரன்சி, தங்கம் என்று முட்டையிட வைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
ம்...புரிகிறது.
அந்த முட்டைகளை வைத்து தென்காசி, குற்றாலம், கொடைக்கானல் என்று பல இடங்களில் சொகுசு ரிசார்ட்டுகள் வாங்கப்பட்டதாகவும் தகவல்.
சுத்தம்...சரிங்க பருந்தாரே, சுரேஷ்சிடம் விசாரணை எந்த அளவுக்கு உள்ளது என்று கேட்டோம்.
தாமோதரன் பிரகாஷ், சுரேஷ், சரத் உள்ளிட்ட நான்கு பேரிடம் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரித்து அலைபேசிகளை வாங்கிக்கொண்டது காவல்துறை. அடுத்த விசாரணை 24 ம் தேதி என்று சொல்லியியிருக்கிறார்களாம். வழக்கு SIT க்கு மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள் என்ற பருந்தார்,
சுரேஷ் வேதநாயகம் மீது இந்த நடவடிக்கை பாய்ந்ததில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் அவரால் பாதிக்கப்பட்ட தினகரன் முன்னாள் ஊழியர்கள். மாநிலம் முழுவதும் "என் வாழ்க்கையைக் கெடுத்து அழித்தவர் அவர்" என்று வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்களாம். நமக்கே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது, smart ஆக cool ஆக இருக்கும் சுரேஷ் பின்னணியில் இத்தனை பெரிய வில்லத்தனம் இருக்கிறதா என்று ! என்ற பருந்தார், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன்னால், நேற்று இரவு ஹெல்மெட் போட்டபடி வந்த யாரோ இரண்டுபேர் ஒரு ஆயிரம் வாலா வெடியை வெடிக்க வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அடடே...யார் அது...?!
யாரோ சுரேஷ்சால் ரொம்ப பாதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற பருந்தார், தன்மீது இவ்வளவு நடவடிக்கை பாய்ந்த பிறகும் தினகரன் பணி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றைத் தாமாக விட்டுவிவிட்டு வெளியே வந்து "நான் குற்றமற்றவர் என்று நிரூபித்து, அதன்பிறகு இந்தப் பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்வதுதான் ஒரு தலைமைப் பொறுப்புக்கு அழகு எனும் குரல் பத்திரிகை ஊடகர்கள் மத்தியில் வெளிப்படையாகவே எழுந்துவிட்டது என்ற பருந்தார்,
இந்தக் குற்றச்சாட்டுகளெல்லாம் பொய், உண்மையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் அல்லது மக்கள் மன்றத்தில் நிரூபித்தால் அப்போது அதனையும் நாம் பருந்தார் தகவல்களில் தயக்கமின்றிப் பதிவிடுவோம், நமக்கு ஒன்றும் தனிப்பகை எதுவுமில்லை என்று கூறிய பருந்தார் நின்ற இடத்திலிருந்து சர்ரென உயரத்திற்குப் பறந்து கண்களிலிருந்து மறைந்தார்.
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)