ஸ்டாலின் லண்டன் பயணம், நாம் தமிழர் சர்ச்சை, தவெக நகர்வு, கரூர் அரசியல்... பருந்தார் வெளியிடும் பிரத்யேக தகவல்கள்
மு.க. ஸ்டாலின் குடும்பத்தின் லண்டன் பயணம், நாம் தமிழர் கட்சியில் எழுந்துள்ள சர்ச்சைகள், பா. ஏகலைவன் விவகாரம், தவெக அரசியல் நகர்வுகள், கரூர் அரசியல் மற்றும் எ.வெ.வேலு தொடர்பான தகவல்களை பருந்தார் பகிரும் சிறப்புத் தொகுப்பு
அழகான மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணத்தை முடித்துவிட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தோம். ஊர்திக் கதவின் கண்ணாடியை இறக்கிவிட்டு சிலு சிலு காற்றை இரசித்துக்கொண்டு வந்தோம்.
ஓடும் ஊர்தியின் கதவில் வந்தமர்ந்தார் பருந்தார். ஏதோ தகவல்களோடு வந்திருக்கிறார் என்று புரிந்து உள்ளே அழைத்து அமரவைத்தோம்.
கடந்த 2 ம் தேதி மாப்பிள்ளை சபரீசன் குடும்பத்துடன் லண்டன் சென்று சேர்ந்தார். அடுத்து 4 ம் தேதி மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் புறப்பட்டு லண்டன் சென்று சேர்ந்தனர். இன்று 11 ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி ஆகியோர் புறப்பட்டு லண்டன் சென்றுள்ளனர். அவர்களோடு ஒரு 15 இளம் வயதுக்காரர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள், இன்பநிதி விரும்பி விளையாடும் விளையாட்டுப் பொருட்கள்கூட உடன் எடுத்துச் செல்லப்பட்டிருக்கு. என்று சுடச் சுடத் தகவல்களை அடுக்கினார் பருந்தார்.
விளையாடவெல்லாம் இடம் இருக்கா அங்கே என்று அப்பாவி போல கேட்டோம்.
அதெல்லாம் விளையாட்டு அரங்கம், புல்வெளி, நீச்சல்குளம் உட்பட வசதியா பெரிய பங்களாவே இருக்காம் என்றார் பருந்தார்.
ஆக மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் செல்வதால் ஏதோ முக்கியமான வேலை போல. சென்று நலமுடன் வரட்டும் என்றோம் நாம்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய மாநில நிர்வாகி முத்துப்பாண்டி ஒரு நீண்ட கடிதத்தை தலைமைக்கு அனுப்பிவிட்டு விலகியிருக்கிறார் என்ற பருந்தாரிடம்...
ஆமாம் பார்த்தோம். கட்சித் தலைமையிலிருந்து யாரும் அவரை அழைத்து பேசவில்லையா? என்று கேட்டோம்.
யாரும் அழைக்கவில்லை போல. 9 ஆண்டுகள் கடுமையாகப் பணியாற்றிவிட்டு மேற்கொண்டு கட்சியில் இருக்க முடியாத நிலை வந்து வெளியேறிய ஒரு மாநில நிர்வாகியை சீமானாவது அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரும் அழைக்கவில்லை போல என்று கூறிய பருந்தாரிடம்,
மக்களைப் பார்த்து, "ஓட்டுப் போட்டாப் போடு...போடாட்டிப் போ" நிர்வாகிகளைப் பார்த்து "இருந்தா இரு இல்லாட்டா ஓடு" என்பதுதான் நாம் தமிழரின் சிம்பிள் பார்மூலா போல என்று கூறிவிட்டு அப்புறம் அது என்ன பத்திரிகையாளர் ஏகலைவன் மீது நாதக வீரத் தமிழர் முன்னணி நிர்வாகி செந்தில்நாதன் ஓடி ஓடி ஒவ்வொரு ஊடகமா உட்கார்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிட்டு இருக்கார்...என்று கேட்டோம்.
சிரித்தவாறே பருந்தார் சொன்னார்..."நல்லா கவனிச்சு இருக்கீங்க... பா. ஏகலைவன் அப்படி ஒன்றும் கடுமையான விமர்சனத்தையும் வைக்கல....சீமான் திமுக தலைவர்களோடு இப்படிக் கொஞ்சிக் குலவுனா அது சீமானுக்குத்தான் பாதிப்புன்னு" அறிவுரைதான் சொன்னார். உடனே துரு துருன்னு ஓடி வந்து முகநூல் பதிவு ஒன்றையும் காணொலி ஒன்றையும் போட்டு "ஏகலைவன் - மூத்த பத்திரிகையாளரின் சில்லறைத்தனம்" அப்படினு கடுமையாகத் தாக்கினார் செந்தில்நாதன் என்று சொல்லிக்கொண்டிருந்த பருந்தாரிடம்...
ஆனா, அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்லி செந்தில்நாதனிடம் சொல்லிவிட்டோம்னு அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் எங்களோட செய்தி ஆசிரியர்கிட்ட சொன்னாரே.....
அப்படி செந்தில்நாதனிடம் பாக்கியராசன் சொல்லியிருக்கலாம், சொல்லாமலும் இருக்கலாம், ஆனா இந்த நொடி வரை நீக்கலை. அதுமட்டுமல்ல தன்னோட ஊடகம் மட்டுமல்லாம அடுத்து TN 24 அப்படிங்கற ஊடகத்துக்கும் செந்தில்நாதன் பேட்டி கொடுத்திருக்கார். தன்னோட ஊடகத்துல பேசினதைத்தான் அங்கேயும் பேசியிருக்கார்.
சீமானால்தானே ஏகலைவன் வளர்ந்தார்னு சொன்னாரே அதுதானே...என்று கேட்டோம்.
ஆமாம்...ஆனா நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னடியே தந்தி டிவியில் சீமானை நெறியாளரா வச்சு "மக்கள் முன்னால்" என்கிற தொலைகாட்சித் தொடரைத் தயாரித்தவர் பா. ஏகலைவன். அதேபோல, ராவணா காட்சி ஊடகத்தை ஆரம்பிக்க சொல்லி ஏகலைவனை வலியுறுத்திய ஆட்களில் உங்க செய்தி ஆசிரியரும் ஒருவர்.
ஆமா...இப்பதான் நினைவுக்கு வருது.
ஏகலைவன் ராவணா ஊடகத்தைத் தொடங்கிறதுக்கு முன்னாடியே முகநூலில் அவர் அன்றாடம் எழுதும் கட்டுரைகள், பதிவுகள் உலக அளவில் புகழ் பெற்றது. திராவிடப் புரட்டு அரசியலை பிரிச்சு மேஞ்சு வைப்பார். அப்புறம்தான் அவர் ராவணா ஊடகம் ஆரம்பிச்சார். எனவே காட்சி ஊடகத்தில் சீமானை ஏகலைவன் பேட்டி எடுத்தது என்னவோ ராவணா தொடங்கியதுக்கு அப்புறம் மட்டுமல்ல. தந்தி டிவியிலேயே ஏராளமான தொடர் எடுத்துட்டார். இதெல்லாம் செந்தில்நாதனுக்குத் தெரியாது போல என்ற பருந்தாரிடம்....
ஆனா சீமானுக்குத் தெரியுமே....அவர் ஏன் செந்தில்நாதனை இப்படி அனுமதிக்கிறார் ?!
தேர்தலுக்குப் பிறகு சீமானின் மவுனம்தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். திமுக தலைவர்களுடனான அவரது "மாண்பு" காட்டும் செயல்கள் குறித்து இவ்வளவு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும்போதும் அவர் மவுனம் காப்பதுதான் இது போன்ற தேவையற்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்றார் பருந்தார், செந்தில்நாதன் பேட்டி கொடுத்த TN 24 சேனலைத் தொடங்கியதே ஏகலைவன்தான். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பத்தின்பேரில் தொடங்கி நடத்திக்கொடுத்தார். அப்புறம் அந்த நிர்வாகிகளுடன் ஒத்து வராததால் வெளில வந்துட்டார்.
ஓ....அதனாலதான் அந்த TN 24 ஊடகத்துக்கு செந்தில்நாதன் பேட்டி கொடுத்திருக்கார். அந்த TN 24 நிர்வாகிகளுக்கும் ஏகலைவனுக்கும் ஏற்கனவே இருக்கும் கருத்து வேறுபாட்டை மேலும் பத்த வச்சு எரிய விடுகிறார் செந்தில்நாதன்.
மிகச்சரி என்றார் பருந்தார்.
சரி...செந்தில்நாதனுக்கு இதில் என்ன இவ்வளவு ஆர்வம் என்று இழுத்தோம்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளிநாடு தொடர்புகள் கொண்டிருந்தவர் கல்யாண சுந்தரம். அவருக்குப் பிறகு வேறு யாரையும் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு சீமான் அனுமதிக்கலை. ஆனா, செந்தில்நாதன் மட்டும் அதற்குப் பிறகும் வெளிநாடு சென்று வந்தார். வெளிநாட்டுகாரர்களிடம் தொடர்பில் இருக்கார்.
ஓ....
அந்தத் தொடர்புகளில் சில வெளிநாட்டுக் காரர்களுக்கு ஒரு "வேலைத் திட்டம்" இருக்கு. அது, சீமானுக்கு மிக உதவியாக இருக்கும் ஆளுமைகளை சீமானிடம் இருந்து துண்டித்து விடுவது என்பதை சிறப்பாகச் செய்து முடிக்கும் வேலை.
அடேங்கப்பாஆ... தலை சுத்துது....ம் சொல்லுங்க என்றோம்.
சீமானுக்கும் அந்த ஆளுமைக்கும் இடையே உரசலை ஏற்படுத்தி, சண்டை மூடிவிட்டு அந்த ஆளுமைகளை கட்சிக்கு எதிராகவும் திருப்பி விடும் வேலையை அவங்க செய்வாங்க.
ம்....
அந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த வெளிநாட்டுக் குழுதான் செந்தில்நாதனுக்குப் பின்னாடி இருந்து இயக்குதோன்னு ஒரு டவுட் இருக்கு. ஒருவேளை செந்தில்நாதனுக்கே இந்த சூழ்ச்சி தெரியாமல் இருக்கவும் வாய்ப்புண்டு .
ஆக..ஏகலைவனும் சீமானும் இனி நெருங்கவே கூடாது அப்டிங்கறதுதான் அந்தக் குழுவோட இப்போதைய டாஸ்க் அப்படித்தானே என்றோம்.
கககபோ என்ற பருந்தார், ஆனா இந்த நுட்பமான அரசியல் எல்லாம் தெரியாத சின்னப்பசங்க உங்க ஆசிரியர்தான் ஏகலைவன் - சீமான் முரணுக்குக் காரணம்னு அவரைத் திட்டிட்டு இருக்காங்க.
செந்தில்நாதனின் செயலுக்குப் பின்னாடி இவ்வளவு ஒரு பெரிய வேலை இருக்கா என்று ஆச்சரியப்பட்டோம்.
"அப்படி ஒரு திட்டம் இல்லாட்டா ஏகலைவன் ரொம்ப எதார்த்தமா நட்போடு பேசி வெளியிட்ட ஒரு காணொலிக்கு இவ்வளவு கடுமையா செந்தில்நாதன் எதற்கு எதிர்வினை ஆற்றனும் ? உங்க தமிழ் ஊடகம் மற்றும் ஏகலைவனுக்கு எதிரா இந்த அளவுக்கு மட்டரகமா எதிர்வினை ஆற்றும் அளவுக்கு அப்படி ஒன்னும் நீங்க ரெண்டுபேரும் தப்பாப் பேசலேயே" என்ற பருந்தார்....இந்தக் கூத்துக்களை எல்லாம் உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்கிற புலம்பெயர் பெரிய ஆட்களுக்கும், தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கும் பெரும் வருத்தமாம். எனவே இதற்கு சீமான்தான் நல்லபடியா முற்றுப்புள்ளி வைக்கனும் என்றார்.
தொடர்ந்து பேசிய பருந்தார், வெளியேறிய முத்துப்பாண்டியைத் தவெக வருக வருக என்று வரவேற்கக் காத்திருக்காம் என்று ஒரு கொசுறுத் தகவல் தந்துவிட்டு...
தவெக தரப்புல அதிமுவில் இருந்து கண்மூடித் தனமாக எல்லா நிர்வாகிகளையும் இழுக்கலயாம். திமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைத்தான் இழுக்கறாங்களாம்.
அடடே....
ஆமாம், அப்படி செந்தில் பாலாஜிக்கும், அன்பிலுக்கும் எதிரான ஆயுதங்களாகத்தான் ரெண்டு விஜய பாஸ்கார்களை இழுத்து இருக்காங்க. முன்னாள் அதிமுக விஜயபாஸ்கர் கரூர் நகரத்துல விஜய்க்கு ஒரு பலம்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்ற பருந்தார்...
எ.வெ.வேலு நாளை இந்தியா திரும்பறார். வானூர்தி நிலையத்துல வச்சே கைது பண்ண ஏற்பாடு. அதை முறியடிக்க திமுக வழக்கறிஞர்கள் அணியும் தயார் என்று சொல்லிக்கொண்டே ஊர்தியின் கண்ணாடியைத் திறந்து வானத்தை நோக்கிப் பறந்து விட்டார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)