ரஜினியை வீழ்த்த கமல்ஹாசன்–பாலச்சந்தர் போட்ட திட்டம்? ‘தில்லு முல்லு’ பின்னணி என்ன? | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் 5
ரஜினியின் அசுர வளர்ச்சியைத் தடுக்க கமல்ஹாசன்–பாலச்சந்தர் திட்டமிட்டார்களா? ‘தில்லு முல்லு’ படத்தில் மீசையில்லாத ரஜினி எப்படி அதையே மாபெரும் வெற்றியாக மாற்றினார்? தொடர் 5.
-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
நீளமான வாரப்படாத முடி, கருப்பு நிறம், சிறிய கண்கள், வேகமான உடல் அசைவுகள், மொத்தத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தும் அருமையான உடல் மொழி...பார்க்க பக்கத்து வீட்டுப் பையன் போல இருப்பது ரஜினிக்குப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஆட்டோக்காரர், கூலிக்காரர், கட்டிடத் தொழிலாளி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தங்களை ரஜினி போலவே மனதுக்குள் உருவகப்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது
1979 காலகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை "ஓவர் டேக்" செய்து திரை உலகை ரஜினிகாந்த் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், தனது சம வயது நடிகரான ரஜினிகாந்த் திரை உலகில் தம்மை மிஞ்சுவார் என அப்போது கனவிலும் கூட கண்டிருக்க மாட்டார் கமல்ஹாசன்.
காரணம் அது கமல் உருவத்தில் வெண்மை நிறம் - திறன்களில் வசனம், பாடல், நடனம், சண்டைக்காட்சி, நடிப்பு என "ஆல் ரவுண்டராக"சிறந்து விளங்கினார் என ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் விடாமல் கமல் ஹாசன் குறித்து எழுதித் தள்ளிக் கொண்டிருந்த காலமும்கூட.
மேலும் கமல்ஹாசனை பெண்களின் கனவு நாயகன் என்றும், அழகின் சிகரம் என்றும் அதே பத்திரிகைகள் தூக்கித் தலையில் வைத்துப் புகழ்ந்து எழுதின.
அதற்கு ஏற்ப "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் பெண்கள் கமல் மீது மோகம் கொள்வதாகவும், ஒரு பெண்ணிடம் ரஜினி வலியைச் சென்றாலும் அந்தப் பெண் ரஜினியை நிராகரிப்பதாகவும் ஒரு காட்சி அமைத்திருப்பார் பாலச்சந்தர். அப்போதுதான் ரஜினி ரசிகன் பாலச்சந்தர் மீதும் சந்தேகமும் கோபமும் கொண்டான் என்பது உண்மை நிலை.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் கமல் நடித்த கடல் மீன்கள், டிக் டிக் வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்கள் சுமாராகத்தான் போய்க் கொண்டிருந்தன.
அதே வேளையில் ரஜினி நடித்த ஜானி, காளி, பொல்லாதவன், தீ, போன்ற படங்கள் ஹீரோயிசம் தாங்கிய பெயர் கொண்ட படங்கள் மட்டுமல்லாது கதாநாயகனவே திரையரங்குகளில் சுற்றிச் சுற்றி வந்தன. அனல் பறந்த சண்டை காட்சிகள், சவால்கள் நிறைந்த உக்கிரமான பாத்திரங்களாகவும் ரஜினிக்கு அமைந்தன. குறிப்பாக சிறு வயது பிள்ளைகளுக்கு ரஜினியின் ஸ்டைல் பிடித்ததால் குடும்பத்தையே தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழ்த் திரையுலகில் எவரையும் ஒப்பிட முடியாத ஹீரோவாக ரஜினி உருவெடுத்தார்.
படத் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ரஜினி படம் என்றாலே தீபாவளி போலக் கொண்டாட்டம்தான். வசூலில் வாரிக் குவித்தனர். தியேட்டரில் முறுக்கு விற்பவர்கள் கூட கூடுதலாக ஐந்து ரூபாய் லாபம் எடுக்கும் அளவுக்கு நிலை உருவானது.
இதனால் ரஜினி படங்கள் என்றாலே குறைந்தது 50 நாட்கள் ஓடும் என்ற நிலை உருவானது. ரஜினி "8 வார கேரண்டி ஹீரோ" எனவும் பேசப்பட்டார். அதாவது குறைந்தபட்சம் 60 நாட்கள் படம் ஓடும் என்ற நிலையை ரஜினி உருவாக்கினார்.
ரஜினியை வைத்து படம் எடுக்கத் திரைப்பட தயாரிப்பாளர்கள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு ரஜினியை நோக்கிப் படையெடுத்தனர்.
இந்த நிலையை மாற்றவும் ரஜினியை வீழ்த்தவும் சூழ்ச்சி நடந்தது. பத்திரிக்கை துறை என்றாலும் திரைப்படத்துறை என்றாலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம்தான் இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்தது என்பது உலகறிந்த ஒன்று.
அதன் காரணமாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற் போட்டி இல்லாமல் ஏகபோகமாக உச்சத்தில் அமர்ந்து இருந்தனர்.
சூத்திரன் என்று அழைக்கப்பட்ட பிராமணரல்லாதவர்களுக்குத் திறமை இருந்தாலும், மக்களால் இரசிக்கப்பட்டாலும்கூட பத்திரிகை, ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் எளிதில் முன்னேற முடியாத நிலை இருந்தது.
இந்நிலை திரையுலகத்திலும் இருந்தது.
ரஜினி - கமல் ஆகிய இருவரையும் இயக்குநர் பாலச்சந்தர் திரையுலகில் உருவாக்கி இருந்திருந்தாலும்கூட பாலச்சந்தரின் "லாபி" கமல்ஹாசனுக்கே முக்கியத்துவமும், விளம்பர வெளிச்சமும் கொடுத்தது. உண்மையில், ரஜினியின் வளர்ச்சியை அந்த "லாபி" இரசிக்கவில்லை.
திரைப்படத்துறையில் ஒருவரை அழிக்க நினைத்தால் பல திட்டங்களைத் தீட்டி, பல பொய்யான செய்திகளை இட்டுக்கட்டி துறையில் இருந்தே விரட்டி விட்டுவிடுவார்கள்.
அப்படிப் பல பேர் சினிமாவிலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டனர்.
இது காலங்காலமாக சினிமாத் துறை மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் உலகம் முழுவதும் நடந்து வருகிற ஒரு நிகழ்வு தான்.
அதைப்போலவே தமிழ்த் திரைப்படங்களில், எந்தப் பின்புலனும், பின்பலமும் இல்லாமல் வந்த ரஜினியை வீழ்த்த பாலச்சந்திரனும் கமல்ஹாசனும் போட்ட திட்டம் தான் தில்லுமுல்லு என்கின்ற நகைச்சுவை படம்.
முழு நேரக் காமெடி படமான தில்லு முல்லு படத்தில் ரஜினியை மீசையை எடுக்கச் சொல்லி அலங்கோலப்படுத்தித் திரைப் படத்துறையில் இருந்து அவரை விரட்டியடிப்பது என்பதுதான் இந்த "லாபியின்" உள்நோக்கம்.
இந்திரன், சந்திரன் என்ற இரு வேடத்தில் அண்ணன் தம்பி பாத்திரங்களில் ரஜினி நடித்திருப்பார்.
வித்தியாசமான குணச்சித்திர நடிகரான தேங்காய் சீனிவாசன் காம்பினேஷனில் முன்னெப்போதும் இல்லாத வேறுபட்ட ஸ்டைல்களில் நடித்து படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
மீசை இல்லாத முகம், கூலிங் கிளாஸ், கையில் செயின் சுத்தியபடி ஸ்டைலாக கேட்டை திறந்து "ஏ தோட்டக்காரா" எனக் கூப்பிடும் காட்சியும் சரி, முதலாளியான தேங்காய் சீனிவாசரிடம் பொய் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு கால்பந்து ஆட்டத்தை காணச் சென்ற ஒரு துடிப்பான இளைஞராக ஆடிப் பாடும் காட்சியும் சரி இன்றளவும் பேசப்படுகிறது.
தில்லு முல்லு படத்தின் இறுதிக் காட்சியில் கமல்ஹாசன் வழக்கறிஞர்கள் புடை சூழ வரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
அப்போது கமல்ஹாசனின் நகைச்சுவை நடிப்பை ரஜினி ரசிகர்கள் இரசிக்காமல் மாறாகக் கேலி செய்தனர்.
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது
மட்டுமல்லாமல் வசூலையும் வாரி வழங்கியது. பாலச்சந்தருக்கு வெளியே சொல்ல முடியாத அதிர்ச்சி.
ரஜினியின் இந்த மாபெரும் வெற்றி அவரைத் திரைத் துறையில் வீழ்த்த நினைத்த கமல்ஹாசன் முகத்தில் கரியைப் பூசும் நிலையை ஏற்படுத்தியது. இந்தத் "தரமான சம்பவம்"
இனி ரஜினியை எவராலும் எதுவும் செய்ய முடியாது, அவரது வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது என்ற நிலையை உலகிற்குச் சொன்னது. எப்படிப் பந்தை வீசினாலும் "சிக்ஸர்" அடிக்கும் ரஜினியின் திறனைக் கண்டு தமிழ்த் திரையுலகம் அதிர்ந்து நின்றது.
ரஜினியை வீழ்த்த நினைத்த கமல்ஹாசன்- பாலச்சந்தர் கூட்டணி முக்காடு போட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடியதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல மேலும் சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரஜினியை வீழ்த்தத் திட்டமிட்டனர். விஜயகுமார், பாக்கியராஜ், பாரதிராஜா, விஜயகாந்த் போன்ற திரையுலகினர் ரஜினியை பீல்ட் அவுட் செய்ய திட்டமிட்ட கதைகள் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)