திமுகவை உடைக்கிறதா விஜய் + காங்கிரஸ் கூட்டணி? 77 ஆண்டு திமுகவுக்கு புதிய அரசியல் சவால்!
விஜய்–காங்கிரஸ் கூட்டணி தமிழக அரசியலை எப்படி மாற்றுகிறது? 77 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட திமுக எதிர்கொள்ளும் சவால் என்ன? அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் எதிர்காலம் மற்றும் 2029 அரசியல் கணக்கு குறித்த விரிவான அரசியல் அறிவியல் ஆய்வு.
விஜய் + காங்கிரஸ் கூட்டணி உருவாக்கும் புதிய அரசியல் — அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகளின் எதிர்காலம் என்ன?
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அதை ஒரு தேர்தலின் வெற்றி, தோல்வி என்ற அளவில் மட்டும் பார்த்துவிட்டுக் கடந்து செல்ல முடியாது.
ஏனெனில் தமிழ்நாட்டில் பல பத்தாண்டுகளாக நிலவிய அரசியல் அதிகாரச் சமன்பாட்டையே மாற்றும் முயற்சியாக இன்றைய நிகழ்வுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் 1949-ல் தொடங்கப்பட்டு, 1967 முதல் தமிழ்நாட்டு அரசியலின் பிரதான அதிகார மையங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வந்த திமுக.
மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் வலுவான மாற்று அதிகார மையமாக உருவாக்கப்பட்ட அதிமுக.
இந்த இரண்டு கட்சிகளை மையமாக வைத்துத்தான் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் சுழன்றது.
இப்போது அந்த இருதுருவ அரசியல் கட்டமைப்புக்குள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய புதிய அதிகார மையமாக நுழைந்திருக்கிறது.
அதைவிட முக்கியமானது—
ஒருகாலத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்து அதன் தயவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பெற்று வந்ததாக விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ், இன்று விஜய் தலைமையிலான புதிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பின் முக்கியப் பங்காளியாக மாறியிருக்கிறது.
செப்டம்பர் 9, 2026 அன்று விஜய் தலைமையில் தவெக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்த கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டது.
இது வெறும் கூட்டணிப் பெயர் மாற்றமல்ல.
தமிழக அரசியலின் அதிகார மையம் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கான புதிய பதிலாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
பெரியாரின் காங்கிரஸ் எதிர்ப்பு முதல் திமுகவின் காங்கிரஸ் கூட்டணி வரை!
இந்த அரசியல் முரண்பாட்டின் ஆழத்தைப் புரிந்துகொள்ள வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி காங்கிரசிலிருந்தே வெளியேறியவர்.
சாதி, சமூக நீதி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசுடன் அவர் கடுமையாக முரண்பட்டார்.
பின்னர் திராவிடர் கழகம் உருவானது.
அதிலிருந்து அண்ணாதுரை தலைமையில் 1949-ல் திமுக பிறந்தது.
அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது திமுகவின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான தொடக்கப் புள்ளிகளில் ஒன்று.
ஆனால் தேர்தல் அரசியல் என்பது கொள்கையை மட்டும் சார்ந்ததல்ல.
அது அதிகாரத்தையும் சார்ந்தது.
இதற்கான மிகச்சிறந்த உதாரணம் 1967 தேர்தல்.
ராஜாஜியுடன் கைகோர்த்த அண்ணா!
1967 தேர்தலில் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது திமுகவின் மிகப்பெரிய அரசியல் இலக்கு.
அதற்காக அண்ணாவின் திமுக மிகப்பெரிய எதிர்க்கட்சி அணியை உருவாக்கியது.
அதில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இடம்பெற்றது.
சிபிஎம், முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சக்திகளும் அந்த எதிர்க் காங்கிரஸ் அணியில் இடம்பெற்றன.
இங்கே ஒரு சுவாரசியமான வரலாற்று முரண்பாடு இருக்கிறது.
திராவிட இயக்கம் கடுமையாக விமர்சித்த சமூக, அரசியல் பின்னணியைச் சேர்ந்த ராஜாஜியின் கட்சியுடனேயே திமுக தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்தியது.
ஏன்?
காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும்.
அதுதான் அன்றைய அரசியல் இலக்கு.
இதுதான் தேர்தல் அரசியலின் முதல் பாடம்:
நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. அதிகார இலக்குகளே பல நேரங்களில் கூட்டணிகளைத் தீர்மானிக்கின்றன.
1967-ல் அந்த வியூகம் வெற்றி பெற்றது.
திமுக ஆட்சிக்கு வந்தது.தமிழ்நாட்டில் காங்கிரசின் நேரடி ஆட்சி முடிவுக்கு வந்தது.
அடுத்த மிகப்பெரிய திருப்பம் — அவசரநிலை!
1975-ல் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்தார்.
அந்தக் காலகட்டம் திமுகவின் வரலாற்றில் மிகவும் கடுமையான காலங்களில் ஒன்று.
1976 ஜனவரியில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் உள்ளிட்ட திமுகவினர் MISA சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
சிட்டிபாபுவின் சிறை அனுபவமும் மரணமும் திமுகவின் அவசரநிலைக்கால அரசியல் நினைவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றன. மு.க.ஸ்டாலினும் தனது சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதாக தொடர்ந்து கூறிவந்திருக்கிறார்.
அதாவது—
+ காங்கிரஸ் ஆட்சியின் அவசரநிலையை எதிர்த்த கட்சி திமுக.
+ அதனால் ஆட்சியையே இழந்த கட்சி திமுக.
+ சிறை சென்ற அதன் தலைவர்கள்.
ஆனால் இந்திய அரசியல் அங்கேயே நின்றுவிடவில்லை.
பின்னர் அதே காங்கிரசுடன் திமுக மீண்டும் தேர்தல் உறவை ஏற்படுத்தியது.
இதுதான் இந்தியக் கூட்டணி அரசியலின் இயல்பு.
1991 — இன்னொரு மிகப்பெரிய அரசியல் பேரதிர்ச்சி
1991 மே 21.
ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியது.
திமுக கடுமையான அரசியல் எதிர்ப்பைச் சந்தித்தது.
1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.
அதிமுக–காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படிப்பட்ட அரசியல் பகைமைக்குப் பின்னரும் காலம் மாறியது.
2004-ல் திமுகவும் காங்கிரசும் மீண்டும் ஒன்றிணைந்தன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசில் திமுக முக்கிய பங்காளியாக மாறியது.
அதாவது அரசியல் மீண்டும் ஒரு முழு வட்டம் சுற்றியது.
2009 — திமுகவின் வரலாற்றை இன்னமும் துரத்தும் ஈழத்தமிழர் கேள்வி
2009 என்பது திமுகவின் அரசியல் வரலாற்றில் இருந்து எளிதாகப் பிரித்துவிட முடியாத ஆண்டு.
இலங்கையில் ஈழப்போர் இறுதிக்கட்டத்தை அடைந்தது.
முள்ளிவாய்க்கால் தமிழர் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அப்போது மத்திய அரசை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நடத்திக் கொண்டிருந்தது.
அதில் திமுக முக்கிய பங்காளி.
இதனால்,
+ “மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை திமுக ஏன் வாபஸ் பெறவில்லை?”
+ “ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற அதிகாரத்தை ஏன் பயன்படுத்தவில்லை?”
என்ற கேள்விகள் திமுகவை நோக்கி எழுப்பப்பட்டன.
இந்த விமர்சனம் இன்றுவரை தமிழ்த்தேசிய அரசியலில் திமுகவுக்கு எதிரான முக்கிய அரசியல் ஆயுதமாக இருந்து வருகிறது.
இதில் அரசியல் கருத்துகளுக்கும் நிரூபிக்கப்பட்ட அரசின் நேரடி பொறுப்புக்கும் இடையில் வேறுபாடு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் அரசியல் பார்வையில் முக்கியமானது வேறு:
காங்கிரசுடனான உறவுக்காக திமுக கொடுத்த அரசியல் விலை என்ன? என்பதுதான்.
அடுத்து வந்தது 2G புயல்!
திமுக–காங்கிரஸ் உறவின் மிக விசித்திரமான அத்தியாயங்களில் ஒன்று 2011.
2G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு தேசிய அரசியலை உலுக்கியது.
கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் அமைந்திருந்த அண்ணா அறிவாலய வளாகத்தில் சிபிஐ விசாரணை நடவடிக்கைகள் நடைபெற்றன.
2011 மார்ச் 11 அன்று கனிமொழியையும் தயாளு அம்மாளையும் சிபிஐ அதிகாரிகள் அண்ணா அறிவாலயத்தில் விசாரித்தனர்.
இதே காலகட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?
திமுகவும் காங்கிரசும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன!
காங்கிரஸ் 63 தொகுதிகளைக் கேட்டது.
திமுக முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகக்கூட திமுக அறிவித்தது.
ஆனால் சில நாட்களுக்குள் சமரசம் ஏற்பட்டது.
காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதுதான் திமுக–காங்கிரஸ் உறவின் தன்மை.
ஒரு பக்கம் விசாரணை.
மற்றொரு பக்கம் கூட்டணி.
ஒரு பக்கம் அரசியல் அழுத்தம்.
மற்றொரு பக்கம் தொகுதிப் பேச்சுவார்த்தை.
அரசியலில் கொள்கை மட்டுமல்ல; அதிகாரத் தேவையும் கட்சிகளை இணைக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.
ஆனால் 2026-ல் கதை தலைகீழாகிவிட்டதா?
இதுவரை காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் திமுக தேவைப்பட்டது.
இப்போது கேள்வி:
காங்கிரசுக்கு திமுக அவசியமா?
இதுதான் இன்றைய அரசியலின் மிகப்பெரிய மாற்றம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜய் மிகப்பெரிய தனி அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு உருவானது.
இங்கேதான் காங்கிரசின் பேரம் பேசும் ஆற்றல் மாறுகிறது.
ஒருகாலத்தில்,
திமுக + காங்கிரஸ்
என்பது தமிழகத்தின் முக்கிய கூட்டணி சமன்பாடு.
இப்போது,
விஜய் + காங்கிரஸ் + விசிக + மதிமுக + ஐ.யு.எம்.எல்.
என்ற புதிய அதிகார அணி உருவாகியுள்ளது.
இதனால் திமுக ஒரு கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
காங்கிரசின் தற்போதைய அரசியல் நகர்வுகள் நடைமுறையில் யாரை பலவீனப்படுத்துகின்றன?
பதில் மிகவும் தெளிவானது.
திமுகவை.
ஏன்?
காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் சென்றிருந்தால் திமுக தனது மதச்சார்பின்மை அரசியலை வலுவாக முன்வைத்திருக்கலாம்.
காங்கிரஸ் அதிமுகவுடன் சென்றிருந்தால் அதை பழைய அரசியல் கூட்டணியாக புரிந்து கொள்ளலாம்.
ஆனால் காங்கிரஸ் இப்போது யாருடன் நிற்கிறது?
விஜயுடன்.
அதுவும் திமுகவுக்கு நேரடியாக மாற்று அதிகார மையமாக உருவாகியிருக்கும் விஜயுடன்.
இதுதான் திமுகவுக்கான மிகப்பெரிய சிக்கல்.
விஜய் திமுகவை எங்கே தாக்குகிறார்?
விஜயின் தற்போதைய அரசியல் தாக்குதலைக் கவனித்தால் ஒரு முக்கியமான முறை தெரிகிறது.
அவர் திமுகவின் தற்போதைய செயல்பாட்டை மட்டும் தாக்கவில்லை.
திமுகவின் வரலாற்றையே மறுவாசிப்பு செய்ய முயல்கிறார்.
+ சர்க்காரியா ஆணையம்...
+ வீராணம்...ஊழல் குற்றச்சாட்டுகள்...
+ அமலாக்கத்துறை ஆவணங்கள்...
+ முந்தைய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள்...
இவற்றையெல்லாம் சட்டமன்றத்திற்குள்ளேயே எடுத்துச் சென்று திமுகவுக்கு எதிரான அரசியல் கதையாடலை உருவாக்குகிறார். செப்டம்பர் சட்டமன்ற விவாதத்தில் சர்க்காரியா ஆணையம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களை விஜய் மேற்கோள் காட்டியே தந்து பதிலுரையை அமைத்திருந்தார்.
திமுகவின் பதில் என்ன?
உதயநிதி ஸ்டாலின் தரப்பு,
“கடந்த காலத்தைப் பேசுவதை விட தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்று எதிர்வாதம் செய்துள்ளது. மேலும் அமலாக்கத்துறை ஆவணங்களில் இருப்பவை குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட தீர்ப்புகள் அல்ல என்பதும் திமுக தரப்பின் வாதம்.
இதுதான் ஜனநாயக அரசியலில் இருக்க வேண்டிய விவாதமும் கூட.
குற்றச்சாட்டு என்பது தீர்ப்பு அல்ல.
ஆனால்—
அரசியலில் perception எனப்படும் "மக்கள் மனப்பதிவு" மிகப்பெரிய ஆயுதம்.
விஜய் அதை மிகத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்.
77 ஆண்டு அனுபவம் கொண்ட திமுக ஏன் தடுமாறுகிறது?
1949 முதல் 2026 வரை பார்த்தால் திமுகவுக்கு 77 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது.
+அண்ணா
+ கருணாநிதி
+ எம்.ஜி.ஆர். பிரிவு
+ அவசரநிலை
+ ஆட்சிக் கலைப்பு
+ ஜெயலலிதா
+ ராஜீவ் படுகொலைக்குப் பிந்தைய தேர்தல் தோல்வி
+ வைகோ பிரிவு.
+ 2G.
+ மத்திய ஆட்சிக் கூட்டணிகள்.
+ மோடி தலைமையிலான பாஜக எழுச்சி என...
எத்தனையோ அரசியல் புயல்களைத் தாண்டிய கட்சி அது.
அப்படிப்பட்ட கட்சிக்கு விஜய் ஏன் மிகப்பெரிய சவாலாகத் தோன்றுகிறார்?
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது
விஜய் பழைய திமுக எதிர்ப்பு அரசியலின் வாரிசாக மட்டும் வரவில்லை,
+அவர் புதிய தலைமுறை வாக்காளர்களிடம் பேசுகிறார்
+ சினிமா புகழ் இருக்கிறது
+ சமூக ஊடக பலம் இருக்கிறது.
+ அரசு அதிகாரம் இருக்கிறது.
+ இப்போது கூட்டணிப் பலமும் இருக்கிறது.
அதிலும் முக்கியமாக—
காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சியின் அரசியல் கட்டமைப்பும் அவருக்குப் பக்கத்தில் நிற்கிறது.
திமுகவின் மிகப்பெரிய பலவீனம் எது?
இங்குதான் திமுக மிகக் கடுமையான சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.
+ திமுகவுக்கு மிகப்பெரிய அமைப்பு இருக்கிறது
+லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்
+ வலுவான மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன
+ தேர்தல் நடத்தும் அனுபவம் இருக்கிறது
+ தமிழ்நாடு முழுவதும் பரவிய கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது.
ஆனால் எதிரிகள் தொடர்ந்து முன்வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது:
குடும்ப அதிகாரம்.
+கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்
+ அவருக்குப் பிறகு உதயநிதி
இந்தத் தொடர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு மிக எளிமையான அரசியல் ஆயுதத்தை வழங்குகிறது:
“இது ஒரு இயக்கமா? குடும்ப அதிகார அமைப்பா?”
என்று கேட்க முடிகிறது.
இதற்கு திமுக வெறும் உணர்ச்சிபூர்வமான பதில் கொடுத்தால் போதாது.
+ கட்சிக்குள் அதிகாரப் பரவல் இருக்கிறதா?
+ இரண்டாம், மூன்றாம் தலைமுறை தலைவர்களுக்கு உண்மையான இடம் இருக்கிறதா?
+ குடும்பத்தைச் சாராத ஒருவர் எதிர்காலத்தில் கட்சியின் உச்சத் தலைமையை அடைய முடியுமா?
இவற்றுக்கான நடைமுறை பதிலை திமுக உருவாக்க வேண்டியிருக்கிறது.
அதிமுகவுக்கு என்ன நடந்தது?
இந்த புதிய அரசியல் போரில் இன்னொரு பெரிய கேள்வி அதிமுக.
ஒருகாலத்தில் திமுகவுக்கு ஒரே மிகப்பெரிய மாற்று அதிமுக.
திமுக எதிர்ப்பு வாக்குகள் இயல்பாக அதிமுகவுக்குச் சென்றன.
இப்போது அந்தச் சமன்பாடு உடைந்துவிட்டது.
விஜய் வந்த பிறகு,
திமுக வேண்டாம் என்ற வாக்காளர் அதிமுகவுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அவருக்கு மூன்றாவது பெரிய தேர்வு கிடைத்துவிட்டது,
அதுதான் தவெக.
இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய கட்சிகளில் ஒன்று அதிமுக.
ஏனெனில் விஜயின் முதல் வளர்ச்சி திமுக வாக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு உருவானதல்ல.
மாற்று ஆட்சியைத் தேடிய வாக்குகளையும் அவர் ஈர்த்திருக்கிறார்.
எனவே அதிமுகவின் கேள்வி:
“நாங்கள் ஏன் தேவை?”
இதற்கு அந்தக் கட்சி மக்களிடம் புதிய பதிலைத் தர வேண்டும்.
வெறும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்கால அரசியலை நடத்த முடியாது.
நாம் தமிழர் கட்சியின் நிலை?
நாம் தமிழர் கட்சிக்கு வேறுவிதமான சிக்கல்.
அந்தக் கட்சி பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தனக்கென ஒரு வாக்குத் தளத்தை உருவாக்கியது.
தமிழ்த்தேசியம், சுற்றுச்சூழல், விவசாயம், மொழி, இன உரிமை போன்ற பிரச்சினைகளில் தனித்த அடையாளத்தை உருவாக்கியது.
ஆனால் தேர்தல் அரசியலில் ஒரு கட்டத்தில் கேட்கப்படும் கேள்வி:
வாக்கு சதவீதம் அதிகாரமாக மாறுகிறதா?
என்பது.
தொடர்ந்து வாக்குகள் கிடைத்தாலும் சட்டமன்ற இடங்கள் கிடைக்கவில்லை என்றால் தொண்டர்களிடமும் வாக்காளர்களிடமும்,
“இந்த வாக்கின் இறுதி அரசியல் பயன் என்ன?”
என்ற கேள்வி எழும்.
விஜயின் எழுச்சி இந்த அழுத்தத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
எனவே நாம் தமிழர் கட்சியும் தனது அடுத்த கட்ட அரசியல் வியூகத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
காங்கிரசின் உண்மையான இலக்கு என்ன?
இதுதான் இந்த முழுக் கட்டுரையின் முக்கியமான கேள்வி.
காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் தனியாக ஆட்சியைப் பிடிக்கக்கூடிய நிலையில் தற்போது இல்லை.
ஆனால் காங்கிரசுக்கு வேறு ஒரு அரசியல் மூலதனம் இருக்கிறது.
+தேசியக் கட்சி என்ற அடையாளம்
+ நாடாளுமன்றத் தேர்தல் வலைப்பின்னல்
+ தேசிய அளவிலான கூட்டணி அரசியல்
+ சிறுபான்மை வாக்குகளில் ஒரு பகுதியின் ஆதரவு.
+ மத்திய அரசியல் அதிகாரத்துக்கான போட்டியில் முக்கிய இடம்.
இவற்றை விஜயின் மக்கள் செல்வாக்குடன் இணைத்தால் என்ன நடக்கும்?!
தமிழ்நாட்டில் புதிய அதிகாரக் கூட்டணி உருவாகிறது
அதனால்தான் காங்கிரசின் தற்போதைய நகர்வு சாதாரண கூட்டணி மாற்றம் அல்ல.
அது திமுகவின் பல பத்தாண்டுகால அரசியல் கணக்கையே மாற்றுகிறது.
ஆனால் 2029-ல் விஜய்தான் காங்கிரசின் பிரதமர் முகமா?
இப்போதே அப்படி முடிவு செய்துவிட முடியாது.
விஜயை 2029 தேசிய அரசியலில் பெரிய முகமாக முன்னிறுத்தும் குரல்கள் தவெக வட்டாரத்தில் இருக்கின்றன.
ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒரு தெளிவான எல்லையை வைத்திருக்கிறது.
காங்கிரஸ் தரப்பு ராகுல் காந்தியே தங்களது தேசியத் தலைமையின் மையம் என்று கூறியுள்ளது. விஜயை 2029 பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து எழுந்த பேச்சுகளையும் காங்கிரஸ் ஏற்கவில்லை.
எனவே,
விஜய் + காங்கிரஸ் = 2029 விஜய் பிரதமர் வேட்பாளர்
என்ற சமன்பாட்டை இப்போதே எழுத முடியாது.
ஆனால்,
விஜய் + காங்கிரஸ் = தமிழ்நாட்டில் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வலுவான கூட்டணி வாய்ப்பு
என்பதை அரசியல் சாத்தியமாக நிச்சயம் சிந்திக்கலாம்.
திமுக இந்த வியூகத்தை எப்படி உடைக்க முடியும்?
இதுதான் திமுகவின் உயிர்நாடிக் கேள்வி.
+ விஜயை நடிகர் என்று மட்டும் கேலி செய்வதால் முடியாது
+ அவரது ரசிகர்களை விமர்சிப்பதால் முடியாது
+ காங்கிரசை துரோகி என்று சொல்வதாலும் முடியாது
திமுக செய்ய வேண்டியது அதன் அரசியல் அமைப்பையே புதுப்பிப்பது.
+ முதலில் குடும்ப ஆதிக்கம் என்ற குற்றச்சாட்டுக்கு நடைமுறைப் பதில் தேவை
+ இரண்டாவது, புதிய தலைமுறைக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
+ மூன்றாவது, 20 முதல் 35 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடம் புதிய மொழியில் பேச வேண்டும்.
+ நான்காவது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உணர்ச்சிப் பதிலுக்கு பதிலாக ஆவணப்பூர்வமான பதில்களை முன்வைக்க வேண்டும்.
+ஐந்தாவது—
“விஜய் ஏன் வேண்டாம்?”
என்று மட்டும் கேட்காமல்,
“திமுக மீண்டும் ஏன் வேண்டும்?”
என்பதற்கு மக்களிடம் தெளிவான பதிலைத் தர வேண்டும்.
இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
அதிமுக என்ன செய்ய வேண்டும்?
+ அதிமுக முதலில் தனது அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும்
+ திமுக எதிர்ப்பு மட்டுமே அரசியல் என்ற காலம் முடிந்துவிட்டது
ஏனெனில் அந்த இடத்தில் விஜயும் இருக்கிறார்.
எனவே அதிமுக,
“திமுகவுக்கு மாற்று நாங்கள்தான்”
என்று சொல்வது மட்டும் போதாது.
“விஜயைவிட நாங்கள் ஏன் சிறந்த மாற்று?”
என்பதை நிரூபிக்க வேண்டும்.
அதற்கு புதிய தலைமுறை, புதிய கொள்கை, புதிய நிர்வாகத் திட்டம் தேவை.
நாம் தமிழர் என்ன செய்ய வேண்டும்?
நாம் தமிழர் கட்சிக்கு இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று—
தனித்துப் போட்டியிடும் பாதையைத் தொடர்வது.
இரண்டு—
தனது அடிப்படை அரசியல் கொள்கைகளை இழக்காமல், அதிகாரத்தை அடைவதற்கான புதிய தேர்தல் உத்தியை உருவாக்குவது.
எந்த வழியை எடுத்தாலும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்:
வாக்குகளை எப்போது சட்டமன்ற அதிகாரமாக மாற்றப் போகிறீர்கள்?
மிகப்பெரிய அரசியல் போர் இன்னும் தொடங்கவில்லை!
இன்று நாம் பார்க்கும் மோதல்கள் ஆரம்பம் மட்டுமே இருக்கலாம்.
ஏனெனில் 2026 தேர்தல் ஒரு அரசை மட்டும் மாற்றியிருக்கவில்லை.
தமிழ்நாட்டு அரசியலின் பழைய கணக்குகளையும் மாற்றியிருக்கிறது.
ஒருகாலத்தில் அரசியல் கணக்கு:
திமுக vs அதிமுக.
இப்போது அது:
விஜய் vs திமுக vs அதிமுக
என்ற நிலைக்கு நகர்கிறது.
இதற்குள் நாம் தமிழர் தனித்த அரசியல் தளத்தைத் தக்கவைக்க முயல்கிறது.
காங்கிரஸ் புதிய அதிகார மையத்துடன் இணைந்திருக்கிறது.
விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் புதிய கூட்டணியில் இருக்கின்றன.
இது சாதாரண மாற்றமல்ல.
காங்கிரஸ் பழிவாங்குகிறதா? அரசியல் செய்கிறதா?
இங்கே உணர்ச்சியை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் பதில் சுவாரசியமானது.
காங்கிரஸ் திமுகவைப் பழிவாங்குகிறது என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லை.
ஆனால்—
தனக்குக் கிடைத்த புதிய அரசியல் வாய்ப்பை அது சரியாகப் பயன்படுத்துகிறது.
அதுதான் அரசியல் அறிவியல் பார்வையில் பொருத்தமான விளக்கம்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் உயிர்வாழ திமுகவின் தோள் காங்கிரசுக்குத் தேவைப்பட்டது.
இன்று தமிழக அதிகாரத்தில் பங்கேற்க விஜயின் தோள் கிடைத்திருக்கிறது.
அப்படியானால் காங்கிரஸ் எதைத் தேர்ந்தெடுக்கும்?
தனக்கு அதிக அரசியல் மதிப்பைக் கொடுக்கும் அணியைத்தான்.
இதுதான் அதிகார அரசியலின் இயல்பு.
இதில் மிகப்பெரிய பாடம் திமுகவுக்குத்தான்!
திமுக தனது பழைய கூட்டணிக் கட்சிகளை,
“அவர்கள் நம்மை விட்டு எங்கே போவார்கள்?”
என்ற மனநிலையில் எப்போதாவது பார்த்திருந்தால், 2026 அரசியல் அதற்கான கடுமையான பதிலாக அமைந்திருக்கிறது.
ஒரு கூட்டணிக் கட்சி இன்று சிறியதாக இருக்கலாம்.
நாளை அது ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்.
காங்கிரசின் தற்போதைய நிலை அதற்கு உதாரணம்.
அரசியலில் எண்ணிக்கை மட்டும் முக்கியமல்ல.
சரியான நேரத்தில் அந்த எண்ணிக்கை யாருக்குத் தேவைப்படுகிறது என்பதுதான் அதன் உண்மையான மதிப்பு.
இறுதியாக ஒரு கேள்வி!
1967-ல் காங்கிரசை வீழ்த்துவதற்காக ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கைகோர்த்த திமுக...
அவசரநிலையில் தனது அரசு கலைக்கப்பட்ட பிறகும் பின்னாளில் காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுக...
1991 அரசியல் பேரழிவுக்குப் பிறகும் காங்கிரசுடன் மீண்டும் இணைந்த திமுக...
2009 ஈழப்போர் ஏற்படுத்திய பெரும் அரசியல் சுமையையும் தாங்கிக்கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்த திமுக...
2G விசாரணையின் உச்சகட்டத்திலும் காங்கிரசுடன் 63 தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திமுக...
இன்று—
அதே காங்கிரஸ் விஜயின் பக்கம் நிற்கும்போது என்ன செய்யப் போகிறது?
இதுதான் கேள்வி.
77 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருப்பது ஒரு கட்சிக்குப் பெரும் பலம்தான்.
ஆனால் வரலாற்றில் நீண்டகாலம் இருந்தது மட்டும் எதிர்காலத்திற்கான உத்தரவாதமல்ல.
மக்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் அரசியல் கட்சிகளை மறுமதிப்பீடு செய்கிறார்கள்.
புதிய தலைமுறை பழைய நன்றிக் கடன்களின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை.
அதனால்தான் திமுகவின் உண்மையான எதிரி விஜய் மட்டுமல்ல.
காங்கிரசும் மட்டுமல்ல.
காலமாற்றமும்தான்!
அந்தக் காலமாற்றத்தை திமுக புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொண்டால் மீண்டும் எழ முடியும்.
அதை வெறும் சதி, துரோகம், நடிகர் அரசியல் என்று புறக்கணித்தால் அதன் அரசியல் இடத்தை வேறு சக்திகள் நிரப்பிவிடும்.
அதே விதி அதிமுகவுக்கும் பொருந்தும்.
அதே விதி நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.
இன்றைய தமிழக அரசியலின் மையக் கேள்வி எனவே,
“விஜய் வெல்வாரா?”
என்பது மட்டும் அல்ல.
“திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய மூன்று அரசியல் சக்திகளும் விஜய் + காங்கிரஸ் உருவாக்கியிருக்கும் புதிய அதிகாரச் சமன்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?”
என்பதுதான்.
அதற்கான பதில்தான் 2029 நாடாளுமன்றத் தேர்தலின் திசையையும் தீர்மானிக்கக்கூடும்.
திமுகவை காங்கிரஸ் செங்குத்தாக உடைக்கிறதா?
அப்படியொரு திட்டம் இருப்பதாக இப்போதே தீர்ப்பளிக்க ஆதாரம் இல்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவு.
திமுகவின் பழைய கூட்டணி வலிமையை எடுத்துக்கொண்டு, அதையே விஜய் தலைமையிலான புதிய அதிகார மையத்தின் வலிமையாக மாற்றும் அரசியல் நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.
அதுவே திமுக எதிர்கொள்ளும் உண்மையான அபாயம்.
காங்கிரஸ் இன்று ஒரு சிறிய கூட்டணிக் கட்சி மட்டுமல்ல.
தமிழகத்தின் பழைய அதிகாரச் சமன்பாட்டிலிருந்து புதிய அதிகாரச் சமன்பாட்டுக்கு பாலம் அமைத்த கட்சியாக மாறியிருக்கிறது.
அந்தப் பாலத்தின் மறுபுறத்தில் விஜய் நிற்கிறார்.
இந்தப் புறத்தில் திமுக தனது 77 ஆண்டுகால வரலாற்றுடன் நிற்கிறது.
யார் வரலாற்றை மட்டும் பேசப் போகிறார்கள்?
யார் எதிர்கால அரசியலை எழுதப் போகிறார்கள்?
அதுதான் இனி பார்க்க வேண்டிய தமிழ்நாட்டு அரசியல்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)