தஞ்சாவூர் A to Z மருத்துவமனை விவகாரம்: ரூ.5 கோடி லஞ்சப் புகாரின் பின்னணி என்ன?
தஞ்சாவூர் A to Z மருத்துவமனை பங்குதாரர் பிரச்சனை, ரூ.5 கோடி லஞ்சப் புகார், ஆய்வாளர் சுகுமாரன் கைது, IG பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு, நீதிமன்ற உத்தரவு குறித்து தமிழ் ஊடகம் புலனாய்வு.
தஞ்சாவூர் A to Z மருத்துவமனைப் பங்குதாரர் பிரச்னை
ரூ.5 கோடி ரூபாய் ஆய்வாளருக்கும், IG பாலகிருஷ்ணனுக்குமா ?
'மீடியா ட்ரையல்' ஒருபுறம், 'அதிகாரிகளுக்குள் அரசியல்' மறுபுறம் !
உண்மையில் நடந்தது என்ன ?
-தமிழ் ஊடகம் புலனாய்வுப் பிரிவு
தஞ்சாவூர் வல்லம் பாதையில் உள்ள A to Z பல்நோக்கு மருத்துவமனை கடந்த 10 நாட்களாக செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது. அந்த ஊரின் காவல்துறை ஆய்வாளர் சுகுமாரன் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். இவர்களுடன் இன்னொரு உயர் அதிகாரியின் பெயரும் அடிபடுகிறது, அவர் திருச்சி மண்டல IG பாலகிருஷ்ணன் IPS.
அப்படி என்னதான் நடந்தது?
இந்த மருத்துவமனையின் பங்குதாரர்கள் சரவணன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு பேர். ஜெயஸ்ரீயின் கணவர் இராமசாமி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்.
மருத்துவக் கல்லூரியில் பணி முடிந்த நேரத்தில் மனைவி பங்குதாரராக இருக்கும் A to Z மருத்துவமனையிலும் பணியாற்றி வந்துள்ளார் இராமசாமி.
சரவணன் - ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் முதலீடு இட்டு இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள். சரவணன் அன்றாட நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதாகத் தெரிகிறது.
ஒருகட்டத்தில் சரவணன் மருத்துவமனையின் வரவு செலவு குறித்த சரியான கணக்குகளைத் தனக்குத் தரவில்லை, அன்றாடம் லட்சக்கணக்கில் சரவணன் தரப்பால் பணம் எடுக்கப்படுகிறது ஆனால் அது குறித்து தமக்குச் சொல்லப்படவில்லை என்று ஜெயஸ்ரீ ஐயம் கொண்டு கேட்கிறார் சரிவர பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த இரு தரப்புக்கும் தொடர்ந்து கருத்து முரண், வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில், எனது பங்கைக் கொடுத்து விடுங்கள் நான் வெளியேறுகிறேன் என்று ஜெயஸ்ரீ கூறுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்டு சுமூகமாகப் பேசி சரவணன் கணக்கிட்டு அவருக்குச் சேரவேண்டிய பணத்தை கொடுத்து கணக்கை முடித்து வைத்திருக்கலாம். ஆனால், சரவணன் தரப்பு அப்படிச் செய்யாமல் இழுத்தடித்திருக்கிறது அல்லது ஜெயஸ்ரீ கோரிய தீர்வுத் தொகையை சரவணன் தரப்பு தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த மருத்துவமனையில் ஒப்புதல் பெறாமல் மூன்றாவது மாடி கட்டியது உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அதுகுறித்து திருமாறன் எனும் சமூகச் செயற்பாட்டாளர் கேள்வி எழுப்பியபோது அவரை சரவணனும் அவரது தந்தையும் மிரட்டும் தொனியில் பேசிய குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
சரவணன் மற்றும் அவரது தந்தை பாஜக கட்சியுடன் நெருக்கத்தில் இருப்பவர்கள் என்றும் அவர்கள் ஆளுநர் வரை தொடர்பு கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்கிறார்கள்.
ஆக, சரவணன் தரப்புக்கு அரசியல் பலம் இருந்திருக்கிறது. அதேவேளை ஜெயஸ்ரீ தரப்புக்கு அத்தகைய பலம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
இத்தகைய நிலையில், ஜெயஸ்ரீ தரப்பு காவல்துறையை அணுகியிருக்கிறது.
காவல்நிலைய ஆய்வாளர் சுகுமாரனிடம் புகார் கொடுக்க அவர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்திருக்கிறார்.
இரு தரப்புக்கும் இடையே ஒப்புதல் ஏற்படாத நிலையில், திருச்சி மண்டல IG பாலகிருஷ்ணனிடம் செல்கிறார்கள்.
அவர் இரு தரப்பையும் விசாரித்தபோது, "இருவரும் சமரசத் தீர்வுக்கு வந்து ஜெயஸ்ரீ கேட்கும் தீர்வுத் தொகையை கொடுத்துக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். இரண்டு தரப்பும் வழக்கறிஞர்களை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுக்கொள்ளுங்கள், அந்த ஒப்பந்தத்தின் படி நடந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் மீண்டும் பிரச்னை வராமல் இருக்க ஆய்வாளர் சுகுமாரன், வழக்கறிஞர்கள் மற்றும் இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையான ஆட்களை வைத்துப் பேசி முடித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார்.
பொதுவாக, இதுபோன்ற பிரச்சனைகளில் இரு தரப்பினரில் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்தால், மறுதரப்பு சென்று, "நாங்கள் சமரசம் ஆகிக்கொள்கிறோம்" என்று சொன்னால் அதற்கு காவல்துறை சரி என்றுதான் சொல்லும்.
கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்று காவல்நிலையம் சென்றாலும் இரு தரப்பினரை அழைத்து சமரசம் செய்யவே காவல்துறையினர் முதல் கட்ட அறிவுரை கூறுவார்கள். இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிகொண்டு அந்த பிரச்னையை முடித்து வைப்பார்கள்.
அதுபோலத்தான் இந்தப் பிரச்சனையிலும் நடந்திருக்கிறது.
அந்த வகையில் ஜெயஸ்ரீ சார்பில் வழக்கறிஞர் ஒருவரும், சரவணன் தரப்பில் கோயமுத்தூர் வழக்கறிஞர் விஜயராகவன், காவல்துறை ஆய்வாளர் சுகுமாரனின் மனைவி வழக்கறிஞர் இன்னிசை ஆகியோரும் கொண்ட நடுநிலையாளர்களை வைத்து, ஜெயஸ்ரீக்கான தீர்வுப் பணம் 24 கோடி ரூபாய் என்று முடிவு செய்து, அதில் 5 கோடி ரூபாய் முன்பணம் தரப்பட்டுள்ளது. இதில் 3.25 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 1.75 கோடி ரூபாய் காசோலைகள் மூலமாகவும் தரப்பட்டுள்ளது.
இந்த சமரத் தீர்வு முன்பணம் 'வழக்கறிஞர் இன்னிசை - ஆய்வாளர் சுகுமாரன்' வீட்டில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

(படத்தில் : சரவணன் 3.25 கோடி ரூபாய் பணம் அடங்கிய பைகளுடன் 'சுகுமாரன் - இன்னிசை வீட்டில்')
அப்போது பேசியுள்ள சரவணன் "நானும் - ஜெயஸ்ரீ தரப்பும்" பேசிக்கொண்ட வகையில் 24 கோடி ரூபாய் அவருக்குத் தீர்வு தருவது என்றும், அதில் ஐந்து கோடி முன்பணம் (ரொக்கம் + காசோலை) இன்று தந்திருப்பதாகவும் மொபைல் கேமிரா முன்னரே பேசும் காணொலி உள்ளது. பணத்தையும், காசோலைகளையும் ஜெயஸ்ரீ சார்பில் ஜெயஸ்ரீயின் மருமகன் பெற்றுக்கொள்கிறார், அந்தக் காணொலியில் ஜெயஸ்ரீயும் உள்ளார்.
(படத்தில் : இடதுபுறம் ஆய்வாளர் சுகுமாரன், நடுவில் ஜெயஸ்ரீ, வலதுபுறம் ஜெயஸ்ரீயின் 'பவர் ஆப் அட்டர்னி' நடுவர் குமார். 3.25 கோடி ரொக்கம், 1.75 கோடிக்கு 10 காசோலைலைகளை தீர்வுத் தொகை என்று காண்பிக்கிறார் ஆய்வாளர் சுகுமாரன்)
சரவணன் - ஜெயஸ்ரீ ஆகியோருக்கு இடையேயான இந்த 24 கோடி ரூபாய் சமரச உடன்பாடு, அதில் 5 கோடி முன்பணம் ஆகியவற்றில் நடுவில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலையும், IG பாலகிருஷ்ணன் தலையும் உருண்டிருக்கின்றன.
இதில் மாறி மாறிப் பேசி ஒட்டுமொத்த விவகாரத்தை அரசியலாக்கி, காவல்துறையினர் மீதும் சேற்றை வாரிப் பூசியது பாஜக ஆதரவில் சரவணன் தரப்புதான் என்று கூறுகிறார்கள் தஞ்சாவூர் சமூக செயற்பாட்டாளர்கள்.
ஜெயஸ்ரீக்கு உரிய பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் காவல்துறை தலையீட்டில் வேறு வழியின்றி பணத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் இப்படி சரவணன் செய்திருக்கிறார் என்கிறார்கள்.
இது ஜெயஸ்ரீ தரப்பு வாதம்.
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் தரப்பு, "எங்கள் மீது வழக்குகள் போட்டு, அலைக்கழித்து, சீரழித்தார் பாலகிருஷ்ணன் IPS என்று பாலகிருஷ்ணனைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் அவரை முன்னிலைப்படுத்தியே பேசியுள்ளார்.
இது சரவணன் தரப்பு வாதம்.
தமிழ் ஊடகப் புலனாய்வுக் குழுவின் கேள்விகள் இவை :
01.பங்குதாரராகப் பிரிந்து செல்கிறேன் என்று ஜெயஸ்ரீ சொன்னவுடன் அவருக்கு உரிய நியாயமான பங்களிப்பை சரவணன் தரப்பு சுமூகமாக அளித்திருந்தால் காவல்துறையை எதற்கு ஜெயஸ்ரீ நாடப்போகிறார் ?
02. காவல்துறையினர் முன்னிலையில் உடன்படாமல் பாஜக கட்சியினர், ஆளுநர் வரை செல்லவேண்டிய தேவை சரவணனுக்கு ஏன் எதற்காக ஏற்பட்டது?
03. பாலகிருஷ்ணன் IPS மீது இதுவரை இப்படி எந்த ஒரு புகாரும் எழுந்திராத நிலையில் அவரது மனைவி தரப்பில் இயல்பாகவே 100 கோடிக்கும் மேலாக சொத்து உள்ள ஒரு குடும்ப பின்புலம் கொண்டவர் எனும் போது 5 கோடி கேட்டு எதற்காக அவர் இப்படி நடக்க வேண்டும்?
04. ஒரு காவல் ஆய்வாளர் 5 கோடி கேட்டு மிரட்டினால் அப்போதே பாஜக தலைவர், ஆளுநர் மூலமாக சரவணன் தரப்பு நியாயம் கேட்டிருக்கலாமே ? சரவணன் - இன்னிசை வீட்டில் 27.08.2026 ம் தேதியன்றே "3.75 + 1.75=5 கோடி" ஜெயஸ்ரீக்கு கொடுத்துவிட்டு 22 அக்டோபர் மாத வாக்கில் IG பாலகிருஷ்ணன் மீது பத்திரிகையாளர் மத்தியில் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? அதுவரை சரவணன் தரப்பு என்ன செய்துகொண்டிருந்தது? அல்லது நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே?!
05. இந்த வழக்கை CBCID க்கு மாற்றி உத்தரவிட்டதே திருச்சி மண்டல IG பாலகிருஷ்ணன் IPS தான் என்கிறது காவல்துறை தரப்பு.
06. இந்த 5 கோடி பணப் பரிமாற்றம் நடந்தபோது அதனை காணொலி எடுத்து 10 பேருக்கான காசோலைகளை, பணத்தை ஜெயஸ்ரீ மருமகனிடம் ஒப்படைப்பது ஆய்வாளர் சுகுமாரன்தான்.
07. எந்த ஒரு காவல் ஆய்வாளர் அல்லது IG யாவது 5 கோடி லஞ்சம் கேட்டு இப்படி வெளிப்படையாக, நடுவர்கள், வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டா லஞ்சம் வாங்குவார்கள்? அதைக் காணொலியல் பதிவு செய்வார்கள் என்கிற கேள்வி எழுகிறது. திட்டமிட்டு முறைகேடாக லஞ்சம் வாங்குபவர்கள் இவ்வளவு தடயங்களை வெளிப்படையாக விடுவார்களா என்ன ? எனும் கேள்வியும் எழுகிறது.
08. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 21/10/2026 அன்று 3,25,00,000 (மூன்று கோடியே 25 லட்சம்) ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கணக்கில் ஜெயஸ்ரீ பெயரில் கட்டப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 10 காசோலைகளுக்கு உரியவர்களுக்கு பணம் சென்று சேர்ந்துள்ளது என்கிறார்கள். இதில் ஆய்வாளர் சுகுமாரன், IG பாலகிருஷ்ணனுக்கு அந்தப் பணம் சென்றதற்கான ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவ்வாறு ஆய்வாளர் சுகுமாரன், IG பாலகிருஷ்ணனுக்கு எதிராக சரவணன் தரப்பில் ஆதாரம் கொடுக்கப்பட்டால் அது விசாரணைக்கு உரியது.

09. இதில் எழும் ஐயம், IG பாலகிருஷ்ணன் IPS இந்த வாழ்க்கை CBCID க்கு மாற்றியவுடன் CBCID உடனடியாக சுகுமாரனைக் கைது செய்து, அவர்தான் குற்றவாளி என்பதைப் போலவும், அவர் IG பாலகிருஷ்ணன் சொல்லிதான் நான் பணம் வாங்கினேன் என்பது போல சுகுமாரன் சொன்னதாகவும் செய்திகள் எப்படி வெளியாகின? சுகுமாரனைக் கைது செய்தது சட்டவிரோதம், கைது செய்யும் எந்த முறையும் பின்பற்றப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். அதே வேளை அவர் மீதான லஞ்சப்புகாரை விசாரிக்கப்பட எந்தத் தடையும் விதிக்கவில்லை.
10. இந்த அளவுக்கு CBCID அவசர அவசரமாக ஒரு கைது நடவடிக்கை மேற்கொண்டு அதில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியது ஏன்?
எனும் கேள்விகள் எழுகின்றன.
சரவணன் Vs ஜெயஸ்ரீ பங்குதாரர் பிரச்சனை ஒருபுறம் இருக்க, IG பாலகிருஷ்ணன் இன்னும் சில மாதங்களில் ADGP ஆக இயல்பான பதவி உயர்வு பெறப்போகிறார். அப்படி அவர் ஆகிவிடாமல் தடுக்கவே இந்த வழக்கை சில IPS அதிகாரிகள் திசை திருப்பினார்கள் என்று கூறி அதிர்ச்சி தருகிறார்கள் காவல்துறை செய்திகளைச் சேகரிக்கும் மூத்த பத்திரிகையாளர்கள். தான் பதவி உயர்வு பெறப்போகும் நிலையில் ஒரு IG அளவிலான அதிகாரி இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் வாயிலாக குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது அவதூறு பரப்புவதும் அதன் பின்னணியை ஆராயும்போது அந்த அதிகாரிகள் சில மாதங்களில் உயர் பதவியை அடையும் நிலையில் இருப்பதும் தெரிகிறது.
தமிழ்நாடு காவல்துறைக்குள் நடக்கும் இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் மிக மிக மோசமான முன்னுதாரணங்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)