விண்வெளி அறிவியலில் சாதிக்கத் தயாராகும் தமிழக இளைஞர்கள்! சென்னை மாநாட்டில் 250 மாணவர்கள்!

சென்னையில் நடைபெற்ற YASSC 2026 இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 125 அணிகளாகப் பங்கேற்றனர். மாநில மாநாட்டிற்கு 41 அணிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Sep 28, 2026 - 14:19
Updated: 1 month ago
0 18
விண்வெளி அறிவியலில் சாதிக்கத் தயாராகும் தமிழக இளைஞர்கள்! சென்னை மாநாட்டில் 250 மாணவர்கள்!

விண்வெளி அறிவியலில் சாதிக்கத் தயாராகும் தமிழக இளைஞர்கள்! சென்னை மண்டல மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

125 அணிகள் பங்கேற்ற இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் 41 அணிகள் மாநில மாநாட்டிற்குப் பரிந்துரை!

தமிழகக் கல்லூரி மாணவர்களிடையே வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டின் (Youth Astronomy and Space Science Congress – YASSC 2026) சென்னை மண்டல நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி (TASS) முன்னெடுப்பில் நடைபெறும் இந்த மாநாடு, கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது இரண்டாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

‘புதிய விண்வெளி யுகம் – அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தை இணைத்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, தமிழக இளம் தலைமுறையினரை வானவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி, எதிர்கால விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, ஆதித்யா–L1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, ராணுவ விஞ்ஞானி முனைவர் டில்லி பாபு உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூட்டு ஆலோசனையுடன் இம்மாநாடு நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

125 அணிகளில் 41 அணிகள் தேர்வு!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மண்டல மாநாடு நடைபெற்றது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டோர், 125 அணிகளாகப் பங்கேற்றனர்.

மாணவர்கள் தங்களது அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் விளக்கப்படங்கள், வானியல் புதிர் விளையாட்டுகள், வானியல் குறும்படங்கள், வானியல் புகைப்படங்கள் என நான்கு பிரிவுகளில் படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.

இந்தப் படைப்புகளை 30 கல்லூரிப் பேராசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். அதன் அடிப்படையில் 41 மாணவர் அணிகள் தேர்வு செய்யப்பட்டு, நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மாநாட்டில் பங்கேற்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியுடன் சென்னை கணித அறிவியல் நிறுவனம் (IMSc), பெங்களூரு இந்திய வானிய இயற்பியல் நிறுவனம் (IIA), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST), திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி ராமன் ஆராய்ச்சி அறக்கட்டளை, எய்டு இந்தியா, அறிவியல் பலகை, மகேந்திரா கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.

மாநிலம் முழுவதும் முதலில் மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு, அவற்றில் தேர்வாகும் மாணவர் அணிகள் மாநில மாநாட்டில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள்

மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஏ. மரிய ஆரோக்கிய ராஜ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் முனைவர் எஸ். வின்சென்ட், ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கணேசன் கிரகதுரை, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா துணைப் பொது மேலாளர் பிரதீப் படேல் ஆகியோர் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.

மேலும், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், எய்டு இந்தியா ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சிறார் அறிவியல் எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன், கன்னிமாரா நூலக அலுவலர் ஈஸ்வரன் மற்றும் வானியல் மன்றப் பொறுப்பாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மாநில நிர்வாகிகள் சக்திவேல், செல்லகுமார், முனைவர் ரவிக்குமார், முனைவர் ஜோசப் பிரபாகர், ரமாதேவி, டானியா, பழனிசாமி ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர்.

YASSC 2026 சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ம. ஜெகதீஸ்வரன் வரவேற்புரையாற்றினார். இணை ஒருங்கிணைப்பாளர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.

டான் போஸ்கோ கல்லூரியுடன் இணைந்து TASS மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வானியல் மன்ற நிர்வாகிகள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தமிழக இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தை ஆய்வுப் படைப்புகளாக மாற்றுவதற்கும், வானவியல் மற்றும் விண்வெளித் துறைகளில் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதற்கும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User