வள்ளலார் பெருவெளி: கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்டும் பள்ளங்களை இன்னும் மூடாதது ஏன்?!

வடலூர் வள்ளலார் பெருவெளியில் கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்ட பின்னரும் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஏன் மூடப்படவில்லை? அக்டோபர் 5 வள்ளலார் பிறந்தநாள் நெருங்கும் நிலையில் பெருவெளியின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்.

Sep 27, 2026 - 18:15
Updated: 1 month ago
0 21
வள்ளலார் பெருவெளி: கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்டும் பள்ளங்களை இன்னும் மூடாதது ஏன்?!

கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்ட பிறகும் பெருவெளியைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏன்? சுற்றுப்புறக் கட்டுமானத் திட்டம் யாருடைய தேவைக்காக?

அக்டோபர் 5 — அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள். 1823 அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்த வள்ளலாரின் பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அன்றைய நாளின் பெரும்பகுதியில் பூசம் விண்மீனும் வருகிறது.

இதையொட்டி அன்று வடலூரில் வள்ளலார் உருவாக்கிய உத்தரஞான சிதம்பரம், உத்தரஞான சித்திபுரம் எனும் பெருவெளித் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும், ஆயிரக்கணக்கில் வள்ளலாரின் பின்பற்றாளர்கள் அங்கு குவிவார்கள்.

வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு வடலூர் மீண்டும் விழாக்கோலம் காணவிருக்கிறது. ஆனால் வள்ளலாரின் சத்திய ஞானசபைக்கு முன்னால் விரிந்து கிடக்கும் பெருவெளியின் நிலை என்ன? என்ற கேள்வியும் இந்த நேரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2024 ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க பெருவெளியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில் பெருவெளிக்குள் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. பெருவெளிக்குள் கட்டுமானம் இருக்காது என்றும் திட்டத்தை மாற்றியமைப்பதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.

இதோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை.

கட்டுமானத்திற்காக பெருவெளியில் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்களை மூடி, அந்த இடத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 27 ம் தேதி உத்தரவிட்டது. அதே உத்தரவில், பெருவெளி “பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்” என்றும் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

அப்படியானால் இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது:

பெருவெளியில் கட்டுமானம் கட்டும் திட்டமே கைவிடப்பட்ட பிறகும், கட்டுமானத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக மூடி பெருவெளியை அதன் பழைய இயல்பான நிலைக்குக் கொண்டுவருவதில் ஏன் தாமதம்?

இது அழகியல் தொடர்பான கேள்வி மட்டுமல்ல. வள்ளலாரின் பிறந்த நாள், மாதந்தோறும் நடைபெறும் பூச வழிபாடு, தைப்பூசப் பெருவிழா போன்ற நாட்களில் ஏராளமான மக்கள் கூடுகின்ற ஒரு பரந்த வழிபாட்டு வெளி இது. நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கேற்ப அதன் பாதுகாப்பும் திறந்தவெளித் தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டியது அறநிலையத்துறையின் பொறுப்பு.

அண்மையிலும் பெருவெளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதால் வாகனங்களும் சமூக விரோதிகளும் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சுவரைச் சீரமைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை கோரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

ஆனால், பெருவெளியில் எந்த சுற்றுச்சுவரும் இல்லை, முன்புறத்தில் மட்டும் சுவர்களும், கடைகளும் உள்ளன, மீதம் மூன்று புறங்களும் கடந்த 150 ஆண்டுகாலமாக திறந்தே கிடக்கிறது.

செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெருவெளியைச் சுற்றியுள்ள சுமார் 74 ஏக்கர் தொடர்பாக வேலி மற்றும் பெருவெளியின் சுற்றுப்புறத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பிற கட்டுமானங்கள் குறித்த முன்மொழிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. செப்டம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை நீதிமன்றம் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதுதான் அடுத்த கேள்வியை எழுப்புகிறது.

பெருவெளி, பெருவெளியாகவே பாதுகாக்கப்படும் என்றால் அதன் சுற்றுப்புறத்தில் என்னென்ன கட்டுமானங்கள் வரப்போகின்றன?

ஏற்கெனவே அரசு தரப்பில், விவகார சாலை, யோக சாலை உள்ளிட்ட சில வசதிகளை பெருவெளியின் சுற்றுப்புறத்தில் அமைக்கும் திருத்தப்பட்ட திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வள்ளலாரின் எந்த ஒரு ஆவணத்திலும், பாடலிலும், எழுத்திலும் அவர் நேரடியாக உத்தரவிட்டோ, அல்லது வேறு யாருக்கோ உத்தரவிட்டோ அப்படிப்பட்ட எந்த சாலைகளையும் கட்ட சான்றுகள் இல்லை. வள்ளலாரின் நேரடி சீடரும், வள்ளலாரின் வரலாற்றை எழுதியவருமான காரணப்பட்டு கந்தசாமி அவர்கள் பாடசாலை ஒன்றுமட்டும் தொடங்கி பிறகு அதையும் மூடச் சொல்லிவிட்டார் வள்ளலார் என்று பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் திமுக சார்ந்த அமைப்புகள் அல்லது தனிநபர்கள் அரசின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. மேலும், திமுகவின் பினாமியாக செயல்படும் "வடலூர் தலைமை சங்கம்" எனும் ஒரு அமைப்பினரும் அவர்களுக்கு ஆதரவான அறநிலையத்துறை செயல் அலுவலர் இராஜா சரவணனும் செயல்படுகிறார்களோ எனும் ஐயமும் வலுவாக எழுந்துள்ளது.

பெருவெளியைச் சுற்றி புதிய கட்டுமானங்கள் ஏன் தேவை, அவை என்ன, யாருடைய முன்மொழிவு, எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படும், அவற்றுக்கு யார் ஒப்புதல் அளித்தனர்? என்பவை அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டிய பொதுநலக் கேள்விகளாக இருக்கின்றன.

மேலும், அறநிலையத்துறை என்ன திட்டங்கள் சிந்தித்தாலும் அதுகுறித்து முறையாக பார்வதிபுரம் மக்கள், வடலூர் மக்கள், உலகெங்கிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், தருமச்சாலை அன்பர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை அழைத்து கருத்துக்கள் கேட்கவேண்டும் என்பதும் விதி.

காரணம் அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு மட்டுமே தவிர வள்ளலார் வகுத்த சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் குறித்த வழிபாடு முறைகளைத் தீமானிக்கும் உரிமை படைத்தது அல்ல, சன்மார்க்கம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமை படைத்தது அல்ல. 

அக்டோபர் 5 அன்று வள்ளலாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது மட்டும் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகிவிடாது.

வள்ளலார் உருவாக்கிய வரலாற்றுப் பெருவெளியைப் பாதுகாப்பதும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தோண்டப்பட்ட பகுதிகளைச் சீரமைத்து பாதுகாப்பான திறந்தவெளியாக வைத்திருப்பதும் அதைவிட முக்கியமானது.

வள்ளலார் பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

+ அதற்குள் பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படுமா? 

+ பெருவெளி பழைய நிலைக்குக் கொண்டுவரப்படுமா? 

+ சுற்றுப்புறத்தில் திட்டமிடப்படும் புதிய கட்டுமானங்கள் என்னென்ன என்பதை அறநிலையத்துறை பொதுமக்களிடம் வெளிப்படையாக அறிவிக்குமா?

இவையே விடை காணவேண்டிய கேள்விகள் !

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User