வடலூர் பெருவெளி குறித்த பேருண்மைகள்: 106 ஏக்கர் வெட்டவெளியை வள்ளலார் ஏன் பாதுகாத்தார்?

வடலூர் 106 ஏக்கர் பெருவெளியை வள்ளலார் ஏன் வெட்டவெளியாக வைத்தார்? உத்தர ஞான சிதம்பரம், சத்திய ஞானசபை, தைப்பூசம், வள்ளலார் பாடல்கள் மற்றும் பெருவெளி பாதுகாப்பு குறித்து தமிழ் ஊடகம் சிறப்புத் தொகுப்பு.

Aug 30, 2026 - 13:51
Updated: 17 days ago
0 23
வடலூர் பெருவெளி குறித்த பேருண்மைகள்: 106 ஏக்கர் வெட்டவெளியை வள்ளலார் ஏன் பாதுகாத்தார்?

— தமிழ் ஊடகம் சிறப்புத் தொகுப்பு —

1. கடந்த 1865–67ஆம் ஆண்டு வாக்கில் வடலூர் பார்வதிபுரம் மக்களிடமிருந்து இராமலிங்க வள்ளற்பெருமான் தானமாகப் பெற்ற நிலத்தின் அளவு 80 காணி, அதாவது 106 ஏக்கர்.

2. அதில் முழுமையாக வளைத்து கட்டடங்கள் கட்ட வேண்டும் என்று வள்ளற்பெருமான் திட்டமிட்டிருந்தால், அந்தக் காலகட்டத்திலேயே அதை அவரே செய்திருக்க முடியும்.

3. ஆனால் உணவு சமைத்து வழங்கும் தருமச்சாலையை 1867ஆம் ஆண்டிலும், சத்திய ஞானசபையை 1872ஆம் ஆண்டிலும் கட்டிய அவர், வேறு எந்தக் கட்டுமானங்களையும் கட்டவில்லை; கட்ட அனுமதிக்கவும் இல்லை. அந்த நிலத்தில் வேளாண்மைகூட செய்யவில்லை; செய்யவும் அனுமதிக்கவில்லை.

4. அவர் எண்ணியிருந்தால் தருமச்சாலைக்குத் தேவையான நெல், காய்கறி ஆகியவற்றை அந்த 106 ஏக்கரிலேயே பயிரிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

5. 'இருப்பவர்கள்' அரிசி, காய்கறி, எண்ணெய் ஆகியவற்றைத் தானமாகத் தர வேண்டும்; அதனைச் சமைத்து 'இல்லாதவருக்கு' அன்னதானமாகத் தர வேண்டும் என்பதே வள்ளலாரின் தருமச்சாலை விதி.

6. பெருவெளியை ஏன் காலியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு வள்ளலார் சொன்ன காரணம், "எள்ளு விழுந்தால் குனிந்து எள்ளு எடுப்பதற்குக்கூட இடமில்லாதவாறு எதிர்காலத்தில் மக்கள் கூடுவார்கள்" என்பது.

7. பெருவெளி எனும் "உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம்" எனும் இறைவரால் சூட்டப்பட்ட பெயர்களைக் கொண்ட அந்த 106 ஏக்கர் பெருவெளித் தலம் என்பது வெட்டவெளித் தலம்.

மாதாமாதம் பூச விண்மீன் (நட்சத்திர) நாளன்றும், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச விண்மீன் (நட்சத்திர) நாளன்றும் அங்கே அந்த வெட்டவெளிப் பெருவெளித் தலத்தில் கூடி நிற்பவர்களுக்கு "அண்ட ஒளியும், பிண்ட ஒளியும்", அதாவது பேரண்ட ஒளி ஆற்றலும் மனித உடலில் உள்ள சிற்றாற்றல் ஒளியும் ஒன்றிணையும் என்பதற்காகவே அதை வெட்டவெளியாக வைத்திருக்க உத்தரவிட்டார் வள்ளற்பெருமானார்.

8. இந்த 106 ஏக்கர் பெருவெளித் தலம் எனும் "உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம்" குறித்து மட்டும் 11 சிறப்புப் பாக்கள் பாடியிருக்கிறார் இராமலிங்க வள்ளற்பெருமானார். அவற்றுள், "செத்தாரை எழுப்பும் உத்தர ஞான சிதம்பரம்" என்று 106 ஏக்கர் பெருவெளித் தலத்தைப் போற்றிப் பாடுகிறார்.

9. மற்றொரு பாடலில்...

வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே

"இடுக்கில்லாமல் இருக்க இடமுண்டு" நடஞ்செய்ய
இங்கம் பலமொன்றங்கே எட்டம்பலமுண்டைய
ஒடுக்கிலிருப்பதென்ன உளவுகண்டுகொள்வீரென்றால்
உண்மைவது வஞ்சமல்ல உம்மேல் ஆணை யென்றசொன்னால் வருவார்

மெல்லியல் சிவகாமவல்லி யுடன் களித்து
விளையாடவு மெங்கள் வினையோடவொழித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது
"இங்குமங்கும் நடமாடி இருக்கலா மென்றபோது"

என்று பாடுகிறார்.

அதாவது, சிதம்பரத்தில் உள்ள நடராசரையும் சிவகாமிவல்லித் தாயாரையும் வடலூர் பெருவெளிக்கு அழைத்து வரச் சொல்லிப் பாடுகிறார் வள்ளற்பெருமானார்.

அதில், "வருவார் அழைத்துவாடி" என்று கூறி, "சிதம்பரத்தில் மிகவும் சிறிய, இடுக்கான (குறுகிய) ஒரு வாசல் கொண்ட கோயில்தான் இருக்கிறது... ஆனால் இங்கே வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள உத்தர ஞான சிதம்பரம் எனும் 106 ஏக்கர் பெருவெளித் தலத்தில் எட்டு கதவுகள் கொண்ட அம்பலம் (கோயில்) கட்டப்பட்டுள்ளது... மேலும் இங்கே 106 ஏக்கரில் நடராசரும் சிவகாமி அம்மையும் அங்குமிங்கும் நடமாடி விளையாடும் அளவுக்குப் பரந்து விரிந்த வெட்டவெளித் தலம் இருக்கிறது" என்று பாடுகிறார் வள்ளற்பெருமானார்.

10. ஆக, இறைவரே வந்து அங்குமிங்கும் ஓடி ஆடி நடனமாடும் அளவுக்கு 106 ஏக்கரில் பரந்து விரிந்த "பெருவெளித் தலம்", அதாவது "வெட்டவெளித் தலம்" உள்ளது என்று மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார் வள்ளற்பெருமானார்.

11. இப்படிப்பட்ட உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம் எனும் பெருவெளித் தலத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, யாரோ சில ஞானசூனியங்களின் பொய்யான தகவல்களைக் கேட்டு, இந்தப் பெருவெளித் தலத்தில் உருவ வழிபாடு, அலங்கார மேடைகள், மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சொகுசு உணவகம் ஆகியவற்றை ரூ.100 கோடி செலவில் "வள்ளலார் சர்வதேச மையம்" எனும் பெயரில் கட்ட முனைந்தார். இதனால்தான் அதற்குக் கடும் எதிர்ப்பு, போராட்டங்கள், வழக்கு ஆகியவை தொடுக்கப்பட்டன.

12. ஏழை, எளிய, அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாதவர்களுக்கு உணவளிக்க தருமச்சாலை கட்டப்பட்ட இடத்தில் Multicuisine Restaurant கட்ட முயற்சி செய்தது எவ்வளவு பெரிய அசிங்கம்?! VIP Suite எனும் தங்கும் சொகுசு விடுதிகள் கட்ட முயற்சி செய்தது எவ்வளவு பெரிய துரோகம்?!

13. இதைச் சுட்டிக்காட்டியவுடன் "ஏழு கிளைச் சாலைகள்" கட்டுகிறோம் என்று மாற்றி உருட்டினார்கள். ஆனால் சன்மார்க்க சங்கம், தருமச்சாலை, ஞானசபை, அதாவது "சங்கம், சாலை, சபை" என்ற மூன்று அமைப்புகளைத் தவிர, வள்ளலார் எங்குமே இவர்கள் கூறும் கிளைச் சாலைகள் கட்டக் கூறவே இல்லை. எனவே அது ஒரு புனையப்பட்ட கற்பனைப் பொய்.

வடலூரில் அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவப் பிரிவு இருக்கும்போது இங்கே எதற்கு "மருத்துவ சாலை"? மேலும் வள்ளலார் போன்ற சித்த மருத்துவ அறிவுகொண்ட மருத்துவர்கள் இப்போது உள்ளனரா என்ன?

14. பூச விண்மீன் சிறப்பு வழிபாடு குறித்தும், பெருவெளித் தலம் குறித்தும் வள்ளற்பெருமான் ஒரு தனிப்பாடலே பாடி அப்பெருவெளித் தலத்தின் சிறப்பை நிறுவியிருக்கிறார்.

"சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும் திருவருட் பெருவெளித் தலத் தெழும் சுடரே"

என்று தெள்ளத் தெளிவாகத் தைப்பூசத்தன்று சந்திரன், சூரியன் ஆகிய இரண்டு கோள்களை வானத்திலும், ஞானசபைக்குள்ளே "ஜோதி" எனும் சுடரையும் ஒருங்கே "தரிசனம்" செய்யும் "பெருவெளித் தலமே" என்றே போற்றுகிறார்.

ஆக, இத்தனை தெளிவான வள்ளற்பெருமான் வகுத்துக் கொடுத்துள்ள பெருவெளி குறித்த புவியியல், அணுவியல், அறிவியல், மெய்யியல் தத்துவங்கள் வெட்டவெளிச்சமாக உள்ள நிலையில், அங்கே அந்தச் சாலை, இந்தச் சாலை, மருத்துவமனை ஆகியவை கட்ட வேண்டும் என்று புறவழியே வந்து சன்மார்க்கத்தை அழிக்கத் துடிக்கும் அழிவு சக்திகளின் பொய்ப் பரப்புரைகளை நம்பி, வள்ளற்பெருமானருக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கும் கோபம் ஏற்படுத்தும் எந்தவிதச் செயலையும் இந்து சமய அறநிலையத்துறை செய்துவிடாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பும் கடமையும் மாண்புமிகு அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கு இருக்கிறது.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் இதில் தலையிட்டு, பெருவெளி குறித்த பேருண்மை, சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் குறித்த பேருண்மைகளை உணர்ந்து, அதன்படி செயல்பட அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

பெருவெளி மட்டுமல்லாது, வெளி இடத்தில் எந்தத் திட்டத்தைத் தீட்டினாலும், உத்தரஞான சிதம்பர சேவை இயக்கம், வள்ளலார் பணியகம், தெய்வத்தமிழ் பேரவை, தமிழ்த் தேசியப் பேரியக்கம், வள்ளலார் சன்மார்க்க ஆய்வறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றே இறுதி முடிவு எடுத்தல் வேண்டும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

"சித்தர் மகன் நான்" என்று கூறும் இராமலிங்க வள்ளலாரிடம் மிகவும் கவனமாக

நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மேலும், இராமலிங்க வள்ளற்பெருமான் உருவாக்கிய சங்கம், சபை, சாலை ஆகிய மூன்று அமைப்புகளைத் தவிர, இப்போதுள்ள வடலூர் தலைமைச் சங்கம் எனும் பெயரில் இயங்கும் "லெட்டர் பேட்" சங்கம், வள்ளலார் உருவாக்கிய சங்கமோ அல்லது பெரும்பான்மை சங்கத்தவர்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கமோ அல்ல என்பதையும் முதலமைச்சரின் கவனத்திற்கு இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளையும், தமிழியல் நடுவமும், தமிழ் ஊடகம் குழுமமும் முன்வைக்கின்றன.

தயவுடன்,

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்

நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை

நிறுவனர் : தமிழியல் நடுவம்

மின்னஞ்சல் : [email protected]

30.08.2026, ஞாயிற்றுக்கிழமை

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User